நேருவும் ஹக்ஸ்லியும்

ஜனவரி 26க்குப் பிறகு ‘beating the retreat’ என்றவொரு நிகழ்வு மூன்று நாட்களுக்குப் பிறகு நடைபெறும். அதாவது, ஜனவரி 26லிருந்து மூன்று நாட்கள் தில்லி ராணுவ வசம். மூன்று நாட்களுக்குப் பிறகு ராணுவம் தன் பாசறைக்குத் திரும்பும். குடியரசு தினத்தைக் காட்டிலும் இது பார்க்கக் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

1958. நான் ‘beating the retreat, யை என் மனைவியுடன்( அப்பொழுதுதான் திருமணமான புதுசு) பார்த்துவிட்டு, வழக்கமாக நாடகங்கள் நடைபெறும் அருகிலிருந்த AIFACS  ஹாலுக்கு ஆல்டுவஸ் ஹக்ஸ்லியின் ‘ Giogonda Smile’ என்ற நாடகம் (நாவலை நாடகமாக்கியிருந்தார்கள்) பார்க்கப் போயிருந்தேன். ஆங்கிலத் தூதுவரகம் இந்த நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. நான் பத்து நாட்களுக்கு முன்பே டிக்கட் வாங்கியிருந்தேன்.

நானும் என் மனைவியும், அவரைஹால் முகப்பு வாசலில் நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது வந்து நின்ற காரினினின்றும் இருவர் இறங்கினார்கள்.ஒருவர் இந்தியர் மற்றவர் அயல்நாட்டு  வெள்ளைக்காரப்  பெண்மணி.

இந்தியர் அவசர அவசரமாக டிக்கட் விற்கும் கவுண்டருக்குச் சென்றார். டிக்கட் கிடைக்கவில்லை என்று அவர்களுடைய முக பாவனையில் தெரிந்தது. முகத்தில் ஏமாற்றம்.

திடீரென்று என் மனைவி சொன்னாள்: ‘ நேரு.’

‘ என்ன நேரு?’ என்றேன் நான்.

‘அவர் நேரு. ‘ என்றாள் அவள்.

நான் உற்றுப் பார்த்தேன்.நேரு மாதிரிதான் இருந்தது. எப்படி இருக்க முடியும்? இப்பொழுதானே அவரை ‘beating the retreat’ நிகழ்வில் பார்த்தேனே! மை காட்! அங்கும் இந்த வெள்ளைக்காரப் பெண்மணி அவர் அருகில் வீற்றிருந்தாள்! லேடி மௌண்ட்பேட்டன்!

அவரும் டிக்கட் வாங்கித்தான் போக வேண்டுமா? இருக்காது.. இவர்கள் வேறு யாரோ!

அப்பொழுது ‘திமு’ ‘திமு’ வென்று போலீஸ் பாதுகாவர்கள்,இரண்டு, மூன்று ‘ஜீப்’ களில் இறங்கி உள்ளே விரைந்து வந்தனர்.

டிக்கட் கிடைக்காமல் நின்ற அந்த இந்தியருக்கு சல்யூட் அடித்துவிட்டு நின்றனர்.

அந்த நிகழ்வு முடிந்ததும், ‘செக்யூரிட்டி’க்குக் கூட சொல்லாமல் நேரு லேடி மௌண்ட்பேட்டனுடன் நாடகம் பார்க்க வந்திருக்கிறார்!

உடனே தூதுவரகத்தைச் சேர்ந்தவர்கள் நேருவை அடையாளம் கண்டு கொண்டு அவரை மொய்த்தார்கள்.

பிரிட்டிஷ் ஹைகமிஷனர் லேடி மௌண்ட்பேட்டனுக்குச் சற்று தலை குனிந்து வணக்கம் செய்துவிட்டு, நேருவுடன் கைக் குலுக்கினார்.

‘டிக்கட் கிடைக்கவில்லை’ என்றார் நேரு சிரித்துக் கொண்டே.

‘மன்னிக்கவும். உங்களுக்கு நேரம் இருக்குமா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அழைக்காமலிருந்ததற்கு வருந்துகிறேன்.’ என்றார் ஹை கமிஷ்னர்.

‘I am a great fan of Aldous Huxley and I liked this story’  என்றார் நேரு.

இப்பொழுது இது மாதிரி நடக்குமா? அது அந்தக் காலம்!

Leave a comment