அக்கிரஹாரத்தில் நாய்.

February 6, 2017 § Leave a comment


நான் கும்பகோனத்தைச் சேர்ந்தவன் (பண்டித நடையில் சொல்ல வேண்டுமென்றால்,’சேர்ந்தவன் ஆவேன்’) என்றாலும், என் பேச்சில் தஞ்சாவூர் ‘மணம்’ சிறிது கூட இல்லாமலிருப்பதற்கு என்ன காரணம் என்று சில நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘தஞ்சாவூர் மணம்’ என்றால், கரிச்சான் குஞ்சுவுடனும், தி.ஜானகிராமனுடனும் பழகியவர்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்,.

நான் தில்லியில் இருந்தபோது, ஓர் அமெரிக்க ’ ஃபுல்ப்ரைட்’ ஆராய்ச்சி மாணவர் என்னைப் பார்க்க வந்தார். அவருடைய ஆராய்ச்சி எதைப் பற்றித் தெரியுமா? ‘ ’இந்திய மொழிகளில் வசவு சொல்லாட்சி;’ (‘Swear words in Indian Languages;)  அவர் கணிப்பின்படி, பஞ்சாபி மொழிதான் இத்தகைய சொல்லாட்சியில் வளமை மிகுந்தது என்று அவர் சொன்னார்..

‘இந்த ஆராய்ச்சியால் கருத்துலகத்துக்கு என்ன லாபம்/’ என்று நான்  அப்பாவித்தனமாக் கேட்டேன்..

அவர் என்னை  ஒரு பரிதாப உணர்வுடன் பார்ப்பதுபோல் தோன்றிற்று

‘சமுதாய,-உளவியல்- கலாசார-மொழியியல் பார்வையில் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கின்றேன்.சமுதாயயியல் ஆராய்ச்சிப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்’ என்றார் அவர். சில விநாடிகளுக்குப் பிறகு.

அவர் தமிழ் மொழியில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவில்லயா என்று கேட்டேன். ’ ‘ ஹிந்தி, பஞ்சாபி, உர்து, ராஜஸ்தானி, மைதிலி’ ஆகிய மொழிகள் பற்றித்தான் அவர் ஆராய்ந்திருப்பதாகச் சொன்னார். எடுத்துக் காட்டாக அவர் பஞ்சாபியிலிருந்து சொன்ன வசவுக் கோவை தஞ்சாவூர் கிராமப் புறங்களில் அக்காலகட்டத்தில் (இப்பொழுத எப்படியென்று எனக்குத் தெரியாது) வழங்கிவந்த வண்ண வண்ணமான வசவு அலங்காரங்களுக்கு உறை போடக் காணாது .இதை எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், ’சொல்லாட்சியில் ‘தஞ்சாவூர் மணம்’ என்று நண்பர்கள் குறிப்பிட்டது, ‘சமுதாய—உளவியல்-கலாசார—மொழியியல் பார்வைக்கு’ அந்த இளம் அமெரிக்க அறிஞரால் உட்படுத்தப் பட்ட ‘மொழி மணத்தைதான் ‘  என்று நினைக்கின்றேன்.

என் பேச்சில் ‘தஞ்சாவூர் மணம்’ கமழவில்லை என்பதற்குக் காரணம், நான் பிறந்து ஆறு வயது வரை வளர்ந்தது என் தாத்தா வீட்டில்(அம்மாவின் அப்பா),சென்னை.யில். குழந்தையின் ஆரம்ப ப் பருவ நினைவுகளும் அநுபவங்களுந்தாம், அதன் மனப் பரிணாமத்துக்கு வித்திடுகின்றன என்று ஃப்ராய்ட் சொல்வதை ஏற்றுக் கொண்டால், நான் கும்பகோணத்தில் என் பெற்றோர்களுடன் வசிக்கத் தொடங்கியபோது, கும்பகோனத்திலிருந்து ‘அந்நியப்பட்ட’ நிலையில்தான் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது…

ஆசார, அனுஷ்டானங்கள் எதனைப் பற்றியும் கவலைப் படாத என் தாத்தாவிடம் இருந்தால் நான் ‘’கெட்டு’ப் போய்விடுவேன்’ என்பதற்காகத்தான் என் அப்பா என்னை,  கும்பகோனத்தில்அவர் இருந்த அக்கிரஹார வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்..அந்த அக்கிராஹார வாழ்க்கையும் எனக்கு ’அந்நியமாக’த் தெரிந்தது.

என் தாத்தாவின் கொள்கையின்படி, குழந்தைகளை எட்டு வயதில்தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். ஆகவே நான் சென்னையில் இருந்த வரைப் பள்ளிக்கூடமே போகவில்லை. என் சின்ன பாட்டிதான் என் ஆரம்ப ஆசிரியர். தாத்தாவின் இரண்டாவது மனைவி,- என் அம்மாவின் அம்மா காலமான பல ஆண்டுகளுக்குப்  பிறகு, ஓர் ஏழை குடும்பத்துக்குக் கைக் கொடுப்பதாகச் சொல்லித், தம்மைவிட முப்பது ஆண்டுகள் சிறியயவரான என் சின்ன பாட்டியை திடீரென்று பதிவுத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.என் தாத்தா. பதிவுத் திருமணம் ஆட்சேபகரமானதாக அந்தக்காலத்து ஆசாரச் சீலர்களுக்குத் தெரிந்ததே தவிர, முப்பது ஆண்டுகள் தம்மைக் காட்டிலும் சிறிய ஒரு பெண்ணை அவர் மணந்தது. எந்த விமர்சனத்துக்கும் உள்ளாகவில்லை. ‘அந்தக் காலம்’ என்றால் 1930ல். அதுதான் நான் பிறந்த வருஷம்.

நான் சென்னையில் இருந்த வரை என் சின்ன பாட்டியை என் அக்கா என்றுதான் நினைத்தேன்..நான் கும்பகோனம் வந்த பிறகுதான் அவர் அம்மாவின் சித்தி என்று தெரிந்தது.

நான் கும்பகோணம் வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பா ஒரு பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தது.

அப்பாவின் இளைய சகோதரி பெங்களூரில் இருந்தார். அவர் கணவர் போலிஸில் உயர்ந்த உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். அவர் சில ஆண்டுகளுக்கு முன் திடீரென்று இறந்து விட்டார்..அத்தைக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு நாய் இருந்தது. அடர்த்தியான முடியுடன் கூடிய வெள்ளை நாய்.’ஸ்பானியல்’ அத்தை அதை மிகச் செல்லமாக வளர்த்தார்.

அத்தையின் கணவர் போன பிறகு பெங்களூரில் பஸவங்குடியில் அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க பயந்த அவர் அப்பாவுடன் கும்போகோனம் வந்துவிடுவதாகச் சொன்னார்.

அப்பாவுக்கு ஒரே ஆட்சேபணை.. அதுதான் அந்த நாய்.  அத்தை அந்த நாய் தம்முடன் தான் இருக்குமென்று பிடிவாதம் பிடித்தார். அக்கிரஹார வீட்டில் நாய் வைத்துக் கொள்ள முடியாது என்றார் அப்பா.

‘மாடு வச்சுக்கலாம், நாய் கூடாதா?’ என்றார் அத்தை.

‘நாயும் மாடும் ஒண்ணா, என்ன சொல்றே/’

‘ரெண்டும் வாயில்லாத ஜீவந்தானே?’

அப்பா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்: ‘ நாயை  யார்கிட்டேயானும் கொடுத்துட்டு வா.  கும்பகோனத்திலே நம்ம ஆத்து தெருக்கோடியிலே கோயில், கோயிலை நம்பி இருக்கிற ஆசாரமான குடும்பங்கள்..ஞாபகம் வச்சுக்கோ’ என்றார் அப்பா.

“உன் தெருலே இருக்கிற எல்லாருடைய ஆசாரங்களையும் பத்தி எனக்குத் தெரியும். உனக்கும் தெரியும் நீயோ கோயிலே நம்பி இருக்கலே.. சிம்னாவுடன் பழகிட்டா, நீயே அவனை விடமாட்டே. பாரு’ என்றார் அத்தை

இந்த இடத்தில் ‘சிம்னா’ என்றால் யார் என்று சொல்லியாக வேண்டும். .’சிம்னா’ என்பது அத்தை வளர்த்த நாயின் பெயர். கன்னடப் பேர் என்று என் அம்மா நினைத்தாராம்..  அந்த நாய்க்கே உரித்தான பெயர்,அது,  எந்த மொழியிலும் அது இல்லை என்று என் அம்மாவிடம் அத்தையே சொல்லியிருக்கிறார்.

அத்தையிடமிருந்து அப்பாவுக்கு ஒரு நாள் தந்தி வந்த்து

‘நான் பெங்களூர் வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன்.. நாளைக் காலை கும்பகோனம் வருகிறேன். ஸ்டேஷனுக்கு வா.’

அப்பா குழம்பிப் போனார். தனியாக வருகிறாளா, நாயும் வருகிறதா என்பதுதான் பிரச்னை. அப்பொழுது கோயிலில் வசந்தோற்சவம்.,

அப்பொழுதெல்லாம் தொலைபேசி வசதி கிடையாது. எப்படித் தெரிந்து  கொள்வது?

அடுத்தநாள் ஸ்டேஷனுக்குப் போன அப்பாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அத்தை நாயை அழைத்துக் கொண்டு வரவில்லை என்பதல்ல அதிர்ச்சி. சிம்னாவுடன், அதே மாதிரி, சிம்னியும் (ஒரு பெண் நாய்) இருந்தது என்பதுதான் அதிர்ச்சி.!

‘சிம்னா முன்பின் அறிமுகமில்லாத ஊரிலே எப்படித் தனியா இருப்பான்? துணைக்காக இன்னொரு ‘ஸ்பானியல்’ வாங்கினேன்” என்றார் அத்தை.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading அக்கிரஹாரத்தில் நாய். at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: