அறுவடை வழி வந்த வழிபாடு.

December 27, 2016 § Leave a comment


தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், மார்கழி மாதம் குளிர்ப் பருவம். காலையில், மஃப்ளரைக் காது வரை இறுகி மூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு(?) செல்பவர்களைப் பார்க்கலாம்.

திருப்பாவை, ஆண்டாள் கண்ணனைக் கணவனாகப் பெறுவதற்காக நோற்ற நோன்பா அல்லது இந்த நிகழ்வுக்கு வேறு ஏதாவது முக்கியத்வம் இருக்கிறதா? திருப்பாவையை ஊன்றிப் படித்தால்தான் இது புரியும். மேலெழுந்த வாரியாகப் படிக்கும்போது, திருமணமாகாதக் கன்னிப் பெண்கள், நல்ல கணவர்கள் வாய்க்கவேண்டுமென்று, சிற்றங் சிறு காலையில், நீராடிவிட்டு, நெய்யுண்ணாமலும்,பாலுண்ணாமலும்,கண்ணுக்கு மை எழுதாமலும், மலரிட்டு முடியாமலும், இத்தகைய சிறு தியாங்களை மேற்கொண்டு, இறைவன் கோயிலுக்குச் சென்று, வழிபாடு செய்வதுதான் இந்த நோன்பு என்ற பரவலான அபிப்பிராயம் நிலவி வருகிறது. காத்யாயனி நோன்பின் தமிழ் வடிவம் என்றும் கூறுவார்கள்.

அப்படியானால், திருப்பாவை நோன்பு சமயச் சடங்கு மட்டுந்தானா என்ற கேள்வி எழுகிறது.

ஆண்டாள், காரைக்கால் அம்மையார், மீரா ஆகிவர்கள் அக்காலத்து இந்தியப் பெண் விழிப்புணர்ச்சியின் பிரதிநிதிகள். அவர்கள் பாடல்கள் அனைத்தும் வேறு ஏதோ செய்தியைக் கூற வந்த குறியீட்டு உருவகங்கள்.

உலகச் சமயச் சடங்குகள் அனைத்துக்குமே விவசாய உட்பொருள் உண்டு என்று சமூக-மானுடவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மனித  நாகரிகத் தொடக்கக் காலத்தில் சமயமல்லாத வேறு காரணங்களுக்காகத் தொடங்கிய நிகழ்வுகள், பிற்காலங்களில் சமயச் சடங்குகளாக மாறிவிட்டன என்பது மார்க்ஸிஸ்ட் இலக்கிய விமர்சகர் கிறிஸ்டஃபர் கால்ட்வெல்லின் கருத்து.

மார்கழி மாதத்தில், நிலங்களில் விதைகள் விதைத்த பிறகு தைமாதத்தில் அறுவடை செய்வதற்காக, உழவர்கள் காத்திருப்பார்கள்.. எப்படி விளையப் போகிறதோ, நல்ல விளைச்சலாக இருக்கவேண்டுமே என்ற ஆர்வமும் நம்பிக்கையும் இருந்து கொண்டே இருக்கும். இதற்குத் தெய்வத்தை வேண்டுவதுதான் மனித இயல்பு. இதற்காகத் தியாகங்களை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். நோன்பு தியாகத்தின் அடையாளம். ‘‘சிலுவையின்றி சிரக் கிரீடம் இல்லை’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.(’ No cross, no Crown’)

இந்திரன் மேகங்களுக்கு அதிபதியாகவும், மழைத் தெய்வமாகவும் கருதப்பட்டான். இந்திரன் மழைக் கடவுளாக வழிபடுதளை எதிர்த்து, மக்களுக்குப் பயன்படுகின்ற மலையை (கோவர்த்தர்ன கிரியை) வணங்கிப் படையல் விழா நிகழ்த்தப் பட வேண்டும் என்று புரட்சி செய்தான் கண்ணன், இதனால் வெகுண்டு, ஏழுநாள் தொடர்ந்து மழையைப் பொழிவித்து மக்களுக்கு இடுக்கண் விளைவிக்க முயன்ற இந்திரனை வெற்றி கொண்டு இந்திரன் ஸ்தானத்தில் மக்கள் மனத்தில் ஏற்றம் கொள்ளுகிறான் கிருஷ்ணன். அதாவது, அதுவரை முழுமுதல் கடவுளாக இருந்த இந்திரனுக்குப் பதிலாக, மனித அவதாராமாகிய கண்ணன் மக்கள் மனத்தில் ஏற்றம் கொள்ளுகிறான். நல்ல அறுவடைக்காக, ஆயர்பாடி மக்கள்  சார்பில் ஆண்டாள் கண்ணனை வேண்டுகிறாள்.

திருப்பாவை இக்கருத்தின் சாரத்தைத்தான் எடுத்துச் சொல்லுகிறது.

மார்கழி மாதத்தில் ’நிலமகள் மடியில்’( நப்பின்னை முலைத்தடத்தில்) வாழ்வாதாரமாகிய நெற்கதிர்(கண்ணன்)) உறங்குகிறது.. அதனை விழித்தெழச் செய்யும் பாடும் பாட்டே திருப்பாவை. இப்பாடல்கள் கண்னனைத் துயிலெழுப்புவது போல் குறியீட்டுக் கோலம் கொள்கின்றன.

திருப்பாவையில் வரும் வரிகளைப் பார்க்கும்போது இது புலனாகிறது.

’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிப்பெய்து,

ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கய லுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப்பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம்….’

ஓவியக் காட்சி அனைய,, கூர்மயான வாள்போல் மின்னும் சொல்லாட்சி

யுடன் மழையாகப் பெய்யும் கவிதை வரிகள் !

ஆண்டாள் சொல்லின் செல்வி. திருப்பாவை முழுவதும் ஒருங்கு சேரப்

படிக்கும்போது, பாட்டின் வேகமும், அருமையானச் சொற்பெருக்கும்

நம்மை மெய் சிலிர்க்கச் செய்கின்றன..

‘ மாதம் முமுறை மழை பெய்ய வேண்டும். நிறைந்த நெர்கதிர்களிடையே

கயல் துகள வேண்டும். பூங்குவளை மலர்களிடையே பொறி வண்டு

எவ்வித இடையூறுமின்றி உறங்க வேண்டும்’ ( இது நாட்டில் நிலவ

வேண்டிய அமைத்திச் சூழ்நிலைக்குக் குறியீடு. )

 

‘ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வ நுருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்,

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,

வாழ வுலகினில் பெய்திடாய்..

இது மற்றொரு ஓவியக் காட்சி. வட்டமாகச் சுழித்துச் சுழித்து மழை

பெய்ய வேண்டும். கருத்த உடலும் ( மேகம்), கையில் ஒளிவீசும் சுதர்சனச்

சக்கரமும்( மின்னல்) , பாஞ்சசன்யம் என்ற சங்கை ( இடி) முழக்கி

சாரங்கம் என்ற வில்லிலிருந்து புறப்படும்! அம்புகளை (மழைத்

தூறல்களை) ப் பொழிவாய்’

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை யுடுப்போ மதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை நெய் வார

கூடியிருந்து…

‘உன் அருளினால், நல்ல விளைச்சல் கண்டால், நாங்கள் பெறும்

சம்மானம் ஒளிவீசும் அணிகலனகள். நல்ல ஆடைகள். பாற் சோறு.

முழங்கை வரை நெய் மணக்கும் அக்காரவடிசில்’

தை மாதத்து அறுவடையை வரவேற்கும் மார்கழி நோன்புதான்

திருப்பாவை.

’கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா” என்று 27ம் பாட்டில் வரும் வரி, ‘கூடாரவல்லி’ யாகி இன்றும் வைணவர்கள் வீடுகளில், மார்கழி 27ம் நாள் ஒரு சமயப் பண்டிகையாகி, நல்ல விளைச்சலின் அறிவிப்பாக, வித்ம்விதமான உணவு வகைகளுடன், பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்ல அறுவடை வேண்டிப் பாடப்பட்ட செய்யுட்கள், சமய வழிபாட்டுத் தோத்திரப்  பாடல்களாக மாறிவிட்டன.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading அறுவடை வழி வந்த வழிபாடு. at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: