சொல்லேர் உழவர் பகை

July 14, 2017 § 1 Comment


சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசாங்க வழக்கறிஞர், ’ இந்தியப் பிரஜை யாருக்கும் அந்தரங்கம்(privacy) என்று எதுவும் இந்தியஅரசியல் சட்டத்தின்படி கிடையாது’ என்று ‘ஆதார்’ வழக்கில் உச்ச நீதி மனறத்தில் கூறினார்.iஇதைச் சற்று விரிவாக்கிச் சிந்தித்துப் பார்த்தால், தனி மனிதனுக்குக் கருத்துச் சுதந்திரம் தேவையில்லை என்று கூட பின்னொரு காலத்தில் வாதாடக் கூடிய நிலை வரலாம்.
அரசாங்க ஒப்புதலின்றி எதனையும் பிரசுரிக்கக்கூடாது என்ற ஒரு மசோதவை 1643ல் பிரிடிஷ் பார்லிமெண்டில் நிறைவேற்றினார்கள். இதனைக் கடுமையாக எதிர்ததவர், ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் ஜான் மில்டன் என்ற கவிஞர்.
‘தனி மனிதச் சிந்தனைக்குத் தளையிடும் உத்தரவு’ என்று இதை விமர்சனம் செய்து விட்டு, மேலும் கூறினார்;’ ’’அரசாங்க ஆணைக்கேற்ப்ப் பிரசுரம் ஆகும் நூல்களின் ஜீவிதம் அந்த அரசாங்க ஆயுட்காலத்தோடு முடிந்துவிடும். காலத்தை வென்று நிற்கும் தகுதி அவற்றிற்கு இருக்க முடியாது’ என்று முன்பு ஃபிரான்ஸிஸ் பேகன் சொல்லியிருப்பதை அரசாங்கம் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.’ என்று வாதிட்டு ‘எரியோபகடிக’ (Areopagatika) என்ற நூலை அரசாங்க உத்தரவை மீறி வெளியிட்டார். இலக்கிய வரலாற்றில், சென்ஸார் உத்தரவை மீறிப் பிரசுரமான முதல் நூல் இதுவாகத்தான் இருக்க முடியும். அரசாங்க க் கட்டளையை’ ‘அரசனின் அந்தப்புரக் கத்தோலிக்களின் சதி’ என்று கூறிய மில்டனின் கூற்று பிரசித்தமானது.
மதம் அல்லது இனத்தின் காரணமாக ஏற்படும் காழ்ப்புணர்ச்சி என்பது உலகில் எல்லா நாடுகளிலும் தொடர்ந்து காணும் வரலாற்றுச் செய்தி.
இந்தியாவில் மதத்தின் காரணமாக ஏற்படும் வேறுபாட்டுச் சண்டைகள் அதீதத் தோற்றப் பொலிவுடன் தெய்வீகப் புனிதத்தைப் பெற்று விடுவது
இயற்கை. திருஞானசம்பந்தருக்கும், சமணருக்குமிடையே நிகழ்ந்த புனல்வாதத்தைச் சான்றாக க் கூறலாம். சமணர்கள் எழுதியவை அனைத்தும், மதுரையில் வைகையாற்றில் ,சம்பந்தர் இயற்றிய பாக்கள் போல், எதிர்க்கரை அடைய முடியாமல், மூழ்கிவிட்டன. இது ஒரு வகைக் குறியீடு.சமணர் நூல்கள், அர்சாங்க ஆதரவுடன், வைகையாற்றில் மூழ்கடிக்கப் பட்டிருக்கலாம்.
பிரிட்டனில், ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய ‘உலிஸிஸ்’ ‘ஆபாசம்’ என்ற காரணத்தினால் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. 1933ல், தடை உத்தரவை நீக்கிய நீதிபதி கூறினார் ;” ஆபாசம் என்பது, படிக்கின்றவர்களின் மனத்தில் இருக்கிறதே தவிர நூலில் இல்லை அரசாங்க ஆணையை அளவுகோலாக க் கொண்டால், பைபிளையும் தடை செய்ய வேண்டியிருக்கும்’.
நூல்களைத் தடை செய்வதென்பது, இந்தியாவில் காலனி ஆட்சிக்குப் பிறகுதான் வந்திருப்பதா த் தோன்றுகிறது. தமிழில், ஆங்கில அரசாங்கம் அரசியல் காரணங்களுக்காக, மகாகவி பாரதியின் சில பாடல்களையும், ‘ஆறில் ஒரு பங்கு’ என்ற நூலையும் தடை செய்தது. இது பற்றி, லண்டனில், பிரிட்டிஷ் பார்லிமெண்டிலும் கேள்வி எழுந்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவில், போன நூற்றாண்டு அறுபதுகளின் தொடக்கத் தில் ‘ ரொனால்ட் ஷெகல் என்கிற தென்னாப்பிரிக்க க் கம்யூனிஸ்ட் ஒருவர் எழுதிய ‘ A crisis in India’ என்ற நூல் தடை செய்யப் பட்டது காரணம், நம் பார்லிமெண்டில் அந்த நூலைக் கடுமையாக விமர்சித்தார்கள்.
’இந்தியர்களுக்கு, அவரவர் வீடுகள்தாம் அவர்களுடைய தேசம், வீட்டுக்கு வெளியே வந்தால்,அது அந்நிய நாடு. வீதி அவர்களுக்குச் சொந்தமில்லை. குப்பையைக் கொட்டுவார்கள். எச்சில் இலையை விட்டெறிவார்கள்.. ’ என்று அவர் எழுதியிருந்தார். ’அகம் பிரும்மாஸ்மி’ என்பதால், இந்தியர்கள் பொதுவாகத் தங்கள் தங்கள் மோட்சத்தை நாடினார்களேயன்றி, அவர்களுக்குச் சமூக அக்கறை கிடையாது. பௌத்த மதம் இதைத்தான் எதிர்த்தது’ என்று அவர் எழுதியிருந்தார். நேருவுக்கு இந்த நூல் பிடித்திருந்தாலும், பார்லிமெண்ட் கூச்சலுக்கு அவர் அடி பணிந்தார்
சல்மான் ருஷ்டி எழுதிய ‘Satanaic verses’ என்ற நூலும், பார்லிமெண்ட்
கூச்சலினால்தான் தடை செய்யப்பட்டது. அதை மிகவும் வன்மையாக க் கண்டித்து, தடை செய்யக் கோரிய ஷாபுதீன் அந்த நூலைத் தாம் பார்த்த து கிடையாது என்று பின்னால் ஒப்புக் கொண்டார்.
சர்வாதிகார ஆட்சியில், சுதந்திரமாகச் சிந்தித் து ஒருவரால் அபிப்பிராயம் சொல்ல முடியவில்லை என்பதைக் காட்டிலும், மிருகபலப் பெரும்பான்மையராக இருக்கும் ஜனக் கூட்ட ஆட்சியில்(mobocracy) வெளிப்படையாக ஒருவரால் தன் கருத்தைக் கூற முடியவில்லை என்ற சூழ்நிலை இன்னும் அபாயகரமானது. நம் நாட்டில் அத்தகையச் சுழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் படித்தவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஜூலியஸ் ஸீஸரி’ல் ஒரு காட்சி. ஸீஸரைச் சதிகாரர்கள் கொன்று விடுகிறார்கள். அவர்களில் ஒருவன் பெயர் சின்னா.
அதே பெயரில் ரோமில் ஒரு கவிஞன் இருக்கிறான். துரதிரிஷ்டவசமாக அவன், மார்க் ஆண்டனி ஜனத்திரளைச் சதிகார ர் களுக்கு எதிராக தன் நா வன்மையால் கிளப்பி விடும்போது, அந்த இடத்துக்கு வருகின்றான்.
கூட்டத்தில் ஒருவன் கத்துகிறான்: ‘அதோ வருகிறான், சின்னா”
ஜனக் கூட்டம் அவனை நோக்கிப் பாய்கிறது.
சின்னா பரிதாபமாகக் கதறுகின்றான்:’ நான் சின்னா என்கிற கவிஞன்’
கூட்டத்தில் ஒருவன் கத்துகின்றான்:’ அவனுடைய மோசமான கவிதைகளுக்காக அவனைக் கிழித்து எறியுங்கள்’
இதை இலக்கிய விமர்சனமாகவும் வைத்துக் கொள்ளலாம், அல்லது mobocracyயின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம்.
சங்க காலப் பாடல்களில் புறப்பாடல்கள் அநேகமாக இரவலர்களையும், புரவலர்களையும் பற்றித்தான். ஆகவே, இரவலர்கள் என்றதும், இரவலர்களாக இருக்கும் புலவர்கள், புரவலராகிய அரசர்களைப் பரிசில் பெறுவதற்காகப் புகழ்ந்து பாடித்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமில்லை. புறப் பாடல்களை நுணுக்கமாகப் படிக்கும்போது, பல புலவர்கள், அக்காலத்து அரசர்கள் உவகையுடன் ஈடுபட்டிருந்த போர்ச் செயல்களைக் காஞ்சித் திணையில் நயமாக க் கண்டித்திருப்பதும்
புலப்படும். காஞ்சித் திணை என்றால், வாழ்க்கையின் நிலையாமைக் கூறி, அரசனுக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை நுட்ப மாகக் கூறுதல்.இதுவும் ஒரு வகையில் பார்க்கப் போனால்,கவிஞன் தன் கருத்துரிமையைத் திறம்படப் பயன்படுத்துகின்றான் என்றுதான் அர்த்தம்.
வெள்ளைக்குடிநாகனார் என்ற புலவர், கிள்ளிவளவன் என்ற அரசனிடம் சொல்லுகின்றார்,’ உன்னுடைய வெண்கொற்றக் குடை உன் மீது வெய்யில் படாமல் காப்பாற்றுவதற்காக அன்று. உன் குடிமக்களைக் கொடுமை என்ற வெய்யிலினின்றும் காப்பாற்றுவதற்காக, நினைவு வைத்துக் கொள்.’
அந்த வரி, இந்த வரி என்று ஆள்பவன் மக்களிடமிருந்து ஏராளமான .வரி வசூலித்தால் அவன் அரசன் அல்லன், வழிப்பறிக் கொள்ளைக் காரன் என்கிறார் திருவள்ளுவர்.
‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்ரான் இரவு’.
சர்வாதிகரம் செய்து ஆள்பவனை அழிக்கும் ஆற்றலுடையது குடிமக்கள் சிந்தும் கண்ணீர் என்று இன்னோர் இடத்தில் கூறியிருக்கிறார்.
படைப்பாளிகளின் கடமை ஆள்பவர்கள் செய்யும் தவறுகளை இடித்துரைத்தல். ஆகவே ஆள்பவர்கள் படைப்பவர்களின் பகையைக் கொள்ளக் கூடாது.
‘வில்லேர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை’
என்கிறது குறள்.

நன்றி ‘தி இந்து’ 12-06-17

Advertisements

§ One Response to சொல்லேர் உழவர் பகை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading சொல்லேர் உழவர் பகை at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: