யார் எதிரி, யார் சிநேகிதன்?

October 25, 2016 § Leave a comment


பெரிய பங்களா. முன் புறம் மரம்,செடி கொடி வகைகள். பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் ‘லான்ஸ்’.

‘கேட்’டைத் தள்ளிக் கொண்டு உள்ளே போகவண்டும்.

இந்த மாதிரி வீடுகளில் நாய் இருப்பது சகஜம். ஆனால்’ ‘நாய் ஜாக்கிரதை’ என்ற எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் இல்லை.

அவன் ‘கேட்’டைத் தள்ளிக் கொண்டு போய், சிறிது நேரம் தயங்கி நின்றான்.

உள்புறத்திலிருந்து யாராவது வரக் கூடுமென்ற நம்பிக்கை. வீடு நிசப்தமாக இருந்தது.

அவன் கைக்கெடியாரத்தைப் பார்த்தான். மணி ஏழரை. இந்த நேரத்தில்தான் அவரைப் பார்க்கமுடியும் என்று சொன்னார்கள். மிகவும் ‘பிஸி’யான மனிதர் என்றும் கூறினார்கள். வியாபாரம், அரசியல், சமூகப் பணி, என்று எவ்வளவோ வேலைகள்!!

தொலைபேசி மூலம் ‘அப்பாய்ன்மெண்ட்’ கேட்க எத்தனையோ தடவை முயன்றான். அவர் கிடைக்கவில்லை. அதனால்தான் அவரை எப்படியோ பார்த்துவிடுவது என்ற துணிவுடன் வந்திருக்கிறான்.

அவன் அவரைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் காத்திருக்கும் என்று எதிர்பார்த்தான்.  யாரும் இல்லை என்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு வேளை, தப்பான வீட்டுக்கு வந்துவிட்டோமோ என்று சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.சரியான வீடுதான். வாசலில் அவருடைய பெயர்ப் பலகையைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

அவன் அவர் வீட்டு வாசலில் போய் நின்றான். அழைப்பு மணி எங்கு இருக்கிறது என்று சுற்று முற்றும் பார்த்தான்.

அவனைப் பின்தொடர்ந்து யாரோ வந்திருப்பதை உணர்ந்தான். திரும்பிப் பார்த்தான்.

அவன் இதயத் துடிப்பு அவன் காதில் ஒலித்த.து ஆள் உயரத்துக்கு ஒரு பெரிய ‘அல்சேஷன்’ நாய், குரைக்காமல், அவனைப் பார்த்துக் கொண்டு நின்றது. அவனை அச்சுறுத்துவதற்கு அதன் பார்வையே போதுமென்று அது நினைத்திருக்க வேண்டும். குரைத்துக், குரல் விரயம் செய்ய அது விரும்பவில்லை என்று அவனுக்குத் தோன்றிற்று.

‘சார்’ அவன் குரலைச் சற்று எழுப்பிக் கூப்பிட்டான் சற்றுத் துணிவுடன்

அல்சேஷன் குரைக்கவில்லை! இந்த அ\ப்பாவிப் ஜந்துவால் தன் யஜமானனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அது நினைத்திருக்க வேண்டும்.

அவனை இன்னும் அவமானப்படுத்துவது போல், அது அவன் குரலைப் பொருட்படுத்தவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், தலையைத் திருப்பி வீதியை நோக்கியது.

அவனுக்கு அதிக பட்சம் தெரிந்த ஓர் ஆங்கில கெட்ட வார்த்தையைக் கொண்டு அதைத் திட்டலாம் என்று அவனுக்குத் தோன்றிற்று.

திடீரென்று அது வாலை ஆட்டிக் கொண்டு அவனைத் தாண்டிக் கதவருகே போய் நின்றது.

கதவு திறந்தது. நாய் வரவேற்றது, கட்டைக் குட்டையான கழுத்தில் தங்கச் சங்கிலி தரித்த ஓர் உருவத்தை. இரத்தச் சிகப்பேறிய கண்கள். அடர்த்தியான மீசை. சிங்கப்பூர் லுங்கி. திறந்த மார்பு.

நாய் இப்பொழுது அவனைப் பார்த்துக் குரைத்தது.

‘யார் நீ’ ?

நாயின் குரைப்பு இரைச்சலில், அவர் இந்தக் கேள்வியைக் கேட்டாரா அல்லது நாயின் குரைப்புதான் இந்தக் கேள்வியாய் ஒலித்தது போல் அவனுக்குக் கேட்டதா என்று அவனுக்குத் தெளிவாக விளங்கவில்லை.

’ஐயாவைப் பாக்கணும்’ என்றான் அவன்.

‘வேலை ஒண்ணும் காலியில்லே’.

‘வேலைக்கு இல்லீங்க.. வேற விஷயம்..’

‘என்ன விஷயம்?’

‘உள்ளே போய் பேசலாங்களா?’

அவர் அவனை ஏறிட்டு நோக்கினார்.

அவன் நாயைப் பரிதாபமாகப் பார்த்தான். அது குரைத்துக் கொண்டிருந்தது.

‘பாண்டியா.. வாயை மூடு’ என்று அவர் நாயை அதட்டினார்.

ஒரு காலத்தில் செங்கோலோச்சிய பாண்டிய மன்னர்களுக்கு இந்தக் கதி வர வேண்டுமா என்று அவனுக்குத் தோன்றிற்று.

அவர் அரியணை போல் தோன்றிய ஓர் ஆடும் நாற்காலியில் உட்கார்ந்தார்.

பாண்டிய மன்னர் அவர் காலடியில் படுத்துக் கொண்டார்.

‘என்ன வேணும்/?

அவன் அந்த பெரிய ‘ஹாலை’ச் சுற்று முற்றும் பார்த்தான்.

‘சொல்ல வந்த செய்தியை ஐந்து நிமிடத்தில் சொல்லி விட்டுப் போ’,

காலம் பொன்னானது’, போன்ற வாசகங்கள் பொறித்த காகித அறிக்கைகள். பெரியார் படம் நடு நாயக்மாகப் பெரிய அளவில் இருந்தது.

‘என்ன வேணும்?’ மூன்றாவது தடவையாக அவர் கேட்டார்.

‘உட்காரலாமா?’

‘சரி, உட்காரு.. உன் பேரென்ன?’

‘ராஜூ.’

‘அதென்ன ராஜு, மொட்டையா? ராஜகோபாலனா, ராஜரத்தினமா?’

‘ராஜூதான்,சார், என்பேரு.. நாங்க, சில படிச்ச, இளைஞர்களா சேர்ந்து, கருப்பஞ்சாவ டியிலே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த கல்வி அறிவில்லாத பெரியவர்களுக்குப் ராத்திரிப் பள்ளிக்கூடம் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்..’ என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவர் சிரித்தார்.

‘ஏன் சிரிக்கறீங்க?’

‘’அது என்னப்பா ‘ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெரியவங்க? மரியாதை எல்லாம் பலமாயிருக்கு ! யார் உங்களுக்குப் பணம் தராங்க?’

‘ யார் தருவாங்கன்னு யோசிச்சிகிட்டிருந்தா, ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாது. என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு, தொடங்கிட்டேன். ‘

‘என்கிட்டே பணம் கேக்க வந்திருக்கியா?’

‘இல்லீங்க, நீங்க துவக்கி வைக்கணும். ராசியான கைன்னு உங்க பெயரைச் சொன்னாங்க. அதுக்காகச் சொல்றேன்’

அவன் சொல்வதை ஆமோதிப்பது போல் அவர் புன்னகை புரிந்தார்.

’ நீ என்ன படிச்சிருக்கே?’

‘ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன். ‘

‘கொஞ்சம்னா?’

‘எம்,ஏ.’ அது முக்கியமில்லே. நம் நாட்டிலே கல்வி அறிவு இல்லாமையை ஒழிக்கணுங்கிறது என் ஆசை.. என் மாதிரி இன்னும் நாலைஞ்சு பேரா சேர்ந்து இந்தப் பணியை ஆரம்பிச்சிருக்கோம்.. நீங்க எங்களுக்கு ஆதரவு தரணும்.’

அவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

,நீங்க பெரிய சீர்திருத்தவாதி,பெரியார் பக்தன்னு எல்லாரும் சொன்னாங்க. நாங்க செய்யறது உங்களுக்குப் பிடிச்சிருந்தா, நீங்க வந்து ஆரம்பிச்சு வைக்கணும்’. என்றான் ராஜு.

‘ என்னைச் சாதாரணமா பாக்க வர்ற்வங்க, பணம் பிடுங்கத்தான் வருவாங்க. ‘ஆஸ்பத்ரி கட்டப் போறோம்,பணம் கொடுங்க, கோயில் தேர்த்,திருவிழாவுக்கு நன்கொடை கொடுங்க, வாத்தியாங்க மாநாடு நடத்தப்போறோம்,, பகுத்தறிவு கருத்தரங்கு அது இதுன்னு. நேத்துதான் பிராம்மண எதிர்ப்பு மாநாடுன்னு நாலு பேர் வந்தாங்க. வியாபரத்திலியும் அரசியல்லேயும் இருக்கிறதினாலே எல்லாத்துக்கும் கொடுக்க வேண்டியிருக்குது.. நீ என்ன பிராம்மணப் பிள்ளயா?’’ என்றார் அவர்.

‘இல்லீங்க’.

‘அப்பொ?’

‘எனக்குச்  சாதி கீதியிலேல்லாம் நம்பிக்கை இல்லே.. நாம எல்லாரும் மனுஷ சாதி, அவ்வளவுதான்’.

‘காப்பி குடிக்கறயா?’

திடீரென்று அவர் பேச்சின் திசையை மாற்றியது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘வேணாங்க. நான் காப்பி குடிக்கறதில்லே.’

‘உன் பேர் என்ன  சொன்னே ? ஹாங்.. ராஜு. அப்பா பேரு? நீ எந்த ஊரு?’

‘விருது நகர். படிச்சதெல்லாம் மதுரையிலே. அப்பா என் சின்ன வயசிலேயே போயிட்டாரு. ‘

‘நாயுடு பையன் மாதிரி தெரியுது, பரவாயில்லே. நீ சொல்ல வேணாம். நானும் நாயுடுதான்., அது தெரியுமில்லே? படிச்ச பையன், வேலைக்குப் போகாமெ, இதென்ன ஒடுக்கப் பட்ட இனத்தைச் சேர்ந்த பெரியவங்களுக்கு ராப் பள்ளிக்கூடம் அது இதுன்னுட்டு ? இதெல்லாம் நடக்கிற  காரியமா? கல்யாணம் ஆயிடிச்சா?’

‘இல்லீங்க’

‘அதான்’ என்று பெரிதாகச் சிரித்தார்.

நாய் தலையைத் தூக்கி நிமிர்ந்து அவரைப் பார்த்துவிட்டு, அவனைப் பார்த்துக் குரைத்த்து.

‘ சும்மா இருடாலே !’என்று நாயை அடக்கிவிட்டு, நீ என்ன கட்சி?’ என்றார் பக்கத்திலிருந்த துவாலையினால் முகத்தைத் துடைத்துக் கொண்டே.

‘நான் ஒரு கட்சியுமில்லீங்க.’

‘நீ இதெ பத்தியெல்லாம் யோசிக்கிறதில்லையா?’

‘இல்லீங்க… கட்சி அரசியல்தான் நம் நாட்டைக் குட்டிசுவரா ஆக்கிடிச்சிங்கிறது என் அபிப்பிராயம்.. ஜனநாயகத் தேர்தல்ங்கிறதெல்லாம், சாதியை நிரந்தரமாக்கத்தான்..’ என்றான் ராஜு..

‘ நீ இப்பொ இங்கே நடக்கப் போற பிராம்மண எதிர்ப்பு மாநாட்டைப் பத்தி என்ன நினைக்கிறே?’

அவன் பேசாமலிருந்தான்.

‘ ஏதாவது சொல்லேன். உன்னைக் கடிச்சு முழுங்கிடவா போறேன்?’ என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

‘இது யாரு பிராம்மணங்கங்கங்கிறதைப் பொறுத்த விஷயம்.’

‘புரியலே’

‘ பிராம்மணானா இருக்கிறதுங்கிறது ஒரு மனப்பான்மைதாங்க. நான் உசந்த சாதிங்கிற ஒருவகை இறுமாப்பு. பிறவிக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லீங்க. மத்தவங்க தாழ்ந்த சாதின்னு நினைக்கிற எல்லாருமே பிராம்மணர்கள்னு என் அபிப்பிராயம்’.’

‘ நீ சொல்லறது ஒண்ணும் எனக்கு விளங்கலே.. நான் அவங்ககிட்டே சொன்னேன்,’ நல்லா நடத்துங்க, பிராம்மண எதிர்ப்பு மாநாட்டை, ஆனா ‘அடி, உதை’ ன்னு வன்முறை கூடாது. ‘ சிறுபான்மையா’ இருக்கிறவங்களுக்கு நாம பாதுகாப்புத் தர வேணாம்?’ என்று சொல்லிக்கொண்டே நாயைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார்.

தான் சொல்வதை அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்று ராஜுவுக்குத் தோன்றிற்று.

பிராமணர்கள் எந்த விதத்தில் சிறுபான்மை வகுப்பினர் என்று சொல்ல முடியும்? அவர்களும் தமிழர்கள்தானே? தமிழ்ச் சமூகம் என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு சாதியினரும் , இவர் கூறுகிறபடி பார்க்கும்போது, சிறுபான்மையினர்தானே?

‘என்ன பேசாமலிருக்கே?’ என்றார் அவர்.

‘பிராம்மணர்கள் எந்த விதத்தில் சிறுபான்மையினர்னு என்க்குப் புரியலே..சாதியே அபத்தம்ங்கிறபோது…… ‘

‘ என்ன அபத்தத்தைக் கண்டுட்டே? அது ஒரு அடையாளம். அடையாளம் இல்லாமே மிருக ஜாதிகள்தாம் இருக்கும். பாக்கப் போனா அதுக்கும் அடையாளம் உண்டு. இந்த நாய் இருக்கே இது மிக உசந்த சாதி அல்சேஷன். தெருலெ போற நாயோட இதைக் கூட விட்டுரோவாமா? முஸ்லீம்ஸ், கிறிஸ்துவங்க இவங்களைச் சிறுபான்மைங்கிறாங்களே, அதுக்கு என்ன அர்த்தம்? ‘

’ அவங்க வேற மதங்கிறதினாலே சிறுபான்மையினர்னு சொல்றோம். சாதிக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லே.’ என்றான் ராஜு.

அவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

அப்பொழுந்து உள்பக்கத்த்லிருந்து ஒருவர் வந்தார். பார்ப்பதற்குக் ‘கார்ட்டூன்’ போலிருந்தார். பெரிய தலை சின்ன சரீரம். உடம்பு முழுவதும் திருநீறு..பஞ்சாங்கத்தைப் பார்த்து மழிக்கும் முகம். பிராமணர்.

அவரைப் பார்த்து அவன் வியப்படைந்தான்.

‘என்ன பாக்கிறே? ஐயரு தெனம் பூசை செய்ய வராரு. நான் பெரியார் பக்தன்தான். ஒரு வகையிலே பெரியாரு எனக்கு உறவு கூட.  ஐயரே, தம்பிக்குப் பிரசாதம் கொடுங்க. ’

‘பேஷா! ‘ என்று சொல்லிக் கொண்டே அவர் பிரசாதத்தை நீட்டினார்.

அதை வாங்குவதா, வேண்டாமா என்று யோசித்தான். ஐயரைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.

வாங்கிக் கொண்டான். திருநீற்றை நெற்றியில் பூசிக் கொள்ளவில்லை.

‘ஐயரே, தம்பி அன்னிக்கு வந்தாங்களே அவங்க மாதிரி உங்களுக்கு எதிரி. புரியுதா?’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.

‘ நாயுடுவாள்,. எல்லாம் எனக்குத் தெரியும். உங்களைப் போல உத்தம மனுஷா யார் எதிரி யார் சிநேகிதன்னு பாக்காமெ வாரி வாரி பணம் கொடுப்பேள். உலகத்திலே யார் எதிரி யார்  சிநேகிதன்னு பகவானே பாரதத்திலே சொல்லியிருக்கார்.’ என்றார் ஐயர்.

ஐயர் இவ்வாறு சொல்லிக் கொண்டே உள்ளே போய்விட்டார்.

‘சரி தம்பி.நான் வரேன்.. எங்கே கருப்பஞ்சாவடியா? பணம் வேணுமானாலும் தரேன்.. இன்னொரு விஷயம். ஆறு மாசத்திலே தேர்தல் வருது, உன்னோட ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெரியவங்களை எனக்கு ஓட்டுப் போடச் சொல்லு, புரியுதா?’

‘ நல்லா புரியுது. ஐயாவுக்குத் தொந்தரவு கொடுத்ததற்கு மன்னிக்கவும்.. நீங்க வரணும்னு உங்களை நான் வற்புறுத்தலே. பணமும் இப்பொ தேவையில்லே. வரட்டுமா?’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளியேறினான் ராஜு

பாண்டியன் குரைக்கும் சப்தம் அவன் காதில் விழுந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading யார் எதிரி, யார் சிநேகிதன்? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: