புலிப் பாய்ச்சல்

October 19, 2017 § Leave a comment


நான் சிறு வயதில் கும்பகோணம் சாரங்கபணி கீழைச் சன்னதித் தெருவில் வசித்த போது, அந்தத் தெருவாசிகளில், என்னை மிகவும் ஈர்த்தவர் புலிப்பாய்ச்சல் அய்யங்கார். அவருக்கு அந்த அடைமொழி வரக் காரணம் அவர் நடை. பாய்ந்து பாய்ந்துதான் நடந்துவருவார்.
அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். புதுமைப்பித்தன் ஒரு கதையில் சொல்லியிருக்கிற மாதிரி, பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் மழிக்கிற முகம். அவருக்குப் பஞ்சாங்கம் வாங்குகிற பொருளாதார வசதியோ, பஞ்சாங்கத்தைப் படிக்கும் திறனோ இருந்தனவா என்று எனக்குத் தெரியாது. முகத்தில் எப்பொழுதும் ஐந்து நாள் தாடியும் மீசையும் இருந்துகொண்டே யிருக்கும். பழுப்பேறிய வேட்டி. காசித்துண்டு. இடுங்கிய கண்கள். புலர்ந்தும் புலராத விடியற்காலை மாதிரியான நிறத்தில், தலையில் பழுப்பும், வெளுப்புமான கட்டுக் குடுமி. கண்ணாடியைப் பார்த்துப் போடாதினாலோ என்னவோ, நெற்றியை அலங்கரித்த கோணல் மாணலான தென்கலை நாமம்.
அவர்தான் சன்னதித்தெருவில் வசித்த சற்று வசதியான குடும்பங்களுக்குத் குடிக்கத் தண்ணீர் கொண்டு வருவார்.
பொங்கிப் பரந்து பாயும் காவேரி ஊர் எல்லையில் ஓடிக்கொண்டிருந்தாலும், சாரங்கபாணி சன்னதித் தெருவிலிருந்த வீடுகளில் இருந்த கிணறுகளில் உப்புத் தண்ணீர்தான். அதைக் குடிக்க முடியாது.
சற்றுத்தள்ளி, காந்திபார்க் எதிரே போர்ட்டர் டவுன் ஹால் வாசலிலிருந்த முனிசபல் குழாயிலிருந்துதான் குடிக்கத் தண்ணீர் கொண்டு வர வேண்டும். அந்த் தெருவில் பல குடும்பங்களில், வீட்டுப் பெண்கள் குடங்களை எடுத்துக் கொண்டு போய் அந்த முனிசபல் குழாயிலிருந்து தண்ணிர் கொண்டு வருவார்கள். சற்று வசதியான குடும்பங்கள் புலிப் பாய்ச்சல் அய்யங்காரின் ‘தோள் வலிமையை’ நம்பி இருந்தார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு குடங்கள் தண்ணீர் கொன்உ வந்தால், மாதம் இரண்டு ரூபாய் சம்பளம்! அவர் தோளில் அந்தத் தண்ணிர்க் குடத்தைத் தூக்கி வரும் காட்சி அருமையாக இருக்கும்! புலி மாதிரிப் பாய்ந்த்து பாய்ந்துதான் வருவார். ஒரு வார்த்தை யாருடன் பேச மாட்டார். குடத்தைச் சமையல் அறையில் வைத்துவிட்டு,, கடுமையான வெய்யிலாக இருந்தாலும், அவர் கொண்டு வந்த தண்ணீரை,, ‘தாகமாக இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்’ என்று கேட்கமாட்டார்.
‘அவர் தோள் வலிமையை நம்பி இருந்தார்கள்’ என்று நான் சொன்னது, பார்க்கப் போனால், உபசார வார்த்தை. அவருக்கு வற்றலான உடம்பு.. இந்த உடம்பை வைத்துக் கொண்டு அவர் எப்படிக் குடம் குடமாகத் தண்ணீர் கொண்டு வந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.
அப்பா ஒருதடவை அவர் மீது பரிதாப்பட்டு, இரண்டு ரூபாய் சம்பளத்தை மூன்றாக உயர்த்திக் கொடுத்தார். அவர் வாங்க மறுத்துவிட்டார்.
‘ ஏன் வேண்டாங்கிறேள்/?’ என்றார் அப்பா/
‘ எல்லாரும் அப்படிக் கொடுத்தா வாங்கிக்கிறேன்’ என்றார் அவர்/
அது என்ன ‘லாஜிக்’ என்று அப்பாவுக்குப் புரியவில்லை. அப்பா மற்றவர்களிட்ம் இதைப் பற்றிச் சொல்லிவிட்டு, ‘ ’எல்லாரும் மூணு ரூபா கொடுப்போமே, அவரைப் பாத்தா பாவமா இருக்கு’ என்றார்.
’ சம்பளத்தை உசத்திக் கொடுக்கிறபோது, நீங்க எங்களைக் கேட்டிருக்கணும்.. உசத்திக் கொடுத்துட்டு இப்பொ கேட்டேள்னா? என்னாலே முடியாது’ என்றார் வக்கீல் ஆராவமுது. மற்றவர்கள் அவரை ஆமோதித்தனர்.
இதுவும் என்ன ‘லாஜிக்’ என்று அப்பாவுக்குப் புரியவில்லை.
‘என் ஆத்துத் திண்ணேலதான் படுத்துக்கிறார் புலிப்பாய்ச்சல்.. ஆனா நான் அவரைத் தண்ணி கொண்டு வரச் சொல்லறதில்லே’ என்றார் சீனு பட்டாச்சாரியார்.
‘நீங்கக் கிணத்துத் தண்ணியா குடிக்கறேள்?’
\இல்லே.. என் மாட்டுப்பொண்ணு கொண்டு வரா. சின்னவதானே?\
ஒருநாள் காலை, அப்பா ‘பேப்பர்’ படித்துக் கொண்டிருந்த போது, சின்ன மொட்டை வேகமாக வந்து அவரிடம் சொன்னார்:’ புலிப்பாய்ச்சல் கோபால் ராவ் லைப்ரரி வாசல்லே விழுந்து கிடக்கிறாராம். ஒரே கூட்டம்’
’அப்படியா! பகவானே! அவருக்கு என்ன ஆச்சு?’ என்றார் என் அம்மா.
‘தண்ணீர்க் குடம் அவர் பக்கத்திலே கிடக்கு. உங்காத்துக் குடந்தான். வக்கீல் ஆராமுது உங்களை அழைச்சிண்டு வரச் சொன்னார்.’
அப்பா உடனே சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.
நானும் அப்பாவுடன் போனேன்
போலீஸ் வந்திருந்தது
’ வாங்கோ, நடாதூர் ஸ்வாமி.. உங்காத்துக் குடங்கிறா இவாள்ளாம் உசிரு போயிட்டமாதிரிதான் இருக்கு. டாக்டர் வந்து சொல்லணும்//
‘எங்காத்துக் குடத்தைத் தூக்கிண்டு வந்ததினாலே உசிர் போயிடுத்துங்கிறேளா?’ என்றார் அப்பா/
வக்கீல் ஆராவமுது காங்கிரஸ்காரராகத் தம்மைக் காட்டிக்
கொண்டார். கதர் வேட்டி, கதர் சட்டை. ஆனால் அவர் லீலைகளைப் பற்றிச் சன்னதித் தெரு முழுவதும் பிரஸித்தம்.
‘அதுக்குச் சொல்லலே, ஸ்வாமி. இவரோ அநாதை. பொண்டாட்டி, பிள்ளை யாரும் கிடையாது. சட்டப் பூர்வமா பாத்தா ,இது உங்க குடங்கிறதினாலே, நீங்கதான் பொறுப்பேத்துண்டு இவர் கடைசிக் காரியத்தைப் பண்ணனுனேன்..’என்றார் வக்கீல்.
ஆராவமுது அய்யங்காரைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார் அப்பா.
‘என்ன அப்படிப் பாக்கிறேள்/’ என்றார் வக்கீல்
அப்பா ஒன்றும் சொல்லவில்லை.
‘ஆம்புலன்ஸ்’ வண்டி வந்து விட்ட்து.
அவரை ‘ஸ்டெச்சரில்’ தூக்கி வைத்தபோது, வந்த இருவரில் ஒருவன் சொன்னான்:’ இவரைப் பக்கத்திலே இந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவோம்’
‘அது கோஷா ஆஸ்பத்திரி’ என்றார் வக்கீல்.
‘இவர் ஒண்ணும் சாகலே.. அங்கே டாக்டர் மேரி அம்மா இருக்காங்க. அவங்களை எனக்குத் தெரியும்.. உசிரு இருகிறவரைச் செத்துட்டார்ங்கிறீங்களே, ஐயரே.. கதர் சட்டை போட்டுகிட்டு காந்தி பெயரைக் கெடுக்கறீங்களே.. நகந்து போங்க..’
வக்கீலுக்கு அசாத்திய கோபம் வந்து விட்ட்து.
போலீஸ்காரரிடம் கத்தினார்: ‘நீங்கதானே, உசிரு போயிடுத்துன்னீங்க..அவன் என்னமா பேசறான்!, காந்தியைத் திட்டறான்…’
‘அவன் காந்தியைத் திட்டலே.. உங்க மாதிரி காங்கிரஸ்காரங்களைத்தான் திட்டினான்..உயிரோட இருக்கிறவரைச் சாக அடிச்சு, நான் காரியம் பண்ணனுங்கிறீங்களே, நீங்கள்ளாம் மனுஷாளா?’
வெள்ளைக்காரன் போனப்புறம் நாடு உங்க மாதிரி ஆட்கள் கையிலே மாட்டிண்டு முழிக்கப் போறது… இன்னொரு விஷயம், தெரிஞ்சுக்கோங்கோ.. அநாதைக்கு ஈமக்கடன் செய்யறது, யாகம் செய்யற மாதிரி.. புலிப் பாய்ச்சல் போயிருந்தார்னா அதுவே அவருக்குப் பெரிய ‘ரிலீஃப்’..இப்படித் தண்ணியைத் தூக்கிண்டு அல்லாட வேண்டாம்’ என்றார் அப்பா

Advertisements

கடவுளும் கைத்தடியும்

October 17, 2017 § Leave a comment


நான் வழக்கம் போல் காலை ஆறுமணிக்கு, லஸ் சர்ச் ரோடில் இருக்கும் ஹநுமான் கோவிலுக்குப் போனேன். உடலுக்கும் உள்ளத்துக்கும் பயிற்சி.

அங்கு விதவிதமான மக்கள். விதவிதமான கோரிக்கைகளுடன் ஹநுமானை வழிபட வருவார்கள்.. ஒவ்வொருவருடைய முகத்தையும் ஊன்றிக் கவனித்து அந்தக் கோரிக்கை என்னவாக இருக்கலாம் என்று சிந்திப்பது ஒரு பொழுது போக்கு, மனப்பயிற்சி.. வயதான காலத்தில் யோசிப்பது ஒரு மனப் பயிற்சி, சரீரத்துக்கு, நடை இருப்பது போல.

நான் பிரகாரத்தைச் சுற்றி முடித்ததும், என் கைத்தடியை இறுகப் பற்றிக் கொண்டு பிரகார வாசலின் தூணருகே உட்கார்ந்தேன்.

அப்பொழுது ஒருவன் என்னை நோக்கி வந்தான். காக்கி பாண்ட், சாம்பல் நிற ‘டீ ஷர்ட். அவன் முகம் பழக்கமானது போல் ஒரு மங்கலான உணர்வு. நினைவைத் துழாவினேன். ஞாபகத்துக்கு வரவில்லை.

வயது நாறபதுகளில் இருக்கலம்

அவன் என் குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினான்.நான் இதை எதிர்பார்க்கவில்லை.

‘ஞாபகம் இருக்கா?’ என்று அவன் கேட்டான்.
‘தெரியலியே’.
‘ஆட்டோ ட்ரைவர் ஆறுமுகம்’

அவனா?

என் மனத் திரையில் அவனைப் பற்ரிய வேறொரு சித்திரம் ஓடியது. அழுக்குக் காக்கிச் சட்டை, பாண்ட். வாரக் கணக்கில் சவரக் கத்தி கண்டறியா முகம். சிகப்பேறிய கண்கள்.

அவனுக்கும் எனக்கும் எப்படி ஒரு பந்தம் ஏற்பட்டது என்று என்னால் விளக்க முடியாது. முழு போதையிதான் ஆட்டோ ஓட்டுகிறான் என்று தெரிந்தும் அவன் வண்டியில்தான் போவேன். காரணம், அவன் நேர்மையானவன். மீட்டரில் விஷமம் செய்வதில்லை. குறைந்த தூரமோ, நெடுந்தூரமோ எங்குக் கூப்பிட்டாலும் வருவான்.

நான் பலதடவைகள் அவனுக்கு அறிவுரைகள் கூறியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மௌனப் புன்சிரிப்புதான் அவன் பதில்.

அவனா இவன்? நான் அவனைக் கடைசியாகப் பார்த்து இருபது வருஷங்கள் இருக்கும்

அப்பொழுது அவனைப் பார்த்த காட்சி என் மனக்கண் முன் இன்னும் நிற்கிறது.

நான் ஒரு நாள், ‘வாக்கிங்’ போகும்போது, ‘ஆட்டோ ஸ்டாண்டில்’ ஒரு சின்ன கூட்டம். நாலைந்து பேர்கள், வேட்டி ஒரு பக்கம், உடம்பு ஒரு பக்கமாய் அலங்கோலமாய்க் தெருவில் கீழேக் கிடந்த ஒருவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் சந்தேகித்தபடி, ஆறுமுகம்!

‘என்ன ஆச்சு?’ என்றேன் நான்.
‘ ராத்திரி, அளவுக்கு மீறிக் குடிச்சிருக்காரு… வீட்டுக்குக் கூட போகாமெ இங்கே புரண்டு கிடக்கிறாரு’ என்றான் அவர்களில் ஒருவன்.

ஆறுமுகம் கண்கள் திறந்தன.என்னைப் பார்த்தன.

திடீரென்று எழுந்தான். வேட்டியைச் சரி செய்தான். தள்ளாடித் தள்ளாடி நடக்க ஆரம்பித்தான்.

‘அவன் வீடு எங்கே இருக்கு?’ என்றேன் நான்.
‘தேனாம்பேட்டை. ரெண்டு குழந்தைகளை வீட்லே விட்டுட்டு இவரு பொண்டாட்டி ஓடிப் போயிடிச்சு. அதான் இந்தக் குடி!’ என்றான் அவர்களில் மற்றொருவன்.

அவ்வளவுதான், அடுத்த கணத்தில், அவ்வாறூ சொன்னவன் கீழே கிடக்க, அவன் மீது ஆறுமுகம் உட்கார்ந்து கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் ஆறுமுகத்தைக் கட்டிப் பிடித்து கிழே தள்ளினர்.

ஆறுமுகம் எழுந்து தலை தெறிக்க ஓடினான். அந்த ‘ட்ராஃபிக்’ நெரிசலில், போதையில் தெருவில் கிடந்தவனால் எப்படி பஸ்களையும் கார்களையும் சமாளித்து அப்படி அவ்வளவு வேகமாக ‘சிக்னலை’த் தாண்டி ஓட முடிந்தது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நான் அவனை அந்தக் கோலத்தில் பார்த்தது அவனுக்கு அவமானமாய் இருந்திருக்குமா? அதைவிட பெரிய அவமானம் அவன் மனைவி அவனைவிட்டு ஓடிவிட்டாள் என்று ஒருவன் பகிரங்கமாய் அறிவித்தது!

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் அவனைப் பார்க்கிறேன்!

‘நான் உங்களை இந்தக் கோயில்லே பல தடவை பாத்திருக்கேன். நீங்க என்னை அடையாளம் கண்டுக்கலேன்னு புரிஞ்ச்சது. இன்னிக்குத் தான் எப்படியும் உங்களைப் பார்த்துப் பேசலாம்னுதான் வந்தேன்.’ என்றான் புன்முறுவலுடன்

‘உன்னை இப்படிப் பாக்க சந்தோஷமா இருக்கு. இப்பொ என்ன செய்யறே?’

அவன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். ’ அதே வீட்லேதானே இருக்கீங்க? வாங்க, நான் உங்களை வீட்லே கொண்டு விட்டுடறேன்’ என்றான் சில விநாடிகள் கழித்து.

‘இது எனக்கு’வாக்கிங்’ ஆறுமுகம்! உன் வண்டியிலே உன்னோட போனா அது ‘வாக்கிங்’ இல்லே’ என்றேன் சிரித்துக் கொண்டே.

‘ஒரு நாளைக்குப் பரவாயில்லே, ‘வாக்கிங்’ வேண்டாம். என்னைப் பத்தி நீங்க என்னை ஒண்ணுமே கேக்கலியே? நீங்க கேக்காட்டாலும் சொல்றேன், வாங்க’

அவன் தன் கையை நீட்டி என் கையைப் பிடித்துக் கொண்டு எழும்ப வைத்தான்.என்னாலேயே எழுந்திருக்க முடியும் என்று சொல்ல நினைத்தேன். ஆனால், அவன் அன்பை நிராகரிக்க விரும்பவில்லை.

கோவில் வாசலை அடைந்ததும் அவன் சொன்னான்:’ இங்கே இருங்க, வண்டியைக் கொண்டு வந்துடறேன்.’

அவன் இடப்புறமாகத் திரும்பி சற்றுத் தொலைவில் இருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான்.

நான் ‘ஆட்டோ ரிக்‌ஷா’ என்று நினைத்ததற்கு வெட்கப்பட்டேன். என் பிரபுத்வ ‘ஈகோ’வின் எச்சம்!

‘மினி காப்’! இப்பொழுது ‘டாக்ஸி’ ஓட்டுகிறான் போலிருக்கிறது.

வண்டியில் உட்கார்ந்ததும் கேட்டான்:’அதே வீட்லேதானே இருக்கீங்க?’

‘ஆமாம்.’

சிறிது நேரம் மௌனம். பிறகு கேட்டான்’ ‘என் கதைடைக் கேக்க ‘டைம்’ இருக்குமா?’

‘எனக்கு இருக்கு. உனக்குதான் ‘டைம்’ இருக்கணும். இது ‘டாக்ஸி’தானே?’

‘ஆமாம். சொந்த வண்டி. ‘லோன்’ எடுத்து வாங்கினேன். கம்பனியோட ‘கான்ட்ராக்ட்’ சொந்த வண்டியிலே ஒரு சௌகர்யம். அதுதான் நம்ம சௌகர்யப்படி போகலாம்.நீங்க இப்பொ ‘டாக்ஸி’யிலே போகலே. என் வண்டியிலே போறீங்க. சரி, என் கதையைச் சொல்றேன். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’

நான் திடுக்கிட்டேன்.என் நம்பிக்கைகளும், நம்பிக்கையின்மைகளும் கேள்விக்குள்ளாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

‘நான் கேட்டது தப்பு. உங்களைக் கோயில்லே பாத்திட்டு, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கான்னு கேக்கறது தப்பு.சரி, என் கதையைச் சொல்றேன்.

சில விநாடிகள் மௌனம்.

‘எனக்கு அப்பொ, அதான் அந்தக் காலத்திலே, குடிச்சுப் புரள்றப்பொ, கடவுள் நம்பிக்கை எதுவும் கிடையாது. அதனால்தான் நான் குடிச்சேன்னு நான் சொல்ல வல்லே. எதிலியும் நம்பிக்கையில்லாமெ இருந்தேன். நான் பிறந்து, வளர்ந்த சூழ்நிலை அப்படி. அப்பன் குடிகாரன், அவன்கிட்டேயிருந்து அந்தப் பழக்கத்தையும், தங்கமான என் அம்மா கிட்டேயிருந்து யாரையும் ஏமாத்தக் கூடாதுங்கிற பழக்கத்தையும் கத்துகிட்டேன்.’

‘எனக்கு உன் பேரிலே அபிமானம் ஏற்படறதுக்குக் காரணம், நீ யாரையும் ஏமாத்தறதில்லேங்கிறதுதான் ’ என்றேன் நான்.

‘ அது எனக்குத் தெரியும். அதனால்தான், நீங்க என்னை அப்படிக் கீழே குடிச்சிட்டுக் கிடந்ததைப் பாத்துட்டீங்களேங்கிற அவமானத்தினால்தான் அன்னிக்கு அப்படி ஓடினேன்… என் பொண்டாட்டி என்னை விட்டு ஓடிட்டாங்கிறதுகூட எனக்கு அவ்வளவு தப்பா படலே. குடிகாரன் புருஷன்கிட்டே எந்தப் பொம்பிளை இருக்க முடியும்? ஆனா ரெண்டு குழந்தைங்களை அனாதையா விட்டுட்டு ஓடினதுதுதான் என்னை அடியோட வேற ஆளா மாத்திடுச்சி. அந்த வகையிலே அவ அப்படி ஓடிப் போனது நல்லதுதான். குழந்தகளை நல்லா படிக்க வச்சு ஆளாக்கணும்னு ஒரு வெறி.அதுக்குக் குடிப் பழகத்தை விட்டொழிக்கணும்னு புரிஞ்சுது. அதுக்கு என்ன செய்யறது? எனக்கு எந்த மருத்துவச் சிகிச்சையிலும் நம்பிக்கை கிடையாது.’

சிறிது நேரம் மௌனம்.

அவன் தன் கதையைச் சொல்லுவதற்காகச் சுற்றி அழைத்துச் செல்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. எனக்கு அது தெரியும் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான் என்பதும் எனக்கு விளங்கியது.. அதனால்தான் அப்பொழுது, ‘இது இப்பொழுது என் வண்டி’ என்று அவன் சொல்லியிருக்க வேண்டும்.

அவன் மீண்டும் தொடர்ந்தான்:’ நான் இப்படியெல்லாம் யோசிச்சுகிட்டு ஒரு நாள் சவாரியை ஏத்தி வரப்போ, இந்த அநுமார் கோயில்லே மணி அடிச்சுது. சவாரியும் இங்கே இறங்கிச்சு. வண்டியை நிறுத்திட்டு நானும் கோயிலுக்குள்ளாற போனேன். ஒரே கூட்டம். சனிக் கிழமை. கோயில் மணி சப்தமும், ‘டும்’ டும்னு அந்த மத்தள சப்தமும் என்னையறியாமலேயே மெய் சிலிர்க்க வச்சுது.ஏன் அப்படி ஆச்சுதுன்னு காரணமும் விளங்கலே! உடம்பெல்லாம் புல்லரிச்சுது. ஆமாங்க..
அப்பொத்தான் எனக்குத் திடீர்னு மின்னல் கணக்கா பளீர்னு ஒரு எண்ணம் வந்தது. அநுமார் பேரிலே நம்பிக்கை வச்சு அவருக்கு இனிமே குடிக்கமாட்டேன்னு ஒரு சத்திய வாக்கு கொடுத்தேன்னா என் பிரச்னை தீரும்னு.
எனக்கு அப்பொ ஏன் அப்படித் தோணிச்சுன்னு என்னாலேயே புரிஞ்சுக்கவே முடியலே! நம்பினா நம்புங்க, நம்பாட்டிப் போங்க, நூத்தெட்டு தடவை பிரகாரத்தைச் சுத்திச் சுத்தி வந்தேனுங்க. மனசு லேசான மாதிரி இருந்தது.அப்புறம் குடி பக்கம் எட்டிக்கூடப் பாக்கலே.


வெறி பிடிச்ச மாதிரி சவாரிக்குப் போனேன். சம்பாரிச்சேன். பசங்களைப் படிக்க வச்சேன், ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் இப்பொ தரமணியிலே இரு கம்பனிலே வேலை செய்யறான். ஐ.டி.மகளும் ஐ.டி. பாங்க்லே வேலை செய்யறா.அவ ‘பாங்க்’லேந்துதான் இந்தக் காருக்கு ‘லோன்’. இப்போ நல்லா இருக்கேங்க’

‘அநுமார்தான் காரணங்கிறீயா?’ என்றேன் நான்.

‘நான் காரணத்தை ஆராய விரும்பலே. அதைப் படிச்சவங்கிற செய்யற வேலை. இப்பொ நீங்க கைத்தடி வச்சிருக்கீங்க, அதெ பிடிச்சுகிட்டாத்தான் நடக்கிறதுக்கு உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரது இல்லையா? அது இல்லாட்டியும், உங்களாலே நடக்க முடியலாம், ஆனால் ‘பாலன்ஸ்’ இருக்காது. மனுஷங்க வாழ்க்கை சைக்கிள் விடற மாதிரி. ‘பாலன்ஸ்’ இல்லாட்டி, வாழ்க்கைச் சக்கரம் ஓடாது. இதுதானே உங்க வீடு?’

‘ஆமாம்”.

நான் இறங்குவதற்கு வசதியாக என் கைத்தடியை என் கையிலிருந்து வாங்கி, இறங்கியவுடன் கொடுத்துவிட்டுப் புன்னகை செய்தான்.

வைதீஸ்வரன் கவிதைகள்-முழு தொகுப்பு

October 13, 2017 § Leave a comment


’ஒரு வித மானசீகப் பிடிவாதத்தின் வெளிப்படுகளாக’ 366 மலர்கள் பூத்திருக்கின்றன. மலர்களின் பெயர் ‘வைதீஸ்வரன் கவிதைகள்’. ‘கிணற்றில் விழுந்த நிலா’வாகத் தொடங்கி இறுதியில் ‘ மொழியற்ற கணமாக’ இந்தப் ‘பிடிவாதம்’ பரிணாமம் அடைந்திருக்கிறது.

கவிஞரின் முதல் கவிதையிலிருந்து அவர் எழுதியுள்ள அண்மைக்காலத்துக் கவிதை வரைத் தொடர்ந்து படிக்கும்போது, அந்தந்தக் காலத்துச் சம்பவங்களின் தாக்கம் வேறுபட்டாலும், குரல் ஒலி மாறவில்லை என்பதை நம்மால் உணரமுடிகின்றது. இதுதான் கவிதையின் ‘உள்ளீடான ரிதம்’.

வியட்நாம் போரின் போது, ஒரு பிரபலத் தமிழ் எழுத்தாளரை ஒருவர் கேட்டாராம்” உங்களை ஓர் அமெரிக்கன் சிப்பாய் கண்மூடித்தனமாக மை லாய் வீதியில் வெறிபிடித்தாற்போல் குழந்தைகளையும்,பெண்களையும் சுட்டுக் கொண்டே ஓடியது பாதிக்கவில்லையா? நீங்கள் அதைப் பற்றி ஏன் எழுதக் கூடாது?’ என்று கேட்டாராம். எழுத்தாளருக்குக் கோபம் வந்து விட்டது. ‘நான் எதைப் பற்றி எழுத வேண்டும், எழுதக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்?’என்றாராம்.

எழுத்தாளர் கூறிய பதிலை என்னாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.’ மைலாய் வீதிச்’ சம்பவம் ஒரு குறியீடு. அந்தப் போர்வீரன் மீதும் தவறில்லை. போர் எப்படி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது என்பதின் குறியீட்டு உருவகந்தான் அந்தச் சம்பவம்.

இந்தத் தொகுதியில் வைதீஸ்வரன் அதை ஒரு குறியீட்டு உருவகமாகத்தான் கையாளுகிறார்.

‘கற்கால இருட்டுக்குள்
கண் புதைத்து
இருதயத்தைப் பிடித்துக் கொள்
உயிர் வாழப் பழகிக் கொள்
இருபதாம் நூற்றாண்டு’

கற்காலத்தில் மனிதனை நோக்கியிருந்த ஒரே பிரச்னை கொடிய விலங்குகளினின்றும், இரக்கமற்ற இயற்கையினடமிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான். இன்று மனிதனே கொடிய விலங்காக மாறி விட்டான்! ஓர் அணுகுண்டு வீசி லட்சம் பேரைக் கொல்கின்றான்! மனிதன் தன்னைச் சக மனிதனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! கவிஞரின் நயமான குரலில் எவ்வளவு கூர்மை! ‘சொல்லொக்கும் சுடுசரம் ‘ !

கடலில் ஒரு துளியாக ‘மைலாய் வீதி’ என்ற கவிதையைச் சுட்டிக் காட்டினேன். தொகுப்பு முழுவதும் வைரமென மின்னும் கவிதை ஒளி மின்னல் கீற்றுக்கள்1

அநாமிகா பிரசுராலாயத்தின் அதிபர் லதா ராமகிருஷ்ணனைப் பாரா ட்ட வேண்டும். அற்புதமான வடிவமைப்பு. கவிஞரே வரைந்த நுண்ணிய சித்திரம் முகப்போவியமாக அமைந்திருக்கிறது..’கவிதை நுண்கலைகளின் அரசி என்றால் ஓவியம் இளவரசி’ என்பார் ஆடன். அரசி, இளவரசி ஆகிய இருவர்மீதும் ஆளுமை கொண்டிருக்கும் வைதீஸ்வரனுக்கு என் பாராட்டுக்கள்!

ராமாநுஜர்- ஒரு விளக்கம்

October 11, 2017 § Leave a comment


‘ராமாநுஜர்’ நாடகம் பற்றி ஒரு விளக்கம்.

அண்மையில் ‘ஷ்ரத்தா’ குழுவினர் மேடை ஏற்றிய இந்த நாடகத்தில், ராமாநூஜர் துறவறம் மேற்கொள்ளுவதற்காகத் துறந்த அவர் மனைவி தஞ்சம்மா இறுதியில் மீண்டும் தோன்றுவதாக வரும் காட்சி, மூல நாட்கத்தில் இல்லை. ஆனால் நான் இந்தப் பகுதியை, இரண்டாண்டுகளுக்கு முன் தனியாகக் ‘கல்கி’ தீபாவளீமலருக்கு ஓரங்க நாடகமாக எழுதினேன். இதையும் இணைத்துக் கொள்ளலாமென்று அக்குழுவினருக்கு நான்தான் யோஜனை சொன்னேன். பொருத்தமாக இணைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

இக்காட்சியை நான் எழுதவதற்கு என்ன காரணம்?

நாடகம் 1997ல் புது தில்லி தேசிய நாடககப் பள்ளியினரால், கே.எஸ். ராஜேந்தீரன் இயக்கத்தில் போடப்பட்ட போது, அதில் நடித்த ஒரு பெண் என்னைக் கேட்டார்;’ ராமாநுஜர் மடத்தில் பல பெண்கள் இருந்திருக்கின்றனர். அவரால் தம் மனைவியின் மன த்தை மாற்ற முடியவில்லையா? ‘ இந்தக் கேள்வி என்னைப் பல ஆண்டுகளாக அரித்துக் கோண்டிருந்தது. அதன் விளவுதான் ‘கல்கி’ யில் பிறகு நான் எழுதிய ஓரங்க நாடகம்.

இவ்விளக்கம் தேவையென்று நினைத்தேன்.

இந்நாடகம் முன்பே என் பதிவாக வெளியிடப்பாட்டிருக்கிறது. தலைப்பு.’Yஆர் ஸ்வாமி, தஞ்சம்மா?’ indiraparthasarathy.wordpress.com

Sleeper-cells

October 10, 2017 § 5 Comments


‘Seven consiprators join to topple a Govt. Each one had a name like Monday, Tuesday, Wednesday, Thursday, Friday ,Saturday and Sunday. One day, the man called ‘ Monday’ complains there is a ‘mole’ among us. We will eliminate him. ‘. After a pause, he adds ‘it is ‘Sunday’. ‘Sunday’ is shot. After some time, they find another mole. It is “saturday’. He is killed. Finally, they discover that all of them were ‘sleeper cells’ to spy on each other.
What is the moral of the story?
A story by. G.K.Chesterton.

ராமாநுஜர் 2

October 8, 2017 § 1 Comment


ஆங்கிலத்தில் சொல்வார்கள், Discussing Hamlet without the Prince of Demark’ என்பது போல், நாடகத்தை கலை நேர்த்தியுடன் இயக்கியிருந்த ஜி. கிருஷ்ணமூர்த்தியின் பெயரைச் சொல்லாமல் முன் பதிவு இருப்பது என் இமாலயத் தவறு.

ராமாநுஜர்

October 8, 2017 § 1 Comment


நேற்று ஷ்ரத்தா நாடகக் குழுவினர் மேடை ஏற்றிய என் நாடகம் ‘ராமாநுஜர்’ பார்த்தேன்.
அக்குழுவைச் சார்ந்த சுந்தர்ராஜனும், கிருஷ்ணமூர்த்தியும் என்னை மேடையேற்றுவாது பற்றி விவாதிக்க வந்த போது, இதில் அவர்கள் எந்த அளவுக்கு உறுதியோடு, தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. நம்பிக்கையையும் அளித்தது.

நேற்று நாடகம் பார்த்த போது மனம் நிறைவடைந்தது. என் நாடகம் 1996ல் பிர்ரசுரமானது. இரண்டாண்டுகளுக்கு முன் ‘கல்கி’ தீபாவளி மலரில், இந்நாடகத்துக்குப் பின் ஒட்டாக ‘யார் தஞ்சம்மா?’ என்ற தலைப்பில் எழுதியிருந்த ஓரங்க நாடகத்தையும் அற்புதமாக இணைத்து மேடையேற்ரியிருந்தனர்.

பொதுவாகத் தமிழ் நவீன நாடகக்காரர்கள் இசைக்கு (அது நாடகத்தின் ஒரு பிரதான அம்சமாக இருந்தாலும்) மேடை ஏற்றும்போது இசைக்கு முக்கியத்வம் அளிப்பதில்லை. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, இந்நாடகத்தின் இயக்குநர் இசைக்கு ஏற்றமும் தோற்றமும் அளித்திரூந்தது நாடகத்தைப் பொலிவுறச் செய்திருந்தது. மேடையில் ஒரூ Live Orchestra. நாடகத்தோடு மிகவும் இணைந்து இசைத்தது உயர்ந்த ரசிக அநுபவம்.

முதல் காட்சி started with a bang, ஆளவந்தாராக வந்த டி,டி. சுந்தர்ராஜனின் அநுபவ முத்திரையுடன். சுவாமிநாதனின் கனிவான முகமும், மாறாத புன்னகையும் அவரை ராமாநுஜராக முற்றிலும் அடையாளம் காட்டியது.

சிறு சிறு பாத்திரங்களாக நடித்தவர்களும் பொறுப்பு உணர்ந்து இசைவாக நடித்ததைப் பாராட்ட வேண்டும்.

செட், ஒளி நிர்வாகம், ஒலி அமைப்பு எல்லாம் சிறப்பாக இருந்தனா. Kudos to the technicall artistes!

Where Am I?

You are currently browsing the Uncategorized category at இந்திரா பார்த்தசாரதி.