‘நாளென ஒன்று போல் காட்டி’

June 14, 2017 § 2 Comments


டெல்லியில் நான் இருந்த போது, ஒரு மூத்த பத்திரிகை நிருபரை என் நண்பர் அறிமுகம் செய்து வைத்தார். நிருபர் பெயர் கிஷன் சபர்வால். எல்லைப் புற மாநிலத்தைச் சேர்ந்தவர். நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர். ஒரு ஜப்பானிய செய்தி நிறுவனத்துக்கு நிருபராக இருந்தார்.
நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணி புரிந்தவர் என்று நண்பர் சொன்னார்.
அவர் வயதை ஊகிக்க முடியவில்லை. அறுபதுமிருக்கலாம், எண்பதுமிருக்கலாம்.
‘ எனக்கு என்ன வயது இருக்கும் என்று யோஜிக்கின்றீர்களா/’ என்று கேட்டார் சபர்வால் சிரித்துக் கொண்டே.
‘ உங்களுக்கு ‘டெலிபதி’ தெரியுமா? ‘ என்றேன் நான்.
‘ என்னை முதலில் பார்க்கும் எல்லாருடைய மனத்தில் எழும் முதல் கேள்வி இதுதான். என் வயது ஐந்து. ‘ என்றார் புன்னகையுடன்.
நான் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன்.
‘ ருடால்ஃப் எஹ்ரன்பர்க் படித்திருக்கிறிர்களா?
‘இல்லை’.
சபர்வால் ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.
‘ அவர் ஒரு விஞ்ஞானி. அவர் கருத்தின்படி, ஒருவன் இன்னும் எத்தனை ஆண்டுகள் மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல், பணியாற்ற முடியும் என்பதை வைத்துதான் அவன் வயதைக் கணக்கிட வேண்டும். என்னால் இன்னும் ஐந்தாண்டுகள் என்னையே நம்பிப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதனால்தான், ஐந்து வயது என்றேன். அந்த அளவுக்கு என்னிடம் இன்னும் ஐந்தாண்டு ஆற்றல் எஞ்சியிருக்கிறது” என்றார் சபர்வால்.
அப்பொழுது எனக்கு அமெரிக்க உளவியல் அறிஞர் கார்ல் யூங் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது.. ஒவ்வொருவருக்குள்ளும் எந்த அளவுக்கு அவரால் சாதிக்க இயலும் என்ற துலாக்கோல் இருக்கிறது. அது தன் எல்லையை அடைந்த நிலையில் பிறகு இயக்கமே இருக்காது. அவர் தம் ஆற்றல்கள் முழுவதையும் பயன்படுத்தி விட்டார் என்று அர்த்தம்.அப்பொழுதுதான் ஆற்றலின் அல்லது அவர் உடலின் மரணம் சம்பவிக்கின்றது.
ஜோசஃப் தியோடர் கான்ராட் கொர்ஸெனியோஸ்கி என்ற எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர்தாம் பிரசித்திப்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜோஸஃப் கான்ராட். போலந்தைச் சேர்ந்தவர். இருபத்தொன்று வயது வரை அவருக்கு ஆங்கிலம் சுத்தமாகவே தெரியாது. பிரிட்டிஷ் கப்பல் துறையைச் சேர்ந்து உலகம் சுற்றியவர். முப்பத்தைந்து வயதில் தம் முதல் நாவலை ஆங்கிலத்தில் எழுதியவர். பிறகு ‘ஹார்ட் அஃப் டார்க்னெஸ்’, ‘லார்ட் ஜிம்’ போன்ற அற்புதமான நவீனங்களை அவர் எழுதினார். ‘நவீனத்வத்தின் பிதாமகர்’ என்று அவரைக் கூறுவார்கள். .அவர் இறந்துபோவதற்கு முன் பதின்மூன்று ஆண்டுகள் அவர் எழுதவேயில்லை. 67 வயதில் இறந்தார்.
அவர் இறந்து போவதற்குச் சில மாதங்களுக்கு முன் திடீரென்று சுத்தமாக ஆங்கில மொழியை மறந்து, போலிஷ் மொழியில்தான் பேசத்தொடங்கி விட்டாரம். அவருக்கே தாம் தம் தாய்மொழியில்தான் பேசுகிறோம் என்ற நினைவில்லையாம்! அதாவது, அவர் சிருஷ்டி ஆற்றலின் முழு எல்லையும் சாத்தியமான பிறகு, அவருக்குள்ளிருந்த படைப்பாளியின் மரணம் சம்பவித்திருக்கின்றது! ஆங்கிலமும் மறந்து விட்டது! இறுதிக் காலங்களில் எழுதவும் முடியவில்லை!
இந்தப் பின்னணியில்தான் சில மேதைகள் இளைமையிலேயே இறந்து போவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆதிசங்கரர் விவேகானந்தர், பாரதியார், கணித மேதை ராமாநுஜன்,ஷெல்லி. கீட்ஸ்.. இவர்கள் அனைவரும் சாதனையின் எல்லையை அடைந்த நிலையில்தான் இறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது!
சபர்வால், அவர் சொன்னபடி, ஐந்தாண்டுகளும், சில மாதங்கள் கழித்து, இறந்த போதுதான், அவர் குறிப்பிட்ட ருடால்ஃப் எஹ்ரன்பர்க் என் நினைவுக்கு வந்தார். சபர்வால் இறந்த போது, அவர் காலெண்டர் வயது தொண்ணூறு.
மரணத்தைக் கண்டு அஞ்சக் கூடாது என்பதற்காகத்தான் ருடால்ஃப் அப்படிச் சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது.’காலா என் காலருகே வாடா’ என்று சொன்னவர் பாரதி. முப்பதொன்பதாம் வயதில் இறந்தார்!
நம் நாட்டைக் காட்டிலும், மேல் நாடுகளில் மரணத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கின்றார்கள். காரணம், நம் நாட்டைக் காட்டிலும் அங்கு மனித உயிரின் விலை அதிகம். இந்தியாவில் இப்பொழுது பசுவின் உயிர் விலை, மனித உயிர் விலையைவிட அதிகம்!
கனடா மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில், ‘ மரணமும், இறந்து கொண்டிருத்தலும்’ ( Death and dying) என்ற ஒரு துறை இருந்தது. அந்த த் துறை மாணவர்கள் அனைவரும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். நான் அங்குப் போயிருந்தபோது, ஒரு வயதான பெண்மணி என்னைக் கேட்டார்; ‘ இந்தியாவில் நீங்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்ளுகறீர்கள்?’
நான் சொன்னேன்;’ இந்தியாவில் நாங்கள் மரணத்தை ஒரு முற்றுப் புள்ளியாக க் கருதுவதில்லை. எங்களுக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அக்குழந்தையை அதன் பாலினத்துக் கேற்ப இறந்து போன தாத்தாவோ பாட்டியோ மீண்டும் பிறந்திருக்கிறார் என்று சொல்வது வழக்கம். அதனால்தான் சாவு ஓர் அச்சுறுத்தும் செய்தியாக எங்களுக்கு இருப்பதில்லை’.
அப்பொழுது ஒரு வயதான கிழவர் சொன்னார்;’ நான் வாரணாசியைப் பற்றி ஓர் ஆவணப் படம் பார்த்தேன். அதில் கங்கை ஆற்றில் பாதி எரிந்ததும், பாதி எரியாததுமான உடல்களைக் கங்கை ஆற்றில் தூக்கி எறிகிறார்கள்.. இதனால், சாவைக் கண்டு நீங்கள் அஞ்சவில்லை என்பது புரிகிறது. ஆனால் ஆற்றை அசுத்தப் படுத்த வேண்டுமென்பது அவசியந்தானா?’
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது தயங்கினேன்.
என் சங்கடத்தைப் புரிந்து கொண்டவர்போல், இன்னொருவர் கேட்டார்:’ பிறப்பதும் அபத்தம், இறப்பதும் அபத்தம் என்கிறாரே சார்த்ரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’
’இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கவிஞர் ஒருவர் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.’ என்றேன் நான்.
‘என்ன பேசியிருக்கிறார்?’
‘ காலம் என்பது ஒரு கற்பனை. அதை ஒரு மாபெரும் வாளாக நினைத்துப் பாருங்கள். அந்த வாளில், மனித உயிர் ஒவ்வொன்றும், ஒரு நாள் கழிந்தது என்ற பாவனையில் தொடர்ந்து அறுபட்டுக் கொண்டே போகின்றது. பாவனையாக இருந்தாலும், இந்த வாழ்நாள் எல்லைக்குள் தம் ஆற்றலைச் செயல்படுத்தியாக வேண்டுமென்று, எல்லாவற்றையும் உணர்கின்றவர்கள் முயல்கிறார்கள். அப்படி உணர்கின்றவர்களும் குறைவு என்பதால், ‘அப்படி உணர்கின்றவர்கள் இருப்பார்களானால்’ என்கிறார் கவிஞர். அபத்தத் தை முறியடிக்கும் வழியும் இதுதான்’ என்று விளக்கமாகச் சொன்னேன்.
‘அந்தக் கவிதையை உங்கள் மொழியில் சொல்லுங்கள்’ என்று கேட்டார் ஒரு பெண்மணி.
‘நாளென வொன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்’
என்று குறளைச் சொன்னேன்.
அவர்கள் குறளை ரசித்திருக்கக் கூடுமென்று எனக்குத் தோன்றியது.

நன்றி .தி.இந்து 07-06-’17

Advertisements

§ 2 Responses to ‘நாளென ஒன்று போல் காட்டி’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘நாளென ஒன்று போல் காட்டி’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: