பல்லக்குத் தூக்கிகள்

May 22, 2017 § Leave a comment


திருக்குறளும், பகவத் கீதையும் எல்லாருடைய தலைக்கும் பொருந்தும் குல்லாய் என்றாகிவிட்டது ஒவ்வொருவரும் அவர் கொண்டிருக்கும் கருத்துக்கிசைய இந்த இரண்டு மகத்தான நூல்களுக்கும் விளக்கம் கூறி வருகின்றனர். இது சரியா,தப்பா என்று நான் ஆராய முற்பலவில்லை.
இறைவனின் அருளிச் செயல் என்பதால், கீதையை பகவானே பார்த்துக் கொள்வான் என்பது என் நம்பிக்கை.
திருக்குறளி.ன் இலக்கியத் தரத்துக்கு இணையாக இருக்கும் பரிமேலழகர் உரைதான் என் கவலை. பரிமேலழகர் முற்போக்கு வாதியா, பிற்போக்கு வாதியா என்பதுதான் குறளுக்கு உரை எழுதி வரும் தற்கால உரையாசிரிய மேதாவிகளின் விவாதம். ‘குறுகத் தரித்த குறளுக்கு’ ஈடாக, சொற்சிக்கனத்தைக் கையாண்டு ஓர் அற்புதமான இலக்கண உரையை நமக்குத் தந்திருக்கும் பரிமேலழகரின் சிந்தனையை அவர் வாழ்ந்த காலத்துக் கேற்ப நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நானும் இப்பொழுது 2017ல், பரிமேலழகர் கருத்துக்கள் பலவற்றினின்றும் மாறுபடுகின்றேன். ஆனால், அதே சமயத்தில், பரிமேலழகரால் அவர் வாழ்ந்த காலத்தில் அப்படித்தான் அவரால் குறளுக்குப் பொருள் கண்டிருக்க முடியும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
பரிமேலழகர் பொது சகாப்தம் 14ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் காலத்திய சமூக மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் அவர் குறளுக்கு உரை எழுதியிருக்க முடியும்.
குறிப்பாக, ஒரு குறள்.
`அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
பரிமேலழகர் உரை: ‘ அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையால் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவாணோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்’.
பல்லக்கில் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். அந்தப் பல்லக்கை இன்னொருவன் சுமந்து செல்கிறான். இது காட்சி அளவை. இந்தக் காட்சி அளவைக் கொண்டு, பல்லக்கில் அமர்ந்திருப்பவன் முன் பிறவியில் அறம் ஆற்றியிருப்பான் என்றும், சுமப்பவன் தீவினை புரிந்திருப்பானென்றும் புலப்படுமென்கிறார் பரிமேலழகர். .
இந்தக் கருத்து தற்காலத்துக்கு ஒவ்வாது, உண்மைதான். ஆனால், வள்ளுவர் இதற்கு முந்திய குறளில் என்ன சொல்கின்றாரென்று பார்க்க வேண்டும்.
‘அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
‘அறம் செய்வதை ஒத்திப் போடக் கூடாது. அன்றே செய்ய வேண்டும். உயிர் உடம்பைப் பிரிந்த பிறகும், அந்த உயிர் ,தான் செய்த அறத்தின் பயனை இன்னொரு உடம்பை ஏற்றபிறகும் கொண்டு செல்லும்’
அதனால்தான் முன் பிறவியில் செய்த அறத்தின் பயனால் அந்த உயிர் மறு பிறவியில், இன்னொரு உடம்பை ஏற்ற நிலையில், பல்லக்கில் உட்கார்ந்திருக்கிறது. தீவினையின் பயனைச் சுமக்கும் உயிரின் அப்பிறவியில் ஏற்ற உடம்பு பல்லக்கைத் தூக்கிச் செல்கிறது.
மறு பிறவி உண்டு என்று பெரும்பான்மையோர் நம்பி வtந்த காலத்தில், ஒவ்வொருவரும் அவர் வாழும் அப்பிறவியிலேயே சமூகத்துக்குத் தம் கடமையாக, நல்லதையே செய்ய வேண்டும்.என்பதை வற்புறுத்த இவ்வாறு சொல்லப்படுகின்றது. அப்படிச் செய்தால், பல்லக்கில் உட்கார்ந்திருப்பவன்,அதனைச் சுமப்பவன் என்ற ஏற்றத்தாழ்வுகளே இருக்கவியலாது என்பது தொனிப்பொருள். ஆகவே வள்ளுவர் கருத்தை ஒட்டிதான் பரிமேலழகர் உரை எழுதுகிறாரேயன்றித் தம் கருத்தாக எதையும் சொல்வதாகத் தெரியவில்லை.
‘சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்ற காட்சி அளவைக் கொண்டு, அறத்தின் பயன் இதுதான் என்று கொள்ளாதீர்கள்’ என்று தற்காலத்துக்கேற்ப ப் பொருள் கொண்டால், இது வெறும் எதிர்மறைக் கூற்றாக அமைகின்றதே தவிர, வேறு எதைக் கொண்டு அறத்தின் பயனை அறிய வேண்டுமென்ற கேள்விக்கு விடையில்லை. இதற்கு முந்திய குறளுடனும் பொருள் பொருத்தம் இல்லாமல் முரண்படுகின்றது.
நான் புதிய உரை எழுதக் கூடாது என்று சொல்ல வில்லை. ஆனால், பரிமேலழகர் உரையைச் சரி, தப்பு என்று நம் காலத்திய மதிப்பீடுகளின் அடிப்படையில் எடையிடுவது சரியில்லை என்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading பல்லக்குத் தூக்கிகள் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: