இலக்கியச் சிந்தனைகள் (5)

March 26, 2014 § 2 Comments


.

சங்கப் பாடல்கள் செய்யுள் அடி எல்லையின் அடிப்படையிலும் பொருள் அமைதியின் காரணமாகவும, சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ‘அகநானூறு, புறநானூறு’, ‘குறுந்தொகை’ என்ற வகையில் த்தலைப்புக் கொடுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றவை. பாடிய புலவர்களின் பெயர்கள் அவர்களுடைய இயற்பெயர்களா என்று அறிய முடியவில்லை.
உறுப்பாற் பெற்றவர்கள் ( ஐயூர் முடவனார், நரைமுடி நெட்டையார், நெடுங்கழுத்துப் பரணர் போன்றவர்கள்0) ஊராற் பெயர் பெற்றவர்கள் ( ஆலத்தூர்கிழார், கருவூர்க்கிழார், காப்பியாற்றுக் காப்பியனார், கோவூர்க்கிழார் பொன்றவர்கள் ) சமயத்தாற் பெயர் பெற்றவர்கள் (இளம்போதியார், உலோச்சனார், நிகண்டன் கலைக்கோட்டுத தண்டனார் போன்றவர்கள்0 , செய்யுளில் ஆண்ட தொடராற் பெயர் பெற்றவர்கள் ( ’, ‘ஊட்டியார்’, ‘குப்பைக் கோழியார்,அணிலாடு முன்றிலார்’ , ’விட்ட குதிரையார்’ ‘மீனெறித் தூண்டிலார்” போன்றவர்கள்’ ) என்று பயின்று வரும் புலவர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் காணும் பெஉம்பான்மையான கவிஞர்களின், தொகுத்தவர்கள் கொடுத்த பெயர்களாக இருக்கலாம் என்று கருதவதற்கு இடமுண்டு.

குறுந்தொகையில் வரும் இரண்டாம் பாட்டு மிகப் பிரபலமானது. பாடியவர் ‘இறையனார்’ என்று குறிக்கப்பட்டிருக்கிறது. யார் இந்த ‘இறையனார்?’. இந்தப் பாட்டை ஒட்டிப் பிற்காலத்தில் உருவாக்கப் பட்ட கதையின்படி, பாட்டை இயற்றியவர் சிவ பெருமான், no less. ஓர் ஏழை அந்தணன் அரசனிடம் பொருள் பெறுவதற்காக எழுதிக் கொடுத்த பாட்டு. நக்கீரன் பாட்டிலுள்ள பொருள் குற்றத்தை எடுத்துக் காட்டுகிறான். சிவ பிரானே நேரில் வந்து நக்கீரனைத் தண்டிக்கிறார். அவன் ‘திருமுருகாற்றுப்படை’ பாடி, அவனைப் பற்றிய பிணியினின்றும் விடுதலைப் பெறுகிறான்.இக்கதையின் பயன், சிவபெருமானிடம், ‘நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சொன்ன நக்கீரன் பிற்காலத்தில் வந்த எல்லாப் படைப்பாளிகளுக்கும் ஒரு துணிச்சலான முன் மாதிரி (iconic figure) ஆனதுதான்.

இவ்வாறு உருப் பெறும் கதைகள் சுவாரஸ்யமானவை. அவற்றை ஆராய்ச்சி அளவுகோலுடன் அணுகக் கூடாது.

சிவபிரானோ, அல்லது பெயர் தெரியாத கவிஞனோ யாராக இருந்தாலும், அவன் இயற்றிய கவிதை அருமையானது.

பாட்டு:
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?

தலைவனும் தலைவியும் கூடுகின்றனர். புணர்ச்சி நிகழ்ந்தபின் தலைவன் அவளுடைய மெய்ந்நலம் பாராட்டுகிறான். கூந்தலை விரித்துப் பாய்லாகக்கிடத்தியிருக்கிறாள் தலைவி. அதன்பால் தானும் கிடக்கிறான் தலைவன். கூந்தல் மீது பல மலர்கள் அருகிலிருந்த மரத்தினின்றும் சொரிந்திருக்கின்றன மலரிலுள்ள தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற தும்பி (வண்டு) மலரைவிட்டுத் தலைவியின் கூந்தலில் மயங்கிக் கிடக்கிறது போல் தோன்றுகிறது. வண்டுகளை ஈர்ப்பது மலரின் மணம்.ஆனால் இங்குக் கூந்தலில் மயங்கிக் கிடக்கும் தும்பியைப் பார்த்துப் புன்னகை செய்து கேட்கிறான் தலைவன்: ‘நீ பல மலர்களின் மணத்தை அறிவாய். ஆனால் இக்கூந்தலில் நீயும் என்னைபோல் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது, எனக்குக் கேட்கத் தோன்றுகிறது’ இந்தக் கூந்தலின் இயற்கை மணத்தைப் போல் எந்த மலருக்காவது உண்டா சொல்’.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்பதுதான் சிவபெருமானுக்கும் நக்கீரனுக்கும் நடந்த விவாதம். ‘கிடையாது’ என்கிறான் நக்கீரன். அதை ஒப்புக்கொள்வது போல், சிவபெருமான் அடுத்துக் கேட்க்கும் கேள்விதான் நக்கீரனுக்கு எரிச்சல் ஊட்டியிருக்க வேண்டும். ‘ நீ வணங்கும் உமையின் கூந்தலுக்கு?’ என்கிறான் சிவன். ‘ இல்லை’ என்கிறான் நக்கீரன். அப்பொழுது சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்த போதும் தான் சொல்வது தவறு என்று நக்கீரன் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை.இது தமிழ் நாவலர் சரிதையில் வரும் பிற்காலக் கதை.

வாத்ஸாயாயனர் கருத்தின்படி, ஆணின் வியர்வை மணமும், பெண்ணின் கூந்தலின் இயற்கை மணமும் காமக் கிளர்ச்சியைத் தூண்ட வல்லவை. சிவ பெருமான் வாத்ஸாயாயனர் படித்ததில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இக்குறுந்தொகை பாட்டின் ஆசிரியராகக் கூறப்படும் ‘இறையனார்’ படித்திருக்கிறார்!

இலக்கியச் சிந்தனைகள்(4)

March 25, 2014 § Leave a comment


மக்கள் சமூகமாக வாழத்தொடங்கி ஆட்சி அமைப்பு உருவான பிறகுதான் அரசியல் சட்டம் ஏற்படும். அது போல், மொழி, மக்கள் வழங்கு மொழியாகி, வாய்மொழி இலக்கியம், ஏட்டு இலக்கியம் என்று பரிணாமம் பெற்ற பிறகுதான் அம்மொழிக்கு இலக்கணம் எழுதப்படும். அத்னால்தான், சங்க நூல்கள் பல அறிமுகமான நிலையிதான் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கருதுவது தவறாகாது.

சிந்துவெளிப் பள்ளத்தாக்குச் சமூகம் எந்தக் காரணத்தினாலோ கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து தெற்கிலும் தென் கிழக்கிலும் வடக்கிலும் வட கிழக்கிலும் பரவத்தொடங்கியிருக்கிறது. அப்பொழுதுதான் கடவுள் கட்டளையாக அல்லாமல், சமூக வரலாற்று நிர்ப்பந்தத்தினால், Tower of Babel ஏற்பட்டிருக்கிறது. வந்தேறிய சமூகத்தின் மொழியும், அவர்கள் குடிபோன பூர்வகுடிமக்களின் மொழிகளும் கலந்து புதுப் புது வட்டார மொழிகள் உருவாகத் தொடங்கிருக்கின்றன.

டாக்டர் ஐராவதம் மகாதேவனின் கருத்தின்படி, சிந்துவெளி எழுத்து வடிவங்களைத் தமிழ் (அல்லது, திராவிட) சொல்லாட்சியாகப் படிப்பது சாத்தியம். ‘செம்பியன்’ போன்ற சான்றுகளை அவர் தருகிறர்.. இதை ஏற்றுக் கொண்டால், தமிழின் வேர்மொழிதான், சிந்து வெளிச் சமூகத்தினர் குடியேறிய இடங்களில் அங்கிருந்த பூர்வ குடி மக்களுடன் கலந்திருக்கிறது. தென்னாடு வந்தவர்களின் மூல மொழி அமைப்பில் அவ்வளவு மாறுதல் ஏற்படவில்லை. மூலம் கெடாமல்,ஆனால் மாறுதல்களை இலக்கணம் மூலம் எதிர்கொண்ட மொழி தமிழாக இருக்கலாம்.

அக்காலக் கட்டத்தில்தான், இந்தியச் சமூக அமைப்பில் வர்ணாஸ்ரம தர்மம் உருவாகியிருக்க வேண்டும். சமூகட் ஏணியின் மேல்தட்டிலிருந்தவர்கள், குழூக்குறீயாக, தமக்குள் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ள ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் இதுதான் சமஸ்கிருதம். சமயச் சடங்குக் கிரியைகளுக்காக உருவாக்கிய மொழி. ஒரு சிறு பான்மையருக்கு மட்டுந்தான் அது தெரிந்திருக்க வேண்டும். அச்சிறுபான்மைச் சமூகந்தான், பிராமணர்கள், புரோகிதர்கள். ஆனால் அவர்கள், நடைமுறை (லௌகீகம்) வாழ்க்கையில் பிராக்கிருதம் பேசினார்கள். பிராந்தியத்துக்கேற்ப இந்தப் பிராகிருத மொழியின் பேச்சு வடிவம் மாறியிருந்தது. ஆனால், சமஸ்கிருத மொழி உயர்சாதி ஆண்களைத் தவிர, மற்றபடி உயர்சாதிப் பெண்கள் உள்பட மற்றவர்களுக்குத் தெரியாது. தெரியவும் கூடாது.

இதனால்தான், சமஸ்கிருத நாடகன்களில் அரசர்களும், பிராமணர்களும் உயர்குடி மக்களும்,சமஸ்கிருதத்தில் உரையாடுவார்கள், பெண்கள்(ராணிகள் உள்பட)கீழ்ச் சாதி மக்கள், வட்டாரப் பிராகிருதத்தில் பேசுவார்கள்.வட்டாரப் பிராக்கிருதம் என்பதில், சூரசேனி,அவந்தி, மஹாராஷ்ட்ரி என்பதோடு மாடுமல்லாமல் திராமிடாவும் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது திராமிடா தமிழாக இருக்கலாம்.திருவாய்mஒழியை ‘த்ராமிடோஉபனிஷத்’ என்று வைணவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் தமிழ் வழங்கும் நாடகம் எதுவும் சமஸ்கிருததில் இல்லை.

ஏட்டு மொழியாக உருவாகிய சம்ஸ்கிருதம் ஏட்டு மொழியாகவே உறைந்து போனதற்கு இதுதான் காரணம். தேவ பாஷை பூலோகத்துக்கு வரவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பிராக்கிருத மொழிகள், பிராந்திய மொழிகளாகிய பேச்சு மொழிகள், ஆகியவ ற்றுக்குப் பிறகுதான் சமஸ்கிருதம் உருவாக்கப் பட்டிருக்கிறது. சமஸ்கிருதம் ஆதி மொழி என்று சொல்வதெல்லாம் வெறும் பிதற்றல்.(தொடரும்)

இலக்கியச் சிந்தனைகள் (3)

March 21, 2014 § 2 Comments


10, 8, 400, 400, 500, 100, 18, 18, 5, 2700, 4000, 12…..

இந்த எண்களுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்? நியாயமான கேள்வி. இதை நீங்கள் அந்தக் காலத்திலிருந்து தமிழ் இலக்கிய நூல்களைத் தொகுத்து வருகிறவர்களைக் கேட்க வேண்டும், கணித எண்கள் தமிழிலக்கியப் பாரம்பரிய மனத்தின் magnificent obsession.

விளக்குகிறேன்

மேற் குறித்தஎண்கள் ஒவ்வொரு நூலின் பெயர்.பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எண்கள்அகநானூறு,புறநானூறு,ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பதினெண்மேல்கணக்கு நூல்கள்,ஐம்பெரும்காப்பியங்கள், முத்தொள்ளாயிரம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள்…. வேறு எந்த மொழியிலாவது தமிழைப் போல், இலக்கியத்துக்கும் கணிதத்துக்கும் இவ்வாறான உறவுமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை.

சங்கப்பாடல்கள் மொத்தம் 2381.பாடிய புலவர்கள் 473. ஆறு பாடல்களுக்கு ஆசிரியர்கள் தெரியவில்லை. இவர்களிர் பலர் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்புலவர்களின் பெயர்கள் உண்மையான பெயர்களா என்றும் நமக்குத் தெரியாது. பாடல்கள் வாய்மொழி மரபாகவும் வந்திருக்கலாம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் விரவியவை. பாடல்களை வகைப் படுத்தி,இவற்றச் சான்றுகளாக மனத்திற் கொண்டு, முதல், கரு,உரி என்ற அடிப்படையில் உருவான முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியப் பொருளதிகாரத்தினின்றும் இதை அறிய முடிகின்றது. ஒரு நீண்ட இலக்கிய மரபுக்கு இலக்கணம் வகுத்து அம்மரபு மக்கள் மனத்தில், காலத்தினால் சாகாமலிருப்பதற்கு வகை செய்த ப்ருமை தொல்காப்பியத்துக்குண்டு..

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பெரும்பான்மையான தலைவர்கள், குறு நில மன்னர்கள், நிலக்கிழார்கள்,மறவர்கள். போரையும் காதலையும்,வள்ளல் தன்மையையும், வாழ்க்கை ரசித்து வாழ்வதற்கே என்பதையும் வாழ்க்கையின் கோட்பாடாகக் கொண்ட ஒரு epicurean சமூகமாக இதைக் கொள்வதில் தவறில்லை. அகத்துறைப் பாடல்கள் அனத்தும் நாடகக் காட்சிகள். தமிழ் நாட்டு மன்னர்கள் மட்டுமன்றி, ஆரியர், ஆரிய மன்னன் பிரகத்தன், ஆரியவண்ணல், மோரியர் (மௌரியர்), யவனர், வடவடுகர், வடபுலத்தரசு,வடபுலமன்னர், வடவர் ஆகிய தமிழ் எல்லை கடந்த பிறரும் குறிப்பிடப்படுகின்றனர்..தமிழ் நாட்டு மறவர்கள், வடபுல மண்னருக்காகவும், போரைத் தொழிலாகக் கொண்டு ஈடுபட்டிருக்கக் கூடும். மௌரியர் விந்திய மலையைக் குடைந்து ஏற்படுத்திய பாதை வழியே, தலைவியைப் பிரிந்து வடபுலப் பாலை நிலம் சென்ற ஒரு தலவனை பரணர் அகநானூற்றில் குறிப்பிடுகிறார். அக்காலக் கட்டத்தில் பொறைத் தொழிலாகக் கொண்ட mercenaries களும் இருந்திருக்கலாம். போர்வயிற் பிரிதலும் ஒரு வகைப் பிரிவு.

இப்பாடல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், குறுகிய எல்லைகளைக் கடந்து பரவியிருந்த ஒரு குறிப்பிட்ட காலத்திய இந்தியச் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன. எல்லை விரிந்த கலாசார பாதிப்புக்களை உள்ளடக்கியிருக்கின்றன சங்கச் செய்யுட்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

இலக்கியச் சிந்தனைகள்(2)

March 20, 2014 § Leave a commentசங்க இலக்கியங்கள் தமிழுக்’கே’ உரித்தான தனிவகை இலக்கியக் கருவூலம் என்பதில் ஐயமில்லை, ‘ ஏ’காரத்தில் அழுத்தம் இல்லாவிட்டால். ஏனெனில், கிட்ட்டதட்ட அந்தக் காலக் கட்டத்திலேயே( பொது யுகம் 150க்கு முன்) மஹராஷ்ட்ரியில் அதாவது, தக்கிண பிராக்கிருதத்தில் ‘கா(GA)ஹா சத்தசய்’ (சமஸ்கிருதத்தில்’ ஸப்தஸதி) என்ற பிற்காலத்தில் தொகுக்கப்பெற்ற நூலில், சங்க அகத்துறைப் பாடல்கள் போல் அகதுறைப் பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ஒரு சான்று.

அன்னைமீர்!
அவன் காதல்
கண்ணிமைப் பொழுதில்
காணாமல் போய்விடுகிறது!
கவின் பெரு சிறு அணி
கண்ணெதிரே தோன்றி அசைய
பற்றும்போது பார்வையினின்றும்
மறைவதனைய…

சிந்துநதிப் பெருவெளி நாகரிகம் மறைந்து போவதற்கான சூழ்நிலைகள் உருவான நிலையில் தெற்கு நோக்கி வந்த இனம் தெற்கு மஹராஷ்ட்ரிரத்திலும் தென்னிந்தியாவிலும் பரவியிருக்கக்கூடும். அப்பொழுது ஏற்பட்ட இனக் கலப்பினால், பல் வேறு மொழிகள் உருவாவதற்குக் காரணமாகவும் இருந்திருக்கக் கூடும். இலக்கியம் உருவாவதற்கு முக்கியக் காரணம் இனவழி நினைவாற்றல்(racial memory)தக்கிண மராஷ்ட்ரியும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் நிச்சியமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் மராதி மொழிக்கும் தமிழுக்கும் உறவு முறை பொதுவான சொற்கள் பல் உள்ளன. அதனால்தான் என் நண்பர் பேராசிரியர் நிமாடே மராத்தியும் திராவிட இனன மொழியாகக் குறிப்பிடப் பட வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.

செவ்வியல் சமஸ்கிருத( Classical Sanskrit) நாடகங்களில் மஹராஷ்ட்ரி பேசுபவர்கள் கீழ்ச்சாதி மக்கள்.( நாட்டிய சாஸ்திரம், காளிதாஸன் நாடகங்கள்) .நாட்டிய சாஸ்திரம், காளிதாஸன் நாட
கங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவை அனைத்தும் ஒரே காலத்தவை. பொது யுகத்துக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டு. இக்காலக் கட்டத்தில் வர்ணாஸ்ரமத்தின் விளைவாக சாதி வேறுபாடுகள் பல்கிப் பெருகி விட்டன

‘பிராக்ருதம்’ என்றால் ‘ இயல்பான’, ‘உலகியல்’ என்று அர்த்தம் அதாவது பேச்சு மொழிகள்.. ஆகவே ஏட்டு மொழியான சம்ஸ்கிருதம் ‘இயல்பான’தன்று. உலகியல் வழக்கில்லை. தொல்காப்பியமும், மொழியை, ‘உலகியல் வழக்கு’, நாடக வழக்கு’, ‘புலனெறி வழக்கு’ (இலக்கிய வழக்கு) என்று பாகுபடுத்திக் காண்கின்றது. இலக்கணத்திலேயே இவ்வாறு மொழியைப் பாகுபடுத்திச் சமூக நடைமுறையில் அனத்துக்கும் இடம் வகுத்த காரணத்தினால்தான், தமிழ், செவ்வியல் மொழியாகவும் உலகியல் பேச்சு மொழியாகவும் இருந்து வருகிறது என்று சொல்லலாம். சம்ஸ்கிருதம் போல்வெறும் ஏட்டு மொழியாக வழக்கிறந்து போகவில்லை.

இந்த கஹா சத்தசய் பாடல்களை எழுதியவர் ஹாலா என்பவர் என்று கூறப்படுகிறது. ‘ஹாலம்’ என்றால் ‘விஷம்’ அதாவது முதல் முதலில் இப்பாடல்களைத் தொகுத்தவர் விஷத்தை விழுங்கிய சிவ பெருமான் என்று வைத்துக் கொள்ளலாம். தமிழ் ‘முதல் சங்க’ த் தலைவர் சிவ்பெருமான். ஆதி சிவன் பெற்றெடுத்த மொழிகள் இரண்டு. சமஸ்கிருதம் ,தமிழ். இரண்டு மொழிகளையும் அவன் அகஸ்தியனுக்குக் கற்றுத் தருகிறான். ‘வடமொழி கடந்து தென் மொழிக்கு எல்லை நேர்ந்தவன் அகத்தியன்’

இந்தத் தொன்மங்கள்தாம், (புராணங்கள்) நம் சரித்திரம் இவற்றை ஆய்ந்தறிந்து பொருள் தேர்வது நம் கடமை.

இலக்கியச் சிந்தனைகள்

March 19, 2014 § Leave a comment


தமிழிலக்கியத்தின் மாபெரும் சிக்கல்களில் ஒன்று, அவற்றைக் காலவரையறையின்படி வகைப் படுத்திக் காண்பது. நம் தமிழிலக்கிய வரலாற்றின் ஆசிரியர்கள் மேல்நாட்டுச் சரித்திர அளவுகோல்களின் நேர்கோட்டுப் பாதையில், இதற்குப் பின் இது என்று தமிழ் இலக்கிய நூல்களைக் கால வரிசைப் படுத்திச் சொல்லி இருக்கிறார்கள். ஓரிரண்டு தமிழ் அறிஞர்களைத் தவிர, பெருபாலான, இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இலக்கியத்தை மொழி அரசியல் பார்வையில்தான் அணுகியிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.இதனால், இலக்கிய நூல்களின் கால வரையறையில் பல சிக்கல்கள், குழப்பங்கள்.

இந்தியப் பரம்பரியக் கண்ணோட்டத்தில் சரித்திரம் நேர்க்கோட்டுப் பாதையில் செல்வதில்லை.
கோளவியல் காலக்(astronomical time) கணக்கின்படி அல்லாமல், வட்ட வடிவுப் பாதையில்(cyclic order) செல்லும். அறுபது வருஷங்களும், நான்கு யுகங்களும் அலுப்புச் சலிப்பு இல்லாமல் திரும்பத் திரும்ப வரும்.நம் சரித்திரங்கள் நம் புராணங்கள்தாம். நம் அடிமனத்துப் புராண அறிவுக் குழப்பம்தான், நம் இலக்கிய நூல்களைக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வைத்துக் கால நிர்ணயம் செய்ய நம்மை ஊக்குவிக்கின்றது.

இப்பொழுதைய தமிழிலக்கிய வரலாற்றுமரபின்படி, நாம் தமிழின் ஆதி நூகளாகச் சங்க இலக்கியட்ங்களைக் கொண்டிருக்கிறோம். அவை யனைத்தும், வெவ்வேறு காலக் கட்டத்தில் உருவாகிப் பிற்காலத்தில் வெவ்வேறு தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்டிருக்கின்றன.இச்சங்க நூல்களைச் சான்றுகளாகக் கொண்டு, தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தோன்றியிருக்க வேண்டும். ஆகவே தமிழ் இலக்கியத்துக்கும், இலக்கணத்துக்கும் ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு என்பதில் தடையில்லை. இது சமஸ்கிருதத்துக்கு இணையானது.

ஐரோப்பிய மொழிகளில், மொழியியல் (Linguistics)என்ற துறை மிகப் பிற்காத்திய வளர்ச்சியேதவிர, தமிழிலும், சமஸ்கிருதத்திலும் தொல்காப்பியம், பாணிணீயம் போல் தனி இலக்கண இயல் நூல்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. சமஸ்கிருத, தமிழ் இலக்கணிய இயல் பரிணாமத்தை ( சிற்சில வேறுபாடுகள் இருப்பினும்) பார்க்கும்போது, இவற்றின் பாரம்பரிய வேர்களின் ஒற்றுமையை அறிய முடிகிறது. ஓன்று இனம் சார்ந்த பேசும் மொழியாகவும்(தமிழ்) , மற்றது பேசும் மொழிக்கான கட்டமைப்புப் பெறாமல்,இனம் சாராமல்iபொதுமைத்தான வெறும் ஏட்டு மொழியாக இறுகிவிட்டது என்று கருதவதற்கு இடம் இருக்கிறது.இம்மொழிகளுக்கு இனச் சார்புக் கற்பிதங்களை உருவாக்கியவர்கள் ஐரோப்பியக் காலனிய மொழி அறிஞர்கள்.

தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைப் படித்துச் சுவைக்க வேண்டுமென்றால், முதலில் நம் மனத்தினின்றும் இந்தக் கலாசார ஒட்டடைகளைக் களைய வேண்டும் (தொடரும்)

சாகித்ய அக்காடமி விருது – வாழ்த்து விழா

January 28, 2014 § Leave a comment


Joe function invitation

ஜெயமோகனின் வெள்ளையானை

January 12, 2014 § 1 Comment


ஏய்டன் பைர்ன், பத்தொன்பதாம் நூறாண்டு இறுதியில், விக்டோரியா மஹாராணியின் சார்பில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் பாதுகாக்க மதராஸப்பட்டினத்தில் (சென்னை) பணிபுரிந்த ராணுவ அதிகாரி, அயர்லாந்தைச் சேர்ந்தவன். இவன்தான், ஜெயமோகன் அண்மையில் எழுதியுள்ள ‘வெள்ளையானை’ என்ற நாவலின் கதைப் புருஷன். அந்நியனை கதாநாயகனாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.
jjj-300x300ஏய்டன், அவன் தந்தையிடம், தான் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்திருப்பதாகச் சொன்னதும், அவர் கூறும் பதில்தான் அவன் அடிமனத்தில் பதிந்து, வாழ்க்கை முழுவதும் அவன் குண நலன்களை நிர்ணயிக்கப் போகிற, மந்திரச் சொல்லாக அமைகிறது..

அவன் தந்தை கூறுகிறார்:  ‘பைர்ன் என்ற சொல் ..ஓ பிராய்ன் வம்சம் என்ற பொருள். நாம் லெயின்ஸ்டெரின் மன்னர் ப்ரான் மக் மேக்ஸ்மோர்டாவின் வாரிசுகள். நம்முடைய நாடு இதுதான், அயர்லாந்து. ஆனால் நீ பிரிட்டனுக்காகப் போர் செய்யப் போகிறாய்.’

பிரிட்டனால் ஒடுக்கப்பட்ட ஐரிஷ் இனத்தைச் சேர்ந்த நீ, நம்மைப் போல் வேறு இனங்களை ஒடுக்கி, ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும், பிரிட்டானிய ஏகாதிபத்யத்துக்காக பணி புரியப் போகிறாய், அப்படித்தானே’’ என்ற அவன் தந்தையின் கேள்வியினால்தான் இந்நாவல் முழுவதும் ஏய்டன் நமக்கு ஒரு schizophrenic கதாபாத்திரமாகத் தெரிகிறான்.. உள்மனத்திலிருந்து நீதியும் நேர்மையும் கூச்சலிடுகின்றன; அதே சமயத்தில், அவனால் விக்டோரியா மஹாராணியை மறக்க முடியவில்லை.
farmers_british_india_1

கதை முழுவதும் அவன் விருப்பத்துக்குரிய கவிஞன் ஷெல்லியின் கவிதை வரிகளால் அவன் அலைக்கழிக்கப்படுகிறான். ஷெல்லி மாபெரும் புரட்சிக் கவிஞன். பதினெட்டு வயதிலேயே, ‘நாஸ்திகத்தின் அவசியம்’ என்ற நூல் எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டவன். அவனைப் பற்றி, மாத்யூ ஆர்னால்ட் என்ற இலக்கிய விமர்சகர் கூறுகிறார்; ‘ he was a beautiful, ineffectual angel, beating in the void, his luminous wings, in vain’.

ஏய்டனின் பாத்திரப் படைப்பைப் பார்க்கும்போது, அவன் ஷெல்லியை தன் ஆதர்ச புருஷனாகக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை என்று தோன்றுகிறது. தன் எல்லைக்குள், நீதிக்கும் நேர்மைக்கும் போராடுகின்றவன், இறுதியில், இயலாமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயல்கின்றான். ஷெல்லி நீரில் மூழ்கி இறந்தது, இயல்பான மரணமா, தற்கொலையா என்ற இலக்கிய சர்ச்சை இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஏய்டன் கதாபாத்திரம் தமிழுக்கு ஒரு புது வரவு. தலித் ஆய்வாளரான அன்பு பொன்னோவியம் சொன்ன ஒரு தகவலைக் கொண்டு இந்நாவலை எழுதியிருப்பதாக ஜெயமோகன் கூறுகிறார். அது ஒரு மிகவும் முக்கியமான தகவல். இந்தியாவில் முதன் முதலில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தியவர்கள் சென்னை ஐஸ்ஹவுஸ் தொழிலாளிகள், அனைவரும் தலித்துகள். இது நடந்தது 1878-இல். இது இடைநிலைச் சாதி கங்காணிகளாலும்,பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும், உயர்சாதி குத்தகைக்காரர்களாலும் நசுக்கப்பட்டது என்பதும் அன்பு பொன்னோவியத்தின் செய்தி.

இந்தச் சிறு தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலைப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். இந்நாவலின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் தாது வருஷப் பஞ்சம். சுநாமி, புயல், எரிமலை போன்று, பஞ்சம் எப்பொழுதுமே இயற்கையின் சீற்றமன்று. தனி மனிதர்களின் பேராசைதான் காரணம். இந்தியாவில் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த தலித் மக்களைத்தான் இப்பஞ்சங்கள் அபரிமிதமான அளவில் பாதித்தன. ‘ஒரு காலத்தில் இந்நாட்டில் பெரும்பான்மையோராக இருந்த இவ்வினம் இன்று சிறுபான்மையினமாக ஆகியதற்குக் காரணம், அவர்கள் வரலாற்றில் ஒடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இப்பஞ்சங்களும் ஒரு காரணம்’ என்கிறார் ஜெயமோகன்.

Jeyamohan

ஜெயமோகன் காட்டும் பஞ்சக் காட்சிகள், யதார்த்தம்தான் கற்பனையைக் காட்டிலும் அதிசயமானது என்பதை நிலை நிறுத்துகின்றன. அன்றும், இன்றும், சொல்லப்போனால், என்றும், வளமையும் வறுமையும்தான் ’இப்பாரதப் புண்ணிய பூமியில்’ அண்டை வீட்டுக்கார்கள். நாம் இதைப் பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. காஞ்சிபுரமும், செங்கல்பட்டும் பிணங்கள் சூழ்ந்த சுடுகாடாக காட்சி அளிக்கும்போது, மதராஸப்பட்டினம், சாரட்டு வண்டியும், சரவிளக்குமாக செல்வத்தில் கொழிக்கிறது. கோட்டோவியங்களாக இக்காட்சிகளை அற்புதமாக எழுத்தில் வரைந்திருக்கிறார் ஜெயமோகன்.

நான் அண்மையில் படித்த நாவல்களில் இது மிகவும் முக்கியமானதாக எனக்குப் படுகிறது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 86 other followers