’உலகே இன்ப மயம்’

February 11, 2017 § Leave a comment


குறுந்தொகையில் ஒரு பாடல். இயற்றியவர் பெயர் ‘இறையனார்”. அவர் பெயரை வைத்துக்கொண்டு தமிழ் நாவலர் சரிதை ஒரு சுவாரஸ்யமான கதையையும் கட்டிவிட்டது. திருவிளையாடல் புராணத்தில் இக்கதைக்கு க் கையும் காலும் முளைத்துவிட்டது அது நமக்கு இப்பொழுது தேவையில்லை.
முதலில், குறுந்தொகைப் பாட்டைப் பார்ப்போம்
’கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ!
பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறி எயிற்று, அரிவைக் கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?’
குறுந்தொகை சங்க காலத்து நூல். இங்கே பேசுகின்றவன் சங்க காலத்துத் தலைவன். தலைவியின் கூந்தல் பாயில் படுத்திருக்கிறான். மலர்களில் மணம் மோந்து, தேனைக் குடிக்கும் தும்பி( வண்டு) அவள் கூந்தலைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அவன் அதை விரட்டுகிறான். அது போகவில்லை. சுற்றிச் சுற்றி மீண்டும் வருகிறது. அச்சமயத்தில் அவள் மலர் ஏதும் சூடவில்லை. அப்பொழுது தலைவனுக்கு ஓர் ஐயம் ஏற்படுகின்றது. அவள் கூந்தலின் இயற்கை மணமா அத்தும்பியை ஈர்த்திருக்கும்.
கேட்கின்றான்: ‘ பூக்களின் மணத்தை ஆராய்ந்து, அவற்றிலுள்ள
தேனை உண்கின்ற, அகத்தே( உள்ளே) சிறகுகளை உடைய தும்பியே, நான் ஒன்று உன்னைக் கேட்கிறேன், பதில் சொல். மயில் சாயலையும், அழகான வரிசையாய் ஒளிவீசும் பற்களையும் உடைய என் அன்புக் காதலியின் கூந்தலின் இயற்கையான நறுமணம் போல், உன் அநுபவத்தில் நீ கண்டறிந்த மலர்களுக்குள் ஏதேனும் ஒன்றுக்கு உண்டா, சொல்’’
இதை இயற்கைப் புணர்ச்சியில் ‘நலம் பாராட்டல்’ என்று கூறும் தொல்காப்பியம்.
இப்பொழுது நம்மாழ்வார் இயற்றிய ‘திருவிருத்தத்தில்’ ஒரு பாட்டைப் பார்ப்போம்.
‘வண்டுகளோ1 வம்மின்நீர்ப்பூ நிலப்பூமரத்தில் ஒண்பூ
உண்டு களித்துழல் வீர்க்கொன்றுரைக் கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே’

இந்தப் பாட்டின் பொருள் என்ன? ‘ வண்டுகளே! நீங்கள் நீர்ப் பூக்கள், செடி கொடிகளிலுள்ள அழகிய பூக்கள், நீண்ட மரங்களிலுள்ள பூக்கள், ஆகிவற்றை மணம் மோந்து, தேனைக் குடித்திருப்பீர்கள். நான் ஒன்று கேட்கிறேன் உங்களை.. அழுக்கு மண்ணில் புகுந்து விளையாடிய வராக மூர்த்தியை உங்களுக்குத் தெரியுமா? அவருக்குத்தான் நறுமணம் கமழும் வைகுண்டமும் சொந்தம். அந்த வைகுண்டத்தைப்போல் இனியவள் இப்பெண். இவளுடைய கூந்தலின் நறுமணம்,, நீங்கள் அநுபவத்தில் மோந்து உணர்ந்த அம்மலர்களுக்கு உண்டா, சொல்லுங்கள்.’
இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். ‘குறுந்தொகை’க்கும் ,’திருவிருத்த’த் துக்கும் என்ன சம்பந்தமென்று. சங்க காலத்து அகத்துறைப் பாடல்களின் தொடர்ச்சி யாகத்தான் பக்தி இயக்கப் பாடல்களை நம்மால் பார்க்க முடிகிறது.
இறையானார் பாடலில் காதலன் ஒரு தும்பியை ( வண்டைக் காட்டிலும் தும்பிக்குச் சற்று உயர்ந்த தகுதி உண்டு என்பார்கள்0 பார்த்துக் கேட்கிறான். நம்மாழ்வார்ப் பாடலில் வண்டுகள் என்று பன்மையில் அமைந்திருக்கிறது. ’பக்தி’ என்ற சொல்லே ‘பஜ்’ என்ற வேர்ச்சொல்லினின்றும் வருகிறது. ‘பஜனை’ என்றால் கூட்டமாக வழிபடுவது. வைணவ சமயம் தனிப்பட்டவர்கள் ஈடேறுவதை( individual salvation) வற்புறுத்தவில்லை. .முதல் மூவாழ்வார்கள் சந்தித்த வரலாறும் இதைத்தான் சொல்லுகிறது. ஆகவேதான் ,’ வண்டுகளே’ என்று பன்மையில் கேட்கிறான் காதலன்.
குறுந்தொகைப் பாட்டில் அற்புதமான சொல்லாட்சி. திருவிளையாடற்புராண நக்கீரர் இந்தப் பாட்டை இதற்காகவாவது ரஸித்திருக்கலாம். ‘’கொங்கு தேர் வாழ்க்கை’ என்றால், மலர்களை ஆராய்ந்து, நறுமணம் மோந்து, தேனை உண்ணும் வாழ்க்கை என்று பொருள். ஆங்கிலத்தில் ‘.connoisseur’ என்பார்களே அந்த மாதிரி. பொதுவாகப் பூக்கள் என்று அவன் சொல்லுகின்றானே தவிர அவற்றை வகைப் படுத்தி அவன் கூறவில்லை. ஆனால் திருவிருத்தக் காதலன், ‘நீர்ப்பூ’, ‘நிலப்பூ, மரப்பூ என்று வகைப் படுத்திக் கூறுகிறான்.
ஆன்மிகச் சிந்தாந்தத்தில் மூன்று யோகங்கள் கூறப்படுகின்றன. அவை கர்மம், ஞானம், பக்தி இவற்றைதவிர, வைணவத் தத்துவதில் நான்காவதாக ஒரு யோகத்தைச் சொல்வார்கள். அதன் பெயர் பிரபத்தி. இதைச் சரணாகதித் தத்துவம் என்றும் கூறப்படும். நாம்
நம்முடைய பணியை முழு சிரத்தையுடன் செய்துவிட்டு, நடப்பது நடக் கட்டும் என்று மனத்தில் எந்தவித ஐயமின்றிப் பலனை இறையவனிடம் ஒப்படைத்து விடுதல்.
இப்பாசுரத்தில் இடம்பெறும், நீர்ப்பூ, நிலப்பூ, மரத்தில் ஒண்பூ ஆகிய மூன்றும் மூன்று யோகங்களைக் குறிக்கின்றன, தலைவியின் கூந்தலில் உள்ள இயற்கை மணம் பிரபத்தி. மற்றைய மூன்று யோகங்களைப் போல் சிக்கலானது இல்லை. இயற்கை மணத்துக்கு எந்தவிதமான பிரயத்னமும் வேண்டியதில்லை. உலகமே இறைவனின் உறைவிடம். இயற்கையும் இறைவனும் ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள், அதனால்தான் எந்தவிதமான அலங்காரமுமில்லாமல் இருக்கும் கூந்தலின் இயற்கை மணத்தைப் பிரபத்தியுடன் ஒப்பிடுகிறார்கள்.
‘திடீரென்று ‘ஏனம்’ என்று அவன் வராக அவதாரத்தை ஏன் குறிப்பிட வேண்டும்? அதே சமயத்தில் அழுக்கை விரும்பி வாழும் அவனுக்கு நறுமணம் கமழ்கின்ற வைகுண்டம் சொந்தம் என்கிறார். உல்கத்தில் விரும்பத்தகாதது என்று எதுவுமேயில்லை. வைணைவத் தத்துவம் இறைவனின் சௌலப்பியத்தை (எளிமை) வற்புறுத்தியது. அதனால்தான் ஒரே மூச்சில் அவதார நிலையையும் (வராகம் =எளிமை) பரம நிலையையும் (வைகுண்டம்) குறிப்பிடுகிறார். வைகுண்டம் போல் இனிமையாக இருக்கும் அவள் மிக இயல்பாக, எளிமையாக, இயற்கை மணத்துடன் இருக்கும் கூந்தலுடன் இருக்கிறாள். இதுதான் அவனுக்கு உகந்த விஷயம்.
’ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால்
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?’ (திருவாய்மொழி)
’இறைவன் வைகுண்டத்தில் இருக்கிறான் என்பதை விட இங்கு, இந்த மண்ணில், எனக்குச் சுலபனாக திருப்பதியில் இருக்கிறான் என்பதுதான் அவனுக்கும் பெருமை.,எனக்கும் பெருமை’. ஆழ்வார் கூறுவது இன்றையத் திருப்பதி இல்லை, அவர்காலத்திய திருப்பதி!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ’உலகே இன்ப மயம்’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: