ஹே ராம்!

November 5, 2016 § 1 Comment


அது சின்ன தோப்புதான்.பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. நாகலிங்கம், பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அங்குப் போய் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம்.

 

அன்று அவன் அங்குப் போனபோது யாரும் வந்திருக்கவில்லை.

 

தோப்புக்கு அருகே ஒரு சின்ன குளம். அங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தது என்பதுதான் ஆச்சர்யம். நாகலிங்கம், கால்களை அலம்பிக் கொள்ள அந்தக் குளத்தருகே சென்றான்.

 

அவன் திடுக்கிட்டு நின்றான். ஒரு நல்ல பாம்பு படம் பிடித்து ஆடாமல் அசையாமல் குளத்தருகே நின்றது..பாம்பைக் கண்ட பயத்தைக் காட்டிலும், அதன் படத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது என்பதினால் ஏற்பட்ட வியப்புதான் அதிகமாக அவன் முகத்தில் தெரிந்தது. அது ஹிந்தி எழுத்து என்று அவனுக்குப் பட்டது, என்னவென்றுதான் அவனுக்குப் புரியவில்லை.

 

பாம்பைப் பார்த்தால் ஓடக்கூடாது என்று அவனுக்குத் தெரியும். அவனும் ஆடாமல்

அசையாமல் நின்றான்.

 

பாம்பு சிறிது நேரம் கழித்து ‘சர’ ‘சர’வென்று ஓடி மறைந்தது.

 

அடுத்த நாள் அவன் தன்னுடைய பள்ளிக்கூட ஆசிரியரை அழைத்துக் கொண்டு வந்தான். முதலில் அவன் சொன்னதை அவர் நம்பவில்லை.பிறகு அதை நேரில் பார்த்து விடுவதென்று முடிவு செய்து அவனுடன் வந்தார்.

 

பாம்பு அவர்களை ஏமாற்றவில்லை. அதே நேரத்தில், அதே இடத்தில் படம் பிடித்து நின்றது. ஆசிரியருக்கு ஹிந்தி தெரியும். படித்தார். ‘ராம்’.

 

அயோத்தியில் இருக்க வேண்டிய பாம்பு மதுரைப் பக்கத்தில் இந்தச் சிற்றூருக்கு எப்படி வந்தது என்று அவருக்குப் புரியவில்லை. ஒரு வேளை, ராமன் ராமேஸ்வரம் போகும் போது,இந்த ஊருக்கு வந்து இந்தக் குளத்தில் குளித்திருக்கலாம். அதனால்தான், இந்தக் குளத்தில் நீர் வற்றுவதேயில்லை! இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. இப்பொழுது தோப்பாக இருக்கும் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்திருக்கக் கூடும். இந்தக் குளம் ஏன் ஒரு புஷ்கர்ணியாக இருந்திருக்க முடியாது?

 

ராமனை எப்பொழுதும் பிரியாமலிருந்தவன் லக்ஷ்மணன்.அவன் ஆதிசேஷன் அவதாரம். இந்தப் பாம்புதான் லக்ஷ்மணனோ? ஏன் ஹிந்தியில் ‘ராம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது என்பது இப்பொழுது புரிகிறது.

 

இது தேசிய முக்கியத்வம் வாய்ந்த செய்தி. தெய்வ நம்பிக்கையுடைய ஒரு தேசியக் கட்சித் தலைவர்களிடம்  இந்தத் தகவலைச் சொன்னால் இதை எப்படி நாட்டு நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதென்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் இதை நம்ப வேண்டுமே! நாளைக்கு ‘மொபைலில்’ படம் பிடித்து, தில்லிக்குப் போய் அவர்களிடம் காட்டலாம்..

 

“நாகு.. இதைப் பத்தி யாருக்கும் சொல்லாதே.. நாம நாளைக்கு டெல்லிக்குப் போவோம்.. இது ரொம்ப முக்கியமான சமாச்சாரம்.. உன்னோட அப்பாகிட்டே சொல்லி உன்னை நான் கூட்டிண்டு போறேன்..” என்றார் ஆசிரியர் நாகலிங்கத்திடம்.

 

அடுத்த நாள், அதே சமயத்தில், பாம்பு படம் எடுத்து அவர் படம் எடுக்கக் காத்திருப்பது போல் நின்றது. அவர் படம் எடுத்தார். தாமும் அக்கட்சித் தலவர்களில் ஒருவராக ஆகும் வாய்ப்பு நெருங்க்கிக் கொண்டிருக்கின்றது என்ற மகிழ்ச்சியில் அவர் மனம் நிறைந்திருந்தது.

 

தில்லியில் அவர் அக்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். புகைப் படத்தைக் காண்பித்தார். அந்த ஊரைப் பற்றிய ஒர் ஸ்தல புராணத்தை அவரே உருவாக்கி அது கர்ண பரம்பரைச் செய்தி என்றும் கூறினார்.

 

‘ராநாமத்தை’த் தன் படத்தில் தாங்கிய பாம்பு தேசியப் புகழ் பெற்றது. ஆசிரியர் எடுத்த படம் எல்லா தேசியத் தொலைக் காட்சி ‘சானல்’களிலும், பத்திரிகைகளிலும் பிரபலமாகியது.

 

ஒரு குறிப்பிட்ட நாளில் இந்தக் காட்சியைக் காண, தேசிய, சர்வ தேசிய பத்திரிகைக்காரர்களும், புகைப்படக் காரர்களும், அச்சிற்றூரை முற்றுகை இட்டனர்.

 

நாகலிங்கத்தின் படிப்புச் செலவு முழுவதையும் தாம் ஏற்றுக் கொள்வதாக ஒர் தேசியத் தலைவர் அறிவித்தார். ராம நாமம் தாங்கிய பாம்பின் தரிசனம் அவனுக்கன்றோ முதலில் கிட்டிற்று.!

 

மாலை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில், ஒரு ரஜினி படத்தில் அவர் ‘என்ட்ரி’ க்காக, முதல்நாள், முதல் ‘ஷோ’வில், அவருடைய ரஸிகர்கள் காத்திருப்பது போல், எல்லோரும்காத்துக் கொண்டிருந்தனர்.

 

பாம்பு வந்தது. ஆனால் அதன் படத்தில் அரபி எழுத்துக்களால் ஏதோ எழுதப்பட்டிருந்தது!

 

 

 

 

Advertisements

§ One Response to ஹே ராம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ஹே ராம்! at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: