பிரதியும் உட்பிரதிகளும்

May 8, 2017 § Leave a comment


சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் திருச்சியில் ஒரு பெண்கள் கல்லூரியில் பேச ச் சென்றிருந்தேன். பேச்சு முடிந்ததும் ஒரு பெண் எழுந்து கேட்டாள்;’ நீங்கள் எழுதியிருக்கும் ‘பசி’ என்ற நாடகத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’?’
இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.
எனக்கு பிரசித்திப் பெற்ற நாடக ஆசிரியர் சாம்யுவல் பெக்கட், இந்த மாதிரி கேள்வி ஒன்றுக்குச் சொன்ன பதில் நினைவுக்கு வந்தது..
‘தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்’ என்றேன் நான்.
சிரிப்பலை.
அந்தப் பெண் நான் சொன்ன பதிலை எப்படிக் கொள்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். என் பதில் அவளை நான் கிண்டல் செய்வதாகப் பட்டிருக்குமோ என்று எனக்குத் தோன்றிற்று.
நான் சொன்னேன்:’ என் மனத்துள் எப்படித் தோன்றிற்றோ அப்படியே நான் அதை எழுதினேனே தவிர, வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்ற உந்துததினால் நான் அந்த நாடகத்தை எழுதவில்லை. நீங்கள் அதைப் படிக்கும்போது, அது என்ன சொல்ல வருகின்றது என்று நினைக்கின்றீர்களோ அதுதான் அர்த்தம்.’
‘அபத்த நாடகம்’ என்று சொல்லலாமா?’ என்றாள் இன்னொரு பெண்..
’இருக்கலாம். ஒரு நல்ல இலக்கிய படைப்புக்கு அர்த்த த் தின் ஆதிக்கமோ அல்லது அதற்கு ஏதாவது பட்டயம் கட்டித் தொங்கவிட வேண்டும் என்ற தீவிரமோ இருக்க க் கூடாது’. ‘கலைஞன் பெற்றெடுக்கிறான், விமர்சன்ப் பாதிரிகள் பெயர் சூட்டுகிறார்கள் என்பார் ஜி.கே.செஸ்டர்டன்’ என்றேன் நான்.
1937ல், பிகாஸோ, ‘குவெர்னிகா’ என்ற உலகப் புகழ் பெற்ற ஓவியம் வரைந்தார். ஜெர்மனி-இத்தாலியப் படைகள் ஸ்பெய்ன் மீது குண்டு மாரி பெய்து ஏராளமான உயிர்ச்சேதத்தை விளவித்ததை உட்கருவாக க் கொண்டது இவ்வோவியம்..
’இதில் காணும் ஒவ்வொரு பொருளும் உருவக க் குறியீடு. காளையும் குதிரையும் ஸ்பெயினின் கலாசாரப் படிமங்கள்’ என்றார்கள் விமர்சகர்கள்.
ஆனால் இந்த ஓவியம் பிரான்ஸ் நாட்டுத் தத்துவப் பிதாமகர் சாத்ரேவுக்குப் பிடிக்கவில்லை. ‘ மிகைப் படுத்தப்பட்ட விலங்கின் உருவங்கள் எந்த அளவுக்கு ஸ்பெய்ன் சர்வாதிகாரத்தை எதிர்க்கப் போகின்றது என்று எனக்குத் தெரியவில்லை’ என்றார் அவர்
‘எதிர்ப்புணர்வின் விளைவாக உருப் பெற்றது அந்த ஓவியம். அதன் அர்த்தம் எனக்குத் தெரியாது’ என்றாராம் பிகாஸோ.
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட உந்துதலில் உள்மனம் காட்டும் பன்முகப் பாதையில் செல்ல வேண்டுமே தவிர, படைப்பாளி நேர்க்கோட்டு வழியில் அர்த்தத் தின் ஆவேசத்தைச் சுமையாகச் சுமக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் அவனுக்கு இருக்க க் கூடாது என்பது அவர் வாதம்.
சிறப்பான படைப்பு எதுவாக இருந்தாலும் அதற்குள் இன்னொரு பிரதி இருக்கத்தான் செய்யும். அந்தப் பிரதியைத் தேடுவது வாசகனுடையதே தவிர அதைப் படைத்த கலைஞனுடையதன்று. நான் கூறுவது மேல்நாட்டினின்றும் இறக்குமதியான கருத்து இல்லை. நம் நாட்டு அபிநவகுப்தாவும் தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார்கள்..’த்வொனி’, உள்ளுறை’ என்று நம் இலக்கண மரபில் கூறப்படுவையெல்லாம், ஒரு வகையில் பார்க்கப்போனால், படைப்பின் உட்பிரதிகள்தாம். அவை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.
அரசியல் பாதிப்புறாத கலைப் படைப்பு என்று எதுவுமே கிடையாது. ஷேக்ஸ்பியரின் சரித்திர நாடகங்கள் அனைத்தும், அதிகாரம் என்ற ஏணியின் உச்சப் படியில் யாருக்கு இடம் என்பது பற்றித்தான். ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவல்களின் தொனிப் பொருள் ஐரிஷ் அரசியல்தான் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? அணுகுண்டு என்ற டாமகில்ஸ் கத்தி மேலே தொங்கிக் கொண்டிருந்த காலத்தில்தானே சாம்யுவல் பெக்கட்டின் அபத்த நாடகங்கள் எழுதப் பட்டன? நடப்பு, யதார்த்த உலகினின்றும் தப்பிக்க முயலும் காஃப்காவின் உலகம் ,நடப்பு உலகத்தைக் காட்டிலும் அச்சுறுத்தும் ஒரு பயங்கர சொப்பனம் போல் ஏன் இருக்க வேண்டும்
எல்லா சிறந்த புலவர்களின் படைப்புக்களும் பொறுப்பான நோக்கமின்றி சூன்யத்தில் பிறப்பதில்லை. ஆனால் அப்பொறுப்பை அவர்கள் கோஷங்களாக்கி, ஆவேசமாக கூக்குரலிடுவதில்லை. அது இலக்கியமாகாது. நல்ல படைப்புக்களின் உள்ளார்ந்த குரல்கள்தாம், அர்த்தப் பரிமாணங்களுடன் ஒரு நல்ல வாசகனுக்கு விருந்தாக அமையும்.
புறநானூற்றுச் செய்யுட்களிலேயே ஒரு குரல்தான் தனித்து ஒலிக்கின்றது.புறப்பாடல்கள் பொதுவாகப் போர் பற்றியும், அரசர்களின் வீரம், கொடைப் பண்பு ஆகியவைப் பற்றியும்,பரிசில் வேண்டுவது பற்றியும் இருக்கும்.. ஆனால் ஒரு புலவர் இவற்றில் எது பற்றியும் பாடவில்லை. , அதோடு மட்டுமல்லாமல் அவர் இயற்றியதாகச் சங்கப் பாடல்களில் இரண்டு செய்யுட்கள்தாம் காணப்படுகின்றன. ஒன்று, நற்றிணையில், மற்றது, புறநானூற்றில்.. நற்றிணைச் செய்யுள் பிரிவைப் பற்றியது, தலைவிக் கூற்று. புறநானூற்றில் வரும் செய்யுள்தான் அவர் தனிக் குரல்.
புலவர் பெயர் கணியன் பூங்குன்றனார். ‘கணியன்’ என்றால் அவர் சோதிடராகவோ அல்லது வானவியல் அறிஞராகவோ இருந்திருக்க வேண்டும். இந்தப் பாட்டின் முதல் வரி அனைவருக்கும் தெரிந்திருக் க கூடும். ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்’. உலகத்திலேயே சிறந்த பத்துப் பாடல்கள் என்றால், அவற்றில் உறுதியாக இடம் பெறக் கூடிய இப்பாடல், அத்தகுதியைப் பெற முக்கியக்காரணம் முதல் வரி மட்டுமன்று, அதைத் தொடர்ந்து வரும் வரிகள். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது எந்தமன நிலையில் பாடப்பட்டிருக் க கூடு.ம்?
பாலஸ்தீன் உருவாதற்கு முன் பாலஸ்தீனிய அகதிகளும், சிங்கள வன்முறையின்போது நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் அகதிகளும் வெளிநாடுகளில் புகலிடம்பெற்று வாழும்போது, அந்நிலையில், ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்லியிருந்தால் அதற்கு என்ன பொருள்? டொராண்டோவில் இருந்தாலும் அதை யாழ்ப்பாணமாக நினைத்துக் கொண்டால், அது யாழ்ப்பாணமாகும். அப்பொழுது டொராண்டோவிலுள்ள எல்லா இனத்து மக்களும் அவர்களுக்கு உறவினர்களாகத் தெரிவர்.
கணியன் பூங்குன்றன் வரலாற்றைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
மற்றையச் சங்கப் புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடும்போது, இவர்,zen பௌத்தத்தின் ‘குன்றேறி’ நின்று பாடுகிறார்.‘பெரியோரை வியத்தலுமிலமே, சிறியோரை இகழ்தல் அதனினுமிலமே’
இப்பாட்டின் ஒவ்வொரு வரிக்குள்ளும் உட் பிரதிகள் பல இருக்கின்றன! செவ்வியல் இலக்கியத்தின் இலக்கணமும் அதுதான்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading பிரதியும் உட்பிரதிகளும் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: