‘மாலையும் வந்தது,மாயன் வாரான்’

February 22, 2017 § Leave a comment


தலைவன் (கண்ணன்) குழல் ஊதுகின்றான். இடையிடையே அவன் எண்ணங்களை வெளிப்படுத்தும் சொற்களையும் வைத்துக் குழலில் அற்புதமாய்ப் பாட்டிசைக்கிறான். அந்த இனிய கானம் என்னை வதைக்கின்றது.` தனக்குத்தானே ஆபரணமாய் இருக்கும் கண்கள் மூலம் தன் கருத்தை வெளியிடுகிறான். இடையிடையே அவளிடம் உரையாடும் சொற்களையும் இசையாக்கிக் கண்களாலும், இசையாலும்,,என்னை நெகிழ்விக்கின்றான். அவன் நான் படும்பாட்டை அறிந்தவன்போல் அவன் முகத்தில் தெரியும் பரிவும் இசையொடு இசைந்து என்னை எதையும் தரிக்க மாட்டாமல் செய்து விடுகிறது! மாலையும் வந்தது , மாயன் இன்னும் வரவில்லை’ 1
‘மாலை நேரம், மல்லிகைப்பூ மணம், தென்றல், இனிய இசை, இவையெல்லாமே காதலர்களைப் பிரிவின்போது சித்திரவதை செய்யும் யமன்கள். ‘How beautiful, if sorrow had not made Sorrow more beautiful than Beauty’s self’ என்றான் கீட்ஸ். இந்தத் திருவாய்மொழிப் பாட்டைப் படிக்கும்போது கீட்ஸ் சொல்லியிருபதுதான் நினைவுக்கு வருகிறது. பிரிவின்போது துன்பத்தைப் புலப்படுத்தும் பாடல்கள்தாம் இனிமயானவை. ‘The sweetest songs are those that tell us the saddest of thoughts’ என்றான் இன்னொரு ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி.
ஈடு என்ன சொல்லுகிறது?
அவன் குழலூதும்போது சில சொற்களையும் உரையாடலாகச் சேர்த்து இசைக்கிறான். அதைத்தான் ‘’இடை இடை அது மொழிந்து’’ என்கிறார். ‘அது’ என்பதை எதை என்பது நியாயமான கேள்வி.
ஈடு சொல்வதைக் கேட்போம்: ‘பிரிந்தேன், ஆற்றேன்’ என்றாற்போல சொல்லுகிற இழிச் சொற்களை இடையிடையே சொல்லி ஆயிற்றுப் பாடுவது. ‘தாழ்ந்த செயலையும் (பிரிதல்) சொற்களையும் ( ஆற்றேன்) தன் வாயாலே சொல்லமாட்டாமையினாலே ‘அது’
என்கிறாள். பிரிவு, ஆற்றாமை இவையெல்லாம் இழிச் சொற்களாம்!. ஆகையால் அவற்றை அச்சொற்களாகவே குறிப்பிடாமல் ‘’அது’ என்கிறாள்.
தன்கோலம் செய் தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி =- தனக்குந்தானே ஆபரணமாய்த் தன் கருத்தினை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக்கண்கள்………………… என்றது, ‘மனத்திலே உள்ள மறத்தாலே ‘கிட்டக் கடவ அல்லோம்’ என்று இருக்கிற பெண்களுடைய கால்களைச் சென்று பிடியா நிற்கும் கண்கள்’ என்றபடி.
வேறு ஆபரணம் தேவைப்படாமல் தானே ஆபரணக் கருவூலமாய் நிற்கும் அவன், கண்களையே மொழியாக்கி அவளிடம் பேசுகிறான். (ஒன்று மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவன் பிரிந்திருக்கும் நிலையில், அவள் காண்பன தோற்ற மயக்கங்கள்.) என்ன பேசினான் என்ற கேள்வி எழுமல்லவா? பெண்களுக்கு மனம் மிகவும் வலிமையானது. அவளை விட்டுப் பிரிந்து, விரைவில் திரும்பிவிடுவேன் என்று அவன் எவ்வளவு சொல்லியும் அவள் மனம் சமாதானமடையவில்லை. இரும்பு மனம். அதைத்தான் ‘மனத்திலே உள்ள மறம்’ என்கிறது ஈடு. ஊடல் தீர்வதற்காக,த் தலைவன் இப்பொழுது அவளுடைய கால்களைப் பிடிக்கத் தயார் என்ற செய்தியைத்தான் இப்பொழுது அவனுடைய கண்கள் சொல்லுகின்றன.
‘நம்பி மூத்தபிரான் செய்பவற்றை அடையச் செய்யா நிற்குமாயிற்று’ என்கிறார் உரைகாரர் ’நம்பி மூத்தபிரான்’ கூறும் வார்த்தைகளால் அவள் முன்னொரு சமயம் சமாதானம் அடைந்தது போல் இப்பொழுது, கிருஷ்ணன் கண்ணால் பேசியவற்றை உணர்ந்து தெளிந்தாள்.. நம்பி மூத்தபிரான் யார்? பலராமன்.,,,நச்சினார்க்கினியர், கலித்தொகைச் செய்யுளுக்கு உரை எழுதும்போது, பலராமனை ‘நம்பி மூத்தபிரான்’ என்றே குறிப்பிடுகிறார்.
‘பேச்சிலே பிறக்கும் தெளிவு, நோக்காலே பிறக்கையைத் தெரிவித்தபடி. என்கிறார் உரைகாரர்.
தூமொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி- அழகிய பேச்சுக் களோடு கூடிய இசையாலே கண்களாலே நோக்கி ஈடுபடுத்துமாறு போல ஈடுபடுத்தி இங்குப் பேச்சைக் காட்டிலும் உறுதியான மொழி இசை என்றும், அதைவிட வலிமையானது நோக்கு என்பதும்
புலப்படும்.
‘நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறிஉன்னி அறிவனும்தன்
புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும்அம் மாதவத்தோன்
நினைந்தவெல்லாம் நினைந்துஅந்த நெடுஞ்சிலையை நோக்கினான்.’
(கம்பராமாயணம்)
இங்கும் பேச்சு ஏதுமில்லை. மிதிலைமாநகர் அரச சபையிலே ஜனகன் சிவதனுசின் வரலாற்றைக் கூறி அதை எடுத்து வளைது நாணேற்றுபவனே சீதையின் கழுத்தில் மாலையிடலாம் என்று கூறுகிறான்.. அப்பொழுது, அங்கு இராம, இலக்குவனோடு அமர்ந்திருந்த விசுவாமித்திர முனிவர், ஜனகன் கூறிய வரலாற்றின் பின்னணியில் அந்த வில்லை வளைத்து நாணேற்றும் வல்லமை உனக்குத்தான் உண்டு என்ற எண்ணம் மனத்தில் ஓட இராமனைப் பார்க்கிறான். இராமனும் அந்த எண்ண ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டவன்போல், அங்குப் பொலிவுடன் கம்பீரமாய் வீற்றிருந்த அந்த வில்லைப் பார்த்தான்.
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து- தலைவிக்குப் பிரிவாற்றாமையினால் ஏற்பட்ட துயரத்தைக் கண்டு தலைவனுக்கு ஏற்படும் வேதனையை, அவன் நோக்கைக் கொண்டு அவள் அறிந்தால் அவள் மனம் இன்னும் என்ன பாடுபடும் என்று தலைவன் நினைக்கின்றான்.
அம்ம! அம்ம!- பூசல்! பூசல்! ( அபாயம் நெருங்கி விட்டது.)
மாலையும் வந்தது – இனி வருந்த வேண்டாதபடி,இது முடிந்து விடும்போல இருந்தது.என்றபடி. மாலை நேரம் துயரத்தை அதிகரிக்கும் என்பதால் அவள் வாழ்க்கையே முடிந்து போய்விடலாம்.
மாயன் வாரான்= தன்னைப் பிரிந்தார் நாணமுறும்படி தaனே இழவாளனாய் வந்து காலைப் பிடிக்கும் ஆச்சர்யமுடையவன் என்கிறது ஈடு.
வருகின்றானிலன்.- அவளைப்பிரிந்த இழப்பு அவனுக்குத் தான் என்பது போல வருந்தி என் காலைப் பிடிக்க வருவான் என்று நான் எதிர்பார்க்கின்றவன் இன்னும் வரவில்லை. அவன் ஆச்சர்யாமானவன். ‘மாயன்’ என்றால் ‘ஆச்சர்யமானவன்’ அதனால் அவன் வரக்கூடும் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை.வந்து என்னை ஆச்சர்யப்படுத்தக் கூடும் என்ற அர்த்தம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ‘மாலையும் வந்தது,மாயன் வாரான்’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: