கடவுளும் கைத்தடியும்

October 17, 2017 § Leave a comment


நான் வழக்கம் போல் காலை ஆறுமணிக்கு, லஸ் சர்ச் ரோடில் இருக்கும் ஹநுமான் கோவிலுக்குப் போனேன். உடலுக்கும் உள்ளத்துக்கும் பயிற்சி.

அங்கு விதவிதமான மக்கள். விதவிதமான கோரிக்கைகளுடன் ஹநுமானை வழிபட வருவார்கள்.. ஒவ்வொருவருடைய முகத்தையும் ஊன்றிக் கவனித்து அந்தக் கோரிக்கை என்னவாக இருக்கலாம் என்று சிந்திப்பது ஒரு பொழுது போக்கு, மனப்பயிற்சி.. வயதான காலத்தில் யோசிப்பது ஒரு மனப் பயிற்சி, சரீரத்துக்கு, நடை இருப்பது போல.

நான் பிரகாரத்தைச் சுற்றி முடித்ததும், என் கைத்தடியை இறுகப் பற்றிக் கொண்டு பிரகார வாசலின் தூணருகே உட்கார்ந்தேன்.

அப்பொழுது ஒருவன் என்னை நோக்கி வந்தான். காக்கி பாண்ட், சாம்பல் நிற ‘டீ ஷர்ட். அவன் முகம் பழக்கமானது போல் ஒரு மங்கலான உணர்வு. நினைவைத் துழாவினேன். ஞாபகத்துக்கு வரவில்லை.

வயது நாறபதுகளில் இருக்கலம்

அவன் என் குனிந்து என் கால்களைத் தொட்டு வணங்கினான்.நான் இதை எதிர்பார்க்கவில்லை.

‘ஞாபகம் இருக்கா?’ என்று அவன் கேட்டான்.
‘தெரியலியே’.
‘ஆட்டோ ட்ரைவர் ஆறுமுகம்’

அவனா?

என் மனத் திரையில் அவனைப் பற்ரிய வேறொரு சித்திரம் ஓடியது. அழுக்குக் காக்கிச் சட்டை, பாண்ட். வாரக் கணக்கில் சவரக் கத்தி கண்டறியா முகம். சிகப்பேறிய கண்கள்.

அவனுக்கும் எனக்கும் எப்படி ஒரு பந்தம் ஏற்பட்டது என்று என்னால் விளக்க முடியாது. முழு போதையிதான் ஆட்டோ ஓட்டுகிறான் என்று தெரிந்தும் அவன் வண்டியில்தான் போவேன். காரணம், அவன் நேர்மையானவன். மீட்டரில் விஷமம் செய்வதில்லை. குறைந்த தூரமோ, நெடுந்தூரமோ எங்குக் கூப்பிட்டாலும் வருவான்.

நான் பலதடவைகள் அவனுக்கு அறிவுரைகள் கூறியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மௌனப் புன்சிரிப்புதான் அவன் பதில்.

அவனா இவன்? நான் அவனைக் கடைசியாகப் பார்த்து இருபது வருஷங்கள் இருக்கும்

அப்பொழுது அவனைப் பார்த்த காட்சி என் மனக்கண் முன் இன்னும் நிற்கிறது.

நான் ஒரு நாள், ‘வாக்கிங்’ போகும்போது, ‘ஆட்டோ ஸ்டாண்டில்’ ஒரு சின்ன கூட்டம். நாலைந்து பேர்கள், வேட்டி ஒரு பக்கம், உடம்பு ஒரு பக்கமாய் அலங்கோலமாய்க் தெருவில் கீழேக் கிடந்த ஒருவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் சந்தேகித்தபடி, ஆறுமுகம்!

‘என்ன ஆச்சு?’ என்றேன் நான்.
‘ ராத்திரி, அளவுக்கு மீறிக் குடிச்சிருக்காரு… வீட்டுக்குக் கூட போகாமெ இங்கே புரண்டு கிடக்கிறாரு’ என்றான் அவர்களில் ஒருவன்.

ஆறுமுகம் கண்கள் திறந்தன.என்னைப் பார்த்தன.

திடீரென்று எழுந்தான். வேட்டியைச் சரி செய்தான். தள்ளாடித் தள்ளாடி நடக்க ஆரம்பித்தான்.

‘அவன் வீடு எங்கே இருக்கு?’ என்றேன் நான்.
‘தேனாம்பேட்டை. ரெண்டு குழந்தைகளை வீட்லே விட்டுட்டு இவரு பொண்டாட்டி ஓடிப் போயிடிச்சு. அதான் இந்தக் குடி!’ என்றான் அவர்களில் மற்றொருவன்.

அவ்வளவுதான், அடுத்த கணத்தில், அவ்வாறூ சொன்னவன் கீழே கிடக்க, அவன் மீது ஆறுமுகம் உட்கார்ந்து கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் ஆறுமுகத்தைக் கட்டிப் பிடித்து கிழே தள்ளினர்.

ஆறுமுகம் எழுந்து தலை தெறிக்க ஓடினான். அந்த ‘ட்ராஃபிக்’ நெரிசலில், போதையில் தெருவில் கிடந்தவனால் எப்படி பஸ்களையும் கார்களையும் சமாளித்து அப்படி அவ்வளவு வேகமாக ‘சிக்னலை’த் தாண்டி ஓட முடிந்தது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நான் அவனை அந்தக் கோலத்தில் பார்த்தது அவனுக்கு அவமானமாய் இருந்திருக்குமா? அதைவிட பெரிய அவமானம் அவன் மனைவி அவனைவிட்டு ஓடிவிட்டாள் என்று ஒருவன் பகிரங்கமாய் அறிவித்தது!

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் அவனைப் பார்க்கிறேன்!

‘நான் உங்களை இந்தக் கோயில்லே பல தடவை பாத்திருக்கேன். நீங்க என்னை அடையாளம் கண்டுக்கலேன்னு புரிஞ்ச்சது. இன்னிக்குத் தான் எப்படியும் உங்களைப் பார்த்துப் பேசலாம்னுதான் வந்தேன்.’ என்றான் புன்முறுவலுடன்

‘உன்னை இப்படிப் பாக்க சந்தோஷமா இருக்கு. இப்பொ என்ன செய்யறே?’

அவன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். ’ அதே வீட்லேதானே இருக்கீங்க? வாங்க, நான் உங்களை வீட்லே கொண்டு விட்டுடறேன்’ என்றான் சில விநாடிகள் கழித்து.

‘இது எனக்கு’வாக்கிங்’ ஆறுமுகம்! உன் வண்டியிலே உன்னோட போனா அது ‘வாக்கிங்’ இல்லே’ என்றேன் சிரித்துக் கொண்டே.

‘ஒரு நாளைக்குப் பரவாயில்லே, ‘வாக்கிங்’ வேண்டாம். என்னைப் பத்தி நீங்க என்னை ஒண்ணுமே கேக்கலியே? நீங்க கேக்காட்டாலும் சொல்றேன், வாங்க’

அவன் தன் கையை நீட்டி என் கையைப் பிடித்துக் கொண்டு எழும்ப வைத்தான்.என்னாலேயே எழுந்திருக்க முடியும் என்று சொல்ல நினைத்தேன். ஆனால், அவன் அன்பை நிராகரிக்க விரும்பவில்லை.

கோவில் வாசலை அடைந்ததும் அவன் சொன்னான்:’ இங்கே இருங்க, வண்டியைக் கொண்டு வந்துடறேன்.’

அவன் இடப்புறமாகத் திரும்பி சற்றுத் தொலைவில் இருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான்.

நான் ‘ஆட்டோ ரிக்‌ஷா’ என்று நினைத்ததற்கு வெட்கப்பட்டேன். என் பிரபுத்வ ‘ஈகோ’வின் எச்சம்!

‘மினி காப்’! இப்பொழுது ‘டாக்ஸி’ ஓட்டுகிறான் போலிருக்கிறது.

வண்டியில் உட்கார்ந்ததும் கேட்டான்:’அதே வீட்லேதானே இருக்கீங்க?’

‘ஆமாம்.’

சிறிது நேரம் மௌனம். பிறகு கேட்டான்’ ‘என் கதைடைக் கேக்க ‘டைம்’ இருக்குமா?’

‘எனக்கு இருக்கு. உனக்குதான் ‘டைம்’ இருக்கணும். இது ‘டாக்ஸி’தானே?’

‘ஆமாம். சொந்த வண்டி. ‘லோன்’ எடுத்து வாங்கினேன். கம்பனியோட ‘கான்ட்ராக்ட்’ சொந்த வண்டியிலே ஒரு சௌகர்யம். அதுதான் நம்ம சௌகர்யப்படி போகலாம்.நீங்க இப்பொ ‘டாக்ஸி’யிலே போகலே. என் வண்டியிலே போறீங்க. சரி, என் கதையைச் சொல்றேன். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’

நான் திடுக்கிட்டேன்.என் நம்பிக்கைகளும், நம்பிக்கையின்மைகளும் கேள்விக்குள்ளாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

‘நான் கேட்டது தப்பு. உங்களைக் கோயில்லே பாத்திட்டு, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கான்னு கேக்கறது தப்பு.சரி, என் கதையைச் சொல்றேன்.

சில விநாடிகள் மௌனம்.

‘எனக்கு அப்பொ, அதான் அந்தக் காலத்திலே, குடிச்சுப் புரள்றப்பொ, கடவுள் நம்பிக்கை எதுவும் கிடையாது. அதனால்தான் நான் குடிச்சேன்னு நான் சொல்ல வல்லே. எதிலியும் நம்பிக்கையில்லாமெ இருந்தேன். நான் பிறந்து, வளர்ந்த சூழ்நிலை அப்படி. அப்பன் குடிகாரன், அவன்கிட்டேயிருந்து அந்தப் பழக்கத்தையும், தங்கமான என் அம்மா கிட்டேயிருந்து யாரையும் ஏமாத்தக் கூடாதுங்கிற பழக்கத்தையும் கத்துகிட்டேன்.’

‘எனக்கு உன் பேரிலே அபிமானம் ஏற்படறதுக்குக் காரணம், நீ யாரையும் ஏமாத்தறதில்லேங்கிறதுதான் ’ என்றேன் நான்.

‘ அது எனக்குத் தெரியும். அதனால்தான், நீங்க என்னை அப்படிக் கீழே குடிச்சிட்டுக் கிடந்ததைப் பாத்துட்டீங்களேங்கிற அவமானத்தினால்தான் அன்னிக்கு அப்படி ஓடினேன்… என் பொண்டாட்டி என்னை விட்டு ஓடிட்டாங்கிறதுகூட எனக்கு அவ்வளவு தப்பா படலே. குடிகாரன் புருஷன்கிட்டே எந்தப் பொம்பிளை இருக்க முடியும்? ஆனா ரெண்டு குழந்தைங்களை அனாதையா விட்டுட்டு ஓடினதுதுதான் என்னை அடியோட வேற ஆளா மாத்திடுச்சி. அந்த வகையிலே அவ அப்படி ஓடிப் போனது நல்லதுதான். குழந்தகளை நல்லா படிக்க வச்சு ஆளாக்கணும்னு ஒரு வெறி.அதுக்குக் குடிப் பழகத்தை விட்டொழிக்கணும்னு புரிஞ்சுது. அதுக்கு என்ன செய்யறது? எனக்கு எந்த மருத்துவச் சிகிச்சையிலும் நம்பிக்கை கிடையாது.’

சிறிது நேரம் மௌனம்.

அவன் தன் கதையைச் சொல்லுவதற்காகச் சுற்றி அழைத்துச் செல்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. எனக்கு அது தெரியும் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான் என்பதும் எனக்கு விளங்கியது.. அதனால்தான் அப்பொழுது, ‘இது இப்பொழுது என் வண்டி’ என்று அவன் சொல்லியிருக்க வேண்டும்.

அவன் மீண்டும் தொடர்ந்தான்:’ நான் இப்படியெல்லாம் யோசிச்சுகிட்டு ஒரு நாள் சவாரியை ஏத்தி வரப்போ, இந்த அநுமார் கோயில்லே மணி அடிச்சுது. சவாரியும் இங்கே இறங்கிச்சு. வண்டியை நிறுத்திட்டு நானும் கோயிலுக்குள்ளாற போனேன். ஒரே கூட்டம். சனிக் கிழமை. கோயில் மணி சப்தமும், ‘டும்’ டும்னு அந்த மத்தள சப்தமும் என்னையறியாமலேயே மெய் சிலிர்க்க வச்சுது.ஏன் அப்படி ஆச்சுதுன்னு காரணமும் விளங்கலே! உடம்பெல்லாம் புல்லரிச்சுது. ஆமாங்க..
அப்பொத்தான் எனக்குத் திடீர்னு மின்னல் கணக்கா பளீர்னு ஒரு எண்ணம் வந்தது. அநுமார் பேரிலே நம்பிக்கை வச்சு அவருக்கு இனிமே குடிக்கமாட்டேன்னு ஒரு சத்திய வாக்கு கொடுத்தேன்னா என் பிரச்னை தீரும்னு.
எனக்கு அப்பொ ஏன் அப்படித் தோணிச்சுன்னு என்னாலேயே புரிஞ்சுக்கவே முடியலே! நம்பினா நம்புங்க, நம்பாட்டிப் போங்க, நூத்தெட்டு தடவை பிரகாரத்தைச் சுத்திச் சுத்தி வந்தேனுங்க. மனசு லேசான மாதிரி இருந்தது.அப்புறம் குடி பக்கம் எட்டிக்கூடப் பாக்கலே.


வெறி பிடிச்ச மாதிரி சவாரிக்குப் போனேன். சம்பாரிச்சேன். பசங்களைப் படிக்க வச்சேன், ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் இப்பொ தரமணியிலே இரு கம்பனிலே வேலை செய்யறான். ஐ.டி.மகளும் ஐ.டி. பாங்க்லே வேலை செய்யறா.அவ ‘பாங்க்’லேந்துதான் இந்தக் காருக்கு ‘லோன்’. இப்போ நல்லா இருக்கேங்க’

‘அநுமார்தான் காரணங்கிறீயா?’ என்றேன் நான்.

‘நான் காரணத்தை ஆராய விரும்பலே. அதைப் படிச்சவங்கிற செய்யற வேலை. இப்பொ நீங்க கைத்தடி வச்சிருக்கீங்க, அதெ பிடிச்சுகிட்டாத்தான் நடக்கிறதுக்கு உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரது இல்லையா? அது இல்லாட்டியும், உங்களாலே நடக்க முடியலாம், ஆனால் ‘பாலன்ஸ்’ இருக்காது. மனுஷங்க வாழ்க்கை சைக்கிள் விடற மாதிரி. ‘பாலன்ஸ்’ இல்லாட்டி, வாழ்க்கைச் சக்கரம் ஓடாது. இதுதானே உங்க வீடு?’

‘ஆமாம்”.

நான் இறங்குவதற்கு வசதியாக என் கைத்தடியை என் கையிலிருந்து வாங்கி, இறங்கியவுடன் கொடுத்துவிட்டுப் புன்னகை செய்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading கடவுளும் கைத்தடியும் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: