பாப் டிலனும் இசை ஞானியும்

June 15, 2018 § Leave a comment


எந்த மேதையும் விருதினால் ஏற்றம் பெறுவதில்லை. ஆனால் மேதைக்குக் கொடுக்கப்படுவதினால் அந்த விருது ஏற்றம் பெறுகின்றது.

இசை உலகில் ஒரு முக்கியமான பெயர் இளையராஜா. கர்நாடக சங்கீதப் பாரம்பரியத்தில், அரியக்குடி ராமாநுஜ அய்யங்காருக்கு எந்த இடம் தரப் படுகின்றதோ அதற்குச் சமமான இடத்தை இந்தியத் திரைப் பட இசை உலகில் செங்கோகோலோச்சி வருகிறார் இளைய ராஜா என்பது அனைவரும் அறிந்த உண்மை.

திரைப்பட இசை என்றால் லகுவான சங்கீதம் என்று மட்டும் அர்த்தமில்லை. பெரும்பான்மயான ம்க்களின் உள்ளங்களை உருக்குவதற்காக எளிய வடிவில் உருவாகும் இசை எவ்வளவு சிக்கலான உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றது என்பது, அந்த இசையைக் கட்டுடைத்துப் பார்க்கின்றவர்களுக்குத் தான் தெரியும். இதற்கு ஆழமான சங்கீத ஞானம் தேவையாக இருக்கும். இளையராஜாவுக்கு ஆழ்ந்த கர்நாடக சங்கீத ஞானம் அவர் மரபணுவிலேயே ஊடுருவி இருக்கிறது. நாட்டார் இசை அவர் இதய ஒலி. மேற்கத்திய இசை அறிவு,அவர் தேடிப் பெற்ற செல்வம். பல்வேறு இசைக் கருவி ஆளுமை ,ஆங்கிலத்தில் சொல்வது போல அவருடைய ‘second nature’.

இத்தகைய ஆற்றலுடைய ஒரு மேதையை ‘ மியூஸிக் அகெதெமி’  இசை விருதுகளிலேயே உயர்வாகக்க் கருதப்படும் ‘சங்கீத கலாந்தி’ப் பட்டம் கொடுத்துத் தன்னை ஏன் பெருமைப் படுத்திக் கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது! அவரை இசைவிழாவுக்குத் தலைமை தாங்க அழைத்தது வேறு விஷயம். மாநில முதலமைச்சர்களையும் தலைமதாங்க அகெதமி அழைத்திருக்கிறது என்பதைக் கருதும்போது,  இத்தகைய அழைப்புகளுக்க வேறு காரணங்கள் இருக்கின்றன  என்பது புலப்படுகின்றது.

பாப் டிலனுக்கு  விருது அளித்துத் தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது நோபல் இலக்கியக் கமிட்டி. அந்த வாய்ப்பு இப்பொழுது மியூஸிக் அகெதமிக்கு  இருக்கிறது.

Advertisements

‘பிறப்பது அபத்தம், இறப்பது உறுதி’

June 10, 2018 § Leave a comment


இன்று ‘வாட்சப்பில்’ எனக்கு ஒரு செய்தி வந்தது. 2040ல் மனிதனுக்குச் சாவே நேராது, இறந்து போக வேண்டுமென்றால் அது ஒருவன்/ஒருத்தி முடிவாக இருக்குமென்று.

இது எனக்கு மகாபாரதத்தில் வரும் இரண்டு உட்கதைகளை நினைவுறுத்தியது.

ஒன்று, யயாதிப் பற்றியது. இன்னொன்று துரோணர் மகன் அஸ்வாத்தமன் குறித்து.  ஒன்றில் சுக்கிராச்சாரியார் தமது மருமனாகிய அரசன் யயாதிக்குச் சாபம் கொடுக்கிறார். இன்னொன்றில், கிருஷ்ணன், அஸ்வத்தாமனுக்கு சாபம் கொடுக்கிறான்.

யயாதிக்குக் கொடுக்கப்பட்ட சாபம் அவன்  உடனே  வயோதிகப் பருவம்  எய்த வேண்டுமென்பது.

அஸ்வத்தாமனுக்குக் கொடுக்கப்பட்ட சாபம் அவனுக்கு என்றும் சாவு நேரக்  கூடாதென்பது.

நீங்கள் ஆச்சர்யப்படலாம், ‘சிரஞ்சீவி’யாயிரு என்பது சாபமா வென்று. கிருஷ்ணன் கெட்டிக்காரன். ‘ உனக்குச் சாவே நேராது’ என்று சொன்னானே தவிர உனக்கு முதுமைப் பருவம் என்றும் வந்தடையாது’ என்று சொல்லவில்லை. ஆனால் யயாதிக்கு மரணம் சம்பவிக்காது என்று சுக்கிராச்சாரியார் உறுதியளிக்கவில்லை. கிழப்பருவம் எய்த நிலையில் சில ஆண்டுகளில் அவனுக்கு மரணமே விடுதலையைத் தந்திருக்கக் கூடும்!

ஆனால் அஸ்வத்தாமனுக்கு உரிய வயதில் கிழப்பருவம் கூடினாலும் அப்பருவத்திலேயே என்றென்றும் அவன் துன்பப்பட வேண்டுமென்பதுதான் சாபம்! இதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிரஞ்சிவித்தன்மையின் இலக்கணம்

கிருஷ்ணன்முக்காலங்களையும் உணர்ந்தவன்.  இன்றையக் காலக் கட்டத்தில், சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உறவு முறைகளே சிக்கலாகிக் கொண்டு வரும் நிலையில், வயோதிகப் பருவம் மனிதனுக்கு எத்தனைப் பிரச்னைகளை ஏற்படுத்தித் தருமென்று!’

இளமையிலும், நடு வயதிலும் அற்புதமான  விற்போர் போராளியாக இருந்திருக்கக்  கூடிய அஸ்வத்தாமனை, வயதினால் பிணியுண்டு, தோல் திரைத்து, நரை கூடிய ஒரு ‘குடு குடு கிழவனாக’க்  கற்பனை செய்து பாருங்கள். அவன் முதல் எதிரி கண்ணாடியாக இருந்திருக்கும்!   குடும்பங்கள் இருக்கும்போதே இக்காலத்து முதியோர் அடைக்கல இல்லங்களை நாடிச் செல்லும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு கிழவன் யாரைத் தேடி எங்குப் போக முடியும்?

யயாதியாவது, தன் மகன் புரூவிடமிருந்து இளமையைக் கடன் வாங்கிச் சில ஆண்டுகள் சுகமாக இருந்துவிட்டு கிழப் பருவம் எய்தும் முன்னே சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டான்!  அஸ்வத்தாமன், பாவம், கிழப் பருவத்தை அடைந்திருந்தாலும் அவனால் சாக முடியாது.  இந்தக் காலக் கட்டத்தில் நெருங்கிய உறவு என்பதெற்கெல்லாம் ஒரு ‘shelf-date’  இருக்கும்போது ,அஸ்வத்தாமனால்  யாருடன் உறவு கொண்டாட முடியும்?

ஆகவே விஞ்ஞானிகளுக்கு என் வேண்டுகோள். இயற்கை விதிச் சட்டங்களுடன் விளையாடதீர்கள். நோயில்லாமல் மனித இனம் வாழ வழி செய்யுங்கள்.  பிறப்பும், இறப்பும் இயற்கையின் மேல்வரிச் சட்டங்கள்.

 

Euthanasia

June 5, 2018 § Leave a comment


.கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் தீர்மானிக்கிறான். ‘வடக்கிருத்தல்’ என்பது, ஆற்றோரம் மர நிழலில், அன்ன ஆகாரமின்றி இருந்து உயிர் நீத்தல். இது சமண மரபு. கோப்பெருஞ்சோழன் சமணனாக இருந்திருக்க க் கூடும்.

அவன் இந்த முடிவுக்கு வர என்ன காரணம்? அவன் இரு பிள்ளைகளும் அவனுக்கெதிராக க் கிளர்ச்சி செய்கிறார்கள். அவர்கள் மீது அவன் போர் தொடுக்க க் கிளம்புகிறான். அவன் பிள்ளைகள் அவனை எதிர்க்க என்ன காரணம்? புறநானூற்றுப் பாடல்களில் இதற்கு விடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், வேறு சில பாடல்களைக் கொண்டு ஊகிக்க முடியும்.

இப்பொழுதுள்ள பிரித்தானிய அரசியின் வயது தெரியுமா? 92. உலகிலேயே நீண்ட காலம் அரசாட்சி புரிபவர் என்ற முத்திரையும் பதித்து விட்டார். அவர் மகன் இளவரசன் சார்ல்ஸ் எழுபதுகளில் இருக்கிறார். இப்பொழுதுள்ள அரசர்கள், அரசிகள் எல்லோரும் சீட்டுக்கட்டு ராஜா,ராணிகள்தாம். அதிகாரம் ஏதும் கிடையாது. ஆனால் அந்தக் காலத்தில், ‘திருவுடை மன்னரைக் காணின், திருமாலைக் கண்டேனே’! என்கிற மாதிரி. அரசனைக் கடவுளாகப் பார்த்தார்கள். முழு அதிகாரத்துடன் வயதாகிக் கொண்டே யிருக்கும் நிலையில், எந்த விதமான நோய் நொடியின்றி அந்த அரசன் தொடர்ந்து ஆட்சிப் பீடத்தில் இருந்தால், எத்தனை ஆண்டுகள்தாம் பிள்ளைகளால் பொறுமையாக்க் காத்துக் கொண்டிருக்க முடியும்?

கோப்பெருஞ்சோழன் முதுமைப் பருவம் எய்தியும் தொடர்ந்து ஆட்சிப் புரிந்து கொண்டிருக்கலாம். அதற்குச் சான்று என்ன என்று கேட்கிறீர்களா?

கோப்பெருஞ்சோழன் பிள்ளைகள் மீது போர் தொடுக்க முற்படும்போது,, அவன் அவ்வாறு செய்வது ‘சரி’யன்று என்று அவனைப் புல்லாற்று எயிற்றியனார் என்ற புலவர் தடுக்கிறார். ‘ நீ போர் தொடுக்கப் புறப்பட்டிருப்பது உன் எதிரிகள் மீதில்லை. அவர்கள் சேரர்களோ, பாண்டியர்களோ இல்லை. உன் பிள்ளைகள். உனக்குப் பிறகு பிறப்புரிமையின் காரணமாக ஆட்சியில் அமரப் போகிறவர்கள். நீ போரில் வெற்றிப் பெற்றாலும், தோற்றாலும் பதவியில் இருக்கப் போகிறவர்கள் யார்? நீ தோற்று விட்டால் உனக்கு பெரிய அவமானம்! இது உனக்குத் தேவையா?’ என்று அவர் அவனிடம் கூறுகிறார். அதாவது, ‘ உனக்கு வயதாகி விட்டது, ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இரு’ என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டியிருக்க க் கூடும்! அரசன் மனம் மாறி தன் மதத்து மரபின் படி, வடக்கிருக்க த் தீர்மானித்திருக்க வேண்டும்.

அவன் அவையோரிடம், ‘என் உயிர் நண்பர் பிசிராந்தையாரும் வடக்கிருப்பதை அறிந்து அவரும் வடக்கிருக்க வருவார், அவருக்கும் இடம் வகுத்து வையுங்கள்’ என்று கூறுகிரான். அவன் கூறியவாறே, அவன் வடக்கிருக்க அமர்ந்த பிறகு, பிசிராந்தையார் வருகிறார்.

அவரைப் பார்த்து அவையோர் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? ‘உங்களுக்கு இத்தனை வயதாகியும் உங்களுடைய முடியில் ஒன்று கூட நரைக்கவில்லையே, இளமைத் தோற்றத்துடன் இருக்கிறீர்களே,எப்படி?  ‘ என்பதுதான். அவருக்கு நிறைய வயதாகி விட்டது என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? அவர் கோப்பெருஞ்சோழனின் நண்பர், பல்நெடுங்காலமாக அவர்களுக்கிடையே இருக்கும் நட்பைப் பற்றிப் அரசன் பேசியிருக்கிறான்! இதன் அடிப்படையில் அவர்கள் அவர் வயதைத் தீர்மானிக்கிறார்கள்!

ஆனால் அவர் கூறும் பதில் உண்மையான நட்புக்கு இலக்கணம் வகுப்பது போல் இருக்கிறது. அரசனுக்கோ பிள்ளைகளால் பிரச்னை, வடக்கிருக்கத் தீர்மானிக்கிறான். இவருக்கோ ஒரு பிரச்னையுமில்லை. நல்ல பண்புகளுடைய மனைவி, நிறைந்த அறிவுடன், அதே சமயத்தில் சொன்னபடிக் கேட்கும் பிள்ளைகள், இட்ட பணியைச் செய்யும் ஏவலர், ஆன்றோர்கள் நிறைந்த ஊர், எல்லாம் இருந்தும், அவர் உயிர நண்பன், மனம் கலங்கி வடக்கிருக்கத் தீர்மானித்திருக்கிற போது, தாம் தொடர்ந்து உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்று அவருக்குப் படுகிறது!

கோபெருஞ்சோழன் வடக்கிருந்த போது அவனுடன் அவனால் பலனடைந்த இன்னும் சில புலவர்களும் வடக்கிருக்கத் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. கோப்பெருஞ்சோழன் அவருக்கு அநுமதி அளிக்க மறுத்துவிடுகிறான். ‘குழந்தை பிறந்த பிறகு வாருங்கள்’ என்று சொல்கிறான். அவர் இளைஞராக இருந்திருக் க க்கூடும்! அவரும் குழந்தை பிறந்த பிறகு வடக்கிருக்க வரும்போது, நடுகல்லாகியும், கோப்பெருஞ்சோழன் அவருக்கு வாக்குறுதி அளித்தபடி இடம் அளிப்பதற்கு மனம் மகிழ்ந்து அவர் பாடும் ஒரு பாடல் ‘புறநானூற்றில்’ வருகிறது.

வாழ்வதற்கு நட்பு ஓர் அர்த்தம் கற்பிக்கின்றது.  தன்னால் தனக்கோ குடும்பத்துக்கோ அல்லது சமூகத்துக்கோ உதவி இருக்கப் பொவதில்லை என்ற. அர்த்தமில்லாத நிலையில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஒருவனுக்கு உரிமை இருத்தல் வேண்டும் இதை சமணர்கள் ‘சந்தாரா’’ என்றார்கள். அதுதான் ‘வடக்கிருத்தல்’. ஆங்கிலதில் ‘euthanasia’ என்பார்கள்.

 

 

சடங்கு மொழி இலக்கியமான கதை

June 1, 2018 § Leave a comment


தொன்று தொட்டே தமிழ்ப் புலவர்களுக்கு சமஸ்கிருத அறிவும் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அது அந்தக் காலத்திய கல்வி முறைக்கும் ஒரு விளக்கம் என்று சொல்லலாம்.  தமிழில் பாடியிருக்கும் இப்புலவர்கள் சமஸ்கிருதத்திலும் ஆக்கங்கள் படைத்திருக்கின்றார்களா என்று அறிய முடியவில்லை.

குறிப்பாக, திருமாலின் அவதாரம் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் வருகின்றன. ‘விஷ்ணு’ என்ற சொல்லின் வேரே தமிழ்தான் என்பார் J.Przyluski. ‘ ‘The word is pre-Aryan and it should be connected with the non-Aryan ‘ Vin’ (‘விண்’- ‘sky’)’ அவர் சொல்வதற்குப் பொருந்த, ‘ விஷ்ணு’ ‘space concept’.  அணுவாய் வந்து அகிலத்தை அளந்த (வாமன- திருவிக்கிரமன்) கதை சான்று.

கடவுளை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு நுண்ணியக் கோட்பாடாகக் ( abstract concept) காணாமல், நமக்குச் சுலபமாகப் புரியக் கூடிய மனித நிலையில் நம்முடைய பூகோள வரையறைக்கே சாத்தியமான ஓர் உருவமாகக் காண்பது ஆதி வேத கால மரபன்று. அச்சத்தில் விளைந்தது அவர்களுடைய இறைக் கொள்கை.ஆனால், தொல்காப்பியம் ஒவ்வொரு பூகோள வரையறைக்குட்பட்ட நிலத்துக்கு தெய்வத்தைக் குறிப்பிடும்போது. முல்லை நிலக் கடவுளாக  ‘மாயோனை’ச் சொல்கிறார். மாயோன் என்பது திருமாலைக் குறிக்கும். ‘கருமை நிறம் வாய்ந்தவன்’ என்பதும் பொருள்.

சங்க நூல்களிலே மிகப் பழமையான ‘ பதிற்றுப் பத்து’ திருவனந்தபுரத்திலே உள்ள ‘கமழ் குரர் துழாய் அலங்கல் செல்வன் சேவடி பரவி’ என்கிறது

கதிரவனை மறைத்த அரக்கர்களுடன் போர் செய்து திருமால் பெற்ற வெற்றியைப் புறநானூறு பாடுகிறது. (புறம் 174, 1-5) இந்த நிகழ்ச்சி வடமொழிப் புராணங்கள் எதிலும் குறிப்பிடப் படவில்லை என்கிறார்கள். புறநானூறு , கண்ணன், பலராமன்  ஆகிய இருவரையுமே திருமாலின் அவதாரமாக் குறிப்பிடுகிறது. (புறம் 174,1-5) கிருஷ்ணனும் கோபிகையரும்  யமுனை ஆற்றில் ஜலக்கிரீடை செய்ததைக் குறிப்பிடுகிறது அகநானூறு.(அகம் 59, 3-6) இராமன் சுக்ரீவனுடன் மந்திராலோசனை செய்த போது பறைவைகள் அமைதி காத்தன என்கிறது அகநானூறு. 970,13-16). இதற்கும் வடமொழியில் புராண ஆதாரம் கிடையாது.

ஆகவே இறைவனை மனித உருவில் கண்டு கற்பிக்கப்பட்ட கதைகள் அனைத்தும்  சமஸ்கிருதத்தில்தான் இருந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.  ஆனால் சமஸ்கிருதத்திலிருக்கும்  பதினெட்டு மஹாபுராணங்களில், ஸ்ரீபாகவதம் உட்பட  பல புராணங்கள் தென்னிந்தியாவில் உருவாகியிருக்க வேண்டுமென்கிறார் Dr.F,Otto Schradder, குறிப்பாக, பாஞ்ச்ராத்ர ஆகம வழிபாடு.

பரிபாடல் திருமாலின் வ்யூகங்களைக் குறிப்பிடுகிறது. இதனால்  வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் மாறுபட்டும் வந்திருக்கின்றன என்று புலப்படுகிறது. சடங்கு மொழியாக இருந்த சமஸ்கிருதத்தை இலக்கிய, இலக்கண மொழியாக ஆக்கியது தமிழும், மற்றைய பிராக்ருத மொழிகள்தாம்  என்பதில் சந்தேகமில்லை.

 

‘வேர்ப் பற்று’

May 29, 2018 § Leave a comment


ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவா சங்கம் மாதிரி internet, whatsapp ஆகியவை வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே  networking வேறு எந்த நிறுவனத்துக்கோ, கட்சிக்கோ கிடையாது என்பது என் உறுதியான அபிப்பிராயம்.

இதை என் அநுபவத்திலிருந்து சொல்லுகிறேன். இது போன நூற்றாண்டு தொண்ணூறுகளில் நடந்தது.

என்னுடைய ‘வேர்ப்பற்று’ என்ற நாவலில் , 1948ல் காந்திஜி சுடப்பட்ட அன்று மாலையே கும்பகோணத்தில்  ஒரு தெருவில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் அத்தெருவிலிருந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் என்று சொல்வார்கள். அதைச் சொல்லும்போது, அந்த இயக்கத்திலிருந்த என் கல்லூரி நண்பன் பெயரையும் எழுதியிருந்தேன். அவனை நான் அப்பொழுது பார்த்ததுதான். பிறகு அவணை நான் பார்த்ததேயில்லைவன் அவன் சென்னையில்  ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான் என்பது மட்டும் தெரியும்

தொண்ண்ணூறுகளில், வருடம் நினைவில்லை,  என் நண்பன் வேலையிலிருந்த அலுவலகத்திலிருந்து ஒரு பெண் என்னைத் தொலைபேசியில் அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘ எங்கள் Chairman  உங்களுடன் பேச விரும்புகிறார்’ என்றாள். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. கிட்டத் தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடன் கல்லூரியில் படித்த ஒருவன் என்னைப் பார்க்க விரும்புகின்றான் என்பது ஆச்சர்யமாக இருந்தது. பேசினோம்.

அவன் என்னை நேரில் பார்க்க என் வீட்டுக்கு அடுத்த நாள் மாலை ஆறு மணிக்கு வரலாமா என்று கேட்டான். ‘தாராளமாக வரலாம்’ என்றேன் நான். அடுத்த நாள் அவன் வந்ததும் அவனை நான் கேட்ட முதல் கேள்வி, ‘ நான் சென்னையில் இருப்பதும், என்னுடைய முகவரியும், தொலைபேசி எண்ணும் உனக்கு எப்படித் தெரியும்? நான் உன்னைப் போல் ஒரு கம்பனி Chairman இல்லை. ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஆசிரியன். எழுத்தாளன் என்று அறியப்படுகின்றவன்’, அவ்வளவுதானே/’

. அவன் சொன்னான்;’ உன்னுடைய ‘வேர்ப்பற்று’ என்ற நாவலை இங்கு சென்னை ஆர்.எஸ்.எஸ் நிறுவனத்தைச் சார்ந்த ஒருவர் படித்திருக்கிறார். அதில் 1048ல் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறாய் அதில் என்னுடைய பெயரையும் சொல்லியிருக்கிறாய்.. நான் அந்தக் காலத்தில் ஒரு திவீரத்  தொண்டனாக இருந்தது உண்மைதான். உன் புஸ்தகத்தைப் படித்தவர் என் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்தச் செய்தியைச் சொன்னார். உன்னுடைய முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தவர் அவர்தான்.  எங்அள் நிறுவனம், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கொடுப்பது போல், அவர் இயக்கத்தைச் சார்ந்த அரசியல் கட்சிக்கும் தேர்தல் சமயத்தில்  நிதி உதவி செய்கிறோம், அவ்வளவுதான். மாணவனாக இருந்த நாட்களுக்குப் பிறகு அந்த இயக்கத்தோடு வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. இன்னொரு விஷயம், நீ குறிப்பிட்டிருக்கும் ஆர்,எஸ்.எஸ்  நபர் இரண்டாண்டுகளுக்கு முன்புதான் புனேவில் இறந்தாராம். அதையும் அவர் சொன்னார். ‘

 

 

பாலகுமாரன்

May 16, 2018 § Leave a comment


நவீனத் தமிழ் இ9லக்கிய உலகில்  ‘மணிக் கொடி’ காலத்திலிருந்து ஒரு தப்பான விமர்சன நோக்கு இருந்து வருகிறது.  அதாவது, தரமான இலக்கியப் படைப்புக்கள் சிற்றிதழ்களின் ஏக போக உரிமை,வெகுஜனப் பத்திரிகைகளில் வருபவை சராசரியானவை என்று.

இதனால்தான்,  ஒரு காலக் கட்டத்தில்,சிற்றிதழ்களில் கவிதைகளும், சிறு கதைகளும் எழுதிய பாலகுமாரன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியவுடன் அவர் எழுத்தைப் பற்றிய விமர்சன அளவுகோல் கடுமையாக ஆகியிருக்க வேண்டும். ‘கல்க்’யில் அவர் எழுதிய ‘இரும்புக் குதிரைகள்’ ஓர் அருமையான படைப்பு.

பாலகுமாரன் மாதிரி இன்னும் பல நல்ல எழுத்தாளர்கள்  சீரிய இலக்கிய உலகின் ,உரிய கவனம் பெறாமலேயே போனதற்கு இந்தக் குறுகிய பார்வைதான் காரணம். ஜெகசிற்பியன், ர.சு.நல்லபெருமாள், ரா’கி.ரங்கராஜன், தாமரைமணாளன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

நான் பாலகுமாரனை முதன்முதலில் பார்த்தது 1974ல். அவ்வாண்டு ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின்  சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் நான் இருந்தேன். அப்பன்னிரண்டு சிறுகதைகளில் பாலகுமாரன் கதையும் இருந்தது. விழாவுக்குப் பிறகு நான் தங்கியிருந்த ஹோட்டலறைக்கு வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் என்னை’ சுதேசமித்திரன்’ நாளிதழுக்காகப் பேட்டி கண்டார்   எனக்கும், அவருக்கும் தமிழ்ப் பத்திரிகைகளில் அதுதான் முதல் நேர்காணல். அவர் அந்தச் சந்திப்பின் போது கேட்ட கேள்வியின் பொருள் எனக்குப் பின்னால்தான் விளங்கியது. ‘ உங்களுக்கும் உங்கள் மகனுக்குமிடையே உள்ள உறவு எப்படி?  என்று கேட்டார். ‘ அப்பா-பிள்ளை உறவுதான், எதற்குக் கேட்கிறீர்கள்?’ என்றேன். அவர் பதில் சொல்லவில்லை. அடுத்த கேள்விக்குப் போய்விட்டார்.

எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், கி.ரா( மணிக்கொடி எழுத்தாளர், ‘ஜெமினி’யில் இருந்தார்)வுக்குப் பிறகு திரைப்படங்கள் நோக்கிக் கவனம் செலுத்திய  எழுத்தாளர் அவராகத்தான் இருக்க வேண்டும்.  அந்தக் காலக் கட்டத்தில் ஒரு நல்ல எழுத்தாளரின் திரைப் பட நுழைவும் , சீரிய இலக்கிய உலகில், தி.ஜானகிராமன் கிண்டலுடன் கூறியது போல், ‘அந்தத் தெருவுக்கு’ப் போவது போலத்தான். ஜானாகிராமன் சொன்னது பிரபல பத்திரிகைகளில் நல்ல எழுத்தாளர் என்று கருதப்படுகின்ற ஒருவர் எழுதுவது சம்பந்தமாக. க.நா.சு ஒரு சமயம் ‘ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் ஒரு பத்திரிகையில் தரமான படைப்பைக் காண முடியாது’ என்று கூறியதையொட்டி  தி.ஜா சொன்னார். சீரிய எழுத்துலகில் ‘சுவரஸ்யமாக எழுதுகின்றார்’ என்பதும் ஒரு வசவுதான்!

பாலகுமாரன் ஒரு நல்ல எழுத்தாளர். பிரபலமாகவுமிருந்தார் என்பதுதான் அவருக்குக் கிடைத்த மாபெரும் விருது!

 

‘ அவர்கள் அப்படித்தான் எழுதினார்களா?’

May 11, 2018 § Leave a comment


ஷேக்ஸ்பியரின் நாடகப் பிரதிப் பற்றி அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். வியப்புக்குரிய பல செய்திகள் அறிந்தேன்.

இப்பொழுது பிரசுரமாகும் நூல்கள் அனைத்தும் படைப்பாளியின் கணினியிலிருந்தோ, அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ பதிப்பாளரின் அச்சகத்துக்குப் போய்ச் சேர்கிறது.  அந்தக் காலத்தில் அப்படியில்லை.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அவர் இறந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரசுரமாகியிருக்கின்றன. அவர் இறந்த ஆண்டு 1616. உலகமெங்கும் அவருடைய நானூறாவது ஆண்டை மிகச் சிறப்பாக க் கொண்டாடியது நினைவிருக்கலாம்.

அவர் இறந்த போது அவருக்கு வயது 52. நாற்பத்தைந்தாவது வயதில் நாடக உலகத்தினின்றும் ஓய்வு பெற்று கடைசி ஏழு ஆண்டுகள் அவர் சொந்த ஊரில் (Stratford –upon-Avon) ஒரு கிராமப் பிரமுகராக வாழ்ந்திருக்கிறார்.

அவர் நாடக உலகில் இருந்த 25 ஆண்டுகளில் 38 நாடகங்களும், கவிதைகளும் எழுதியிருக்கிறார்.

அவருடைய நாடகப் பிரதிகள் பற்றிப் படிக்கும்போதுதான், நம்முடைய பண்டையத் தமிழிலக்கியப் பிரதிகள் குறித்து எனக்குள் பல கேள்விகள் எழுந்தன.

ஷேக்ஸ்பியர் தொழில் முறையில் இயங்கிய ஒரு நாடக க் குழுவைச் சார்ந்தவர். அந்தக் குழுவுக்கு நாடகங்கள் எழுதித் தருவது அவர் முழுநேரப் பணி. ஓரிரு நாடகங்களில் மிகச் சிறிய பாத்திர வேடமேற்று நடித்துமிருக்கிறார்.

அவர் ஒரு நாடகத்தை மிக விரைவாக எழுதிக் கையெழுத்துப் பிரதியைக் குழு நிர்வாகத்தினரிடம் கொடுத்து விடுவாராம். அவர் எழுதுவதைத் திரும்ப ப் படிப்பதில்லையாம். இந்தப் பிரதிக்கு அவர் காலத்தில் வழங்கிய பெயர் ‘foul draft’. இப்பொழுது நாம் அதை ‘rough draft’ என்கிறோம். திருத்தம் வேண்டுமானால், ஒத்திகை நடக்கும்போது நடிகர்கள் அவரவர் பிரதிகளில் திருத்திக் கொள்வார்களாம், 1596;இருந்து 1622 வரை ‘ quarto’ என்று அழைக்கப்படும் பிரதிகளாக 18 நாடகங்கள் நாடக க் குழுவின் பயனுக்காக அச்சிடப்பட்டிருக்கிறன. மொத்தமாக அனைத்து நாடகங்களும் அவர் இறந்த

பிறகுதான் அச்சேறியிருக்கின்றன.

இப்பொழுது நாம் படிக்கும் ஷேக்ஸ்பியரின் நாடகப் பிரதிகளை இப்பொழுது நாம் காண்கின்ற வடிவில்தான் அவர் எழுதினாரா என்பது நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஷேKஸ்பியரின் கையெழுத்து படிப்பதற்கு மிகுந்த சிரமத்தைத் தந்திருக்குமென்கிறார்கள். ஆகவே குழு ஒத்திகை நடக்கும்போது வார்த்தைகளை யூகம் செய்து எழுதிப் பிறகு அச்சிட்டிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களில் எழுதியதற்குப் பிறகு அவை பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை என்கிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம் அவர் தம் நாடகங்களை ஒரு முக்கிய இலக்கிய வடிவமாக க் கொள்ளவில்லை என்பதுதான். அதே சமயத்தில், அவர் தாம் எழுதிய கவிதைகள் அச்சானபோது, அச்சகத்தில் இருந்து கொண்டு அச்சுப் பிழைகள் அனைத்தையும் திருத்தியிருக்கிறார். அவற்றிற்கு ப் பாட பேதங்கள் எதுவுமில்லை.

எந்த மொழி இலக்கிய உலகிலும், நாடகத்துக்கு இலக்கிய அங்கீகாரம் கொடுக்கப் படவில்லையோ என்று இது நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

இதன் பின்னணியில் ஏட்டுச் சுவடிகலிலிருந்து மிகப் பிற்பட்டக் காலத்தில் அச்சேறிய நம் பழம்பெரும் தமிழ் இலக்கியங்களின் மூல வடிவம் பற்றி நம்மை யோசிக்க வைக்கிறது.

அதிகமாகப் படிக்கப் பட்டுப் பரவலாக இருந்த இலக்கிய நூலுக்குப் பாட பேதங்கள் அதிகமாக இருக்க க் கூடும். சான்றாகக் காட்ட வேண்டுமென்றால், கம்ப ராமாயணம். வள்ளுவர் இதைப் பற்ரிச் சிந்தித்துவிட்டுதான் , அதிகப் பாட பேதங்களைத் தவிர்க்கச் சிக்கனமாக ஏழு சீர்களைக் கொண்ட குறட்பாக்கள் எழுதியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது!

தொல்காப்பியத்தில், குறிப்பாகப் ‘பொருளதிகாரத்தில்’ சில சூத்திரங்கள் பின்னால் சேர்க்கப் பட்டிருக்க வேண்டுமென்கிறார் இளங்குமரனார். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் பிரதி ஆய்வுக் கட்டுரையைப் படித்த போது, இளங்குமரனார் கூற்றை மறுக்கவியலாது என்று தோன்றுகிறது. அதுவும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் தமிழிலக்கிய.இலக்கணங்கள் உருவாகி, அதற்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்துதான் உரைகள் எழுதப்பட்டன என்பதை எண்ணும்பொழுது.

இறைவன் தான் பிரபஞ்சத்தையும், உயிரினத்தையும் படைத்தான் என்ற நம்பிக்கையுடன் நாம் வாழ்வது போல,  நமக்குப் பிடித்த அற்புதமான அந்தக் காலத்திய செய்யுள் வரிகளை நமக்குப் பிடித்த கவிஞர்கள் அப்படித்தான் எழுதியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நாம் படித்துக் கொண்டு வருகிறோம்.