அடி மனக் கருமை.

January 10, 2017 § 2 Comments


நான் 1984ல் போலந்து வார்ஸாவிலிருந்து கனடாவுக்குச் சென்றிருந்தேன். கனடியப் பல்கலைகழகங்களில் இந்தியப் பண்பாடு குறித்துச் சொற்பொழிவு ஆற்ற. இந்திய-கனடிய அரசாங்கங்களின் அறிஞர்.பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஏற்பாடு. இதன்படி, ஏர்-இந்தியா ஓர் இலவச பயணச் சீட்டு அளிக்க வேண்டும். அதை அவர்கள் வேண்டா வெறுப்பாகச் செய்வது வழக்கம்.

என் பயணச்சீட்டு வார்ஸா-லண்டன் –நியூயார்க்- ஆட்டொவா என்றிருந்தது.  நியூயார்க்கிலிருந்து ஆட்டோவாவுக்கு ‘பில்க்ரிம்-ஏர்வேஸ்’ விமானத்தில் ஏறிச் செல்ல வேண்டும்.

நியூயார்க்கிலிருந்த ஏர் இந்தியா கவுண்டரில் நான் கென்னடி விமான நிலையத் திலிருந்த ‘டெர்மினல் 2’ க்குப் போக வேண்டுமென்றார்கள்.

நான் பேருந்தில் ஏறிச் சென்றேன். 2 கிலோமீட்டர் தூரம். அங்குப் போனதும், அங்கிருந்த யாருக்கும் ‘பில்க்ரிம் ஏர்வேஸ்’ என்பது எந்த இடத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை. அரைமணி நேரத்துக்குப் பிறகு, ‘ அது அமெரிக்கன் ஏர்வேஸ்’, டெர்மினல் 1ல் இருக்கிறது’ என்று ஒருவர் சொன்னார்.

நான் வெளியே வந்தேன். அப்பொழுதுதான் ஒரு பேருந்து போயிருந்தது. இன்னொன்று வர அரைமணியாகும் என்றார்கள். நான் என்னுடைய கம்பளி சூட்கள் அடங்கிய கனமான இரண்டு பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். தோளில் ஒரு பை வேறு. எனக்கு வயது அப்பொழுது 54.

மூச்சு வாங்கியது. ஜனவரி மாதம். அந்தக் குளிரிலும் வியர்த்தது. மாரடைப்போ  என்ற சந்தேகம். ஏறிச் செல்ல வேண்டிய பாதை. மிகுந்த அசதியுடன், கஷ்டப்பட்டு நடந்து சென்று டெர்மினல் 2 அருகே சென்றதும் அசாத்தியக் களைப்பில்  சற்று  நின்று

பெருமூச்சு விட்டேன்.

‘வான்ட் ஹெல்ப், மான்?’ என்ற குரல் கேட்டதும் திரும்பினேன்.

ஆஜானுபாகுவாக ஒர் உருவம். ஆறரையடி உயரம் இருக்கலாம். ஆப்பிரிக்க-அமெரிக்கர்.

‘எஸ்,தான்க்ஸ்.’

‘எங்கே போகவேண்டும்?’

‘டெர்மினல் 2 . பில்க்ரிம் ஏர்வேஸ்.’

‘கம் ஆன்’.’ என் பெட்டிகளை வாங்கிக் கொண்டார்.

நீண்ட உருவம். ஒரு காலுக்கும் இன்னொரு காலுக்குமிடையே ஓரடி தூர நடையில் அவர் இயல்பாக நடந்து சென்றார். நான் அவரைப் பின்பற்றி ஓட வேண்டியிருந்தது.. வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் அவரைப் பின் தொடர்ந்து செல்வதுதான் என்ற மன உறுதியுடன் ஒடினேன்.

‘பில்க்ரிம் ஏர்வேஸ்’ எங்கோ ஒரு மூலையில் இருந்தது. இருபது பேர்கள்தாம் பயணிக்க க் கூடிய விமானம்.. வழக்கமாக ‘பேஸ் பால் ஆட்டக்காரர்களுக்கென்று அடையாளம் காட்டப்பட்ட விமானம். அதில் சவாரி செய்கின்றவர்களின் சராசரி வயது 22. காருண்யம் மிக்க ஏர் இந்தியா நான் சவாரி செய்ய வேண்டுமென்று அந்த விமானத்தை ஒதுக்கியிருந்தது !

‘செக்-இன் கௌண்டரில் ஒரு பெரிய ‘க்யூ’.!

பெட்டித் தூக்கி வந்தவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் .பர்ஸைத் திறந்தேன். நூறு டாலரைத் தவிர சில்லறை இல்லை.

நான் அவரிடம் என் பிரச்னையச் சொன்னேன்.

‘அதோ ‘பார்’ இருக்கிறது. ஒரு ‘பீர்’ வாங்கிக் கொண்டு  சில்லறை வாங்கி வருகிறேன்’ என்றார் அவர்.

நூறு டாலரை அவரிடம் கொடுப்பதா, அல்லது நானே போய் ‘’பீர்’ வாங்கிக் கொண்டு சில்லறை வாங்கி வருவதா என்ற ஒரு ‘எக்ஸிஸ்டெண்டியல் சிக்கல்’ எனக்கு. பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு அவர் ஓடி விட்டால்?  நூறு டாலர் போனால் போகிறது என்ற தீர்மானத்துடன் அவரிடம் பணத்தை நீட்டினேன்.

அவர் ‘பீர்’ வாங்கிக் கொண்டு நிதானமாக க் குடிக்க ஆரம்பித்தார்!

நான் ‘போர்டிங் பாஸை’ வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தேன்.

அவரைக் காணவில்லை!

என் விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்றார்கள்.

கீழே இறங்கிப் போக வேண்டுமென்றார்கள்.

எனக்கு லேசாகத் தலை சுற்றியது.

சிறிது தூரம் நடந்து, ஒரு நார்காலியில் உட்கார்ந்தேன்.

‘வாட் மான், யு ஆர் ஹியர்! உன் விமானம் கிழே! உன்னைத் தேடிக் கொண்டு நான் சுற்றி அலைகிறேன் !’ எனறார் அந்த ஆப்ப்ரிக்க-அமெரிக்க இளைஞர்!

‘கிழே என்று தெரியும். ஐ ஆம் டெட் டையர்ட்’ என்றேன் நான். நான் அவரை மீண்டும் சந்திப்பேன் என்று நான் நினைக்கவே யில்லை !

‘இந்தா உன் பணம்.’

அவர் என்னிடம் அந்த நூறு டாலர் நோட்டைத் திரும்பித் தந்தார்.

’ என்னிடம் சில்லறை இல்லையே !’

‘தெரியும். என் உதவி இனாம். உன்னைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. ‘ஆல் தெ பெஸ்ட், ஓல்ட் மான்!’

அவர்  திரும்பிச் சென்ற வேகத்தில் அவருடன் என்னால் போட்டிப் போட முடியவில்லை. அவரை நம்பாமலிருந்த என் அடி மனக்

கறுப்பைக் கண்டு எனக்கு வெட்கமாக இருந்தது!

 

 

 

 

Advertisements

§ 2 Responses to அடி மனக் கருமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading அடி மனக் கருமை. at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: