பெரியாழ்வார் பாடியிருப்பாரா?

February 28, 2018 § Leave a comment


தமிழ்  மொழியிலுள்ள பக்தி நூல்கள், ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்’, ‘ பன்னிரு திருமுறைகள்’ போன்றவை, பாராயணத்துக்கு மட்டுமன்றி, இலக்கியமாகவும்  ரசிக்கத் தக்கவை. ‘ இவற்றின் சமயச் சார்பு எனக்குத் தேவையில்லை, இவற்றை இலக்கியமாக மட்டும் நான் பார்க்க விரும்புகின்றேன்’ என்று சொல்வதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு.  வேத கோஷங்கள் போல, ஜென்மம் கடையேறுவதற்கான வெறும் சமய மந்திர வழிகாட்டிகளாக இநூல்களை ஒருவன் அணுகினால்,  அவன் இவற்றை இலக்கியங்களாக இழந்து விடுகிறான். இதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை என்றால் அது  அவனுடைய உரிமை என்பதை யும்  நான் மறுக்கவில்லை. ‘பெரிய திருமொழி’யை (பெரியாழ்வார் இயற்றியது) நான் படிக்கும்போது, அவர் கண்ணனை க் குழந்தையாகக் கண்டு ரசித்து இயற்றிய பாடல்கள் அற்புதமான சொல்லோவியங்கள்.  கண்ணன் மட்டுமன்றி, உலகத்து அத்தனை மழலைச் செல்வங்களும் நம் கண் முன் வந்து நின்று நம்மை மகிழ்விக்கின்றன. ஆனால், இவரேதாம், குழந்தைகளுக்கு மானிடப் பெயர்களைச் சூட்டாமல், தெய்வத்தின் பெயர்களை,( நாராயணா, கோவிந்தா போன்றவை) சூட்ட வேண்டுமென்று , ‘மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை ,மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால், மறுமைக்கு இல்லை; குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால், நலம் உடை நாரணன் அன்னை நரகம் புகாள்’ என்பன போன்ற பாடல்களைப் பாடியிருக்கக் கூடுமா என்ற நினைப்பதற்கு இடமிருக்கிறது.  ‘வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டு ச் சொட்டு என்னத் துளிக்க துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான், கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்’ ( ‘ தவழ்ந்த நிலையிலிருந்து தள்ளாடித் தள்ளாடி நடந்து வரும் மழலைச் செல்வன், நிர்வாணத் தோற்றத்தில், சிறு நீர் கழித்துவிட்டு முத்துக்கள் போன்ற சிறு நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட எனக்குப் பின்னால் வந்து  என்னைக் கட்டிக் கொள்வான்) .  என்று அக்காட்சியை அநுபவித்துப் பாடியவர். முன் கூறிய பாடலைப் பாடியிருப்பாரா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘நம்பி பிம்பி என்று நாட்டுப் பேர் இட்டால். நம்பும் பிம்பும் நாலு நாளில் அழுகிப் போம்’ என்று அவர் பாடியதாக வைத்துக் கொண்டாலும், அவர் மகளே ‘ நாரணன் நம்பி நடக்கின்றான்’ என்று இறைவனை ‘நம்பி’ என்று குறித்துப்  பாடியிருக்கிறாரே என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது!  பெரியாழ்வார் பாடியனவாகச் சில பாடல்கள் சேர்க்கப் பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ‘நாலாய்ரம்’ என்ற கணக்கு வருவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். தமிழர்களுக்குத் தொகைப் படுத்துவதில் அப்படியொரு obsession! ‘பத்துப் பாட்டு’ ‘எட்டுத் தொகை’, ‘பதினெண்கீழ்க்கணக்கு’ ‘பதினெண்மேல்கணக்கு’, ‘ஐம்பெரும் காவியங்கள்’, ‘பன்னிரு திருமுறைகள்’  போன்றன. திருக் குறளிலும் இந்தமாதிரி குறட்பாக்கள் சேர்க்கப் பட்டிருக்கக் கூடும். ‘சொல்லுக சொல்லில் பயனுடைய, சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்’ என்ற குறளைப் பாடுவதற்கு ஒரு வள்ளுவர் தேவையா? இதை ஓர் அணி இலக்கணமாகக் கூறிச் சமாளிப்பார் பரிமேலழகர்!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading பெரியாழ்வார் பாடியிருப்பாரா? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: