கவிதை ஓவியங்கள்!

February 3, 2017 § Leave a comment


ஓவியர் ரவிவர்மாவுக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் ஒரே மரபு அணு.(DNA) .இருவரும் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள். குலசேகரர் சொற்களை வைத்துக் கொண்டு ஓவியம் தீட்டினார். ரவிவர்மா வண்ணங்களைக் கொண்டு கவிதை எழுதினார்.

ஆயர்பாடிக் கண்ணனின் மழலைப் பருவ சேட்டைகளைப் பற்றிப் பெரியாழ்வார் அற்புதமாக ஏற்கனவே சித்தரித்து விட்டார். அதை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வேண்டுமென்று குலசேகரருக்கு.த் தோன்றியிருக்க வேண்டும்.

யோசித்தார்.

தேவகிதான் கண்ணனின் உண்மையான தாய். ஆனால், விதி வசத்தினால். அவன் ஆயர்ப்பாடியிலே யசோதையின் மைந்தனாக வளருகிறான். கிருஷ்ணன் கம்சனைக் கொன்று பெற்றோர்களை விடுவித்த பிறகு, தேவகிக்குக் கண்ணன் யசோதையின் மகனாய் வளர்ந்த போது செய்த விஷமங்கள் எல்லாம் தெரிய வந்திருக்கும். ஆனால் இப்பொழுது அவள் அவனை வளர்ந்த ஒரு வாலிபனாகத்தான் பார்க்க முடிகிறது.

அவன் பால்ய லீலைகளைப் பார்க்க முடியாமால் போனது அவளுக்கு எப்பேர்ப்பட்ட நஷ்டம்!

குலசேகரர் தேவகியாய் மாறிவிடுகிறார்.

பாடுகிறார்.

‘முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்

முகிழ் இளஞ்சிறு தாமரைக் கையும்

எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு

நிலையும், வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்

அழுகையும்,அஞ்சி நோக்கும் அந்நோக்கும்

அணிகொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்

தொழுகையும், இவை கண்ட அசோதை

தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே !

(பெருமாள் திருமொழி0

’மழலைப் பருவக் கண்ணன் தவழ்ந்து தவழ்ந்து போய் அங்கே வைத்திருக்கும் வெண்ணெய் பாண்டங்களை உருட்டி அவன் பிஞ்சு கையால் வெண்ணெயை உருட்டி உருட்டித் தன் தாமரை போன்று சிவந்த கைகளால் உண்கிறான். சிவந்த வாய், முகம் அனைத்திலும் வெண்ணெய். ஏதோ சப்தம் கேட்கிறது. சுற்றுமுற்றும் பார்க்கிறான்.

யசோதை வந்துவிட்டாள். வெண்ணையும் வாயுமாக அவன் சிவந்த முகத்தைப் பார்க்கிறாள்.. அவள் முகம் சிவக்கி.றது. அவள் தாம்புக் கயிற்றை எடுக்கிறாள் அவனை அடிப்பதற்கு,

கண்ணன் அவளை முகத்தில் அச்சம் ஆட்கொள்ள, அவளைக் கெஞ்சுவது போல், கண்களில் நீர் மல்க பார்க்கிறான்.  சிவந்திருக்கும் தன் இரண்டு பிஞ்சுக் கரங்களைத் தூக்கி, ‘ அடிக்காதே’ என்பது போல் இறைஞ்சுகிறான். சிவந்த அழகிய இதழ்கள் எதோ சொல்ல வருவன போல் நெளிகின்றன. ஆனா ல் சொற்கள் உருப் பெறவில்லை.

கண்ணனின் அத்தோற்றம் ஓவியக் கண்காட்சியாய் யசோதை கண்களுக்கு விருந்தளிக்கிறது. அவள் இன்பத்தின் எல்லையை

உணர்வதுபோல் மகிழ்கிறாள்’

இதுதான் பாட்டின் கருத்து. இது தேவகி சொல்வது போல் வருகிறது. ’எவ்வளவு துரதிர்ஷ்டமானவள் நான்,! பெற்றெடுத்த தாய் நான், எனக்குக் கிடைக்காத அந்த இன்பம் யசோதைக்குக் கிடைத்ததே என்று தன்னைக் கண்டு தானே இரக்கப் படுவது போன்ற பாவம்.!

சொற்களைக் கொண்டு எப்படி ஓர் அருமையானச் சித்திரத்தைக் குலசேகரரால் படிக்கின்றவர்களின் மனக்கண் முன் கொண்டு நிறுத்த முடிகின்றது என்று அவர்கள் ‘தொல்லை இன்பத்து இறுதி காண்பார்கள்’. இதை யசோதையின் கூற்றாகக் கூறாமல், தேவகியின் துயரமாகச் சொல்லும் போதுதான் இலக்கிய இன்பம் கூடுகிறது.

வியாக்கியானக்காரர்கள் இந்தப் பாட்டின் இன்னொரு அர்த்தப் பரிமாணத்தையும் பார்க்கிறார்கள்.

கிருஷ்ணன் யார்?

திருமால். இப்பொழுது அவதார நிலையில் வெண்ணெய் அவன் வயிற்றில். ஆனால் பிரளய காலத்தில் பிரபஞ்சமே அவன் வயிற்றில். மூவுலகங்களையும் ஈரடியால் அளந்தவன். மூவுலகும் அஞ்சும்படியாகச் சீறிப் பாய்ந்த செங்கட் சீயம்.(நரசிம்மன்).  அவன் இப்பொழுது அஞ்சி, ‘என்னை அடிக்காதே’ என்று யசோதையிடம் கெஞ்சுகின்றான்.

திருமங்கை மன்னன்  பாடுகிறார்:

‘ எங்கானும் ஈது ஒப்ப ஒரு மாயம் உண்டோ?

நர நாரணன் ஆய், உலகத்து அறநூல்

சிங்காமை விரித்தவன் எம் பெருமான்;

அது அன்றியும், செஞ்,சுடரும் நிலனும்

பொங்கு ஆர்கடலும்,பொருப்பும், நெருப்பும்

நெருக்கிப் புக, பொன் மிடறு அத்தனைபோது

அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்

அளை ,வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தானே!

’இது என்ன ஆச்சர்யம் பாருங்கள்!  நரநாராயணனாய் வந்து வேத நூல் விரித்தவன், சந்திர சூரியர்களையும்,,பூமி, கடல்கள், மலைகள், நெருப்பு ஆகியவற்றைப் பிரளயத்தின் போது விழுங்கி வயிற்றில் அடக்கியவன். இப்பொழுது, எளிமைமிக்க  ஆய்ச்சியரால் தாம்புக் கயிற்றினால் கட்டுண்டு அழுகின்றானே, இது ஏன்?’

சிலப்பதிகாரத்திலும் இந்தக் கேள்வி எழுகின்றது.

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை

மலர்க்கமல  உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’

’மேருவை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை நாணாக்கிப் பாற்கடலைக் கடைந்த கடல் வண்ணனின் கைகள் இன்று யசோதையின் தாம்புக் கையிற்றால் கட்டுண்டு, அவன் செயலற்றுப் பரிதாபக் கோலத்தில் இருப்பது என்ன ஆச்சர்யம்!’

ஆச்சர்யம் ஏதுமில்லை. அவன் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப் பட்டவன், எளிமையாயிருப்பவன்.

இறைவனின் இந்த சௌலப்பிய(எளிமை) குணத்தைத்தான் விரித்துக் கூறும் வியாக்கியானங்கள்.

சிலப்பதிகாரப் பாடலுக்கும், திருமங்கை மன் னன் பாடலுக்கு மிடையே காணும் ஒற்றுமை, தமிழிலக்கியப் பாரம்பரியம் சமயச்

சார்புக்கு அப்பாற்பட்டது என்பதுதான்.

இலக்கியத்தை இலக்கியத்துக்காக இக்கவிஞர்கள் ரசித்தார்களேயன்றி, அவற்றின் சமயச் சார்பு அவர்களைப் பொறுத்தவரையில், அடுத்த நிலைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆழ்வார் பாடல்களில் எத்தனை திருக்குறள் வரிகள்! தொல்காப்பியம் கூறும் அகத்திணையியல் மரபை  ஆழ்வார்கள் போற்றும் விதம் நம்மை வியக்க வைக்கிறது!

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கவிதை ஓவியங்கள்! at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: