கடைசிப் பொடி மட்டை’

October 7, 2016 § 1 Comment


நான் கும்ப.கோணம் அரசினர் கல்லூரியில் சேர்ந்தபோது, என் குடும்பம் ,நகர உயர்தரப்பள்ளியின் வடபுறத்திலிருந்த கர்ணக்கொல்லை அக்கிராஹரத்துக்கு இடம் மாறிவிட்டது.. காரணம், என் அத்தை. அது அவர் வீடு. பெரிய வீடு. என் அப்பாவை வற்புறுத்தி அந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். அத்தைக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு நாய் இருந்தது. அது இறந்தபிறகுதான் அப்பா அங்கு அத்தையுடன் இருக்கச் சம்மதித்தார்.

ஒரு பெரிய மாளிகையில்  எங்கள் வீட்டுத் தெருக் கோடியின் எதிர்த்த சாரியில் இருந்தது அந்த பங்களா. ‘பாலாமணி விடு’ என்று சொல்வார்கள். நாடக நடிகை பாலாமணி என்றால், என் அப்பா,,தாத்தா காலத்தில் உலகப் பிரஸித்தம். ‘தாரா சஸாங்கம்; என்ற நாடகத்தில், குரு பத்தினியாகியாகிய தாரா, குரு சுக்கிராச்சாரியாருடைய சிஷ்யனாகிய சந்திரனுக்கு எண்ணெய்த் தேய்த்து விடும் காட்சியைக் காண சென்னையிலிருந்து ‘பாலாமணி ஸ்பெஷல்’  என்ற ஒரு ரெயில் விட்டது, கும்பகோண ஸ்தல புராணச் செய்திகளில் ஒன்று. என்று

என் நண்பன் மூர்த்திக்கும்(இவன்தான் என் நாவல் ‘உச்சிவெயிலி’ல் வரும் மூர்த்தி)  பாலாமணிக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. பாலாமணி கடைசிக் காலத்தில் மிக வறுமையுற்று, சென்னையில் இறநதார் என்பதுதான் வரலாறு. மூர்த்தியும் அவன் பாட்டியுந்தான் அந்தப் பெரிய வீட்டில் இருந்தார்கள். சமைப்பதற்கு வயதான ஒரு தவசிப் பிள்ளை இருந்ததாக என் ஞாபகம். திடீரென்று அவர் வருவார், மறைவார். அவர் ஒரு பேயாகக் கூட இருந்திருக்கலாம்.

அந்த வீட்டில் எத்தனை அறைகள் இருந்தனவென்று மூர்த்திக்கே தெரியுமா என்பதுதான் என் சந்தேகம். பல அறைகள் மூடியேக் கிடந்தன. கூடத்தில் பெரிய ஊஞ்சல்.  ரவிவர்மாவின் மோஹினி உருவம் அதில் உட்கார்ந்து ஆடுவது போன்ற பிரமை எனக்குச் சிற்சில சமயங்களில் ஏற்படுவதுண்டு..

அந்த வீட்டுக் கொல்லைப்புறம் மிகப் பெரியது. நிறையத் தென்னை

மரங்கள். நடுவில் ஒரு பெரிய நீரருவி.  ஆனால் தண்ணீர்தான் இல்லை. நீர் வற்றிச் சோகமாக க் காட்சி அளித்தது.

மூர்த்தியின் பாட்டி ஒரு காலத்தில் மிக மிக அழகாக இருந்திருப்பாரென்று தோன்றியது. பெரிய உருவம். வெண்மையுடன் கூடிய நல்ல சிவப்பு. அறுபது வயது மேலிருக்கும்.. என்னை வாஞ்சையுடன் பார்ப்பாரேயன்றி என்னுடன் ஒரு வார்த்தை பேசியதில்லை.

மூர்த்தியின் வீட்டில் நிறைய இசைகருவிகள் இருந்தன. வீணை, வயலின், மிருதங்கம், தப்ளா, வகைவகையான புல்லாங்குழல்கள்.

‘இதெல்லாம் யார் வாசிக்கிறாங்க?’ என்று ஒரு தடவை அவனைக் கேட்டேன்.

‘யாரானும் எப்பவோ வாசிச்சிருப்பாங்க.. என்பாட்டி வீணை வாசிச்சிருக்காங்க, இப்பொ வாசிக்கிறதில்லே, நான் கொஞ்ச நாள் ‘ஃப்ளூட்டோட’ மன்னாடியிருக்கேன்,வரல்லெ, விட்டுட்டேன்..’’

அப்பொழுதுதான் நான் கே.ட்டேன்: ‘பாலாமணி உனக்கு உறவா?”

‘ஒரு வகையிலே, அவங்க வீடு இது. நாலைஞ்சு கை மாறி என் பாட்டி கைக்கு வந்தது.  இங்கேயிருக்கிற எல்லாமே பாலாமணி அம்மாதுதான். எனக்கு இந்த வீடு பிடிக்கலே. ‘எக்ஸ்டென்ஷன்’லே ஒரு வீடு பிடிச்சு வாடகைக்குப் போகலாமனு பாக்கறேன். பாட்டி பிடிவாதமா இந்த வீட்லேதான் மண்டையைப் போடுவேங்கிறாங்க.’

‘நீ ஏன் வாடகைக்கு வீட்டைப் பிடிக்கணும், பெரிய இந்த வீடு இருக்கிறப்பொ?’

‘இந்த வீட்டை ஒரு ‘பாங்க்’ வாடகைக்குக் கேக்கிறாங்க..நல்ல வாடகை வரும். இரண்டாவது, என் அம்மாவை என் கூ/ட வச்சுக்கணும். என் அம்மா இந்த வீட்டுக்கு வர மாட்டாங்க..’

‘ஏன்?’

‘அந்தக் கதையெல்லாம் உனக்கு வேண்டாம்.., சொன்னாலும் உனக்குப் புரியாது.. ‘

நான் அவனை  வற்புறுத்திக் கேட்க விரும்பவில்லை.

நான் ஒரு நாள் அவனைப் பார்க்கப் போனபோது, அவன் வீட்டில் இல்லை. பாட்டி மட்டுந்தான் இருந்தாள்.

‘மூர்த்தி வெளியிலே போயிருக்கான். எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவியா?/ என்று அவர் கேட்டார்.

‘சொல்லுங்க.’

‘கம்பதி விலாஸ்லே பட்டணம் நெய்ப் பொடி வாங்கிக்கிட்டு வருவியா?’ ‘

’வாங்கிண்டு வரேன்’

‘ தனத்தம்மா கேட்டாங்கன்னு சொல்லு, தருவாரு. கணக்குலே தருவாரு. மூணு மட்டை வங்கிகிட்டு வா’

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெண்கள் பொடி போடுவார்கள் என்று எனக்கு அது வரைத் தெரியாது. பாட்டிக்கு நீண்ட நாசி. இவ்வளவு அழகான மூக்கை ஏன் கெடுத்துக் கொள்ளுகிறாரென்று எனக்குத் தோன்றியது.

சின்ன கடைத் தெருவிலிருந்தது கணபதி விலாஸ் கடை. கடைக்காரர் சுவாரஸ்யமான மனிதர். ஆங்கிலம் பேச முயற்சி செய்வார். ஒரு தடவை என்னைக் கேட்டார்;’ தம்பி, பேரன் பொறந்தா நான் ‘கிராண்ட்ஃபாதரா. கிராண்ட்மதரா? எனக்குப் பேரன் பொறந்திருக்கான்’

என்னைப் பார்த்த்தும் ‘வா தம்பி, எப்படி இருக்கே? நல்லா படிக்கிறயா?’ என்று கேட்டார்.

‘நல்லா இருக்கேன்.. மூர்த்தி பாட்டி, தனத்தம்மா மூணு மட்டை நெய்ப் பொடி வாங்கிண்டு வரச் சொன்னாங்க..’

அப்பொழுது அங்கு ‘பேப்பர்’ படித்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி சாஸ்திரிகள் என்னைக் ‘கேட்டார்: ‘ நீ புகையிலையா, சிகரெட்டா? ‘

‘ அய்யரே, ஓசியிலே பேப்பர் படிச்சாச்சில்லே ? நடையைக் கட்டுங்க’ என்றார் கடைக் காரர்…

நான் அவரை நன்றியுடன் பார்த்தேன்.

மூர்த்தியின் பாட்டியிடம் பொடியைக் கொண்டு போய்க் கொடுத்தேன்.

ஒரு மட்டையையைத்  திறந்து பொடியை லாவகமாக ஒரு வெள்ளி டப்பியில் சேமித்தார்.

ஒரு ‘சிமிட்டா’ எடுத்து மிக நளினமாக அதை மோந்துப் பார்த்தார்..முகத்தில் திருப்தி தெரிந்த்து.

பிறகு கொஞ்சம் பொடி எடுத்து, வலப் பக்க நாசி வழியே உறிஞ்சினார். கண்கள் ஒலிர்ந்தன. ஒரு பட்டுக் கைக்குட்டையினால் மூக்கைத் துடைத்துக் கொண்டார்.

‘மூர்த்தி சிகரெட் குடிக்கிறான்னு எனக்குத் தெரியும். நீ குடிப்பியா?’

‘நான் குடிச்சுப் பார்த்தேன், பிடிக்கலே/

‘நல்ல புள்ளே.. நல்லா படி. இன்னொரு விசயம். மூர்த்தி அவன் அம்மாவைக் கூட்டிக்கிட்டு அந்த வாடகை வீட்டுக்குத் தாராளாமா போகட்டும்.. நான் குறுக்கே நிக்கலே. இது என் வீடு. இங்கேதான் சாவேன்..’

நான் திடுக்கிட்டேன். அவன் என்னிடம் சொன்னது பாட்டிக்கு எப்படித் தெரியும்/?

‘உங்களை விட்டுட்டு அப்படிப் போகமாட்டான், பாட்டி.’ என்றேன் நான்.

‘போகத்தான் போறான், சரி பேச்சை விடு’. என்று புன்னகை செய்தார் அவர்.

அன்றிரவு பாட்டி இறந்து விட்டார் என்று அடுத்த நாள் நான் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மார் அடைப்பு என்றார்கள்.

நான் வாங்கிக் கொடுத்துதான் பாட்டியின் கடைசிப் பொடி மட்டை.

 

 

 

 

 

 

 

Advertisements

§ One Response to கடைசிப் பொடி மட்டை’

  • tkgowri says:

    ‘தாரா சஸாங்கம்; என்ற நாடகத்தில், குரு பத்தினியாகியாகிய தாரா, குரு சுக்கிராச்சாரியாருடைய சிஷ்யனாகிய சந்திரனுக்கு எண்ணெய்த் தேய்த்து விடும் காட்சியைக் காண சென்னையிலிருந்து ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற ஒரு ரெயில் விட்டது, கும்பகோண ஸ்தல புராணச் செய்திகளில் ஒன்று.

    இதை விட குசும்பாக யாராலும் சொல்லி விட முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கடைசிப் பொடி மட்டை’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: