காஷ்மீர் பிரச்னை

July 7, 2017 § 1 Comment


நான் 1989ல் காஷ்மீர் சென்றிருந்தேன். சாகித்திய அகதெமி, சங்கீத் நாடக் அகதெம, லலித் கலா அகதெமி, தேசிய நாடகப் பள்ளி போன்ற கலை நிறுவன்ங்கள் செயல்படுகள் குறித்து ஆய்வதற்கென்று மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் உயர்மட்டக் குழுவில் நான் ஓர் அங்கத்தின்ன்.இந்திராகாந்த்திக்கு முன்பு பிரதம ஆலோசகராக இருந்த பி.என்.ஹக்ஸர் இக்குழுவின் தலைவர்.. சிறந்த அறிஞர். எல்லாத் துறைகளிலும் கற்றுத் துறை போகிய வல்லுநர். அவர் அரசியல் சார்புகளைப் பிடிக்காதவர்களும் அவரிடம் அவர் அறிவுத் தெளிவுக்காக நட்புப் பாராட்டினார்கள்
எங்கள் பணியை ஒட்டி நாங்கள் இந்திய மாநிலங்களின் எல்லாத்தலைநகர்களுக்கும் சென்று கலைத்துறையச் சார்ந்த அனைவரையும் சந்திப்பது என்பது ஏற்பாடு. ஸ்ரீநகருக்கு ஜூலை 18ம் தேதி போவதாக இருந்தோம். காஷ்மீர் அரசாங்கம் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தது. திடீரென்று சில எதிர்பாராத காரணங்களால்,, பயணம் ஒரு நாள் ஒத்திப் போடப் பட்டது.
நாங்கள் ஜூலை 19ல் ஸ்ரீநகர் சென்றடைந்ததும், அரசாங்க அதிகார் ஒருவர் விமான நிலையத்தில் எங்களைச் சந்தித்து, நாங்கள் தங்குவதற்கான இடத்தை மாற்றியிருப்பதாகவும், கலஞர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நிரல் இரண்டு நாட்கள் கழித்துத் துவங்கும் என்றார்.காரணம், நாங்கள் முதலில் தங்குவதாக இருந்த கட்டடத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. காரணம், அங்கு ஹக்ஸர் தங்க இருக்கிறார் என்ற செய்தி. ஹக்ஸர் காஷ்மீரைச் சேர்ந்தவர். இந்திரகாந்தியின் பிரதம ஆலோசகராக இருந்தவர்.அவரைக் காஷ்மீர் விடுதலைக்கு எதிரியாக க் கண்டார்கள் காஷ்மீர் போராளிகள்.
ஹக்ஸரும் காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவும் நெருங்கிய நண்பர்கள். ஆகவே அவர் முதலமைச்சர் இல்லத்தில் தங்குவார் என்பது ஏற்பாடு.
ஹக்ஸர் சொன்னார்;’ இந்தச் சூழ்நிலையில் கலாசாரப் பிரச்னைகள் அவ்வளவு முக்கியமில்லை. நாளைக்கே நாங்கள் தில்லி திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். நானும் இவர்களுடனேயே தங்குகிறேன். முதலமைச்சரைச் சந்திக்கிறேன்.’
‘முதலமைச்சர் ஊரில் இல்லை. அவர் இல்லத்தில் நீங்கள் தங்க ஏற்பாடு செய்யச் சொன்னார். பாதுகாப்பாக இருக்கும்.’
‘இவர்களுக்குப் பாதுகாப்பு அவ்வளவு முக்கியமில்லையா?’
‘நாங்கள் இவர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கும் இடமும் பாதுகாப்பான இடம் தான். தீவீரவாதிகளின் இலக்கு நீங்களாக இருக்கலாம் என்ற ஒரு சந்தேகம்’ என்றார் அந்த அதிகாரி.
ஹக்ஸரும் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இட்த்திலேயே தங்கினார்.
காலைச் சிற்றுண்டி முடிந்ததும், இன்னொரு அங்கத்தினராகிய நண்பர் ஓவியர் குலாம் ஷேக்கும் நாங்கள் தங்கியிருந்த இட்ததை விட்டு வெளியே வந்தோம். வாசலில் நின்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பயங்கர மீசையுடன் இருந்த காவலரொருவர் ‘வெளியே போவது அவ்வளவு உசிதமன்று’ என்றார் மென்மையானப் புன்னகையுடன். அந்தப் புன்னகை அந்த மீசையுடன் பொருந்தவில்லை.
‘நாங்கள் எங்கும் போகவில்லை. காலாற பத்து நிமிஷங்கள் நடந்துவிட்டு வருகிறோம்’ என்றார் ஷேக் உர்துவில்.
காவலர் சிறிது நேரம் யோசித்துவிட்டுத் தலையசைத்தார்.
தெரு கலகலப்பாக இருந்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘இதையா கலவரப் பிரதேசம் என்கிறார்கள்?’ என்று நான் குலாம் ஷேக்கை கேட்டேன்.
‘காஷ்மீர் இந்துக்களும் சரி, முஸ்லீம்களும் சரி, இயல்பாகவே அமைதியானவர்கள். 1947க்கு முன் கலாசார ரீதியாக மிகவும் ஒன்றுபட்ட இனம் காஷ்மீரிகள். காஷ்மீரி பண்டிட்களும் மாமிசத்தை ரசித்துச் சாப்பிடுகிறவர்கள். காஷ்மீர் உணவு இரண்டு மதத்தினருக்கும் பொதுவான் உணவு. பண்டிட்கள் பசு மாமிசம் சாப்பிட மாட்டார்கள், அவ்வளவுதான்
என்றார் ஷேக்.
இதையேதான் என் தில்லி நண்பர் ஹரீஷ் சந்திர ஷாலி, பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருக்கிறார். அவர் ஒரு காஷ்மீர் பண்டிட். பள்ளி ஆசிரியர்.
‘இந்தியா, பாகிஸ்தான் சுதந்தரந்தான், காஷ்மீர் இந்து-முஸ்லீம் பிளவுக்குக் காரணம். 1947ல், பாகிஸ்தான் படை எங்கள் பிராந்தியத்தில்.ஏன் நுழைய வேண்டும்? ‘எங்களைப் பாகிஸ்தானிடமிருந்து காப்பாற்றுவதாகச் சொல்லி வந்த இந்தியப் படைகள் இங்கே நிரந்தரமாகத் தங்கி விட வேண்டும்? ‘ என்று அவர் தம் சரளமான ஆங்கிலத்தில் கோபமாக பேசுவது என் மனக் கண் முன் நின்றது.
‘ காஷ்மீர் சுயாட்சிக்கு வாக்குறுதி தந்துவிட்டு, அதை நினைவுறுத்திய ஷேக் அப்துல்லாவைச் நேரு சிறையில் அடைத்தது போன்ற முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது.’ என்றேன் நான் குலாம் ஷேக்கிடம்.
‘காஷ்மீரை விட்டு விட யாருக்கு மனமிருக்கும்? காஷ்மீர் நல்ல வேளை அமெரிக்கா அருகில் இல்லை. இருந்திருந்தால், ஹவாய் தீவுகளைப் போல் விலை பேசி வாங்கியிருக்கும்’ என்றார் அவர்.
1989க்கு பிறகு 28 ஆண்டுகளாகி விட்டன.
இயல்பாகவே இந்துக்களுடன் உறவு பாராட்டிச் சாத்வீகமாக இருந்த காஷ்மீர் முஸ்லீம்களை இன்றிருக்கும் நிலைக்கு ஆக்கியவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை கூற முடியுமா?
விடை தெரிந்தால் பிரச்னை தீர்ந்து விடும்!
(நன்றி, கடைசிப் பக்கம் ‘கணையாழி’)

Advertisements

§ One Response to காஷ்மீர் பிரச்னை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading காஷ்மீர் பிரச்னை at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: