கவிதையின் மரணம்

January 17, 2017 § 2 Comments


அமெரிக்காவிலிருக்கும் மூன்றாவது தலைமுறை அமெரிக் கத் தமிழின மூலத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி இரண்டு நாட்களுக்கு முன் என்னைப் பார்க்க வந்தாள். அவள் தாத்தா என்னுடன் அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் (அவர் கணித எம்.ஏ.) படித்தவர். பிறகு கனாடாவில் வின்னிபெக்ப் பல்கலைக்கழகதில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஓய்வுக்குப் பின் மகனுடன் அமெரிக்காவில் வாஷிங்டன்னில் குடியேறிவிட்டார். மகன் டாக்டர். அவருடைய மகள் இவள். பெயர் ஆலிஸா. சொல்ல மறந்துவிட்டேனே, மகன் ஒரு அமெரிக்க-ஐரிஷ் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

என்ன காரணமோ தெரியவில்லை, ஆலிஸாவுக்குத் தமிழ்p பக்தி இலக்கியங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது.. அவள் தாத்தாவுடன் பல ஆண்டுகளாகத் எனக்குத் தொடர்பில்லை. அமெரிக்காவில் வாஷிங்டன்னில் இருக்கும் என் முன்னாள் மாணவர் மூலம் என் தொலைப்பேசி எண்ணைக் கேட்டறிந்து, அவர் என்னுடன் தொடர்பு கொண்டு அவருடைய பேத்தி என்னைப் பார்க்க வருவாள் என்று சொன்னார்.

ஆலிசா சட்டம் படிக்கும் பெண். இலக்கியத்தைத் தொழிலாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆசையினால் தமிழ் பக்தி இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படிக்க விரும்பினாள்.

நான் கேட்டேன்: ‘ பக்திக்காகவா, இலக்கியத்துக்காகவா?’

அவளுக்குப் புரியவில்லை.

நான் சொன்னேன்:’ பக்தி முத்திரைக் குத்தி பலர் நல்ல இலக்கியக் கருவூலங்களைப் பூஜை அறையில் வைத்துச் அவற்றைச் சிறை செய்து விட்டார்கள். நீ கத்தோலிக் என்பதால், பக்திதான் உனக்கு இவற்றைப் படிக்க முக்கியக் காரணமாக இருக்கக் கூடும்’

‘ நான் இவற்றை இவற்றின் இலக்கிய நயங்களுக்காகப் படிக்க விரும்புகின்றேன். இன்னோரு விஷயம், எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது.’

‘குட்! இலக்கிய நயங்களுக்காகப் படிக்க விரும்பினால், மொழிபெயர்ப்பில் படிக்காதே. மூலமொழியைக் கற்றுக் கொண்டு படி. ஒரு நல்ல கவிதையின் மொழிக் கலாசாரமும்.,அதைப் பேசுகின்ற மக்களுடைய சமூக க் கலாசரமும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க இயலதாவறு அமைந்திருப்பதுதான் இயற்கை.. ஒரு நல்ல கவிதையின் உள்ளீடாகப் பாம்பரிய இலக்கிய, சமூகப் பண்பாட்டு நயங்களை ரஸிக்க வேண்டுமென்றால் மூலத்தில்தான் படிக்க வேண்டும்’

‘ ஏ.கே.ராமானுஜத்தின் மொழிபெய அதைர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

நான் சிறிது நேரம் பேசாமலிருந்தேன்.

’ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? அவர் மொழிபெயர்ப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லையா?’ என்றாள் ஆலிஸா/

‘அவர் மொழிபெயர்ப்பில், மூல ஆசிரியர்களைக் காட்டிலும் ராமானுஜம் என்கிற இந்தோ-ஆங்கிலியக் கவிஞர்தாம் அதிகம் தென்படுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. சரி, நான் ஒரு தமிழ்க் கவிதை சொல்லுகிறேன். திருமங்கைமன்ன்ன் பாட்டு. ‘பெரிய திருமொழி’ யில் வருகிறது. முதலில் தமிழில் சொல்லி பிறகு பொருளை விளக்குகிறேன். இதை ஆங்கிலத்தில் , இலக்கிய நயப் ,பண்பாட்டுச் சேதாரம் ஏதுமின்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமா என்று சொல்.’ என்றேன் நான்.

‘சொல்லுங்கள்’

நான் சொன்னேன்:

ஒளியா வெண்ணெ யுண்டானென்

றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்

விளியா ஆர்க்க ஆப்புண்டு

விம்மி யழுதான் மென்மலர்மேல்

களியா வண்டு கள்ளுண்ணக்

காமர் தென்றல் அலர்தூற்ற

நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்

நறையூர் நின்ற நம்பியே.

 

‘கிருஷ்ணனைப் பற்றி உனக்குத் தெரியுமா?’ ஹரே ராமா ஹரே கிருஷ்ண வைச் சேர்ந்த கிருஷ்ணன் இல்லை. இவன் இலக்கியக் கதாபாத்திரம் கிருஷ்ணன்., பக்தி ‘கல்ட்’ டைச் சார்ந்தவன் இல்லை.

வெண்ணெயை ஒவ்வொரு வீட்டிலும் கள்ளத்தனமாகத் திருடி உண்கின்றான் என்பதற்காக அந்தக் கிருஷ்ணன் என்ற குழந்தையை மத்தினால் லேசாகத் தட்டி, உரலில் கயிற்றினால் கட்டிப்போட்டு விடுகிறாள் அவன் தாய் யசோதை. அவன் அழுகிறான்.

இது எங்கே நடக்கிறது?

திருநறையூரில். திருநறையூர் என்பது இப்பொழுது நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

திருநறையூர் காட்சியை எடுத்துக் காட்டுகிறார் கவிஞர். இது சங்ககாலப் பாட்டுப் பாரம்பரியத்தில் வரும் காட்சி.

வண்டு ஒவ்வொரு மலருக்குள்ளும் சென்று தேன் உண்கிறது. வண்டுவின் சேர்க்கையில், மலர்கள் மலருகின்றன.

இந்தக் காட்சியக் காணும் இன்பம் தரும் தென்றல் காற்று,,, வண்டோடு கலந்து. மலர்கள் இக்கூட்டதினால் ’பெறுகின்ற,’ நறுமணத்தை ஊரெங்கும் பரப்புவதின் மூலம்,  வண்டு-மலர்கள் காதல் வைபவத்தை அறிவித்து விடுகறது.  ‘அலர் தூற்ற’ என்கிறார் கவிஞர். ‘அலர்’ என்பது, சங்க்காலப் பாடல்களில் அகத்திணையில் பயின்று வரும் சொல். தலைவிக்கும் தலைவனுக்குமிடையே ஏற்படும் அந்தரங்கமான காதல் பற்றி ஊர் அறிவது ‘அலர்’. ‘அலர்’ என்றால் ‘மலர்’’ மலரின் நறுமணம் போல்,, தலைவந் தலைவிக்குடையே உருவாகும் காதல் உறவு ஊரெங்கும் பரவுகிறது.

கவிஞர், முல்லை மலரைத் தலைவி ஆக்கி விடுகிறார். ’வண்டு’ தலைவன்.‘அலர்’’ (ஊரார் பேச்சு) திருமணத்துக்கு இட்டுச் செல்லும். ஆகவே தலைவிக்கு ‘அலர்’ குறித்து மகிழ்ச்சிதான்.. திருமங்கைமன்னன்  இதை அழகாகப் புலப்படுத்துகிறார். தென்றல் ‘அலர் தூற்றுவதை’, அறிந்து,  ‘நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்’ என்கிறார்.’.

வீடு வீடாகச் சென்று கண்ணன் வெண்ணெயைத் திருடுவது,, இளம் பெண்களின் உள்ளங்களைத் திருடுவது போல. இந்த இரண்டு காட்சிகளையும் அற்புதமாக இணைத்துக் காட்டுகிறார் கவிஞர்.

இந்தப் பாட்டை இந்த நயங்கள் அனைத்தும் புலப்பட எப்படி மொழிபெயர்ப்பது? ’

நான் சொல்லி முடித்ததும் ஆலிஸா சொன்னாள். ‘ பின் இணைப்பாக இதை விளக்கிச் சொல்ல் முடியும்’

’அப்படியானால், இது கவிதையாக இருக்காது. ‘தீஸிஸ்’ ஆகிவிடும். அதுதான் கவிதையின் மரணம்’ என்றேன் நான்.

Advertisements

§ 2 Responses to கவிதையின் மரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கவிதையின் மரணம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: