திருக்கோளுரைவிட்டுப் போவார் உண்டோ?

May 11, 2017 § Leave a comment


தலவிக்கும் தலைவனுக்கும் ஒருவரையொருவர் கண்டதுமே காதல் உண்டாகிறது. தலைவி அவனைத் தோழியின் உதவியுடன் தன் தாய்க்குத் தெரியாமல் அடிக்கடிச் சந்தித்துப் பழகுகிறாள். இது பற்றிய அகத்துறைப் பாடல்கள் சங்க நூல்களில் ‘களவியல்’ என்படும்.
களவு கல்யாணத்தில் முடிந்தாக வேண்டும். அதாவது ,அதே தலைவிக்கும் தலைவனுக்குமிடையேதான் கல்யாணம். திருமணத்துக்குப் பிறகு பயின்று வரும் பாடல்கள் ‘கற்பி ‘யலில் அடங்கும்.. இது சங்க மரபு.
திருமணம் நடைபெறுவதற்காக, தலைவிக்கும் தலைவனுக்குமிடையுள்ள காதலைப் பற்றி தலைவியின் தாயிடம் தோழி கூறுவாள். இதற்கு ‘அறத்தொடு நிற்றல்’ என்று பெயர்.
சிற்சில சமயங்களில் தலைவியின் தாயும் தமரும்(சுற்றத்தார்) இத் திருமணத்துக்கு உடன்படாமல் போகலாம். அப்பொழுது, காதலர்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் போய்விடுவார்கள்..இதற்கு ’உடன்போக்கு’ என்று பெயர்.
ஆழ்வார்ப் பாடல்களில், நாயகி, சங்கப்பாடல்களின் தலைவியை விஞ்சி விடுகிறாள். அவளே நாயகனைத் தேடிப் போய்விடுகிறாள்., அவளுடைய தாய் தன் மகள் எங்கே போயிருக்க க்கூடும் என்று உணர்ந்து அவளைத் தேடிகொண்டு. பின் செல்லுகிறாள்.
தாய் கூறுகிறாள்;‘
என் மகள் எங்கே போயிருப்பாள் என்று எனக்கு நிச்சியாமாகத் தெரியும். திருக்கோளுருக்குத்தான்.. அங்குதான் அவள் தலைவன் இருக்கிறான். அவள் எதுவுமே தெரியாத அறியாப் பெண்ணாக வளர்ந்திருந்தாலும், திருக்கோளூர் எங்கே என்று விசாரித்துக் கொண்டே போயிருப்பாள். அவள் என்ன அரற்றிக்கொண்டு எப்படிப் போயிருப்பாள் என்றும் எனக்குத் தெரியும். ‘ உண்ணும் சோறும், பருகு நீரும், தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன் என்று சொல்லிக் கொண்டே கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க, அவனுடைய கல்யாண குணங்களையும், வளத்தால் மிக்கவனான கண்ணனின் திய்வதேசத்தையும் கேட்டுக் கொண்டே போயிருப்பாள்> இது உறுதி.’’
‘உண்ணும்சோறு பருகு நீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணனெம் பெருமான் என்றேன்றே கண்கள் நீர்மல்கி
மண்ணீனுள் அவன்சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே’’
ஈடு சொல்கிறது:
’’இங்கே இருக்கும்போது, சோறு,, நீர், வெற்றிலையெல்லாம் தரித்தவளுக்கு, அங்கு (திருக்கோளூர்) போனால், அங்கிருக்கும் அவள் தலைவனே (கண்ணன்) அவை எல்லாமுமாக இருக்கிறான். அவனுடன் இருந்தாலே இவை அனைத்தும் தரித்ததாக அவளுக்கு அமையும்.இருப்பதற்கு ஆதாரம் (தாரகம்) சோறு. . போஷிப்பதற்கு (போஷிகம்) நீர் அவசியமானது. இவை இருந்தால் மட்டும் போதுமா? போகத்துக்கு (போக்கியம், அதாவது சுகாநுபவம்) வெற்றிலை. இவை எல்லாமே கண்ணன் என்றால் என்ன கவலை? ’
‘ சோறு, நீர், வெற்றிலை என்றால் போதாதா? ‘உண்ணும் வெற்றிலை, பருகு நீர், தின்னும் வெற்றிலை’ என்று எதற்காகச்
சொல்ல வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார் உரையாசிரியர். இதற்கு விடையாக க் குறளை மேற்கோள் காட்டுகிறார், ‘வேட்டபொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்’’
(’பூவினை அணிந்த தழைந்த கூந்தலை உடைவளுடைய என் காதலியின் தோள்கள், மிக இனியவாய பொருள்களைப் பெறாது,, அவற்றின்மேல் விருப்பம் ஏற்படும் போதெல்லாம்,, அவை தாமாகவே வந்து இன்பத்தைத் தருவது போல், எனக்கு இன்பத்தைத்தரும்)
தலைவனின் நினைவு அவனைப் பற்றி நினைக்காத நிலையிலும் தானாகவே வந்து இன்பத்தைத் தந்து கொண்டே இருக்கும். ஆகவே அவனைப் பற்றி நினைக்காத நிலை என்று எதுவும் சாத்தியமில்லை
‘உண்ணும் சோறு’ ‘பருகு நீர்’, ’’தின்னும் வெற்றிலை’ என்று நிகழ்காலத்தில் ஏன் சொல்லவேண்டும்?
தாரகமாகியக் கண்ணன், தொடர்ந்து உண்டு கொண்டே இருந்தாலும் அவன் அலுக்காத வற்றாத, சோறு,. மற்றையது ( சாப்பிடும் உணவு) உண்டு சமையும் ( தீர்ந்துவிடும்) சோறு. ஆனால் கண்ணன் என்கிற உணவை, நீரை, வெற்றிலையைத் தொடர்ந்து அநுபவித்துக் கொண்டே இருக்கலாம். ஆகவே தான் நிகழ்காலத்தில் சொல்லுகிறார். ‘ அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமே ‘ ”கொள்ள மாளா இன்ப வெள்ளம்’’) (திருவாய்மொழி) என்பதுபோல்
’ என்று என்றே’. என்று ஏன் இரண்டு தடவை சொல்ல வேண்டும்? இதைத்தவிர. தாரகமாக வேறொன்று இருந்தால் சொல்லலாம். அதனால்தான் இதையே மாறாமல் (திரும்ப த் திரும்ப) சொல்ல வேண்டியிருக்கிறது.‘கண்கள் நீர்மல்கி- இவர்களுடைய (தாய்,,சூற்றத்தார்) உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை, எல்லாம் தலைவியின் முகத்தில் காணும் ஆனந்தக் கண்ணீர். தலைவனைச் சேரப் போவதினால் உண்டாகும் ஆனந்தக் கண்ணீர். அவள் தன் ஜீவனுத்துக்காக ( அதாவது அவனைக் காண்பதால் தரிக்கும் ஜீவனம்) எங்கள் ஜீவனத்தை ( ஆனந்தக் கண்ணீருடன் இருக்கும் அவள் முக தரிசனம்) அவள் கொண்டு போவதோ? (அவள் திருக்கோளூர் புறப்பட்டுச் சென்றதைக் குறிப்பிடுகிறாள் தாய் )ஒருவன் பகவத் குணங்களில் ஈடுபட்டுக் கண்ணும் கண்ணீருமாய் இருக்க அவனைக் கண்டுகொண்டிருக்கவன்றோ அடுப்பது? (அதாவது அவன் கண்களிலிருந்து வரும் ஆனந்தக் கண்ணீரே எங்களுக்கு இறை தரிசனம் என்று அர்த்தம்).
இதற்கு ஓர் ஐதிஹ்யம் எடுத்து உரைக்கிறது ஈடு, நஞ்சீயர் சொன்னராம்: ‘ பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன். அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது. ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணீருமாய் இருக்கை நினைத்திருப்பன்’’
அரையர் சொன்ன திருவாய்மொழி அந்த அளவுக்கு அவர் மனத்தை உருக்கி இருக்கிறது. சொல்லைக் காட்டிலும் வலுவான மொழி கண்ணீர். அவர் கண்களில் பெருகிய நீரே அந்த த் திருவாய்மொழியின் விளக்கம். அதைதான் நஞ்சீயர் சொல்லுகிறார்.
ஆழ்வார்கள் தமிழ்ப் பற்றினாலும், அவர்கள் வாழ்ந்த நாட்டுப் பற்றினாலும், தமிழ் நாட்டில் உள்ள ஊர்கள் அனைத்தையும் திவ்ய தேசங்களாக ஆக்கிவிட்டார்கள். பக்தி இயக்கத்துக்கு முன்னால், இந்தியாவில் புனித இடங்கள் என்று சொல்லப்படுவை 7. அவற்றில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு இடந்தான் புண்ணிய ஸ்தலமாக க் கருதப்பட்டது. அது காஞ்சி. ஆழ்வார்களின் தோற்றத்துக்குப் பிறகு திவ்ய தேசங்கள் 108 என்றாயிற்று. அவற்றில் பெரும்பான்மையாபவை தமிழ் நாட்டில்.
‘ திருக் கோவளூரைவிட்டுப் போவாருமுண்டோ/’ என்பாராம் எம்பெருமானார் (இராமாநுஜர்). அதனால்தான் ‘என் இளமான் சென்ற இடம் வேறு எந்த ஊராக இருக்க முடியும்?’ என்கிறால் தாய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading திருக்கோளுரைவிட்டுப் போவார் உண்டோ? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: