எதிர்பாராத பரிசு

October 10, 2016 § Leave a comment


காலை உணவுக்கு எங்களை அழைத்திருந்தார் அம்மாநில முதலமைச்சர். எட்டரை மணிக்கு வரும்படிச் சொன்னார் அம்மாநிலத்துக் கலாசாரத் துறை செயலர். விருந்து முதலமைச்சர் தலைநகர் வீட்டில்.

‘தலைநகர் வீடு’ என்று குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் எப்பொழுதுமே காவி உடைத் தரித்த அம்முதலமைச்சர், புற நகரில் ஓர் ஆஸ்ரமத்தில்தான் எப்பொழுதும் வாசம் என்றார்கள். அரசாங்க உயரதிகாரிகள் ஃபைல்கள் சகிதம் அங்குதான் சந்திப்பார்கள் என்றும் கூறினார் பொது ஜனத் தொடர்பு அதிகாரி.

‘எங்களை’ என்றால் நாங்கள் யார் யார் என்று சொல்ல வேண்டும். 1988ல், மத்திய , அரசாங்க மனித வள மேம்பாட்டுத்துறை,, அரசாங்கம் சார்ந்த கலாசார நிறுவனங்கள்( சாகித்திய அகதெமி,சங்கீத நாடக அகதெமி, லலித் கலா அகதெமி, தேசிய நாடகப் பள்ளி முதலியன) எப்படி இயங்குகின்றன, அவை இன்னும் சிறப்பாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று ஆராய ஒரு உயர்மட்டக் குழுவை, இந்திராகாந்தியின் முன்னாள் ஆலோசகர் பி.என். ஹக்ஸர் தலைமையில்அமைத்தது. அதில் என்னைத்தவிர, தேசிய நாடகப் பள்ளி முன்னாள் இயக்குநர், இப்ரஹீம் அல்காஸி, ஓவியர் குலாம் ஷேக், இசையியல் வல்லுநர் டாக்டர் பிரேம்லதா ஷர்மா, இந்திரா காந்தி முன்னாள் செய்தித் தொடர்பு ஆலோசகர் ஷாரதா பிரஸாத்,, மத்தியஅரசாங்க முன்னாள் செயலர் கே.வி.ராமநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தோம்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத் தலைநகரில், கலைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து இது பற்றி அவர்களுடைய கருத்துகளை அறிவது எங்கள் நிகழ்ச்சி நிரல். மேலும், அந்தந்த மாநில முதலமைச்சரையும், ஆளுநரையும் அவர்களுடைய சௌகர்யத்துக்கேற்ப சந்திப்பதும் வழக்கம்.

இதன் தொடர்பாகத்தான், அந்த மாநிலத்துக் காவி உடை முதலைமைச்சர் எங்களை அவர் தலைநகர் வீட்டில், காலை உணவு சாப்பிட அழைத்திருந்தார்.

எங்களை அழைத்துப் போக அரசாங்கக் ‘கார்’ எட்டு மணிக்கே வந்து விட்டது. நாங்கள் அந்த வீட்டுக்குப் போய்ச் சேரும்போது, மணி எட்டே கால்.

அந்தப் பெரிய வீட்டு ‘ஹாலி’ல் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் எதற்காகவோ காத்துக் கொண்டிருப்பவர்கள் போல(Waiting for Godot?) உட்கார்ந்திருந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்ததும், இடைக்கழியில் மாடிப்படிகள். காத்துக்கொண்டிருந்தவர்கள் பார்வை மாடியை நோக்கி நிலை குத்தி நின்றன. எந்தக் கணமும் மாடியிலிருந்து முதல்வர் கீழே இறங்கி வரக் கூடும் என்று தோன்றிற்று.

ஹக்ஸருக்கு கண்பார்வை மிக மிகக் குறைவு. ஆனால் அசாத்திய நினைவாற்றல். .ஆறு மணி நேரம் கூட்டம் நிகழ்ந்தாலும், யார் யார் என்ன சொன்னர்கள் என்பதை ஒன்று விடாமல் அவரால் கூற முடியும்.

மணி ஒன்பதாயிற்று. முதல்வர் வருவாரா இலையா என்று தெரியவில்லை. கலைத்துறைச் செயலர் சொன்னர் ‘ தில்லியுடன் பேசிக் கொண்டிருக்கிறார், வந்து விடுவார்

திடீரென்று, அப்பொழுது,‘ஹாலி’லிருந்த அனைவரும் எழுந்து நின்றார்கள். மாடிப்படிகளில், காவி உடையில், கம்பீரமாக, முகத்தில் புன்னகை தவழ, முதல்வர் நிதானமாக இறங்கி வந்து கொண்டிருந்தார்

’ஹாலி’ல் இருந்த அனைவர் முதுகுகளும் வளைந்து, வணக்கத்தைத் தெரிவித்தன..

ஹக்ஸருக்குப் பார்வை குறைவு என்பதால் நான் அவரிடம், ‘முதல்வர் வந்து கொண்டிருக்கிறார்’ என்ற செய்தியைக் கூறினேன்.

கலைதுறைச் செயலர் ஹக்ஸரையும் மற்ற எங்களையும் முதல்வருக்கு அறிமுகப்படுத்தினார். ஹக்ஸரைத் தழுவி வரவேற்ற முதல்வர், மற்ற எங்களை தலை அசைத்து ஒரு புன்னகையுடன் எங்கள் வருகைக்கு ஒப்புதல் அளித்தார்.

‘ஹாலி’ல் நடு நாயகமாக, ஒரு நடுவயதுப் பெண்ணின் பெரிய, மகத்தான ஓவியம், நின்று கொண்டிருக்கும் தோற்றத்தில் இருந்தது.

நாங்கள் அதைப் பார்ப்பதை உணர்ந்த கலைதுறைச் செயலர், ‘ முதலவரின் காலம் சென்ற மனைவி. எங்கள் மாதாஜி.’ என்றார்.

அப்பொழுது ஒருவர் அங்கு அவசரம் அவசரமாக வந்து, ‘ மன்னிக்கவும், நேரமாகி விட்ட்து’ என்று முதல்வரிடம் மன்னிப்புக் கோரினார்.

‘எங்கள் மாநிலத்துத் தலைமைக் கவிஞர்’ என்று கலைதுறைச் செயலர் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஞானபீட பரிசு பெற்றவர் என்பது என் நினைவுக்கு வந்தது.

முதல்வர் திடீரென்று என்பக்கம் திரும்பி, ‘ நீங்க மெட்ராஸ் இல்லையா?’ என்று தமிழில் கேட்டார்.

‘ஆமாம்’ என்றேன்.,

’‘குலேபகாவலி’ எம்.ஜி.ஆர் நடிச்ச படம் பாத்திருக்கீங்களா?’ என்றார் முதல்வர்.

நான் பார்த்ததில்லை. இருந்தாலும், பார்த்திருப்பதாத் தலை அசைத்தேன்.

‘எங்க மொழியிலே இந்தப் படத்தை நான் பண்ணேன். இவர்தான் பாட்டு எழுதினார்.. ஸூப்பர் ஹிட் ஒவ்வொரு பாட்டும். அதனால்தான் இவரை எங்க மொழி யுனிவர்ஸிட்டி வைஸ் சான்ஸலரா போட்டேன்..’ என்று சொல்லிவிட்டு அவரைப் பார்த்தார்..

‘எஸ்.எஸ் எஸ்’ என்று அவர் தலை அசைத்தார்

‘அதொடு மட்டுமில்லே, ராஜ்ய சபா மெம்பரா ஆக்கினேன் ‘

‘எஸ்.எஸ்.எஸ்.’

காலை உணவு சாப்பிடும்போது முதல்வரைப் பற்றி முக்கியமான பல தகவல்களைக் கவிஞர் எங்களிடம் சொன்னர்.

காலையில் மூன்று மணிக்கு எழுந்து விடுவார். காலைக் கடன்கள் முடிந்தவுடன் மூன்று மணி நேரம் பூஜை. அப்புறம் ஒரு தம்ளர் பால். காலை உணவு கிடையாது. விருந்தோபுவாரே தவிர,அவர் சாப்பிட

மாட்டார். இரவு . எட்டு மணிக்குப் பழ உணவு,பால்,அவ்வளவுதான்

சாப்பிடும்போது, கவிஞர் முதல்வரைப் பற்றி எழுதியிருந்த கவிதைகளைப் பாடிக் காண்பித்து, ஆங்கிலத்தில் பொருளும் சொன்னார்.

நாங்கள் சாப்பிட்டு முடிந்தவுடன், ஹாலுக்கு வந்தோம். பள பளப்பான காகித த்தில் நேர்த்தியாக க் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருள் ஒன்றை. முதல்வர் முகத்தில் மந்தகாசத்துடன் எங்கள் ஒவ்வொருவருக்கும் தம் கைப் பட அளித்து வணக்கம் கூறினார்..

நாங்கள் அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்

தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பியதும் பரிசுப்பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தோம்..

வெவ்வேறு அரசியல் பொதுக் கூட்டங்களில், முதல்வர் ஆற்றிய சொற்பொழிவுகளின் திரட்டு! அவருடைய புகைப் படங்கள் ஏராளமாக இருந்தன.

கலை நிறுவனங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட முதல்வரிடம் பேசவில்லை என்பது எங்கள் நினைவுக்கு வந்தது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading எதிர்பாராத பரிசு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: