’நீயுமா ப்ரூட்டஸ்?

April 19, 2017 § Leave a commentதருண் விஜய் ‘ எங்களுக்கு .இன வெறி என்று எப்படிச் சொல்வீர்கள்? நாம் தென்னிந்தியர்களுடன் சுமுகமாக வாழவில்லையா?’ என்று சொன்னார் என்பதைக் கேட்டதும், எனக்கு உடனே ஷேக்ஸ்பியர் நாடகம் ‘ஜூலியஸ் ஸீஸர்’ நினைவுக்கு வந்தது.
ப்ரூட்டஸ் ஸீஸரின் நெருங்கிய நண்பன். தன்னைக் கொல்லத் துணிந்த சதிகாரர்களில் ப்ரூட்டஸ்ஸும் ஒருவன் என்ற றிந்ததும் ஸீஸர் அவனைக் கேட்கின்றான்; ‘நீயுமா ப்ரூட்டஸ்?’
தரு.ண், பா.ஜ.க அரசியல் வாதிகளிலே தம்மை வித்தியாசமானவராக க் காட்டிக் கொள்வதில் முனைந்தார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றார். உத்தரகாண்டில் திருவள்ளுவருக்குச் சிலை எடுத்தார். ஆனால், பாவம்,தமிழர்களின் ‘கறுப்பு’ நிறம் அவர் அடி மனத்தை நெருடிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். தமக்குதாமே அவ்வாறு நெருடவில்லை என்று நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது! சமயம் வந்ததும் சொல்லிவிட்டார்,அவ்வளவுதான்!
ஆனால் ‘நாம்’ என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார்? . சக வட இந்தியரையா? பா.ஜா.க கட்சியினரையா?
வட இந்தியர்கள் பொதுவாகத் தம்மைத் தென்னிந்தியர்களினின்றும் அந்நியப் படுத்திப் பேசுவது எனக்குப் புதிதில்லை. நான் தில்லியில் 33 ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.நான் தில்லிக்குப் போன புதிதில் குடியிருக்க வீடு பார்க்கப்போனத வீட்டுக்காரர் தம் மனைவியிடம் சொன்னார்: ‘ ‘மதராஸிகள் நம்முடைய ஆட்கள் மாதிரி இல்லை. வாடகையை ஒழுங்காக க் கொடுத்துவிடுவார்கள்’.
அந்தக் காலத்திலேயே அவர் சொன்ன ‘நம்முடைய ஆட்கள்’ என்றது என்னை நெருடியது! அவர் அவ்வாறு சொன்னதின் இன்னொரு sub-text ‘மதராஸிகள் பயந்தாங்கொள்ளிகள்’ .பாராட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ’தர்மத்துக்குக் கட்டுப் பட்டவர்கள்’!.
இன்னொரு சம்பவம்.
1984ல் பல்கலைகழக க் கலாசாரப் பரிவர்த்தனை ஒப்பந்த அடிப்படையில் நான் கனடா வுக்குச் சில பல்கலைக்கழகங்களில் பேசுவதற்காக அழைக்கப் பட்டிருந்தேன். அப்பொழுது வான்கோவரில், சில இந்தி எழுத்தாளர்கள், வேறொரு ஒப்பந்தந் த த்தின் கீழ் வந்திருந்தார்கள். அந்த இந்தி எழுத்தாளர்களுக்கும் கனடா எழுத்தாளர்களுக்குமிடையே ஒரு சந்திப்பை இந்தியத் துணைத்தூதுவரகம் ஏற்பாடு செய்திருந்தது.
நானும் ஓர் எழுத்தாளன் என்பதால் என்னையும் அழைக்காலாமென்று துதுவரகத்தைச் சேர்ந்த தமிழ் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இந்தி எழுத்தாளர்களைக் கனடிய எழுத்தாளர்களுக்கு அறிமுகப்படுத்திய போது’ ’இவர்கள் எங்கள் இந்திய எழுத்தாளர்கள்’ என்று சொன்ன வட இந்திய அதிகாரி, என்னைக் குறிப்பிடும்போது, ‘ இவர் எங்கள் தமிழ் எழுத்தாளர்’ என்றார்.
‘நான் இந்திய எழுத்தாளன் இல்லையா? ‘ என்று அவரைக் கேட்டேன். நான்கேட்டது அவருக்குச் சுத்தமாகப் புரியவேயில்லை. அவர் அடி மனத்தில், ‘இந்தி எழுத்தாளர்கள்’தாம் ‘இந்திய எழுத்தாளர்கள்’, மற்றைய மொழி எழுத்தாளர்கள், ‘பிராந்திய மொழி எழுத்தாளர்கள்’ என்ற கருத்து வேரூன்றியிருந்தது. ‘
எஸ்.எஸ், அஃப்கோர்ஸ்’ என்று நான் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை என்ற முக பாவனையுடன்,இயந்திர ரீதியாகத் தலையை ஆட்டினார்.
‘இந்தியா’ என்ற ஓர் அரசியல் அமைப்பு, காலனி ஆட்சியினால் நமக்குக் கிடைத்த ஒரு நன்கொடை. ஆனால், பூகோள ரீதியாக ‘பாரதம்’ என்ற ஒரு கருத்தமைதி மக்கள் மனத்தில் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ‘ பாரத வர்ஷே, பரதக் கண்டே’ என்ற வழக்கினின்றும் இதை அறியலாம். ‘தென் குமரி,’ வட பெருங்கல், குண குடகு கடல் எல்லை’ என்கிறது புறநானுறு. ’தென் கடற்கும், இமயமெனும நடுப் பாரதமாம்’ என்று ‘கந்த புராணத்’தில் வருகிறது.
1947க்குப் பிறகு உருவான இவ்வரசியல் அமைப்பு, இந்தியாவில் வெவ்வேறு பிராந்தியங்களில் மனத்தில், உணர்ச்சிப் பூர்வமாக ‘நாம் அனைவரும் இந்தியர்’ என்ற ஓர் ஒருமைப்பாட்டை உருவாக்கியிருக்கிறதா என்பதுதான் கேள்வி. அப்படி உருவாக்கியிருந்தால், ‘நாம்’, கறுப்பினமாகிய தென்னிந்தியர்களுடன் வாழவில்லையா’ என்பது போன்ற சிந்தனைக்கு இடமே இருந்தி ருக்காது.
முதலில், நாம் இந்தியா என்கிற. அரசியல் ஏற்பாடு, பல மொழிகளையும் , பல பண்பாட்டுக் கிளைப் பிரிவுகளையும் உடைய ஒரு சமஷ்டி என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
‘ஒரு மொழி, ஒரு நாடு’ என்பதுசோவியத் யூனியனில் தோற்றுவிட்டது.
‘ஒரு கோட்பாட்டைச் செயல்படுத்துகிறோம்’ என்று அதிகாரம் முழுவதையும் மத்திய அரசே கைப்பற்றிக் கொண்டது இதற்கு முக்கிய காரணம்.
ஆனால், ஐரோப்பாவிலிருந்து வெவ்வேறு மொழிகளைப் பேசிய வெவ்வேறு இனத்து மக்கள் அமெரிக்காவுக்குச் சென்று ஒரு புதிய தேசத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. காரணம், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் பயம். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளும் (சிவப்பிந்தியர்கள்) இருந்தார்கள். வெள்ளையர் யாருக்கும் அந்த இடம் சொந்தமில்லை, அனைவருமே குடியேறியவர்கள் என்ற பொது உணர்வும், நிற ஒற்றுமையும் அவர்களை இணைத்து வைத்திருக்க வேண்டும். பெரும்பான்மையோர் பேசிய ஆங்கிலோ-சாக்ஸன் இனத்தினர். ஆங்கிலம் அவர்களைக் கூட்டுவித்தது..
பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறப் போராடியதும் அவர்கள் ஒன்றுபடக் காரணமாயிற்று. தனிமனித உரிமைகளைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கவும், அதற்கேற்ப அரசியல் சாசனம் உருவாக்கவும் இந்த விடுதலைப் போர் உதவியது. ஆனால் அடிமைகளாய் வந்த கறுப்பர்களைப் பற்றி அவர்கள் அப்பொழுது சிந்திக்கவில்லை என்பதும் உண்மைதான். காரணம், அவர்கள் வேறு நிறம்!
வெவ்வேறு மொழி, சமய, பண்பாட்டு இனங்களாக ஒரு நாடு இருந்தாலும், அனைவருக்கும் சம உரிமைகளும், வாய்ப்புக்களும் உறுதியானால் அந்நாடு ஒன்றுபட்ட ஒரு தேசமாக உருவாக முடியும் அமெரிக்க தேசத்தின் அரசியல் கோஷம்’ Equal opportunity employer’ என்பதுதான்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த உத்தரவாதம் அவசியம் தேவை. வெறும் ‘தேசபக்தி’ ‘தேசியம்’ போன்ற வரட்டுக் கோஷங்களினால் மட்டும் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தி விடமுடியாது. . நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவனும் இந்நாட்டு வளர்ச்சிக்கு எவ்வளவு அவசியமானவன் என்பதை அவனே மனப் பூர்வமாக உணர்வதற்கான அரசியல், சமூக சுமுகச் சூழ்நிலை உருவாக வேண்டும்.

இப்பொழுது ’நம்’ ( உளப்பாட்டுப் பன்மை) நாட்டில் ஆட்சியிலும், சமூகத்திலும் காணும் மொழி-சமய-சாதிப் பெரும்பான்மை வாதம் நாட்டை எங்குக் கொண்டு செல்லும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ’நீயுமா ப்ரூட்டஸ்? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: