‘For this relief, much thanks’.

பல்கலைக்கழகங்களில் கருத்தரங்குகள் நடப்பதற்குக் காரணம் தெரியுமா? (1) பல்கலைகழகப் பேராசிரியர்கள் ‘உன்னைவிடநான் எவ்வளவு படித்தவன்’ என்று நிரூபித்துக் காட்ட (2) நிதி அண்டு முடிவதற்குள் கொடுக்கப்பட்ட நிதியைச் செலவழித்தாக வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்துக்காக அல்லது (3) இரண்டு காரணங்களுக்காகவும்..

தலைப்பைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. நிறைய இருக்கின்றன.

நான் அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழக க் கருத்தரங்குக்குப் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். தெற்கு ஆசியமொழிகள் துறையில் அந்தக் கருத்தரங்கு நடந்தது.. தலைப்பு, ‘ The dialectical variations of Dindugal Tamil.’ ஒரு பெரிய வரைபடத்தில், மேலும் கீழும் ஏராளமான அம்புக் குறியீடுகள். குந்திக்கிட்டு > குந்திக்கிணு > உட்கார்ந்திகிட்டு >உட்கார்ந்து  ‘இரு’, ‘இருக்கை’  என்று சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் எழுதப்பட்டிருந்தது. ஊதா நிறத்தில், ‘ Vocalic ablaut’ ‘Apophony’ என்ற சொற்களும் இருந்தன. திண்டுக்கல் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று எனக்குத் தோன்றிற்று. இப்படிப் புரியாத மொழியில் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் அவர்கள் பேசுவது விவாதிக்கப் படுவது பெரும் பேறல்லவா?

ஏராளாமான சொற்களில் ஒன்றும் சொல்லாமல் இருப்பது எப்படி என்பதை அமெரிக்கப் பல்கலைக்கழக மொழித் துறை ஆராய்ச்சிக்கூடங்கள் ஒரு கலையாகப் பயின்றிருக்கின்றன.. ஆங்கிலத்தில் ‘one- upmanship’ என்ற வார்த்தை உண்டு. அதாவது, ‘உன்னைவிட நான் எவ்வளவு கெட்டிக்காரன் தெரியுமா/’ என்பதுதான்.

தில்லியில் இத்தைகைய கருத்தரங்குகள் பிரசித்தம்.

ஒருசமயம், தாம் படித்த புத்தகத்தைத் தாம் ரசித் ததைப் பற்றி ஒரு கருத்தரங்கில் சொல்ல நினைத்தார் ஒரு சாதாரண மனிதர். சொல்லப் போனால், ‘ஆசையினால் அறையலுற்றார்’ விமர்சனக் கலைச் சொற்கள் ஏதுமில்லை.

அவர் பேசி முடித்ததும், ஒரு ஐந்து நிமிஷ நேரம் ‘பொருள் பொதிந்த அமைதி’.

கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு ஜோல்னா பை அறிவு ஜீவி மிக மிருதுவான குரலில் ( அறிவு ஜீவிக்கு அடையாளம்) ‘எனக்கு ஒரு சின்ன சந்தேகம்’….   அவர் பேசுவதை நிறுத்தினார். 40 விநாடிகள் அமைதி… தொடர்ந்தார்: ‘ இந்த நூலைப் பற்றி சொன்னீர்களே, இதில் architectonics’ எப்படி?’

பாவம், பேசினவருக்கு அந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆனால் கற்றோர் கூடிய அவையில் தனக்குத் தெரியாது என்று சொல்லவும் வெட்கம்.

சிறிது நேரம் தயக்கம். பிரகு சொன்னார்:’ பார்க்கப் போனால் .. பார்க்கப் போனால்..  என்று நிறுத்தினார்.‘ ஜோல்னா பை என்ன வார்த்தை சொன்னது என்பது அவருக்கு மறந்து விட்டது

‘பார்க்கப் போனால் என்ன?’

‘நீங்கள் சொன்னது இந்த நூலில் ஏராளமாக இருக்கிறது.’

‘ஓ! அப்படியா?’ ‘ என்று சொல்லிவிட்டு ஒரு வெற்றிப் பெருமித்த்துடன் அவையினரைச் சுற்றிப் பார்வையிட்ட்து ஜோல்னா பை.

அப்பொழுது ஜோல்னா பையைப் பார்த்து இன்னொரு அறிவு ஜீவி, (இவரிடம் ஜோல்னா பை இல்லை, ‘பைப்’ இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில், பொதுவிடங்களில் புகைப்பது அநுமதிக்கப் பட்டிருந்தது)

கேட்டார்: ‘இதை ஒட்டி எனக்கு ஒரு சந்தேகம். ஷேக்ஸ்பியர் ‘ஹாம்லெட்டில்’ முதல் அங்கம், முதல் காட்சியில் , ஒரு ‘செண்ட்ரி’ இன்னொரு ‘செண்ட்ரி’ யிடம் சொல்லுகிறானே, ‘ For this relief much thanks’ என்று, அது அத்வைதப் பரிமாணம் கொண்டிருக்கிறது என்கிறாரே வில்ஸன் ப்ரௌனிங், அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’

ஜோல்னா பை கொஞ்சம் திடுக்கிட்டது. கிண்டலா, அல்லது உண்மையாகவே யாராவது இப்படிச் சொல்லியிருக்கிறானா என்ற ஐயம் அவ்ர் முகத்தில் தெரிந்தது..

கேள்வி கேட்டவர்  ‘பைப்பை’ப் பற்ற வைத்துக் கொண்டார்..

தாம் படித்த புத்தகத்தைப் பற்றிப் பேசியவர் அந்த அவையை விட்டு நீங்கி விட்டதை யாரும் கவனிக்க வில்லை.

ஜோல்னா பை தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அப்பொழுது ஒர் இளைஞன் எழுந்தான்.

‘நான் ஒன்று சொல்லலாமா?’

‘தாராளமாக  ‘என்றது ‘பைப்’

‘இப்பொழுது பேசினாரே ஒருவர், அவர் எழுந்து போய்விட்டார், பார்த்தீர்களா?’

‘ஸோ வாட்?’ என்றது ஜோல்னா பை.

‘ அவர் போகும்போது என்ன சொல்லியிருப்பார் தெரியுமா>’

\என்ன?’ என்றது \பைப்\

‘ For this relief much thanks’.

 

 

Advertisements
%d bloggers like this: