கும்பகோணம் சம்பா அரிசி

October 17, 2016 § Leave a comment


  1. 1969. திடீரென்று என் அம்மாவுக்கு நான் குடவாசலில் எங்கள் வயலில் விளையும் அரிசியை நான் தில்லியில் சாப்பிட வேண்டுமென்று என்ன காரணத்தினாலோ தோன்றியிருக்கிறது. அப்பொழுதெலாம் கும்பகோணத்திலிருந்து தில்லிக்கு அரிசி வர வேண்டுமென்றால், தில்லி ராஜ்ய நிர்வாகமும், தமிழ் மாநில அரசாங்கத்தின் அநுமதியும் வேண்டும்.

தில்லியில் ஜனசங்கம் ஆட்சி, தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி. ஜனசங்கம் அரசாங்கம் ஹிந்தியில்தான் அநுமதி வழங்கும். தமிழ்நாட்டு அரசாங்கம் ஹிந்திக் கடிதங்களை ஏறிட்டும் பார்க்காது. ஜன்சங்கம்  ஹிந்தி மூலத்தின் ஆங்கில் மொழிபெயர்ப்புக் கடிதங்கள் அனுப்புவதில்லை என்ற உறுதி பூண்டிருந்த்து.

என் அம்மாவுக்கு இதை விளக்கிக் கடிதம் எழுதினேன். பாஸ்மதி அரிசி குடவாசல் சம்பாவுக்கு நிகரானதென்றும் எழுதினேன்.

அம்மா கேட்கவில்லை. ‘இதுதான் என் கடைசி ஆசை’ என்று emotinal blackmail செய்தார்.

தில்லி அர்சாங்கப் பணியில் ரகுராமன் என்ற தமிழர் ஆட்சிப் பணியில் இருந்தார். அவர் மனைவி உத்தரப்பிரதேசம். அவரைப் போய்ப் பார்த்தேன்.

‘பாஸ்மதி அரிசி சம்பாவைவிட எவ்வளவோ உயர்வு’ என்றார் அவர்.

‘இது எது உயர்வு, எது தாழ்வு என்ற பிரச்னையே இல்லை. என் அம்மா கும்பகோணத்திலிருந்து ஒரு மூட்டை சம்பா அரிசி அனுப்புவது என்று தீர்மானித்து விட்டார்.. ஜன்சங் அரசாங்கத்தின் மொழிக் கொள்கைப் பற்றியோ, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மொழிக் கொள்கைப் பற்றியோ அவருக்குக் கவலை இல்லை’ என்றேன் நான்.

அவர் என்னுடைய இலக்கிய நண்பர். ஹிந்தி இலக்கிய நூல்களும் நிறையப் படித்திருந்தார். அதனால்தான் கான்பூர் பெண்ணுடன் காதல் கல்யாணம். அவர் எப்படியோ சமாளித்து அநுமதி வாங்கிக் கொடுத்துவிட்டார்.

என் துரதிர்ஷ்டம் அப்பொழுது, புதுதில்லி குட்ஸ் யார்ட் அலுவலகம் தாற்காலிகமாக குதப்ரோடிலிருந்த்து. ‘ ஏன் துரதிர்ஷ்டம் தெரியுமா? குதப் ரோட் புதுதில்லியின் ‘சிவப்பு விளக்கு’ பிராந்தியம். கீழே கடைகள். மாடிகளில் இசையும், நடனமும். தரகர்கள் நடமாட்டமும் நிறைய உண்டு. ‘வேறு யாரையாவது அனுப்புங்கள், நீங்கள் போக வேண்டாம்’ என்றாள் என் மனைவி.

‘ஏன் பயமாக இருக்கிறதா?’

‘சே1  நீங்கள் அவ்வளவு கேவலமானவர் இல்லை என்ற நம்பிக்கை லேசாக இருக்கிறது’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.

நான் துணிந்து அக்டோபர் மாதத்து இளம் வெய்யிலில் குதப் ரோடுக்கு ஒரு ஆட்டோவில் குதப் ரோடுக்குப் புறப்பட்டு விட்டேன்.

‘குட்ஸ் யார்ட்’ அலுவலகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருந்தது. ஒரே ஜன நெரிசல். வியர்வை நறுமணம். மூட்டைகள். குட்ஸ் யார்ட் பணியாளர் (வயதானவர், சர்தார்), நான் கொடுத்த ரசீதை வாங்கி மேலும் கீழும் பார்த்தார்.

‘சாமான் கியா ஹை?’

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

‘சாவல்’ (அரிசி)

‘மதராஸ் சாவல் அச்சா ஹை?’

‘ பர்வா நை. என் கிராமத்திலிருந்து”

‘அச்சா, டீக் ஹை. காடி ஹை?

‘இல்லை. ஆட்டோ இங்குக் கிடைக்குமா? நான் வந்த ஆட்டோவை அனுப்பிவிட்டேன்.’

‘ டெம்போவில் போங்கள்.என் மைத்துன்ன் டெம்போ இருக்கிறது.

‘ நான் உட்கார இடம் இருக்குமா?’

‘அவன் பக்கத்தில் உட்காருங்கள். எங்கே போக வேண்டும்?

‘டிஃபன்ஸ் காலனி’

‘ அச்சா. நாற்பது ரூபாய் கொடுங்கள். அவனுக்குப் பத்து ரூபாய் கொடுங்கள், பக்‌ஷீஸ்.

‘ அவன் வண்டிதானே?’

‘இல்லை என் வண்டி. ரெயில்வே சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?’

அவர் மைத்துனன் ஆறரை அடி உயரம். வாட்ட சாட்டமாக இருந்தான்.

’பார்த்தீங்களா, அவனை? பஹல்வான். ஒரே அடியில் எதிரியை வீழ்த்திவிடுவான். சினிமாவில் சேர ஆசை. தாராசிங் மாதிரி. உங்களுக்குச் சினிமாவில் யாரையாவது தெரியுமா?’

‘ நான் கல்லூரி ஆசிரியர்.’

‘ அரே பாப்! முப்பதைந்து ரூபாய் கொடுங்கள் போதும்.”

என் மனைவி அடிக்கடிக் கூறுவது போல் என் முகத்தில் மற்றவர்கள் அநுதாபம் கொள்ளும்படியான களை இருந்ததா தெரியவில்லை.

‘ஷூக்கிரியா,(நன்றி) சர்தார்ஜி’ என்றேன் நான்

அவர் என்னைக் கட்டிக் கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘டெம்போ’ பின் பக்கம் திறந்த நிலையில் ‘ட்ரக்’ மாதிரியிருந்தது. ஓட்டுநர் இருக்கைக்குப் பக்கத்தில் வேறு இருக்கை எதுவும் காணோம்.

‘நான் எங்கே உட்காருவது?’ என்று பயில்வானைக் கேட்டேன்.

‘என் பக்கத்தில்’.

எனக்குத் தூக்கி வாரிப் ஓட்டது

ஆறரை அடி உயரத்துக்கு வாட்ட சாட்டமாக இருக்கும் பயில்வான் பக்கத்தில் உட்கார இடம் எங்கே இருக்கும்?

‘நான் ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு பின்னால் வருக்றேன்..’ என்றேன் நான்.

‘நை. என்னுடன் வாருங்கள். பேசிக் கொண்டே போகலாம்’. நான் நின்று கொண்டே வண்டி ஓட்டுவேன், கவலைப் படாதீர்கள்.’

அவனுடன் என்ன பேச முடியுமென்று எனக்குப் புரியவில்லை. அவன் பஞ்சாபி கலந்த ஹிந்தியில் பேசியதும் புரியவில்ல்ல்.

நான் டெம்போ பின்னால் என் அரிசி மூட்டையுடன் வருவதற்கு நான் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு சம்மதம் அளித்து விட்டான்.

டெம்போ ஈரமாக இருந்தது.

நான் உட்கார முடியவில்லை. நின்றுகொண்டே போனேன்.

டிஃபன்ஸ் காலனி, ஒரு ‘பாஷ்’ இடம். அங்கு நான் ஒரு திறந்த டெம்போவில் போய் இறங்கினால், எத்தகைய விமர்சனத்துக்குள்ளாகும் என்று நினைக்க பயமாக இருந்தது. ,

‘ ஸாப். எனக்குச் சினிமாவில் சான்ஸ் வாங்கிக் கொடுத்தால், இந்தச் சவாரி இனாம்’ என்று கத்தினான் ஜூனியர் சர்தார்ஜி, வண்டியை ஓட்டிக் கொண்டே.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

‘டிஃபன்ஸ் காலனி’ யில் நல்ல வேளை யாரும் வீட்டு வாசல்களில் நின்று கொண்டிருக்கவில்லை.

என் மனைவிதான் நின்று கொண்டிருந்தாள்!

என்னை எரித்து விடுவள் போல் பார்த்தாள்.

‘உங்களுக்கு ஆட்டோ கிடைக்கலியா? எப்படி இப்படி வரணும்னு உங்களுக்குத் தோணித்து?’

‘ வாழ்க்கையிலே எல்லாத்தயுந்தான் அநுபவிச்சுப் பாக்கணும்! சர்தார் ஒரு ‘இண்டெரெஸ்டிங்’ சர்தார். சினிமாவிலே சேரணுமாம், தாரா சிங் மாதிரி. பயில்வான்’..

‘அதான் பயந்துண்டு அவன் சொல்றபடிக் கேட்டுண்டு, ஓபன் டெம்போ பின்னாலே நின்னுண்டு வந்தேளா?’

‘ஒரு எக்ஸ்பிரீயன்ஸ்’’

என் மனைவி அவனுக்குக் குடிக்க ‘டீ’ கொடுத்தாள்’

அவன் அதை எதிர்பார்க்கவில்லை.

‘ஷுக்கிரியா,, பெ (ஹ்)ஞ்சி’ என்றான் உண்மையான மகிழ்ச்சியுடன்

பயில்வானுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தேன்.

‘அவன் ஐந்து ரூபாய் திருப்பிக் கொடுத்தான்.

‘இல்லை.நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’’

‘ நை சாப். பேசினால் பேசினபடிதான்; என்றான் சிரித்துக் கொண்டே

’கடைசி ஆசை’ என்று என் அம்மா சொன்னது சரியாகப் போய்விட்டது. என்னுடன் தங்க தில்லி வந்தவர் ஒரு வாரத்தில், திடீரென்று போய்விட்டார்..

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கும்பகோணம் சம்பா அரிசி at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: