உருவு நிறுத்த காம வாயில்

January 14, 2017 § Leave a comment


‘உருவு நிறுத்த காம வாயில்’ என்றால் தெரியுமா?

’அழகு’ என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது. ஆகவே ஒத்த மன அலைவரிசையில் இருக்கும் இருவருக்கு ஒருவரையொருவர் பார்த்தவுடனேயே, ஒருவர் கண்ணுக்கு மற்றவர் அழகு பிம்பமாகத் தெரியக்கூடும். மற்றவர்களுடைய விமர்சனங்களுக்கு இங்கே இடமில்லை. இந்நிலையில் இருவரும் ஒருவர்மீது ஒருவர் காதல் கொள்ளுகின்றனர்.

இதைத் தொல்காப்பியம், ‘ உருவு நிறுத்த காம வாயில்’ என்கிறது. காதல் ஏற்பட்டதும், ஒருவரை ஒருவர் விழைந்து பழகத் தொடங்குவதை ‘இயற்கைப் புணர்ச்சி’ என்கிறது தொல்காப்பியம்.

ஆகவே காதல் கொள்ளுவதற்கு அடிப்படைத் தேவை புற அழகு. அது முன் கூறியபடி, பார்க்கின்றவர்கள் பார்வையைப் பொறுத்த விஷயம்.

பேராசிரியர் பி.டி. ராஜு ‘இந்திய உளவியல்’ என்ற நூலில், கருநீலம், காமச்சுவைக்கும்( erotic) தொடர்புண்டு என்று கூறி அதனால்தான், திருமாலை அச்சுவையோடு இணைத்து நம் புராணங்கள் பேசுகின்றன என்று கூறியிருக்கிறார்.

திருமங்கையாழ்வார் ‘திருநெடுந்தாண்டகத்தில்’ நாயகி நிலையில் ( பரகால நாயகி) பாடியிருப்பது ஓர் அற்புதமான பாசுரம்.

‘மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ

மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட

எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே

இருவராய் வந்தார், என்முன்னே நின்றார்

கைவண்ணம் தாமரை, வாய் கமலம் போலும்

கண்ணிணையும் அரவிந்தம், அடியும் அஃதே

அவ்வண்ணத் தவர் நிலைமை கண்டும், தோழீ

அவரை நாம் தேவரென் றஞ்சினோமே ‘

மனிதனைத் தெய்வமாக்க, தெய்வம் மனிதனாக வருவதுதான் ஆழ்வார்களுக்குப் பிடித்த கருப்பொருள். ஆழ்வார்ப் பாடல்களில் தோய்ந்த கம்பனால், இராமன் இராவணனைக் கொன்றவுடன், ‘மானுடம் வென்றதம்மா’ என்று பாட முடிந்தது.

இங்குத் திருமங்கைமன்னன் பாடல் காதலனாய் இராமனைக் குறித்த பாடல். இதுவே வித்தியாசமான அணுகுமுறை. ‘அறம்’ என்றால் உடனே நம் கண் முன் நிற்பவன் இராமன். ‘காதல்’ என்றதும் குழலூதும்

கண்ணனின் முகம் தெரியும்.

ஆனால், இங்கு, நாயகி பார்க்கும் தலைவன் இராமன். அவன் ஏகப் பத்னி விரதன் ஆயிற்றே, சீதையைத் தவிர வேறு யாரையாவது அவன் ஏறெடுத்துப் பார்ப்பானா என்பது நியாயமான கேள்வி.

இங்கு நாயகி யார்? நம்மாழ்வார் காதலியாக ஆனால் அவர் பராங்குச நாயகி. திருமகளின் அம்சம். அதே மாதிரி, திருமங்கைமன்னன் காதலியாக ஆகும்போது அவர் பரகாலநாயகி. திருமகளின் அம்சம். சீதை யார்? அவளும் திருமகளின் அம்சம்தான். ஆகவே இராமனின் ஏகப் பத்னி விரதத்துக்கு எந்தப் பங்கமும் வராது. என்ற நம்பிக்கையுடந்தான் இராமனை இங்குக் காதலனாகக் காட்டுகிறார்.

‘ சுருள்சுருளாய் நறுமணம் மிக்க அடர்த்தியான தலைமுடி பின்னால் தாழ, அந்தக் கறுப்பு நிறத் தலைமுடியை இன்னும் கருமையாகக் காட்டுவது போல் அவன் காதுகளில் ‘பளீரெ’ன்று ஒளி வீசும் மகரக் குண்டலங்கள் அவனுடைய நடைக்குச் சுருதி சேர்பதுபோல் ஆடுகின்றன. அவன் கையில் தீயவரைத் தண்டிக்கும் வில்.’

அந்த வில்லைக் கொண்டுதான் அவன் இராமன் என்று தெரிகிறது. கண்ணனாக இருந்தால் கையில் குழல் இருந்திருக்கும்.

அவன் எப்படி இருந்தான்? ‘ கை வண்ணம் தாமரை.. வாய் கமலம். இரு கண்களும் அரவிந்தம். அடியும் அஃதே’

(அதாவது தாமரையே)

இங்கு வேறு ஏதாவது பாட்டு நினைவுக்கு வருகின்றதா? வர வேண்டும்.

‘தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல்

கமலத் தண்ணல்

தாள் கண்டார் தாளே கண்டார்

தடக் கை கண்டாரும் அஃதே1

‘ஜனகர் அவையில் வந்து கொண்டிருந்த இராமனின் தோள்களைக் கண்டவர்கள் அவற்றின் அழகில் ஈடுபட்டு, அத்தோள்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கமலத்தண்ணல் பாதங்களைப் பார்த்தவர்கள் பதங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தடக் கை கண்டாரும் அஃதே!’

ஆழ்வார்ப் பாசுரங்களில் கம்பனுக்கு எந்த  அளவு ஈடுபாடு இருந்திருக்க வேண்டுமென்று இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கலாம்.

அவர் தனியாக வரவில்லை. ‘இருவராக வந்தார்’. காதலியைக் காணப் போகிறவன் கூட ஒருவனை அழைத்துப் போவானா?

இன்னொருவன் யார்?

காதல் புரிய, மனித நிலையில் இராமனாகவும்,, ஆத்மாவை ஆட்கொள்ளும் பரம்பொருளாகத்

தெய்வநிலையிலும் வந்தான் என்று விளக்கம் கூறுவார்கள்.

உரைகாரர் கூறும் இன்னொரு பொருள்தான் பொருத்தமாகப் படுகிறது.

கூட வருகின்ற இன்னொருவன் இலக்குவன் என்கிறது வியாக்கியானம். காதல் செய்யப் போகிறவன் தம்பியையும் அழைத்துப் போவானா?

அந்த த் தம்பி யார்? ஆதிசேஷன். ஆதிசேஷன் யார்?

‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனம் ஆம்

நின்றால் மரவடியாம். நீள்கடலுள் என்றும்

புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு.’

திருப்பாற்கடலில் அவன் ‘அறிதுயில்’ கொள்ளும்போது, அவனுடைய படுக்கை ஆதிசேஷன்.

’இருவராய் வந்தார்’ என்றால் தலைவன் படுக்கையுடன் வந்துவிட்டான் என்கிறார் உரைகாரர்.

இறுதி வரியைப் படிக்கும்போது, அதாவது, ’ அவர் தேவர் என்று அஞ்சினோமே தோழி’ எனும்பொது, அவர் இப்பொழுது தேவராக வரவில்லை, மனிதனாகத்தான், பூம்பட்டாக, புல்கும் அணையாக வந்திருக்கிறார் என்பது இன்னும் பொருத்தமாகத் தெரிகிறது.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading உருவு நிறுத்த காம வாயில் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: