பொன்னியின் செல்வன்

October 24, 2016 § 2 Comments


குடந்தை அரசினர் கல்லூரியைத் ‘ தென்னிந்தியாவின் கேம்ரிட்ஜ்’ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். காரணம், கணித மேதை இராமாநுஜன் அங்குப் படித்தார் என்பது மட்டுமல்ல, இரண்டும் நதிக்கரை ஓரத்தில் இருந்தன. குடந்தைக் கல்லூரி காவிரிக் கரையில். காவிரி அப்பொழுதெல்லாம், ஆண்டு கோடைக் காலத்தில் மூன்று மாதங்களைத் தவிர, மற்றைய மாதங்களில் பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடும், இரண்டாள் ஆழத்துக்கு.

கல்லூரியில் ‘படகு கிளப்’ (Canoe Club) இருந்தது. அந்தக் கிளப்பில் அங்கத்தினர்களாக இருக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை படகில் கும்பகோணத்தினின்றும் திருச்சிப் போவார்கள்.

நான் கல்லூரியில் சேர்ந்ததும் இந்தக் கிளப்பில் அங்கத்தின்னாகச் சேர வேண்டுமென்ற ஆசை. ஆனால் அங்கத்தினராகச் சேர குறைந்த பட்ச தகுதி நீந்தத் தெரிந்திருக்க வேண்டும். என் சின்ன வயதில் என் ஜாதகத்தைக் கணித்த மூக்குப் பொடி ஜோஸ்யர் எனக்குத் தண்ணீரில் ஒரு கண்டம் இருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். அவர் எந்தத் ‘தண்ணீரை’ச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் என் அம்மா நான் காவிரிப் பக்கம் தலை வைத்துப் படுப்பதைக் கூட தடுத்து

நான் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் வாரத்தில், படகுக் கிளப் பக்கம் போனேன். அதன் பொறுப்பாளர் அம்மாவாசை என்பவர். ஆறடி உயரத்துக்கு ஆஜானுபாகவராக இருப்பார். ’அல்லை ஆண்டு அமைந்த மேனி’. அவருக்கு என்ன வயது வேண்டுமானாலும் சொல்லலாம்.  முப்பதும் சொல்லலாம், ஐம்பதும் சொல்ல்லாம். அவரைப் பற்றிய மர்மங்களில் இதுவுமொன்று.

நான் போனபோது, அவர் புகையிலையைக் கையில் தேய்த்துக் கொண்டிருந்தார்.

‘நான் அவர் அருகில் போய் நின்றேன்.

அவர் என்னை ஏற இறங்கப்  பார்த்தார்,

‘என்ன தம்பி வேணும்?’

‘ கானோ கிளப் மெம்பராகணும்’

அவர் புகையிலையை வாயில் அடக்கிக் கொண்டார்.

‘நீஞ்சத் தெரியுமா?’

‘தெரியாது. நீங்கதான் கத்துத் தரணும்..’

சிறிது நேரம் மௌனம்.

‘நான் கத்துத் தருவேன்னு யார் சொன்னாங்க?’

‘என் அண்ணன்’ . பெயரைச் சொன்னேன்.

’காம்ரேடா? அவர் நல்லா நீஞ்சுவாரே, உனக்கு ஏன் தெரியாமே போச்சு.?’

‘கண்ட’ த்தைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அவர் என் அண்ணனைக் ‘காம்ரேட்’ என்று சொன்னபிறகு ‘கண்ட’த்தைப் பற்றிச் சொல்வது எனக்குப் பொருத்தமாகப் படவில்லை.

‘’தண்ணியிலே குதி. வேட்டியை வீசி எறி முதல்லே. கோமணம் கட்டியிருக்கியா?’

‘நிஜார் போட்டுண்டிருக்கேன்’

நான் எதிர்பாராத சமயத்தில் என்னைத் தூக்கி காவிரியில் எறிந்தார்.

அசந்து போய் நான் கைகளையும் கால்களையும் ஆட்டினேன்.

;இதுதான் தம்பி நீச்சல். உன் உசிரைக் காப்பாத்திகணும்னு

தோணுது இல்லே.? இதோ நான் வரேன்..’

இரண்டு வாரங்கள் ஆனவுடன் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது

அந்த இரண்டு வாரங்களும் அம்மாவாசை கூடவே நீந்திக் கொண்டு வருவார்.

ஒரு நாள் நான் போது அவரில்லை. நானே தண்ணீரில் இறங்கினேன்.

நீந்திக் கொண்டே போனேன். அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி ‘இதற்கு மேல் போகாதே. போகணும்னா எப்படிப் போகணும்னு நான் அப்புறம் சொல்லித் தரேன்’ என்று கூறீயிருந்தார்.

அன்று அந்த ‘லட்சுமணன் ரேகை’யைத்தாண்டிப் போய் அம்மாவாசையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று.

போனேன்.

அப்புறம் நினைவில்லை.

கண்களைத் திறந்த போது படகுக் கிளப்பில் ஒரு ‘பெஞ்சியில் என்னைப் படுக்க வைத்திருந்தார்கள் என்று தெரிந்தது.

‘நான் அங்கே சுழி இருக்கு, போகாதேன்னு சொன்னேன் இல்லே, நல்ல வேளை நான் அந்தப் பக்கம் வந்தேன், பொழைச்சுகிட்டே’ என்றார் அம்மாவாசை.

‘பிஸிகல் டைரக்டர்’ பாபநாசமும் அங்கிருந்தார்.

‘உனக்கு முதல் தண்டனை. இந்த வருஷம் நீ கானோ கிளப்பிலே சேர முடியாது. அது வரைக்கும் நீஞ்சக் கத்துக்க,. அம்மாவாசை உன் உசிரைக் காப்பாத்தினாரு.’ என்றார் அவர்.

அங்கு அப்பொழுது அங்கு வந்திருந்த என் நண்பன் தேசிகன்

சொன்னான்;’ ’நாளைக்கு ஆத்திலே பத்து ரூபா வாங்கி அம்மாவாசைக்குக் கொடு.. இன்னிக்கு நீ பொழைச்சுது அவர் புண்னியம்”

அவன் கன்னத்தில் திடீரென்று ஒர் அறை விழுந்தது.

‘காசுக்காடா இந்தப் புள்ளையை நான் காப்பாத்தினேன்னு நினைச்சே? நான் குரு, அவன் என் சிஷ்யண்டா ,பருப்புத் தின்னி..’ என்றார் அம்மாவாசை.

 

 

 

 

 

 

 

 

Advertisements

§ 2 Responses to பொன்னியின் செல்வன்

  • Bala Kumar says:

    Very interesting….nanna irukku…innum ezhudungo ungal kumbakonam oor pathi…ennendral nan ingu ippa kuppai kottugiren…25 varushama…….cauvery veruma thanniye illamal vayathana kizhavi madiri padai padugiradhu…..

  • Nakeeran says:

    Neer thaan asal Ponniyin Selvan !! Comrade / gandam nagaichuvaiyai rasithaen !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading பொன்னியின் செல்வன் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: