எழுதித் தீரா ப் பக்கங்கள்’

April 13, 2018 § Leave a comment


‘எழுதித் தீரா பக்கங்கள்’ என்ற நூலை கிழக்கு பதிப்பகம் பிரசன்னா என்னிடம் கொடுக்கச் சொன்னதாக ஒருவர் கொண்டு கொடுத்தார். எனக்குச் சற்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் எழுதிய நூலாக இருக்குமோ என்று பார்த்த போது, எழுதியவர் பெயர் ‘செல்வம் அருளானந்தம்’ என்றிருந்தது.

எனக்கு அறிமுகமில்லாத பெயர். இரண்டு நாட்கள் கழித்துப் படிக்கத் தொடங்கினேன்.  படிக்க ஆரம்பிதவுடனேயே  ஈழ த் தமிழர் என்பதை அவர் தமிழ் அறிவித்தது. ஒரு வித பாசாங்குத்தனமுமில்லாமல் தாம் அகதியாக , கலாசார ரீதியாக முற்றிலும் வேறுபட்ட  ஒரு நாட்டுக்குப் போனபோது ஏற்பட்ட துன்ப அநுபவங்களை வேடிக்கை நிகழ்வுகளாகச் சிரித்துக் கொண்டே எழுத முடியும் என்பது வியப்பைத் தந்தது  அவருக்கேற்பட்ட அநுபவங்கள் மட்டுமல்ல, சக அகதிகளாகிய அறை நண்பர்கள், சந்தித்தவர்கள், அனைவரையும் பற்றி.

இந்நூலில் வரும் ஒவ்வொரு நபரும் ஒரு டிக்கன்ஸியன்(Dickensian) கதாபாத்திரம். மிகச் சுலபமாக, அநாயசமாகக் கைவந்த மென்மையான நகைசுவையுடன் எழுதுகிறார் செல்வம். அதே சமயத்தில், தாம் சார்ந்த சமூகத்தைப் பற்றியும்,. தம்மைப் பற்றியும் செய்யும் சுயபகடி (self-parody) நேர்மையான விமர்சனம். சொந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் கலவரங்களினால், வேறொரு நாட்டுக்கு  அகதியாகச் சென்ற நிலையிலும் அரசியல் பிரச்னைகள் குறித்துக் கோபமான விமர்சனங்கள் ஏதுமில்லை. ஏனெனில், அப்பாவியான ஒரு சாதாரண மனிதன் வாழ்வில் அரசியல் குறுக்கிடும் அவலத்தைத்தான் அவர் குரலை உயர்த்தாமல், புன்னகையுடன் சுட்டிக் காட்டுகிறார். ப்ரஸல்ஸ், பாரிஸ், டோரண்டோ என்று அவர் வாழ்க்கைப் பயணம் போகிறது.

ஜெயமோகன் மிகப் பொருத்தமாகக் குறளை மேற்கோள் காட்டுகிறார் தம் முன்னுரையில். ‘இடுக்கண் வருங்கால் நகுக’

பிரசன்னாவுக்கு நன்றி

 

 

Advertisements

சிலை அரசியல்

April 12, 2018 § Leave a comment


இந்தியாவில் ‘ சிலை அரசியலை’ த் துவக்கி வைத்தவன் சேரன் செங்குட்டுவன் என்று தோன்றுகிறது. அவன் மனைவி சேராமாதேவி ‘ பத்தினிப் பெண்டிரைப் பரசல்(போற்றுதல்) வேண்டும்’ என்று சொன்ன வுடன், ‘ தமிழ்நாட்டு அரசர்களை வட இந்திய மன்னர்கள் அவமதித்துப் பேசியிருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் தோற்கடித்து, இமயமலையிலிருந்து கல் எடுத்து, தோற்ற வட இந்தியமன்னர்களின் தலையின் மீது அதை ஏற்றிக் கங்கைக் கரையில் புனித நீராட்டிச் சேர நாட்டுக்குக் கொண்டு வந்து அக்கல்லில் கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் கட்டி, அக்கோயிலில் அச்சிலையை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்வேன்’ என்று அவன் வஞ்சினம் கூறுகின்றான்.

அவன் கூற்றில் அரசியல் உணர்வும் இருக்கிறது, சமய உணர்வும் இருக்கிறது. வட நாட்டு அரசர்கள் மீது எப்பொழுது போர் தொடுக்கலாம் என்று  அரசியல் ரீதியாகக் காத்திருந்தவனுக்குக் கண்ணகி விவகாரம் காரணமாக  ஒரு சரியான சமயக் கோஷத்தைத் தந்தாள் அவன் மனைவி , ‘பத்தினிப் பெண்டிர் பரசல் வேண்டும்’ என்று கூறியது மூலம். பெண்கள் சமூகம் கொதிதெழுந்தால், அவர்களைச் சரியாக அடக்கும் வழி அவர்களை தெய்வமாக்கி விடுவதுதான்!

மற்றையத் தமிழ் மன்னர்களும் தான் வட இந்திய அரசர்களைத்  தமிழ் நாட்டின் சார்பாக ( இங்குதான் ‘தமிழ்த் தேசியம்’ வித்திடுகின்றது) தோற்கடிதிருப்பதைப் பாராட்டிப் பெருமை கொள்ள வேண்டுமென்பதற்காகக் காட்சிப் பொருள்களாக அவர்களை அனுப்பிய போது  மற்றையத் தமிழ் மன்னர்கள்’ தோற்றுத் தப்பி ஓடியவர்களைச் சிறைப் பிடிப்பது, வீரத்துக்கு ப் பொருந்தியதன்று’ என்று இகழ்கிறார்கள்!  இது தர்மக் குரலா பொறாமைக் குரலா என்பது புரியவில்லை!

இதனால் தமிழ் மக்களின் அரசியல் தலைமை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை மாறவேயில்லை என்பதுதான் புலனாகின்றது!

 

புணர்ச்சியும் உணர்ச்சியும்

April 9, 2018 § Leave a comment


ஆங்கிலத்தில் ‘ platonic love’ என்ற சொல்லடை ஒன்று உண்டு. உடல் உறவு இன்றி, ஒத்த உணர்வுகளால், உள்ளங்கள் ஒன்றுதலை இவ்வாறு குறிப்பிடுவார்கள். இது ஆண்-பெண் உறவு முறைக்கு மட்டுமல்லாமல், ஆண்-ஆண், பெண்-பெண் என்ற நிலையிலும் நிகழலாம். ஒவ்வொரு ஆணிடம் பெண் தன்மையும், பெண்ணிடம் ஆண் தன்மையும் இருப்பது சாத்தியம் என்று உளவியல் அறிஞர்கள் கூறுவார்கள். ‘அர்த்தநாரீஸ்வர ர் கோட்பாட்டை இந்த உளவியல் பின்னணியில் நாம் புரிந்து கொள்ளலாம். ‘ஆடவர் பெண்மை அவாவும் தோளினாய்’ என்று கம்பன் இராமனைச் சித்திரிக்கின்றான்.

புறநானூற்றுப் பாடல்களில்,, கோபெருஞ்சோழனுக்கும்  புலவர் பிசிராந்தையாருக் குமிடையே இருந்த நட்பைப் பற்றிக் கூறப்படுகின்றது. இது ஒரு புலவனுக்கும், புரவலனுக்குமிடையிருந்த நட்பு வகையைச் சார்ந்த்தன்று. சங்கப் புறப் பாடல்களில் நாம் பெரும்பாலாக க் காண்பது, ஓர் இரவலன், புரவலனை நாடி அவனைப் புகழ்ந்து பாடுவதால், அவர்கள் இருவருக்குமிடையே ஏற்படும் நட்புப் பற்றிதான். ஆனால், அரசனான கோப்ருஞ்சோழன் இருந்த இடம் சோழநாட்டின் தலைநகரான உறையூர். பிசிராந்தையாரோ பாண்டிய நாட்டைச் சேர்ந்த பிசிர் என்ற ஊரில் இருக்கிறார். இருவரும் சந்தித் ததே கிடையாது. ஆனால், இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். வாழ்க்கையைப் பற்றியும் மற்றவற்ரைப் பற்றியும் இருவருக்கும் ஒத்த உணர்வுகள் இருக்கின்றன என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடிகிறது. நட்பைக் காட்டிலும் ஆழமான ‘platonic love’ இருவருக்குமிடையே ஏற்பட்டிருக்க வேண்டும்.

கோபெருஞ்சோழனை நேரில் சந்தித்ததே இல்லை என்றாலும் அவனைப் பற்றி அவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் வருகின்றன. அரசனைக் கானாமலேயே, அவனை மிகவும் விரும்பி,

அவனைப் பற்றிப் புகழ்ந்து இரவலர் பாடும் பாடல்கள் புறப்பாடல்களில் மிகவும் அருமை.

பிசிராந்தையாரின் முதல் பாடல் ஆண் அன்னத்தை அவர் கோப்பெருஞ்சோழனிடம் தூது விடுவது போன்ற காதற்வயத்ததாய பாடல். தூது வகையில் இதுதான் முதல் பாட்டாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ‘

‘அன்னச் சேவலே1 அருள்பாலிக்கும் கோபெருஞ்சோழனின் முகம் போல தண்மை நிறைந்த நிலா கூடிய இம்மாலைப் பொழுது என்னை மிகவும் வருத்துகின்றது. நீ உன் பெடையுடன் நேராக உறையூரில் அவன் அரண்மனைக்குச் சென்று, ,அரசனிடம், உன்னை எனக்குப் பணிபுரிபவனாக அறிமுகம் செய்து கொள்.  அவன் உன் பேடைக்கு வேண்டிய அழகான அணிகலன்கள் தருவான்’. இதுதான் இப்பாடலின் பொருள்.

‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம் நட்பாங் கிழமை தரும் ‘ என்ற குறட்பாவுக்கு உரை எழுதும் பரிமேலழகர் சோழனுக்கும் ஆந்தையாருக்குமிடையே இருந்த நட்பைக் குறிப்பிடுகிறார். சங்க காலத்துக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து வந்த உரையாசிரியர் இதைக் குறிப்பிடுகின்றார் என்றால், வித்தியாசமான இந்த நட்பு எவ்வளவு பிரசித்திப் பெற்றிருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சோழனும் அவர்கள் இருவர்பால் இருந்த நட்பை த், தன் அவையரிடம், வடக்கிருக்க முடிவு செய்த போது குறிப்பிடுகின்றான்:’ ‘என் நண்பரும் நான் வடக்கிருக்கத் தீர்மானித்தை அறிந்து, தாமும் வடக்கிருக்கத் தம் ஊரினின்றும் வருவார். எப்பேர்ப்பட்ட நண்பர் தெரியுமா? அவர் பெயர் என்னவென்று கேட்டால், ‘பேதை சோழன்’ என்று என்பெயரைச் சொல்லுவார். அந்த அளவுக்கு அவர் தம் பெயரையும் மறந்து, தம்மையே சோழனாக அடையாளப் படுத்திக் கொள்வார்.’

‘வடக்கிருத்தல்’ என்பது, வட திசை நோக்கி ஊர் எல்லையில் ஒரு மரத்தின் குறுகிய நிழலில் அமர்ந்து, நீர், அன்னம் ஏதுமின்றி உயிர் நீத்தல். இது சமண மத மரபு. கோப்பெருஞ்சோழனும் சமணனாக இருந்திருக்க க் கூடும்.

அரசியலும் இலக்கிய நயமும்

April 8, 2018 § Leave a comment


அண்மையில் ஒரு சிற்றிதழில் ஒரு கட்டுரை வந்திருந்தது. பெரியாரைப் பற்றிய அக்கட்டுரையில்,  புதுமைப்பித்தன் சிறுகதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். ‘ கடவுளும் கந்தாசாமிப் பிள்ளையும்’ என்ற அக்கதை உலகளாவிய இலக்கியத் தரத்துக்கு ஈடான கதை. ஆனால், அந்தக் கதையின் தலைப்பை அக்கட்டுரை யை எழுதியிருந்த ஆசிரியர் ‘கடவுளும் கந்தசாமியும்’ என்று மாற்றி எழுதியிருந்தார்.

2018ல் ஒருவருடைய சாதியை (தேர்தல் விவகாரங்கள் விதி விலக்கு!) க்குறிப்பிடக் கூடாது என்பது உன்னதமான கோட்பாடுதான்.ஆனால் ஒரு மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர்,போன நூற்றாண்டு நாற்பதுகளில் எழுதிய பிரசித்திப் பெற்ற ஒரு சிறு கதையின்  தலைப்பை,,இந்தக் காலத்திய நடைமுறைகளுக்கேற்ப  மாற்றுவது சரிதானா என்று யோசிக்க வேண்டும். மேலும் புதுமைப்பித்தனின் அங்கதமே சித்த வைத்தியராகிய ‘பிள்ளைவாள்’ தம்மைப் பற்றி க் கொண்டிருக்கும் அடையாளப் பெருமையைப் பற்றிதான்! ‘ கதையின் இலக்கிய நயம் அதில்தான் இருக்கிறது.’

சர்மா’ என்ற ஒரு கதாபாத்திரம் புதுமைப்பித்தன் இன்னொரு கதையில் வருகிறது. ‘சர்மா’ பிராமணர்களைக் குறிக்கும் சாதிப் பெயர்.   ஆசார சீலர். ‘பஞ்சாங்கம் பார்த்து முகச் சவரம் செய்து கொள்பவர் மன்மதனாக இருக்க முடியுமா?’ என்று அக்கதையில் வருகிறது. இங்கு சர்மாவின் பெயரை, அது சாதியைக் குறிக்கும் பெயர் என்று மாற்றினால், புதுமைப்பித்தனின் நகைச் சுவைக்கு எங்கே இடமிருக்கிறது?

 

 

கதாநாயகி

March 22, 2018 § Leave a comment


மலையாள,தமிழ் திரைப்பட இயக்குநர் சேதுமாதவன் 1989ல் புதுச்சேரி வந்து என் நாவல் ‘உச்சி வெய்யிலை’ப் படமாக்க அநுமதி கேட்டபோது எனக்குச் சற்று ஆச்சர்யமாக விருந்தது. ‘வாசகர் வட்டம்’ 1968’ல் பிரசுரம் செய்த நாவல். குறுகிய அளவில் விநியோகம் ஆகியிருந்த அந்த நாவலை ஒரு திரைப்பட இயக்குநர் படித்திருக்கிறார் என்பதோடு மட்டுமன்றி அதைப் படமாக் க விரும்புகினார் என்ற ஆச்சர்யம். அவரோடு பேசியபோது, தற்காலத்திய, தமிழ், மலையாள இலக்கியப் படைப்புக்களில் அவர் தேர்ச்சி புலப்பட்டது. அவர் பிரபல மலையாள புதினங்களைப் படமாக்கி விருதுகளும் பெற்றிருக்கிறார் என்பது தெரிந்தது.

சேதுமாதவன் வருவதற்கு முன்னால், ஆறு மாதம் முன்பு, ‘குடிசைஜெயபாரதி, என் அனுமதியுடன், ‘உச்சி வெய்யில்என்ற தலைப்பில் வேறொரு படம் எடுத்திருந்தார். அது என்னவோ தெரியவில்லை, என் நாவல் தலைப்புகளுக்குத்தாம்டிமாண்ட்அதிகம் என்று நினைக்கின்றேன். கமல்ஹாஸன், 90 களில், என்குருதிப் புனல்என்ற் என் நாவலின் தலைப்பை என் அநுமதியுடன் அவர் எடுத்த ஒரு படத்துக்குச் சூட்டியிர்ந்தார் அமெரிக்க எழுத்தாளர் ஃபாக்னருக்கு என் மாதிரி அநுபவமுண்டு என்கிறார்கள்.

அவர் நாவலைப் படமெடுக்கப் போவதாகச் சொல்லி, அவரை ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஹாலிவுட்டில் தங்கச் செய்து, அந்த நாவல் மிகவும் இலக்கியத்தரமாக இருந்ததால், அந்த நாவலின் தலைப்பில் வேறொரு ‘ப்ளாக்பஸ்டர்’ எடுத்தார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் தாலைப்புக்கு மட்டும் ஒரு மிலியன் டாலர்கள் கொடுத்தார்களாம்.

ஃபாக்னர் இருந்தது அமெரிக்கா, நான் இருப்பது இந்தியா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும், கமல் ஹாஸன் வாய்மொழி நன்றியும், ஜெயமாரதி நன்றியும் பத்து லட்ச ரூபாய்க்குச் சமானமாக நான் கருதுகிறேன்.

என்.எஃப்.டி.ஸி படம் எடுக்கப் பதினாறு லட்சம் கொடுத்திருந்தார்கள். படம் எடுத்து முடித்த பிறகு  ஆன செலவு 14 லட்ச ரூபாய். இரண்டு லட்ச ரூபாயை ‘என்.எஃப்.டி.ஸிக்குத் திருப்பிக் கொடுத்து விட்டார்  செது மாதவன்.அவ்வாறு செய்த இந்திய இயக்குநர் இவர் ஒருவரே என்று ‘என்.எஃப்.டி.ஸி’ வரலாறு கூறுகின்றது.

எனக்கு அப்பொழுது பல்கலைக்கழகப் பணி மிகுந்திருந்தால், உரையாடல் மட்டும் எழுதுவதாகக் கூறினேன். அவர் இசைந்தார்.

சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்கி, ஓர் இரவில் உரையாடல் முழுவதையும் எழுதிக் கொடுத்து விட்டேன்.

அதில் வயதான கதாநாயகராக நடிக்க இருந்த சிவகுமார் நாவலை அக்கு வேர் ஆணி வேராக அலசியதைப் பார்த்த போது திரைப்படக் க கதைக்க்தா நாயகர்களைப் பற்றி நான் கொண்டிருந்த அபிப்பிராயம் தவறு என்று எனக்குப் புரிந்தது.

என்னால் ஒரு நாள்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிந்தது. அப்பொழுதுதான் நான் பின்னால் எழுதிய ஒரு கதைக்கு ஒரு கதாநாயகி கிடைத்தார்.

அவர் ஒரு வயதானப் பெண்மணி. நல்ல களை. ஒரு காலத்தில் அழகாக இருந்திருக்க வேண்டும். ஸ்டூடியோ’ மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்.

எனக்கு ‘ ’ஷூட்டிங்’’ ‘போர்’ அடித்ததால் மரத்தருகே நின்று கொண்டிருந்தேன். எப்பேர்ப்பட்ட சிறந்த சமையல்காராக இருந்தாலும், அவருடைய சமையல் அறையை அவர் சமைக்கும்போது எட்டிப் பார்க்கக் கூடாது என்பார்கள். அந்த மாதிரிதான் படப் பிடிப்பும் எனக்குத் தோன்றியது. ஒரு சில நடிகர்களுக்காக ஒரு ‘ஷாட்டை ஏழு,எட்டு தடவை திரும்பத் திரும்ப எடுக்கும் நிர்ப்பந்தங்கள்

’ நீங்க தானே கதாசிரியர்?’

திரும்பிப் பார்த்தேன். அந்த வயதானப் பெண்மணி அழகானப் புன்னகையுடன் கேட்டார்.

‘ஆமாம்’.’

‘உங்களுக்கே ‘போர்’ அடிச்சு வெளியே வந்துட்டேள்..அப்படித்தானே?’ என்றார் அவர்.

“நீங்க யாரு?’ என்றேன்

‘‘ உங்க கதையிலே வரேன்

‘”புரியலே’

‘உங்க  சமையல்காரி’

‘ இப்பொவும் புரியலே..’

சில நிமிடங்கள் மௌனம்.

‘உங்க கதாநாயகர் சிவகுமார் . கதையிலே சொல்றேன், அவராத்துச் சமயல்காரி. புரியறதா?’ என்றார் சிரித்துக் கொண்டே.

‘எப்பொ உங்க ‘ஷொட்’? என்றேன் நான்

‘நாள் பூரா காத்திண்டிருக்கணும். எப்பொ கூப்பிடுவான்னு..நாலு வரியை எட்டு வரியா ஆக்க முடியாதா உங்களாலே/ நீங்கதானே பிரும்மா> என் பிரும்மா என் தலையிலே எழுதினதை மாத்த முடியாது. எனக்கு அறுபத்தஞ்சாறது. நாப்பது வருஷமா காத்திண்டிருக்கேன், கதாநாயகி ரோலுக்கு.’ இப்பொ, அதோ அவளுக்கு மடிச்சரு கட்டிவிடணும், சமையல் பண்ணும், அவ்வளவுதான்’

அவர் சிரித்தார்.

அவர் ஆசை வீண்போகவில்லை.

இதற்குப் பிறகு நான் எழுதிய மூன்று கதைகளில் அவர்தான் கதாநாயகி!

 

தொழில் தர்மம்

March 21, 2018 § Leave a comment


இன்று காலை ஓர் அதிசியமான அநுபவம்

லஸ் சர்ச் ரோடில். அங்கு ஓர் அநுமான் கோயில் இருக்கிறது. அதன் வாசலில், முதுமையில் சற்று வித்தியாசப்பட்ட மூன்று பெண்மணிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது தினசரிக் காட்சி. அவர்களில் ஒருவர் இன்று காலை ஓர் ஆட்டோ ரிக் ஷா விலிருந்து இறங்கி, ஆட்டோகாரருக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்தியப் பிரதமர் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தபடி, இந்தியா வில் பிச்சைக்காரர்களும் ஆட்டோவிலும் காரிலும் வந்து பிச்சை எடுக்கின்றார்களா?

ஏனென்றால், ஹிந்து சநாதன தர்மத்தின்படி, பிச்சை எடுத்தல் மிகவும் கண்ணியமான தொழில்.  வர்ணாஸ்ரமம் குறிப்பிடுகிற நான்கு ஜாதிகளிலே, மிகவும் உயர்ந்த ஜாதியினராகிய பிராமணர்களுக்கு விதிக்கப்பட்ட ஆறு தொழில்களிலே ‘ இரத்தலு’ம் (பிச்சை) ஒன்று.  ஜனநாயக தர்மத்தின்படி, உயர்ந்த ஜாதியினருக்கென்று விதிக்கப்பட்ட இத் தொழில் இப்பொழுது எல்லா ஜாதியினருக்கும் பொது தர்மமாக ஆக்கப் பட்டிருக்கக் கூடும். அதனால்தான்,  கொஞ்சம் வசதி இருந்தாலும், ஹிந்து தர்மத்தை விட்டுவிடக் கூடாது என்று, ஆட்டோவில் வந்து பிச்சை எடுக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

‘இரந்தும்  உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்று வள்ளுவர் கூறியிருக்கலாம்.  ‘ஒருவன் பிச்சை எடுத்துதான் உயிர் வாழ வேண்டுமென்றால், அப்படிப்பட்ட உலகத்தைப் படைத்தவன் தெருத் தெருவாகப் பிச்சை எடுத்து (‘ அலமந்து கெடுவானாக’ என்கிறார் பரிமேலழகர். அதற்கு இதுதான் பொருள்0  கெட்டுப் போகட்டும்’ என்பது இக்குறளின் பொருள்.  வள்ளுவர் சநாதன ஹிந்து அல்லர். அப்படி இருந்திருந்தால், ‘கடவுள் வாழ்த்தில்’ சிவனையோ, விஷ்னுவையோ, பிள்ளையாரையோ குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாய் ‘ பிரபஞ்சத்துக்கு முதற் காரணம் எதுவோ அதை வணங்குகிறேன்’ என்று  இப்படி ஒரு abstract  கோட்பாட்டைப் பற்றிப் பேசியிருப்பாரா?

விஷயத்துக்கு வராமல், எங்கெங்கோ  போய்க் கொண்டிருக்கின்றேனே!

ஆட்டோவில் இறங்கிய அந்த முதியப் பெண்மணி, கோயில் வாசலில் வழக்கப்படித்  தம் நசுங்கிய அலுமனியத் தட்டை விரித்து ;ஐயா  சாமி  என்று குரல் கொடுத்தார்.

நான் அவரருகே சென்று, ‘ இன்னிக்கு ‘ஆட்டோ’விலே வந்தீங்க போலிருக்கு?’ என்றேன்.

‘ஆமாம், எதிர்த்த சாரியிலே என்னைப் பாத்தீங்களா?’ என்று புன்னகை செய்தார்.

‘ஆமாம். ஆட்டோவிலே வர வச்தியிருக்கு, எதுக்குப் பிச்சை எடுக்கறீங்க?’  என்றேன் நான்.

‘ ஐயோ சாமி, அவன் என் மவன், இறக்கி விட்டுட்டுப் போறான்.

‘  ‘பணம் கொடுத்தீங்கப் பாத்தேன்’

அவர் உரக்கச் சிரித்துக் கொண்டே சொன்னார் : ‘ எவ்வளவு கொடுத்தேன்,பாத்தீங்களா?’

‘ நான் அதைக் கவனிக்கலே’..

‘ ஒரு ரூபா,சாமி, ஒரு ரூபா. நான் என் மவனோட தேனாம்பேட்டைலே இருக்கேன். அவன் தினோம் என்னைக் கொண்டுட்டுப் போறான். நான்தான்  அவனுக்கு முதல் சவாரி.  நான் கொடுக்கிற ஒரு ரூபா அவனுக்கு ராசியா இருக்குதாம். நாங்க இங்கே மூணு கிளவிங்க இருக்கோம். தினோம் வற காசைப் பிரிச்சுப்போம்.  நான் என் மவனோட இருந்தாலும்,  சொந்தமா சம்பாரிச்சு சாப்பிடறேங்கிற ஒரு சந்தோசம்’. நீங்க உள்ளே உண்டிலியோ ,தட்டிலியோ பணம் போடறீங்களே, சாமியோ அல்லது பூசை செய்யற அந்த ஐயமாரோ  அந்தப் பணத்தைப் பிரிச்சுதானே எடுத்துக்கிறாங்க?  அதுவும் பிச்சைதானே?  எங்களுக்கு வற பணத்திலே நாங்களும் கொஞ்சம் போடறோம் சாமி, சாமிக்கே பிச்சை போடறோங்கிற சந்தோசம்! ‘  என்று சொல்லிவிட்டு அவள் உரக்கச் சிரித்தாள்.

அவள் திருக்குறள் படித்திருப்பாளோ என்கிற சந்தகம் எனக்கு வந்தது.

 

 

 

‘வேடிக்கை மனிதர்கள்’

March 20, 2018 § Leave a comment


ஒரு கிரேக்க ஞானி வீதி வழியே செல்லும்போது, குடித்துவிட்டு, ஆனந்தமாக தெருவோரத்தில் ஒருவன் பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் அவனருகே சென்று, ‘ பிழைப்புக்கு நீ என்ன செய்ஜிறாய்?’ என்று கேட்டார்.

‘பிச்சை.’ என்றான் அவன்.

‘ நீ ஏன் கல்வி கற்க வில்லை?’ என்றார் அவர்.

‘ கல்வி கற்றால் என்ன ஆகும்?’

’சிந்திக்கத் தோன்றும். ‘

‘சிந்தித்தால்?’

‘ உலகில் காணும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும்’

‘விடை கிடைத்தாள்/’

‘ புதிய கேள்விகள் தோன்றும். ‘

‘புதிய கேள்விகள் தோன்றினால்?’

‘ மேலும் சிந்திப்பாய். புகழ் உண்டாகும்’

‘புகழ் உண்டானால்?’

‘நீ மகிழ்ச்சியுடன் இருப்பாய். ‘

‘நான் இப்பொழுதே மகிச்சியுடந்தான் இருக்கிறேன். வீணாக எதற்கு இத்தனைச் சுற்று வழிகள்?’ என்றான் அந்தப் பிச்சைக்காரன்.

வள்ளுவர் இந்த மாதிரியான பிச்சைக்கரனைப் பார்த்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

‘நன்றறி  வாறிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவல மிலர்’

‘ கயவர்’ என்ற சொல் இப்பொழுது, ‘அயோக்கியர்கள்’ என்ற பொருளில் மட்டுமே வழங்கினாலும், வள்ளுவர் காலத்தில் ,பாரதி சொல்லும் ‘வேடிக்கை மனிதர்” ( philistines) என்ற பொருளிலும் புழங்கியிருக்கக் கூடுமென்று தோன்றுகிறது.

கயவர்கள் கொடுத்துவைத்தவர்கள். மேலும் மேலும் சிந்தித்துக் கேள்விகளைப் பெருக்கி, விடைகளில் காலத்துக்கேற்றபடி முரண்பாடுகளைக் கூட்டித் தங்களைத் துன்புறுத்திக் கொள்ள மாட்டார்கள்.. சிந்திக்கவே மாட்டார்கள். அதுவே அவர்களுக்குப் பேரின்பம்.

ஒளியின் வேகத்தைப் போல் வளர்ந்து வரும் விஞ்ஞானம்,, இப்பொழுதும் இந்நிலையிலும், நம் அறியாமையின் எல்லையை உணர்த்திக் கொண்டே வருகிறது. வள்ளுவரும் இதை அப்பொழுதே உணர்ந்திருக்கிறார். ‘ அறியுந் தொறும் அறியாமைக் கண்டற்றால்’ என்கிறார்.

முப்பத்தைந்து வயதில் நான் உறுதியாக நம்பிய பல தத்துவார்த்தக் கோட்பாடுகள் புதியனவாய் எழுந்த பல கேள்விகளின் காரணமாக அவற்றைக் கேள்விக்குரியனவாக ஆக்கிவிட்டன. சிந்திக்கும் எவருக்கும் ஏற்படுகின்ற பிரச்னை இது. எப்பொழுதும் ஒரே கொள்கையை விடாப் பிடியாகப் பற்றிக் கொண்டு இருக்க இயலாது. ‘  A foolish consiistency is the hobglobin of little minds, small statesmen, philosophers and divines’ என்றார் எமர்ஸன்.

அரசியலைச் சார்ந் தவர்களோ அல்லது ஒரு கோட்பாட்டைத் தத்துவார்த்த ரீதியில் தொழிலாக க் கொண்டவர்களோ ஒரு குறிப்பிட் ட காலக் கட்டத்தில் ஒரு கொள்கையினால் கவரப்பட் டு அதை வாழ்க்கை நெறியாக க் கொண்டு விட்டால், எந்த ஸ்தாபனத்தையும் சாராத ஒரு தனி மனிதனுக்கு இருக்கும் சிந்தனை சுதந்திரம் அவர்களுக்கு இருக்க இயலாது என்பதும் சிந்திக்க வேண்டியதுதான்.