முதல் திருப்பம்

August 26, 2016 § 3 Comments


என் வாழ்க்கையில் பல எதேச்சையான சம்பவங்கள் நிகழ்ந்து, அவை என் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்துவிட்டன.

நான் தமிழ் முதுகலைத் தேர்வில் முதல் வகுப்புப் பெற்றிருந்தாலும், ஆறு மாதம் வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. காரணத்தை நான் ஆராய விரும்பவில்லை. 1952ல் புதுப்புதுக் கல்லூரிகள் தோன்றின. ஆனால் எனக்குத்  வேலை கொடுக்க யாரும் தயாராக இல்லை.

நான் பம்பாய்க்குப் போய்விட்டேன்.

அங்கு என் அண்ணன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்திலும் எனக்கு ஓரளவு தேர்ச்சி இருந்ததால்,, நானும் இதழியியல் துறையில் சேர்ந்து விடலாமென்று நினைத்தேன்.

பம்பாய் போன உடனேயே என் அண்ணன் சொல்லி விட்டார்:’ அண்ணனும் தம்பியும் ஒரே பத்திரிகையில் வேலை செய்வது உசிதமில்லை. ‘ஃப்ரீ ப்ரெஸ் ஜெர்னலை’த் தவிர வேறு பத்திரிகையில் முயற்சி செய்யலாம். நீ தமிழ் எம்.ஏ. படிக்கப் போனதே தப்பு. யார் சொல்லியும் நீ கேட்கவில்லை’

அவர் அவருடைய பல பத்திரிகைத் துறை நண்பர்களிடம்

என்னை பற்ரிச் சொல்லி வைத்தார்.

ஒரு நாள் என் அண்ணன் என்னிடம் சொன்னார்: ‘ ‘ப்ளிட்ஜ்’ (Blitz) பத்திரிகை ஆசிரியர் கராக்காவைப் போய் பார்/ என் நண்பர் ஒருவர் கராக்காவுக்கு மிகவும் வேண்டியவர். சம்பளம் அதிகம் கிடைக்காது. வேலையைக் கற்றுக் கொள்ள உதவும். இன்று மதியமே போய்ப் பார்ப்பது நல்லது.’

முலண்டிலிருந்து, விக்டோரியா டெர்மினஸ்ஸுக்கு மதிய உணவு சாப்பிட்டவுடன் கிளம்பிவிட்டேன்.

‘ப்ளிட்ஸ்’ அலுவலகம் போனவுடன், எனக்கு லேசாக நடுக்கம் கண்டது. கராக்காவை நான் பார்த்திராவிட்டாலும், மிகப் பிரபலமானவர் என்று தெரியும்.

நான் அலுவலக வாசலை அடைந்ததும், வெலியே வந்த ஒருவர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தர். சிவந்த மேனி. நல்ல உயரம். எனக்கு நாக்குக் குழறியது. ‘ மிஸ்டர் கராக்கா….’

‘ஓ! கராக்காவா? இன்று அவர் ஆபிஸ் வரவில்லை. வரவும் மாட்டார்’ என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு ‘பப்ளிக் பூத்’திலிருந்து அண்ணனுக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னேன். ‘கராக்கா மாலை ஆறு மணிக்கு ராயல்  ஏஷியாடிக்

ஸொஸைட்டி ஹாலில்’ ஒரு கூட்டத்தில் பேச இருக்கிறார். அங்குப் போய் பார்..’ என்றார் அண்ணன்

ஆறுமனிக்குச் சற்று முன்பாக, ராயல் ஏஷியாடிக் ஸொஸைட்டி ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கு ஒருவரிடம்,’ இன்று இங்கு கராக்கா பேச இருக்கிறாரா?’ என்று கேட்டேன்.

‘அதோ போகிறாரே, அவர்தான் கராக்கா’ என்றார் அவர்.

நான் திடுக்கிட்டேன். அவர் சுட்டிக் காட்டியவர், மதியம் என்னிடம் கராக்கா இன்று வர மாட்டார் என்று சொன்னவர்.

இவரா என க்கு வேலை கொடுக்கப் போகிறார் என்று தோன்றிற்று.

அன்றிரவு என் அண்ணனிடம் சொன்னேன். ‘ பத்திரிகைக் காரர்களை நான் இனி நம்பத் தயாராக இல்லை.’

‘பொறுமை வேண்டும். நான் பம்பாய்க்கு வந்து மூன்று மாதம் வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. அப்புறம் முதலில் ‘பம்பாய் கிரானிகல்’ சேர்ந்தேன். நீ வந்து பதினைந்து நாளாகிறது. அதற்குள் வேலை கிடைத்து விடுமா?’

‘நான் ஆறரை மாதமாக வேலை தேடுகிறேன்..’

அண்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்த நாள் நான் அண்ணன் அலுவலக நூல்நிலையத்தில்

ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.

நூல்நிலையத்தில் என்னைத் தவிர வேறு யாருமில்லை.

அப்பொழுது, அதட்டலாக,’ ஹூ ஆர் யூ / ‘ என்ற குரல் கேட்டது

நான் திரும்பிப் பார்த்துவிட்டு எழுந்து நின்றேன். வயதானத் தோற்றம். மிடுக்குக் குறையவில்லை.

‘ நான்…  ‘ என் அண்ணன் பெயரைச் சொல்லிவிட்டு, ‘ அவருடைய தம்பி’ என்றேன்.

‘ நீ படிக்கிறாயா? வேலை பார்க்கிறாயா?’

அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது அவர் சதானந்த். ‘ஃப்ரீ ப்ரெஸ் ஜெர்னல்’ பத்திரிகை ஆசிரியர், ,உரிமையாளர்..

‘படித்து முடித்துவிட்டேன் .எம்.ஏ. வேலை கிடைக்கவில்லை.’

‘என்ன எம்.ஏ?’

‘தமிழ் எம்.ஏ.’

‘தமிழ் எம்.ஏ. படித்துவிட்டு, பம்பாய்க்கு ஏன் வந்தாய்? மெட்ராஸில் அல்லவா வேலை தேட வேண்டும்?’

‘ஆறு மாதமாக மெட்ராஸில் வேலை கிடைக்கவில்லை. எனக்கு ஆங்கிலத்திலும் ஓரளவு தேர்ச்சி உண்டு. ‘

‘உன் அண்ணன் என்னிடம் இதைப் பற்றி ஏன் சொல்லவில்லை?’

‘தெரியாது.’

‘ சரி, உனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதி, இன்றைக்கு மறுநாள், என்னை வந்து என் ஆபீஸில் பார். நான் யார் தெரியுமா?’

‘தெரியும் என்பதற்கு அடையாளமாக நான் தலை அசைத்தேன்.

அவர் போய்விட்டார்.

அன்று மாலை நான் வீட்டுக்குப் போனவுடன் அண்ணி என்னிடம் ஒரு தந்தியை நீட்டினார்.

திருச்சி அண்ணனிடமிருந்து வந்திருந்தது தந்தி.

‘ திருச்சி தேசியக் கல்லூரில் வேலை காலியாக இருக்கிறது. துணை முதல்வர் உனக்குத் தந்தி அடிக்கச் சொன்னார். உடனே புறப்பட்டு வா.’

அண்ணியிடம் தந்தியைக் கொடுத்தேன்.

\நான் படித்துவிட்டேன். என்ன செய்யப் போகிறாய்?’

அப்பொழுது அண்ணன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தார்.

அண்ணி அவரிடம் தந்தியை நீட்டினார்.

அண்ணன் படித்துவிட்டுப் புன்னகை செய்தார்.

‘ உங்கள் ஆசிரியர் நூல் நிலையத்தில்…’ என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அண்ணன் கூறினார்: ‘தெரியும்.

என்னை கூப்பிட்டு அனுப்பி என்னிடமு சொன்னார். நீ என்ன செய்ய இருக்கிறாய்?’

‘ என்ன செய்யலாமென்று நீங்கள் சொல்லுங்கள்’

‘ இது உன் முடிவாகத்தான் இருக்க வேண்டும். பத்திரிகைத் தொழில் என்றால் ‘நைட் டூயூட்டி’க்குத் தயாராக இருக்க வேண்டும். யோசித்து முடிவு செய்துவிட்டு என்னிடம் சொல்.. இதைத்தான் ‘எக்ஸிஸ்டென்ஷியல் டைலம்மா’ என்பார்கள்.’ என்றார் அண்ணா.

.நான் விண்ணப்பம் செய்யாமலேயே, நேர்முகத்தேர்வுக்குப் போகாமலேயே கிடைக்கப் போகின்ற வேலை, வேண்டாம் என்று சொல்லலாமா

நான் திருச்சிப்  போக முடிவு செய்தேன்.

பத்ரிகைக்காரனாக இருப்பதற்குப் பதிலாக, ஆசிரியனாக இருக்க முடிவு செய்தேன்.

இது முதல் திருப்பம்

 

Advertisements

‘அஹம் பிரும்மாஸ்மி’

July 25, 2011 § 13 Comments


போன நூற்றாண்டு அறுபதுகளில் ஒரு தன்னாப்பிரிக்கக்  கம்யூனிஸ்ட் எழுத்தாளர் (வெள்ளையர்)  இந்தியாவைப் பற்றி எழுதிய நூல் பார்லிமெண்டை ஒரு கலக்கு கலக்கியது. இரண்டு மூன்ற் பேர்களைத் தவிர ம்ற்றைய யாவரும் அந்த நூலைப் படிக்கவில்லை என்பது வேறு விஷ்யம். சல்மான் ருஷ்தியின்  ‘Satanic Verses” யைப் படிக்காமலேயே ரகளை செய்ய வில்லையா? அந்தத் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் Ronald Shegal எழுதிய ‘A crisis in India’ என்ற நூலைத் தடை செய்தார்கள்.

அவர் அப்படி என்ன எழுதிவிட்டார்?

நூல் தடை செய்வதற்கு முன்பே நான் அதை வாங்கிப் படித்திருந்தேன்.

இந்திய மக்களுக்கு அவரவர் வீடுதான் அவர்களுடைய தேசம். வீட்டுக்கு வாசல் வெளிநாடு. அவர்களுடைய குடும்பந்தான் அவர் தேசத்துப் பிரஜைகள். பக்கத்து வீட்டுக்கரன் அந்நிய தேசத்தவன். தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களேதவிர, வீட்டுக்கு வெளியேயிருக்கும் அந்நிய தேசமாகிய சுற்றுப் புறம் எவ்வளவு அசிங்கமாகக் குப்பையும் கூளமுமாக இருந்தாலும் கவலைப் பட மாட்டார்கள்.

இதற்கு அவர் தமிழ் நாட்டுக் கிராமமொன்றில்  கண்ட  காட்சியை உதாரணமாகக் காட்டியிருந்தார்.

ஒரு வீட்டில் சாப்பிட்டு விட்டு எச்சில் இலைகளை எதிர்த்த வீட்டு வாசலில் போட்டார்கள். அந்த எதிர்த்த் வீட்டுக்காரர்கள் அவர்களுடைய எச்சில் இலைகளை இவர்கள்  வீட்டு வாசலில் போட்டார்கள். Account settled. ஷெகலுக்கு என்ன ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு வீட்டுக் காரர்களுக்கும் இது தப்பாகவே படவில்லை!

இதற்குக் காரணம்,  பாரம்பரியமாக வரும் இந்தியர்களுடைய  சமயத் தத்துவந்தான் என்று அவர் எழுதீயிருந்தார். அதாவது, ‘அஹம் பிரும்மாஸ்மி’ தனிப்பட்டவர்கள் தமக்குத் தாமே நாடும், individual salvation’ . சமூகத்தைப் பற்றிக் கவலையில்லை.

பௌத்தம், சநாதன மதத்தின் இந்தக் கொள்கையை எதிர்த்து, சமூகத்தைப் பேணியது பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடவில்லை. பக்தி இயக்கமும் இந்தத் தனிப்பட்டவர் சொர்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பஜ்’ என்றால், ‘கூடு’ என்ற பொருள். ‘பஜனி’. ‘பக்தி’ என்பதின் வேர்ச்சொல் ‘பஜ்’. சமூக வழிப்பாட்டுக்காகத்தான், பக்தி இயக்கத்தின் காரணமாக, மாபெரும் கோயில்கள் உருவாயின.

ஆனால், இவை ஒரு சராசரி இந்தியனின் பாரம்பரிய அடிமனத்தை தொடாமல் போய்விட்டதோ என்ற சந்தேகமும் நியாயமானதுதான்.இல்லா விட்டால், ரொனால்ட் ஷெகல் கூறுவது போல், சுற்றுபுற சுகாதாரத்தைப் பற்றி அவன் ஏன் கவலைப் படுவதேயில்லை?

தில்லியில் இப்பொழுதும் பஞ்சாபி மத்தியத்தர குடும்பங்கள் வசிக்கும் இடங்களில், ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடைய சௌகர்ய அசௌகர்யங்களைப் பற்றிக் கவலையே பட மாட்டார்கள். ஓலி பெருக்கிகள் அலறிக் கொண்டிருக்கும். எணெனில் உலகம் அவர்களுக்கு மட்டுந்தான்.

வாரிசு அரசியலும் இக் கொள்கையின் நீட்சிதான்.

‘மாமா பொண்ணைக் கட்டிக்கங்க’

July 1, 2011 § 3 Comments


இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைப்பேசி ஒலித்த போது, நான் கோபத்துடன் எடுத்தேன்.இரவு பத்து மணி. என்னுடைய இரண்டாம் ஜாம தூக்க நேரம்.

‘ எஸ்..?’ என்றேன்

‘எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இருக்காருங்களா?’

‘யாரு, என்ன வேணும்?’

‘ அவர் கிட்டே பேசணும்..’

‘என்ன வேணும், சொல்லுங்க.’

‘கேரளாலேந்து  பேசறோம்.. நாங்க   மூவி ஃபைனான்ஸியர்ஸ்  எழுத்தாளர்கிட்டே பேசணும் . அவர்கிட்டே கதை இருகுமான்னு கேக்கத்தான். ‘

‘ இது எழுதாளர் வீடு இல்லீங்க.நாங்க மர  யாவாரம்’

‘ எழுத்தாளர் வீடு இல்லியா? மர யாவாரமா?’

‘ஆமாங்க’.

‘ இது என்ன தம்பி, எழுத்தாளர் வீடு இல்லேங்கிறாரு, மர யாவாரங்கிறாரு. தப்பு நம்பரகொடுத்திருக்கே.. நீ என்ன டைரக்ட் பண்ணி கிளிக்கப் போறே? முந்திரிப்பணமெல்லாம் அம்போதான்! ‘ என்று அவ்ர் யாரிடமோ பேசுவது கேட்டது.

கனவுகளை முகத்தில் தேக்கி ,கோடம்பாக்கத்தை ஒரு கலக்கு கலக்க, முந்திரித்தோட்ட முதலாளியிடம்  சென்றிருக்கும் ஓர் இளம் இயக்குநர் இமயம் என் மனக் கண் முன்  தோன்றியது. அந்த இளம் இயக்குநர் தொலைப்பேசியை வாங்கி என்னிடம்  பேசக்கூடும் என்பதினால் அதை வைத்துவிட்டேன்.

எதிர்பார்த்தபடியே, தொலைப்பேசி ஒலித்தது.

நான் எடுக்கவில்லை.

இந்த அநுபபவம் எனக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. ஆச்சர்யந்தான்

எழுபதுகளில் ஓர் இளைஞர் நான் தில்லியிலிருந்து சென்னை வந்த்திருந்த போது என்னைப் பார்க்க வந்தார். அப்பொழுது நான் சென்னைப்பல்கலைகழக  விருந்தினர் விடுதியில் இருந்தேன்.

வயது இருபத்தைந்து இருக்கலாம். .களையான முகம். கதாநாயகனாக நடிக்கத் தகுதி பெற்ற தோற்றம்.

‘வணக்கங்க.  என் பேரு செல்வராஜ். உங்க  விசிறி. ‘உச்சி வெயில்’ படிச்சேன்.. ரொம்ப பிரமாதமா இருக்கு ,சார்.’

‘தாங்க்ஸ்.. என்ன செய்யறீங்க?’

‘பி.காம் முடிச்சுட்டேன்.. எனக்கு ஃபிலிம் லைன்’லெ நல்ல ஈடுபாடு..’

”பாக்க நல்லாயிருக்கீங்க.. முயற்சி பண்ணுங்க.. ‘ஹீரோ ‘சான்ஸ்’ கூடல் கிடைக்கலாம்..’

‘இல்லீங்க.. ‘டைரக்ட்’ பண்ணனுங்கிறதுதான் என் ஆசை’

‘அதுவும் சரிதான்.. பண்ணுங்களேன்..’

‘ உங்க கதையைக் கேக்கத்தான் வந்தேன்..’

திடுக்கிட்டேன்.

‘என் கதையையா?’

‘உச்சி வெயில்’ நல்ல ‘மெடீரியல்’ங்க.. சத்யஜித் ரே படம் மாதிரி வருங்க.’

நான் மௌனமாக அவரை உற்றுப் பார்த்தேன்.

‘என்னாலே எடுக்க முடியும்னு நம்பிக்கை இருக்குங்க..’

‘ எனக்கு என் கதையிலே நம்பிக்கை இல்லியே.. ‘

‘அப்படிச் சொல்லாதீங்க.. ‘விஷுவல்ஸ்’லாம் பிரமாதமா வரும்.. அப்படியே கும்பகோனத்தையும் டெல்லியையும் கண் முன்னாலே கொண்டு வந்து நிறுத்த முடியும்.. ‘

‘உங்க பணமா?..’

‘இல்லீங்க.. எனக்கு வச்தி இல்லேன்னு சொல்லலே.. என் மாமா ‘பிஸினஸ்மான்’. அவருக்கு ஒரே பொண்ணு. எனனையும் ‘பிஸினஸ்’லெ இழுத்துவிடப் பாக்கிறாரு..’

‘சினிமா பிஸினஸ்ஸா?’

‘இல்லீங்க.. கன்ஸூமர் பிராடக்ட்ஸ் தமிழ்நாடு ஏஜென்ஸி பூரா அவர்துதான். எனக்கு இப்பொ கல்யாணத்திலே இஷ்டமில்லே..’

‘அவர் மகளைக் கட்டிக்க சொல்றாரா?’

‘ஆ…மாங்…க. ஒரு நல்ல படம் செய்திட்டு அவார்ட் வாங்கினப்புறம் கட்டிக்கலாம்னுருக்கேன்.. ‘

‘மாமா பணம் கொடுப்பாரா?’

‘ அவர்கிட்டே வாங்கலீங்க.. இன்னொரு ‘ஃப்னான்ஸியர்.. மாமாவுக்குத் தெரிஞ்சவர்தான்.. நீலகிரியிலே பெரிய எஸ்டேட்.. நாளைக்கு இதே நேரத்துக்கு அவரைக் கூட்டிகிட்டு வரவா?’

நான் யோசித்தேன். ‘சரி, கூட்டிகிட்டு வாங்க..’

அடுத்த நாள் அதே நேரத்தில் இருவரும் வந்தார்கள்.

எஸ்டேட் முதலாளி இரட்டை நாடி சரீரம். சிவப்பாகப் பழம் மாதிரி இருந்தார். பித்தான் போடாத மிகவும் மெலிதான. முக்கால் கை வெள்ளைச் சட்டை. அவர் வேட்டியின் வெண்மையும் சட்டையின் வெண்மையும் என் முகத்தைக் கூச வைத்தது.  இருப்பில் அணிந்திருந்த மிகவும் அகலமான ‘பெல்ட்’ சட்டையின் மென்மையில் வெளியே தெரிந்தது. இறுகிய முகம்.

‘உட்காருங்க’

சந்தேகத்துடன் சுற்று முற்றும் பார்த்தார். கையிலிருந்த பெரிய பையைப் பார்த்தத போது , கரன்ஸி நோட்டுகளினால் அது கனப்பது போல் எனக்குப் பட்டது.

அவர் உட்கார்ந்தார்.

‘என்ன கதை, சொல்லுங்க?’ என்றார் என்னிடம்.

‘ கதையா?’ என்றேன் நான்.

‘ உங்க கதையைதானே படம் காட்டப்போறது தம்பி? என்ன கதை சொல்லுங்க?’

நான் செல்வராஜைப் பார்த்தேன்.

‘அது என்ன கதைன்னா, டெல்லியிலேந்து..’ என்று ஆரம்பித்தார் செல்வராஜ்.

‘ உன்னைக் கேக்கலே.. நீங்க சொல்லுங்க..’ என்றார் எஸ்டேட் என்னிடம்

‘எனக்குக் கதை சொல்ல வராது..’

‘கதை எழுதறீங்க, சொல்ல வராதா?’

‘வராது.’

அவர் எழுந்து விட்டார்.

நான் செல்வராஜிடம் சொன்னேன்: ‘ நீங்க உங்க மாமா பொண்ணைக் கட்டிகிட்டு ‘பிஸினஸ்ஸை’ப் பாருங்க..’

செல்வராஜ் இப்பொழுது அதைத்தான் செய்து வருகிறார்.

‘உச்சி வெய்யிலை’  1990ல் படம் எடுத்தவர் கே.எஸ். சேதுமாதவன்.

‘நெருநல் உளன் இன்றில்லை’

June 28, 2011 § 7 Comments


தமிழ் எம்.ஏ (தமிழ்) முதல் வகுப்பில் தேறியிருந்தாலும் ,ஆறு மாதங்கள் வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. தப்பான ஜாதியில் பிறந்துவிட்டு தமிழ் படித்ததினால்தான் என்று என் உறவினர்கள் சொன்னார்கள்.

பம்பாய் போய்விட்டேன். என் அண்ணன் அங்கு’பாம்பே கிரானிகிள்’ என்ற பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். ‘ஃபிரீ ப்ரெஸ் ஜ்ர்னல்’ என்ற பத்திரிகையில் என்னைச் சேர்த்து விட முயன்றார்.

அப்பத்திரிகையின் ஆசிரியர் சதானந்த். நேர்முகத் தேர்வுக்கு என்னை அழைத்திருந்தார். சதானந்த் வயதானவர். விசித்திரமானவர். அடுத்த நிமிஷம் என்ன செய்வாரென்று யாருக்கும் தெரியாது. தேசபக்தி மிகுந்தவர். ஆங்கில ஆட்சியின் போது அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தார் என்று கூறுவார்கள். தமிழர்.

நான் போனவுடன் என்னையே ஐந்து நிமிஷங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு 22 வயது. அவர் பார்த்த பார்வை என்னை பயத்தில் ஆழ்த்தியது. உடம்பு நடுங்கியது.

‘நீ எம்.ஏ தமிழா?’ என்றார்.

‘ஆமாம்’.

‘கம்ப ராமாயணம் படிதிருக்கிறாயா?’

‘படித்திருக்கிறேன்.’

‘ராமனும் சீதையும் எத்தனை வருஷங்கள் காட்டில் இருந்தார்கள்?’

‘பதினாலு வருஷங்கள்’

‘பதினாலு வருஷங்களுக்குப் பிறகா ராவணன் அவளை இலங்கைக்குத் தூக்கிக் கொண்டு போனான்?’

என் தவற்றை உணர்ந்தேன்.

‘கம்பன் சீதை எத்தனை ஆண்டுகள் அசோக வனத்தில் இருந்தாள் என்று சொல்ல வில்லை.’ என்றேன்.

‘ஆனால் பதினாலு வருஷங்கள் அவள் காட்டில் இருந்திருக்க முடியாது.’

‘நான் சொன்னது தப்புதான்..’

‘எத்தனை வருஷங்கள் ராம-ராவண யுத்தம் நடந்தது?’

‘பதினெட்டு மாதங்கள் என்கிறார்கள்’

‘மஹாபாரதப் போர்?’

‘பதினெட்டு நாட்கள்’

‘ இலியத்தில் கூறப்படும் ட்ராய் யுத்தம்?’

‘பதினெட்டு ஆண்டுகள். ‘

‘பதினெட்டு ஏன் அவ்வளவு விசேஷமான எண்?’

‘தெரியவில்லை.’

அவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

நான் கேட்டேன்:’ பதினெட்டு என் விசேஷம்’?’

‘சரி, அடுத்த வாரம் பதினெட்டாம் தேதி திங்கள் கிழமை காலை  பத்து மணிக்கு வேலையில் சேர்.’ என்றார் சதானந்த்

நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. மறுபடியும் கேட்க தயக்கமாக இருந்தது. அடுத்த வாரம் கேட்டுக் கொள்ளலாமென்று இருந்து விட்டேன்.

கேட்க வாய்ப்புக் கிடைக்க வில்லை.

திருச்சி  தேசியக் கல்லூரியில் வந்து  வேலையில் சேரும்படிஎன் அப்பா கும்பகோனத்திலிருந்து அடித்த தந்தி அன்று மாலை வந்தது. பத்திரிகையா, கல்லூரியா என்ற ‘எக்ஸிஸ்டென்ஷையலிஸ’ மனப் போராட்டம்.

என் அண்ணன் சொன்னார்:’  நீ அடுத்த வாரம் திங்கள்கிழமை போனாயானால், ‘நீ யார்?’ என்று சதானந்த் கேட்கமாட்டாரென்று  என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. பேசாமல் திருச்சிக்குப் போ.”

சதானந்திடம் சொல்லாமல் போக எனக்கு விருப்பமில்லை. திங்கள் காலை கூப்பிட்டுச் சொல்லலாமென்றிருந்தேன்.

அத்ற்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.

திங்கட்கிழமை காலை அவர் காலமாகிவிட்டார்.

 

 

பாவ மன்னிப்பு

June 18, 2011 § 1 Comment


1984ல் கான டா போயிருந்தேன், சில பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்ற. நல்ல குளிர். ஜனவரி மாதம்.

ரெஜைனா என்ற இடத்தில் திருச்சி தேசியக் கல்லூரியில் 1952-4ல் படித்த மாணவர் ஒருவர் அங்குப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத் துறை பேராசிரியராக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது அவர் தி.மு.க. மாணவர் தலைவராக இருந்தார். நான் ரெஜைனா வருவது அறிந்து, என்னை அழைத்திருந்த நிறுவனத்துடன்(Indo-Canadian Institute) தொடர்பு கொண்டு,நான் அவருடைய விருந்தினராக இருக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார். நிறுவனம் என்னுடைய கருத்தைக் கேட்டது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்குப்  பிறகு திருச்சியில் மாணவராக இருந்தவர், உலகத்தின் வல்க்கோடியிலிருக்கும் ஒரு நகரத்தில் இருந்து கொண்டு என்னை அவர் வீட்டுக்கு அழைத்திருக்கின்றாரே என்ற ஆச்சர்யம்.

அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

ரெஜைனாவில் இந்தியர் சங்கம் ஒன்றிருந்தது. அவர்களும் பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண்டு அச்சங்கத்தின் தலைவர் வீட்டுக்கு மாலை விருந்துண்ண அழைத்திருந்தார்கள்.

நான் என் முன்னாள் மாணவரிடம் கேட்டேன்; ‘நீங்களும் வருகிறீர்கள் அல்லவா? ‘ இந்தியர் சங்கம் என்பதால் அவரும் அங்கத்தினராக இருப்பாரென்று நினைத்தேன்.

அவர் சிறிது நேரத்  தயக்கத்துக்குப் பிறகு சொன்னார்: ‘எல்லாரும் வடக்கத்திக் காரங்க. நான் உங்களைக் கொண்டு விட்டுட்டு அப்புறம் அழைச்சிகிட்டு வரேன். ‘

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘வடகத்திக்காரங்க’ என்றால் என்ன அர்த்தம்? கான் டாவே  உலகத்தின் வடக் கோடியில் இருக்கிறது, இதற்கு இன்னும் வடக்கே என்ன இருக்க முடியும்?

பிறகு அவரே விளக்கினார்: ‘எல்லாரும் ‘நார்த்-இன்டியன்ஸ்’. மார்வாரி, பஞ்சாபி இந்த மாதிரி. ‘

அவரை மேலும் நான் வற்புறுத்த விரும்பவில்லை. இந்தியாவை விட்டு வெளியே வந்துவிட்ட அவர் இன்னும் எப்படி இந்தக் கலாசாரப் பொதிகளைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

அவர் மாலை என்னும்  பஜாஜ் என்பவர் வீட்டில் கொண்டு விட்டார். அவர் ஒரு தொழிலதிபர் என்று அறிந்தேன்.

பெரிய வீடு. பனிக்காலம் ஆதலால், ‘லான்ஸ்’ முழுவதும் வெண்மைப் போர்த்தியிருந்தது.  சீதோஷ்ண நிலை -17.

நல்ல வெப்பமான உடையையும் தாண்டி குளிர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

என்னை உள்ளே வரவேற்றவர் பஜாஜாக இருக்க வேண்டும். நல்ல கம்பீரமான தோற்றம். பெரிய சால்வை போர்த்தியிருந்தார். ஐம்பது வயதிருக்கலாம்.

இன்னொரு ஆச்சர்யம், அங்கு வந்திருந்த அனைவரும் இந்திய உடையில் இருந்தார்கள்! பெண்கள், புடைவை அல்லது, சல்வார் ,கமீஸ்.

நான் உள்ளே போய் உட்கார்ந்ததும், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஒவ்வொருவராக என் காலைத் தொட்டு வணங்கிவிட்டுச் சென்றார்கள்.

நான் திடுக்கிட்டேன். என்னைச் சாமியார் ஆக்கிவிட்டர்களோ? ஊதுவத்தி மணம், ‘ஹாலை’ அலங்கரித்த ஸ்வாமிப் படங்கள், அனைவரும் அணிந்திருந்த இந்திய உடை அனைத்தும் இதை உறுதி செய்வது போல இருந்தன.

என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துப் போக வந்திருந்த பேராசிரியர் மார்ஷல் சொன்னது என் நினைவுக்கு வந்தது: ” இந்தியர் சங்கத்தினர் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள், இந்தியாவிலிருந்து பெரியவர்கள் வந்தால் எங்களுக்குச் சொல்வதில்லை என்று. நாளை இரவு உங்களை அவர்கள் விருந்துண்ண அழைத்திருக்கிறார்கள். போகிறீர்களா?’  ‘பெரியவர்கள்’ என்பதற்கு அவர் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தை, ‘ Great men’.  இப்பொழுது புரியத்தொடங்கியது, என்னை இந்தியாவிலிருந்து வந்தவனாக் கொண்டு, அவர்கள் ஆத்ம திருப்திக்காக சாமியாராக்கி வழிபட விரும்புகிறார்கள்!

நான் போலந்திலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லலாமாவென்று நினைத்தேன்.

அதற்குள் ஒரு வயதான பெண்மணி என் அருகில் வந்து, குனிந்து, ‘ என்ன குடிக்கிறீர்கள்? சூடாக பால் தரட்டுமா?’ என்று ஹிந்தியில் கேட்டார்.

பாலைக் காட்டிலும் சூடான எதுவும் நான் சாமியாராகி விட்ட நிலையில் கிடைக்காது என்று தோன்றிற்று!

‘வெந்நீர் போதும்’ என்றேன் நான்.

‘அச்சா ஜி. இதோ எடுத்து வருகிறேன்’.

‘அவர் என்னுடைய தாயார்.’ என்றார் பஜாஜ்.

‘ஹால்’ ஓரத்தில் ஜீன்ஸ், தொள தொள சட்டை அணிந்த பதினெட்டு வயது பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இந்த நாடகத்தில் பங்கு கொள்ளவில்லை என்று எனக்குப் பட்டது. அவள் வாயில் ‘சூயிங்  கம்’.அவள் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தாள்.

அப்பொழுது வயதான பஞ்சாபி லாலா மாதிரியிருந்த ஒருவர் எழுந்திருந்து என்னிடம் சொன்னார்: ‘ இங்கு இந்த நாட்டு இளைஞர்களைப் பார்த்து நம் குழந்தைகளுக்கும் ‘Dates’  பழக்கம் வந்து விட்டது.. கூடாது என்று அறிவுரை புகட்டுங்கள்.’

‘அதிகம் ‘Dates’  சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது’ என்றேன் நான்.

எல்லாரும் சிரித்தார்கள்.

‘அந்த ‘Dates’ இல்லை, ஸ்வாமிஜி, ஆண்கள் பெண்கள் சந்திப்பதை இங்கு Date என்று சொல்வார்கள். அது கூடாது என்று சொல்லுங்கள்’ என்றார் லாலா.

இன்னொருவர் எழுந்திருந்து கேட்டார்: ‘ உங்களுக்கு மறு பிறவியில் நம்பிக்கை இருக்கிறதா?’

ஒரு பெரிய வெள்ளி  கூஜாவில் வெந்நீர் வந்தது. ஒரு வெள்ளித் தட்டில் பழங்கள்.

அப்பொழுது ஜீன்ஸ் அணிந்திருந்த பெண் என் எதிரே வந்து நின்றாள்.’சூயிங் கம்’ மெல்வதை நிறுத்தவில்லை.

‘You are differently dressed’ என்றேன் நான் அவளைப் பார்த்துப் புன்னகையுடன்.

‘ Yes..Because I don’t feel guilty about what I am doing everyday.. I am not an hypocrite ‘என்றாள் அவள்.

முற்போக்கு

June 15, 2011 § 5 Comments


நான் கல்லூரியில் படிக்கும்போது என்னை ஒரு தீவீர முற்போக்குவாதியாகக் காட்டிக் கொள்வதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தேன். அந்த அளவுக்கு என் பால்ய அக்கிராஹார வாழ்க்கை எரிச்சல் ஊட்டியிருந்தது. கோயிலை அண்டிப் பிழைத்த குடும்புங்கள். காலி பெருங்காய டப்பிவாசனையாக இருந்த ஜாதி ஜம்பம் மட்டும் அகலவில்லை.

என் அக்கிரஹார எதிர்ப்பு உணர்ச்சியின் காரணமாக, எனக்கு பிராம்மண நண்பர்கள் அதிகம் இல்லை. ஷண்முகவடிவேலு என்ற நண்பன்ஒருவன் இருந்தான்.. நல்ல வளர்த்தி. ஆறடி உயரம். தேவர் வகுப்பைச் சார்ந்தவரன். ‘வேங்கை மார்பன்’ என்ற புனை பெயரில் வரலாற்று நவீனங்களை மரபுக் கவிதை வடிவில் எழுதுவான்..அவன்அரசியல் பார்வை விசித்திரமானது. பெரியாருடைய ஜாதி மறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தான்.. ஆனால் நாத்திகன் அல்லன்.. அசாத்திய சிவ பக்தி. திருநீறு இல்லாமல் அவனைப் பார்க்க முடியாது. முஸ்லீம்களையும், கிறிஸ்துவர்களையும் கண்டால் அவனுக்கு அறவே பிடிக்காது.

எனக்கு முகம்மது ரஃபி என்ற இன்னொரு நண்பன் இருந்தான். அவன் அப்பா கும்பகோண்த்தில் பிரபல காங்கிரஸ்காரர். குடந்தை நகர காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்தாரென்று நினைக்கிறேன். ரஃபிக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு. ஷண்முகவடிவேலுக்கு நான் ரஃபியிடம் நட்புப் பாராட்டுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இதை அவன் அடிக்கடிச் சுட்டிக் காட்டவும் தயங்குவதில்லை.

ஒரு நாள் ஷண்முகவடிவேலு என் வீட்டில் என்னைப் பார்க்க வந்தபோது, ரஃபி என்னைப் பார்க்க வந்தான்.

‘நீ நாளைக்கு என் வீட்டுக்குச் சாப்பிட வரயா< வண்டியை அனுப்பறேன்..’ என்றான் ரஃபி. அவன் வீடு பாலக் கரையில் இருந்தது.

‘என்ன் விசேஷம்?’ என்றேன் நான்.

‘நீ  ‘நான்வெஜிடேரியன்’ சாப்பிடுவே இல்லே? நீ முற்போக்குவாதி, பூணுல் கிடையாது, சாப்பிடாமியா இருப்பே?’ ஃபர்ஸ்ட்கிளாஸ் ஐடெம்ஸ்’. மதியம் பன்னிரெண்டு மணிக்கு வண்டி வரும்..சரியா?’ என்றான் ரஃபி.

ஷண்முகவடிவேலு கூட இருப்பதைப் பார்த்து, ‘ நீங்களும் வாங்களேன்’ என்றான் ரஃபி.

‘நான் பழுத்த சைவன். மாட்டையும் ஆட்டையும் அடித்துத் தின்ன மாட்டேன்,’ என்றானவடிவேலு குரலில் ஒரு வகையான எரிச்சலுடன்.

ரஃபி இதை ரஸிக்கவில்லை என்பது அவன் முகத்தினின்றும் தெரிந்தது.

எனக்கும் ஷண்முகவடிவேலு  அப்படிப் பேசியது பிடிக்கவில்லை..

‘சரி, வரேன்’. என்றேன் நான்.

ரஃபி போனபிறகு ஷண்முகவடிவேலு என்னைக் கேட்டான்:’ நீ ‘நான்வெஜ்’ சாப்பிடுவியா?’

‘ஒரு நாளைக்குச் சாப்பிட்டுப் பாக்கிறது, என்ன தப்பு? ‘ என்றேன் நான்.

‘நீ ஒரு கோழை. உனக்கு இதுதான் பிடிக்கும், இது பிடிக்காதுன்னு சொல்ல உனக்குத் தைர்யமில்லே.. ஒரு முஸ்லீம், அவன் கூப்பிடறான், அவன் வீட்டுக்குப் போய் சாப்பிட்றதினாலே உன் முற்போக்கு முகத்தைக் காட்டணும், அதுக்காகத்தானே போறே? இதுவா முற்பொக்குத் தனம்?’ என்றான் ஷண்முகவடிவேலு.

இவ்வாறு சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.

அடுத்த நாள் ரஃபி வீட்டுக்கு நான் சென்றேன்.

பெரிய வீடு. செல்வச் செழிப்பு   ‘ஹாலி’லிருந்த ஒவ்வொரு பொருளிலும் தெரிந்தது.

கிரமஃபோனில் எம்.எஸ். பாடிக் கொண்டிருந்தார்.

சாப்பிட உட்கார்ந்தோம்.

உருண்டையாக, போண்டா மாதிரியாக ஏதோ ஒன்று வந்தது.

நான் வாயில் வைத்தேன். விழுங்க முடியவில்லை. என்னுடைய ப்தினெட்டு ஆண்டு மரபு, அதை ஏற்றுக் கொள்ள முரண்டு பிடித்தது.

என்னுடைய சங்கடத்தை ரஃபி பார்த்துவிட்டான்.

‘நீ ‘நான்வெஜ்’ சாப்பிட்டதில்லையா? ‘ என்றான் அவன்.

‘இல்லே. ஐ வில் ட்ரை.’

‘வேண்டாம். அப்படியே வச்சிடு. நான் என் சின்னம்மா வீட்டிலேந்து சாப்பாடு கொண்டாரச் சொல்றேன்..’

”சின்னம்மாவா?’

‘ஆமாம், அவங்க என் வாப்பாவோட இளைய சம்ஸாரம். அவங்க அய்யங்கார். அவங்க ‘கிச்ச்ன்’ தனி… என்னோட வாப்பாவும் உன் மாதிரி முற்போக்குச் சிந்தனையுடையவர்தான்.. சின்னம்மாவோட பிராம்மண ஆசாரத்துக்குக் குறுக்கே நிக்க மாட்டார் .’ என்றான் ரஃபி.

‘வாட் ஈஸ் யுவர் ப்ராடெக்ட்?’

June 3, 2011 § 5 Comments


பா.ராகவன் கல்விப் பாடத்திட்டங்களைப் பற்றி எழுதியிருந்த மூன்று பதிவுகளும் , கிணற்றை எல்லை நிலமாகக் கொண்ட இன்றையக் கல்விப் பாடத்திட்டத்தால் தன் பள்ளிக்கூட நாட்களில்  சிறை செய்யப்படாத ஒரு திறந்த மனம் எப்படிச் சிந்த்திக்கின்றது என்பதற்கு  உதாரணம். ஒவ்வொரு மாணவரின் சுயமான முழு ஆற்றலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்காத நம் கல்விப் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

கல்வியில் ‘எவை’ ‘எவை’  என்ற கேள்வியைக் காட்டிலும், ‘ஏன்’  ‘எப்படி’ என்ற கேள்விகள்தாம் அடிநாதமாக இருக்க வேண்டும். நசிகேதஸ் போன்று ஆசிரியர்களைக் கேள்விகள் கேட்டுத் தொளைக்கும் மாணவர்களைத் திருப்தி படுத்தக் கூடியதாக இருந்தால்தான் அது சிறந்த  கல்விப் பாடததிட்டம்.

இன்று நம் நாட்டில், பள்ளிகூடங்களோ சரி, பல்கலைக்கழகங்களோ சரி, நுகர் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மாதிரி இயங்குகின்றனவேயன்றி,  விஞ்ஞானப் பார்வையும் கறபனைத் திறனுமுடைய கலைக் கூடங்களாக இல்லை. எனக்கு தில்லியில் ஏற்பட்ட ஓர் அநுபவம் நினைவுக்கு வருகிறது.

தில்லியில் ‘இண்டியா இண் டர்நேஷனல் சென் டர்’ என்ற ஓர் இடம் இருக்கிறது.  ஒரு காலத்தில் அறிவுஜீவிகள் கூடும் பிரத்யேக கிளப்பாக இருந்த அது இப்பொழுது வியாபாரிகளும் அரசியல் வாதிகளும் தொழில் பேரம் செய்யும் இடமாக மாறி விட்ட்து. நான் தில்லியில் வசித்த நாட்களிலேயே மாறத் தொடங்கி விட்டது.

போன நூற்றாண்டு எழுபதுகளில் நானும் ‘கணையாழி’ ஆசிரியர் கி.கஸ்தூரிரங்கனும் அங்குக் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது  எனக்குத் தெரிந்த சர்தார் ஒருவர், மர வியாபாரி, அங்கு ‘ஹல்லோ’ என்று சொல்லிக் கொண்டே வந்து எங்கள் எதிரே உட்கார்ந்தார்.

‘ஜெகத்சிங் பிஸினஸ்மன், கஸ்துரிரங்கன் ‘நியூயார்க் டைம்ஸ்’ என்றேன் நான்.

‘ வாட் வாட்?’ என்றார் ஜெகத்சிங் கஸ்தூரியைப் பார்த்து.

‘நியூயார்க் டைம்ஸ்’ என்றார் கஸ்துரி.

‘ வாட் ஈஸ் யுவர் ப்ராடெக்ட்?’ என்றார் சர்தார்.

கஸ்தூரி பதில் சொல்லத் தயங்க வில்லை. ‘பேப்பர்’ என்றார் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் தோற்றுவிக்காமல்.(with a dead pan face)

அந்த சர்தார் இத்தனைக்கும் தில்லியில் மிக உயர்ந்த பள்ளிக்கூடத்தில் (Modern School) படித்தவர். பள்ளிப் படிப்பு அவர் அறிவின் பரப்பை எந்த விதத்திலும் விசாலப்படுத்தியாகத் தெரியவில்லை. தனியார் பள்ளிக் கல்வித் திட்டத்தும் அரசு பள்ளிக்கல்வித் திட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தனியார் பள்ளிகளில் படிக்கின்றவர்கள் ஆங்கிலத்தை நுனிநாக்கினால் பேச முடியும், அவ்வளவுதான். ஆனால் பேசுகின்ற ஆங்கில வார்த்தைகளுக்கு Spelling தெரியுமா என்று நிச்சியம் சொல்ல முடியது.

தில்லிப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் கே.என்.ராஜ் என்ற பொருளாதர மேதை துணை வேந்தராக இருந்த போது,  கல்லூரிப் படிப்புக்காகச் சேரும் தனியார் பள்ளி மாணவர்கள் நுழைமுகமாக ஆங்கிலத்தில் ஒரு தேர்வு எழுத வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். இது கல்வி வட்டாரங்களில் ஒரு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் அப்பொழுது சொன்னார்: ‘It is true these public school boys and girls speak English well, but do they know the spelling of the words they use? ‘

Where Am I?

You are currently browsing the அனுபவம் category at இந்திரா பார்த்தசாரதி.