செங்கோலோச்சும் உண்மை

July 19, 2017 § 1 Comment


இது போன நூறாண்டுகளில் எழுபதுகளில் நடந்த சம்பவம்.
டெல்லிப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாருடைய திருவுருவப் படம் அணி செய்யும் விழா. அந்த பெரிய அறையை ஏற்கனவே தாகூர், பிரேம்சந்த் முன்ஷி,, சுமித்திரானந்த் பந்த் போன்றவர்களுடைய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.ஆறு மாத விவாதங்களுக்குப் பிறகு, பாரதி படம் இடம் பெற அனுமதித் தந்தார்கள்
துணை வேந்தர் சீனவியல் (Chinese Studies) அறிஞர்.. இந்தி மொழி வல்லுநர். பாரதியைப் பற்றி நான்கு பக்கத்துக்கு ஓர் குறிப்பு ஆங்கிலத்தில் எழுதித் தரும்படித் தமிழ்த் துறையைக் கேட்டிருந்தார்..
நான் எழுதிக் கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன்.
அன்று மாலை மூன்று மணிக்குக் கூட்டம்.
கூட்டம் தொடங்குவதற்கு அரை மணிக்கு முன்பு என்னை அவர் கூப்பிட்டு அனுப்பினார். போனேன்.
‘உங்கள் கவிஞர் தமிழில் எழுதினாரா, தெலுங்கிலா?’ என்று கேட்டார்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது நான் எழுதிக் கொடுத்ததைச் சுத்தமாக அவர் படிக்கவேயில்லையா என்று கேட்கத் தோன்றிற்று. மொழி அறிஞர், இவர், பாரதியாரைப் பற்றிக் கேள்விப் பட்டதே கிடையாதா என்ற கோபமும் வந்தது.
இதற்குள் அவருடைய தனிச் செயலர், ‘ சாரி சார், நாளைக்கு இசைக் கல்லூரியில் பேச வேண்டிய கூட்டத்தின் ஃபைலைத் தவறாக க் கொடுத்து விட்டேன். ‘ என்று சொல்லிக் கொண்டே, அவர் கையில் வைத்திருந்த ஃபைலை வாங்கித் தம் கையிலிருந்ததைக் கொடுத்தார்
அவர் தமிழர். ‘ நாளைக்கு ம்யூஸிக் டிபார்ட்மெண்ட்லே தியாகராஜர் படம் திறந்து வைக்கப் போறார் சார்’ என்று அவர் அசட்டுச் சிரிப்புடன் என்னிடம் சொன்னார்..
ஆகவே, வட இந்தியர், மொழி அறிஞர், துணை வேந்தர் அவருக்குக் கர்நாடக இசைப் பிதாமகர்களில் ஒருவராகிய தியாகராஜரைப் பற்றியும், இந்தியாவின் முதல் தேசீயக் கவிஞர் என்று சொல்வதற்கு முழுவதும் தகுதி வாய்ந்த மகாகவி பாரதியைப் பற்றியும் எதுவும் தெரியாது என்பது உறுதியாயிற்று.
இன்னொரு செய்தி. போன நூற்றாண்டு ஐம்பதுகளில், தில்லித் தமிழ்ச் சங்கம், கப்பலோட்டிய தமிழரின் நாளைக் கொண்டாடுவது என்று தீர்மானித்து, ஒரு பிரபல ஆங்கிலப் பேராசிரியராக இருந்த வட இந்திய பாராளுமன்ற அங்கத்தினரை அழைத்திருந்தார்கள். அவர் பெயரை டாக்டர் சுப்பராயன் பரிந்துரை செய்திருந்தார். அந்த எம்.பியை அழைக்கப் போனவர், அவரிடம், ‘தமிழ்ச் சங்கம் வி.ஓ.ஸி டே கொண்டாட இருக்கிறது.நீங்கள் அவசியம் வர வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். வ.உ.சிதம்பரம் பிள்ளைப் பெயரை, அவர் ஏன் ஆங்கில் ‘இனிஷியல்’களுடன் சொன்னார் என்பது இறைவனுக்குத் தான் வெளிச்சம். அவர் வர ஒப்புக் கொண்டார்.
பிறகு, அவர் டாக்டர் சுப்பராயனைக் கேட்டிருக்கிறார்,’ உங்கள் தமிழ்ச் சங்கத்துக்கும், ஏரோப்ளேன் ஸ்தாபனத்துக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் ஏன் கொண்டாட வேண்டும்? ‘என்று.
டாக்டர் சுப்பராயனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஏரோப்ளேன் ஸ்தாபனமா? தமிழ்ச் சங்கம் வ.உ.சிதம்பரம்பிள்ளை தினத்தை அல்லவா கொண்டாட இருக்கிறது? யார் சொன்னார்கள்? அவர் கப்பல் ஓட்டினாரே தவிர ஏரோப்ளேன் விடவில்லையே.அவர் காலத்தில் ஏரோப்ளேன் குட இருந்திருக்காதே!’ என்று சொல்லியிருக்கிறார்.
பிறகுதான் குழப்பம் தீர்ந்தது “வி.ஓ.ஸி டே’ என்பதை அந்த எம்.பி. தவறாக ‘பி.ஒ.எ.ஸி டே’ என்று புரிந்து கொண்டிருக்கிறார். அந்தக் காலத்தில், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ்’ ‘பிரிட்டிஷ்(B) ஒவர்ஸீஸ்(O) ஏர்லைன்ஸ்(A) கார்ப்பரேஷன் (C) என்றுதான் அழைக்கப்பட்டது. BOAC!
அழைக்கப் போனவர் ‘வி.ஓ.ஸி டே’ என்பதை எம்.பி. ‘பி.ஓ.ஏ.ஸி டே’என்று மனதில் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இருந்தாலும்,
ஒரு சரித்திரப் பேராசிரியராக இருந்தவருக்கு, காங்கிரஸ் கட்சி அங்கத்தினருக்கு, சுதந்திரப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பிரபலத் தமிழ்த் தியாகியை யாரென்று குடவா தெரியவில்லை?
‘ என்ன சொல்லுகிறீர்கள்? கப்பல் ஓட்டினாரா? ரியலி?’ என்று அவர் சுப்பராயனைக் கேட்டிருக்கிறார் அவர்.
ஆனால் தமிழகத்தின் தென்கோடியில் மதுரையிலிருந்த ஒரு மேடை நாடக க் கவிஞர் பாஸ்கரதாஸ் பொன நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகலிலேயே,
லாலா லஜ்பத்ராய், மோதிலால் நேரு ஆகியவர்களைப் பற்றி அவர்கள் இறந்தபோது இரங்கற்பா பாடுகிறார்! கே.பி.சுந்தராம்பாள் அவற்றைப் பாடி இசைத் தட்டாக வெளியிட்டிருக்கிறார்!
அன்று மட்டுமன்று. இன்றும் அப்படித்தான். வடக்குக்குத் தெற்கைத் தெரியாது. தெற்குக்கு வடக்கு அத்துப்படி!
இதுதான் ஒரு தேசம், ஒரு வரலாறு!
வட இந்தியப் பள்ளி, பல்கலைக்கழகப் பாட த் திட்டங்களில் தென்னிந்திய மாநிலங்களின் வரலாற்றைப் பற்றியச் செய்திகள் அந்தக் காலக் கட்டங்களில் மிக மிக க் குறைவு. பிறகுதான், ரொமிலாதாப்பர் போன்றவர்களின் முயற்சியால், வட இந்தியப் பல்கலைகழகங்களில் தென்னிந்திய வரலாற்றைப் பற்றி விருப்பமுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கினார்கள். இந்தி மொழி வழங்கும் Oமாநிலங்களில், அம்மொழியைத் தாய்மொழியாக க் கொண்ட பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இன்றும் சேர, சோழ பாண்டியர்கள் என்றால் யாரென்று நிச்சியமாகத் தெரிந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதுதான், ‘ஒரு நாடு,ஒரு மொழியின்’ கதை.
இந்தியத் தேசிய வரலாற்று நிறுவனம் (ICHR) கல்வித் திட்டத்தில் போவதாகஒரு புதிய சகாப்தத த் தைத் துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. புள்ளியியலும் (Statistics) சரித்திரமும் ஆளுங்கட்சியின் உண்மை என்ற பெயரில் வழங்கும்’ கற்பிதங்கள். ஆள்பவர்கள் அவர் விரும்புகிறபடிப் புள்ளி விவரங்களை மக்கள் முகத்தில் வீசி, மணலைக் கயிறாகத் திரிக்க முடியும். அதே மாதிரிதான் வரலாறும்.
இந்திரா காந்தி பிரதம மந்திரியாக இருந்தபோது, அவருக்கு வேண்டிய சில ‘முட்டைத் தலையர்களை’க்கொண்டு ( egg-heads ;அறிவு ஜீவிகள்) அவர் விரும்பியபடி இந்திய சரித்திரத்தை த் திரித்து எழுதி ’காப்ஸ்யூல்’ களாக பூமியின் ஆழத்தில் பிற்காலச் சந்ததிகளுக்காக ப் புதைத்து வைத்தார்.அவற்றில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று யாருக்கும் தெரியாது. 1977ல் அவர் தேர்தலில் தோற்ற பிறகு, ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசாங்கம் புதைக்கப்பட்டனவற்றைத் தோண்டி எடுத்து அவற்றை அழித்து விட்டது.
ஆனால் இன்றைய ஆட்சி, திருத்தி எழுதப்படும் சரித்திரத்தை பூமியில் புதைக்க விரும்பவில்லை. அதிகாரப் பூர்வமான வரலாறாகப் பகிரங்கமாக அறிவித்து இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறை மாணவர்களுக்கும் பாட த் திட்டமாக வைக்க இருக்கிறது! இந்தப் பாட த் திட்டத்தின்படி, இந்தியாவில் புராணங்கள்,, தொன்மங்கள் என்று எதுவுமே இருக்கப் போவதில்லை. அனைத்தும் சரித்திரச் செய்திகள்!
கம்பன் சொன்னான், அயோக்தியில் உண்மை பேசுகிறவர்களே இல்லை.,காரணம், எல்லாருமே உண்மையைத் தவிர வேறொன்றும் பேசாவிட்டால், உண்மை, பொய் என்கிற பாகுபாடு எப்படி இருக்க முடியும்?
அதே மாதிரி, பொய்யே நாட்டின் சித்தாந்தமாகி விட்டால் அதுதானே நாட்டின் செங்கோலோச்சும் உண்மை?
நன்றி; ‘தி இந்து’ 19-07-2017

Advertisements

§ One Response to செங்கோலோச்சும் உண்மை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading செங்கோலோச்சும் உண்மை at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: