’என்னிடம் எத்தனை ‘டை’ இருக்கிறது?’

October 5, 2016 § 2 Comments


பள்ளிப்படிப்பு முடிந்து நான் குடந்தை அரசினர் கல்லூரியில் சேர்ந்த போது, கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

பள்ளியில் தமிழ் மீடியம். 1945ல், விடுதலைப் பெருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னால், கல்லூரி ஆசியர்கள் தங்கள் ஆங்கில அறிவை மாணவர்களுக்குக் காட்டி அச்சுறுத்த தயங்க மாட்டார்கள்.காரணம், வகுப்பில் கட்டுப்பாடு நிலவுவதற்கும் அது உதவியது. ஆசிரியர்களைக் காட்டிலும் ஆங்கிலத்தைக் கண்டு மாணவர்கள் பயந்தார்கள்.

பள்ளியில், மாணவர்கள் ஒரே அறையில் இருக்க, வெவ்வேறு பாட ஆசிரியர்கள்,அவர்கள் அறைக்கு வருவார்கள். ஆனால், கல்லூரியில், ஒவ்வொரு பாடத்துக்கும், ஆசிரியரைத் தேடி மாணவர்கள் போயாக வேண்டும். இது ஒரு வகையான கலாசார அதிர்ச்சியாக இருந்த்து.

கணித ஆசிரியர் என்றால், என் கற்பனையில் தோன்றியவர், நெற்றியில் திருநீறோ, நாமமோ துலங்க, தலையில் தலைப்பாகையுடன் காட்சி அளித்தார். ஆனால் கணித ஆசிரியரை முதல் வகுப்பில் பார்த்ததும், என்ன்னால் நம்ப முடியவில்லை!

ஆறடி உயரம். சூட் அணிந்திருந்தார். அதுவும் ‘த்ரீ பீஸ் சூட்’. கண்ணைக் கவரும் ‘டை’. பெயர் சம்பந்தம் பிள்ளை.

கல்லூரியிலேயே அவர்தான் பணக்காரர் என்று தோன்றியது. காரில் வருவார். ’ அப்பொழுதெல்லாம் வகுப்பறைகளில் மின் விசிறிகள் இல்லை. ‘பங்கா’ இருக்கும்

‘பங்கா’ என்றால் ஆசிரியர் உட்காரும் இடத்துக்கு மேல் உத்தரத்திலிருந்து கெட்டித் துணியாலாகிய துணி மடிப்பு தொங்கிக் கொண்டிருக்கும். அதினின்றும் ஒரு நீண்ட கயிறு. அறை

வாசலிலிருந்து, ஒருவர் அந்தக் கயிற்றை இழுத்துக் கொண்டிருப்பார். பங்கா இழுப்பவரை ஆசிரியர்தாம் தம் செலவில் அமர்த்திக் கொள்ள வேண்டும்.

சம்பந்தம் பிள்ளை ஒருவருக்கு மட்டுந்தான் பங்கா இழுக்க ஓர் ஆளை வைத்துக் கொள்ளும் வசதி இருந்தது போல் தோன்றியது.அந்த ஆள் மிகவும் வயதானவர். வகுப்பு ஆரம்பித்ததும்,பங்கா வேகமாக ஆடத் தொடங்கும். முதல் இரண்டு பென்ச் மாணவர்களுக்கும் காற்று வரும். வயதானவர் என்பதால், சிறிது நேரத்தில் தூங்கத் தொடங்கி விடுவார். பங்கா வேகம் படிப்படியாகக் குறைந்து, நின்று விடும்.

அப்பொழுது சம்பந்தம் பிள்ளை குரலை மிக பலமாக உயர்த்தி, உணர்ச்சிகரமாக அல்ஜீப்ரா சொல்லிக் கொடுக்கத் தொடங்குவார். பங்காவும் உயிர்பெற்றெழுந்து வேகமாக ஆடத் தொடங்கும்.

கணிதம் வராத என்போன்ற மாணவர்களுக்கு, சம்பந்தம் பிள்ளையிடம் எத்தனை சூட் இருக்கிறது, எத்தனை ‘டை’ இருக்கிறது என்று கணக்குப் போடுவதுதான் பிடித்தமான பொழுதுபோக்கு. இது பற்றிச் சூடான விவாதங்கள் நிகழ்வதுமுண்டு.

ஒரு நாள் திடீரென்று சம்பந்தம் பிள்ளை என்னை ஒரு கேள்விக் கேட்டார். அவர்  சாதாரணமாக யாரையும் எதுவும் கேட்பதில்லை. அவர் என்ன கேட்டாரென்று கூட எனக்குப் புரியவில்லை.

மௌனமாக நின்றேன்.

‘சரி, அல்ஜீப்ரா வேண்டாம். ’ஸிம்பில் அரித்மெட்டிக்’ சொல்லு, என்னிடம் எத்தனை ‘டை’ இருக்கிறது?’ என்றார் புன்னகையுடன்

இது இவருக்கு எப்படித் தெரியும்? நான் திடுக்கிட்டு நின்றேன்.

‘சொல்லு.’

‘சாரி,சார்’

‘இதோ பாரு பையா, இலக்கியத்திலே ஈடுபாடிருந்தா, கணக்கு வராதுன்னு சொல்லறது, ஸ்டுப்பிட்.. எனக்கு ஷேக்ஸ்பியர் நாடகமும் பிடிக்கும், அல்ஜீப்ராவும் பிடிக்கும். உமர்கய்யாம் கேள்விப் பட்டிருக்கியா, அற்புதமான கவிஞன் அவன் ஒரு பெரிய ‘அஸ்ட்ரானமர்’ தெரியுமா? எல்லாருக்கும் இது புரியனும்னுதான் தமிழ்லே சொல்றேன். Literature and Mathematics both need imagination.புரிஞ்சுதா? உட்கார்’

நான் என் நண்பன் கதிர்வேலிடம் பேசியதெல்லாம் இவருக்கு எப்படித் தெரியும்? கதிர்வேல் அவரிடம் போய் நாங்கள் விவாதிப்பதையெல்லாம் சொல்லியிருக்கின்றான் என்று தோன்றுகிறது.

வகுப்பு முடிந்ததும், கதிர்வேல் என்னைத் தவிர்ப்பவன் போல் வேகமாகச் சென்றான்.

நான் விரைந்து சென்று அவன் தோளைத் தொட்டேன்.

’நீ இப்படிச் செய்வே என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்றேன் நான் அவனிடம்.

அவன் சிரித்தான்.

‘என்ன,சிரிக்கறே?’

‘அவர் என் அப்பா.’

‘என்னது?’

‘அப்பா கண்டிப்பானவர். யாருக்கும் இது தெரியக்கூடாதுன்னுதான், என்னை அவர் கார்லே கூட்டிக்கிட்டு வரதில்லே. நான் வேற கார்லே வரேன்.ஆசிரியர்-மாணவர் என்ற உறவிலே, அப்பா-பிள்ளை உறவு குறுக்கிடக் கூடாதுன்னு அவர் கண்டிப்பான உத்தரவு. என் சிநேகதர்கள் யார்யாரென்னு அவருக்குத் தெரியும். உன்னைப் பத்திக் கேட்டார், சொன்னேன்..’

ஆறடி உயரமான சம்பந்தம் பிள்ளை என் மதிப்பில் இன்னும் உயர்ந்து நின்றார்.

 

 

 

Advertisements

§ 2 Responses to ’என்னிடம் எத்தனை ‘டை’ இருக்கிறது?’

  • kdsurati says:

    I find a lot of your life instances in your famous book “Verpatru” (Grassroots), which till today remains my favorite book. Thanks for recording your life experiences through your blog. Thyagarajan

  • அரங்கா says:

    வேர்ப்பற்றில் வருகிறவர்தானே ,அந்த பங்கா இழுப்பவர் மேலான பிரியம் நினைவில் நிற்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ’என்னிடம் எத்தனை ‘டை’ இருக்கிறது?’ at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: