வயிறும் சாதியும்

October 4, 2016 § Leave a comment


( மேடையில் புலர்ந்தும் புலராத விடியற்காலை. மணி ஐந்திருக்கலாம். முன்  மேடை வலப்புறத்திலிருந்து ஒருவர் வருகிறார். அறுபது வயதிருக்கக் கூடும். தலையில் முஸ்லீம்கள் அணியும் குல்லாய். பச்சை நிற லுங்கி, தோளில் ஒரு பச்சைத் துண்டு. அவர் நுழைந்ததும் அவர் பார்வை  நடுமேடையை நோக்கிச் செல்லுகிறது. அவர் பெயர் அப்துல்.

அது ஒரு பூங்கா. அங்கு ஒரு வயதானவர் ‘பென்ச்சி’ல் படுத்திருக்கிறார். வற்றிப் போன உடம்பு. பழுப்பு நிற வேட்டி, துண்டு. அவர் திடீரென்று எழுந்திருக்கிறார். அவர் முதுகை ஏதோ கடித்திருக்கிறது. கடித்த பூச்சியைக் கைப்பற்றிக் காலில் போட்டு ஆக்ரோஷத்துடன் தேய்க்கிறார். அவர் பெயர் ரங்கு. முகத்தில் காலையில் போட்ட நாமம் தேய்ந்திருக்கிறது.

அவர் அப்துல்லைப் பார்க்கிறார். முகத்தில் லேசானப் புன்னகை.

அப்துல் அவரை நோக்கிச் சென்று அவரருகே உட்காரும்போது, வதானவர் சற்று நகர்ந்து அவர் உட்கார இடமளிக்கிறார்.

 

ரங்கு ; கட்டெறும்பு கடிச்சுடுத்து. காலாலெ தேச்சு

கொன்னுட்டேன். அதை. பாவமா அப்துல்?

அப்துல்; ஒரு வைஷ்ணவ பிராமணரோட ரத்தம்.

வைகுண்டம் போயிருக்கும்.(சிரிக்கிறார்)

ரங்கு:   இந்த வத்த உடம்பிலே ரத்தம் ஏது, அப்துல்?

(அப்பொழுது முன் மேடை இடப்பக்க வழியாக நாலைந்து பேர், அரை ட்ரௌஸர், டீ ஷர்ட் உடையில் பூங்காவில் உலாவ வருகிறார்கள். அப்துல்லும், ரங்குவும் அவர்களைப் பார்த்ததும் எழுந்திருக்கிறார்கள்.)

அப்துல்:      உலாவ வந்துட்டாங்க. இவங்க ‘நடை

(கீழ்க்குரலில்) பயில்வோர் சங்கம்’னு ஒண்ணு

ஆரம்பிச்சுருக்காங்க.. ‘ரூல்’ லாம்

போட்டிருக்காங்க.. யாரையும் இங்கே

படுக்க அனுமதிக்க க் கூடாதுங்கி

றது முதல் சட்டம்.. தோட்டக்காரங்கி

ற முறையிலே யாரும் படுத்துக்கா

மெ பாத்துக்கிடறது என் பொறுப்பு.

அதெ சொல்லத்தான் வந்தேன்.

பேச்சு கட்டெறும்பு அது இதுன்னு

போயிடிச்சி. (புன்னகை)

ரங்கு:       கட்டெறுப்புக் கடியைக் காட்டிலும்

இது வலிக்கிறதே, அப்துல். நான்

எங்கே போய் படுப்பேன்? என்

தங்கை பேத்தி, வீட்லே என் தகர

டப்பா பெட்டியையும், வைதிக

பொஸ்தகங்களையும் வச்சிருக்

கேன். அந்தப் பொண்ணே பாவம்

ஒண்டு குடித்தனம். புருஷன் சுக

மில்லே. மூணு பசங்க. அங்கே

படுத்தக்க முடியாது……..

(அழுக்குப் பூணுலினால் முதுகைச் சொரிந்து கொண்டே யோஜிக்கிறார்.)

அப்துல்     உங்க தொழில்லே உங்களுக்கு

வரும்படி கிடையாதா? மைலாப்பூர்

ஐயமாரெல்லாம் காத்திலே குடுமி

பறக்க ‘பைக்’ லே

போறாங்க, பாத்திருக்கேன். நீங்க

மட்டும் ஏன் இப்படிப் பரிதாபமா

இருக்கீங்க?

ரங்கு:      எங்க அப்பாவுக்குக் கரண்டி உத்

தியோகம். வேத பாடாசாலையிலே

என்னைச் சேத்தாரு. படிப்பு தலையி

லே, ஏறலெ, என் தலெயெழுத்து.

அப்புறம் யாரானும் செத்தாங்கன்னா

அவங்க வீட்டிலே சவண்டி சாப்பாடு

ப்ராம்ணார்த்தம், பலதானம் அப்படி

இப்படின்னு, என் வாழ்க்கை ஓடிடுத்

து. இப்பொ எல்லாருக்கும் ஆயுசு

கெட்டி. சாவே விழலே .நானும்

பட்டினி.அதோ பாரு, அப்துல்  அங்கே

நடக்கிறாரே அவருக்கு எண்பது வயசு

இருக்குமா? பார்க்குக்கு வந்து இவ்வ

ளவு வேகமா நடக்கிறாரே/ எமன்

)கிட்ட வருவனா?

( அப்துல் புன்னகை செய்கிறார். அந்த எண்பது வயது கிழவரும் வயதை மீறீய உற்சாகத்துடன் வேகமாக நடக்கிறார். .நடக்கின்றவர்கள் கூட்டம் அதிகரிக்கின்றது,..)

அப்துல்: என்ன செய்யப் போறீங்க?

ரங்கு:  இப்பொ ‘டீ” குடிக்கணும்.அப்புறந்

தான் யோஜனை வரும்.

அப்துல்:  சரி, என் வீட்டுக்கு வாங்க. ‘டீ’

போட்டுத் தரேன். பக்கந்தான் வீடு.

ரங்கு:    உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?

அப்துல்:  ‘பாய்’ போட்டுக் கொடுத்தா குடிக்க

மாட்டீங்களா? (புன்னகை)

ரங்கு:    ஐயய்யோ! அதெல்லாம் ஒண்ணுமி

ல்லே, அப்துல். இத்தனை நாள்

என்னை, ‘பார்க்’ லே தூங்க அனும

திச்சதே பெரிசு. நீங்க என் தெய்வம்

மாதிரி.

(அப்பொழுது ஒரு நடு வயதுக்கரர், அவர்களிடம் வருகின்றார்)

அப்துல்:  அவர்தான் ‘செக்ரட்ரி”. நீங்க போங்க.

நான் பாத்துக்கிடறேன்.

( ரங்கு எதிர்த்திசையில் வேகமாக நடக்கத் தொடங்குகிறார்.)

செக்ரட்ரி        அவரைக் கூப்பிடுங்க.

(அப்துல்லிடம்)

ரங்கு திரும்பிப் பார்க்கிறார். செக்ரட்ரி சைகை செய்து அவரை அழைக்கிறார், ரங்கு திரும்பி வருகிறார்,)

செக்ரட்ரி:      நீங்கதானே தினோம் ராத்திரி

பார்க்லே படுத்துக்கிறது?

(ரங்கு மௌனமாக நிற்கிறார்)

அப்துல்:        ஆமாம். அவருக்கு வேற

இடமில்லெ படுக்க. நல்ல

மனுஷன், பத்து மணி.க்கு

வருவாரு,படுக்க. ஆறு

மணிக்குப் போயிடுவாரு.

அவராலே ஒரு தொந்தர

வுமில்லே.

செக்ரட்ரி:        நீங்க சிபார்சு பண்றீங்களா

தோட்டக்காரரே?

அப்துல்:         என் பேர் அப்துல்.

( செக்ரட்ரி லேசாக அதிர்ச்சி அடைகிறார்,)

செக்ரெட்ரி:     ‘‘ரூல்’னா, ‘ரூல்’தான்.

அவர் உங்க சிநேகிதரா இருக்கலாம்

சட்டப்படி நடக்கிறது எல்லாருக்கும்

நல்லது. (ரங்குவைப் பார்த்து)

பந்துக்களே கிடையாதா?

பொண்டாட்டி, பிள்ளைகுட்டி…

ரங்கு:          யாருமில்லே.

செக்ரட்ரி       என்ன வேலையிலே இருந்தீங்க?’

ரங்கு:         சவுண்டிகரணம், ப்ராமணார்த்தம்,

ஈமக்காரியம் பண்றபோது,

பலதானம்.. இப்படி..

செக்ரட்ரி :      சரி, போறும் உங்க பயோ டேட்டா.,

நீங்க இங்கே படுத்துக்க முடியாது.

வேற இடம் பாத்திகோங்க,

புரிஞ்சுதா/ ஹமீத், இவரை……

ரங்கு:         அப்துல்.

செக்ரெட்ரி      என்ன?

ரங்கு :        அவர் பேரு அப்துல், ஹமீத் இல்லே.

 

செக்ரெட்ரி      என்ன வேணுமானாலும் இருக்கட்டும்

அவர் உங்களை இனிமே படுக்க

விட மாட்டார். புரிஞ்சுதா? அத்யயனம்

பண்ணவரா நீங்க?

ரங்கு:    இல்லே.

செக்ரட்ரி; சரி, ஹமீத்.. ‘

ரங்கு :    அப்துல்

செக்ரட்ரி;   நீங்க வாயை மூடப் போறீங்களா

இல்லையா? அப்துல், நான்

கொஞ்சம் கண்டிப்பான ஆளு

மேயர் என்னோட ‘ஃப்ரெண்ட்’.

பொறுப்பா வேலை செய்யணும்

தெரிஞ்சுதா? அதான் என்னாலே

சொல்ல முடியும்..

(அவர் போய்விடுகிறார்.)

அப்துல் :   வாங்க என்னோட, ‘டீ தரேன்

குடிச்சிட்டு போங்க.

ரங்கு:      வேணாம், அப்துல். என்னாலே

உங்களுக்கு வேலை போக

வேணாம்.

அப்துல்:      சும்மா இருய்யா? இந்த  ஆள்

மாதிரி எத்தனை ஆளை நான்

பாத்திருப்பேன்? மேயரைத் தெரியுமாம் !

எல்லாம் வாய்ச் சவடால். எனக்கு இங்கே

முப்பது வருஷ சர்வீசு. இவன் பாட்டன்

வந்தா கூட என்னை வேலையிலிருந்து

எடுக்க முடியாது.

ரங்கு:   அப்பொ, நான் இனிமே இங்கே படுக்க

முடியாதுன்னு சொன்னேள், அப்படிச்

சட்டம் போட்டிருக்காங்கனேள்?

அப்துல்: ஒரு சங்கம் ஆரம்பிச்சங்கன்னா, பார்க்

இவங்களோடது ஆயிடுமா? இது கார்ப்

ரேஷனுக்குச் சொந்தம். சரி வாங்க, ‘டீ’

குடிக்கலாம்.

(இருவரும் அப்துல் அறைக்குப் பின் மேடை வலப் பக்க க் கோடியை நோக்கிச் சென்றனர்.

இருள்.

ஒளி வரும்போது , இருவரும் முன் மேடை வலப் பக்கத்திலிருந்து வருகின்றனர்.  இருவர் கையிலும் தேநீர்க் கோப்பை. நடு மேடையில் நிற்கின்றனர்.)

ரங்கு :  ரொம்ப நன்னாருக்கு  ‘டீ, அப்துல்

இந்த மாதிரி ‘டீ’ குடிச்சு ரொம்ப

நாளாச்சு. முன்னொரு தடவை,

ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே

ஒரு வக்கீலாத்லே குடிச்சிருக்கேன்

தேவாமிருதம்னா, தேவாமிருதந்

தான்!!

(அப்பொழுது கதவு தட்டப்படும் சப்தம். அப்துல் முன் மேடை வலப்பக் க கோடிக்குச் செல்கிறார். கதவைத் திறக்கும் பாவனை. வெள்ளை வேட்டி, சட்டை, துண்டு சகிதம் ஓர் அரசியல்வாதித் தோற்றம் கொண்ட ஒருவர் வருகிறார். நடு வயது. கறுத்த, வளமையான மீசை. அவரைக் கதவருகேயே நிறுத்தி வைத்து அப்துல் பேசுகிறார். வந்தவருக்கு ரங்கு உள்ளே இருப்பது தெரியாது. ரங்குவுக்கும் வந்தவர் யாரென்று தெரியாது, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று தெரியாது. நடு மேடையில் இரண்டு நாற்காலிகள். ஒன்றில் அவர் உட்காருகிறார்.)

அப்துல்: எப்படி இருக்கீங்க ,தம்பி?

வந்தவர்: அவசரமா வந்தேன். இன்னி மதியம்

ஆயிரம் விளக்காண்டே சம பந்தி

போஜனம். தலைவர் வராரு. அவர்

ஒரு பக்கத்திலே நீங்க, இன்னொரு

பக்கத்துக்கு யாரானாச்சும் ஒரு ஏளை.

தாழ்த்தப்பட்டவரா இருந்தா நல்லா

இருக்கும், தலைவருக்கும் மகிழ்ச்சியா

இருக்கும், நாளைக்கு பேப்பர்லே

போட்டோ வரும்.. பிரமாதமான சாப்பாடு.

அப்துல்:     சைவமா,அசைவமா?

அப்துல்;          சைவமா, அசைவமா?

வந்தவர்           சைவந்தான். தலைவர் இப்பொ

அசைவம் சாப்பிடறதில்லே..

ஒத்துக்கிறதில்லே. வயசாயிடுச்சு

ல்லே? என்ன சொல்றீங்க?

(அப்துல் ரங்குவைப் பார்க்கிறார். ரங்கு எதோ யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்.)

அப்துல்:   அதோ கூட்த்திலே ஒத்தரு உட்கார்ந்

திருக்காரு, பாத்தீங்களா?

வந்தவர்:   வத்தலா? ஐயரு! அவருகென்ன?

அப்துல்:   அவரைக் கூட்டிகிட்டுப் போவோம். அவரு

நாலு நாளா பட்டினி.

வந்தவர்:   என்ன ,பாய், இப்படிச் சொல்றீங்க?

ஐயரையா கூட்டிகிட்டுப் போகலாங்

றீங்க? தலைவர் என்ன சொல்வாரு?

அப்துல்:   பூணுலைக் களைட்டிட்டு வாய்யான்னு

நான் சொல்றேன். வவுறு காயறப்பொ

சாதியா முக்கியம்? நீங்க போங்க நான்

அவரைக் கூட்டிட்டு வரேன்.

வந்தவர்:   தலைவருக்குத் தெரிஞ்சிச்சுன்னா?

அப்துல்:    வவுத்துக்குச் சாதி கிடையாதுன்னு

தலைவர்கிட்டே சொல்லுங்க.

( வந்தவர் தயக்கத்துடன் விடை பெறுகிறார்)

( அப்துல் நடு மேடையை நோக்கிச் செல்லுகிறார். ரங்கு எழுந்திருக்கிறார். )

அப்துல்:   உட்காருங்க.

(ரங்கு உட்காருகிறார்.)

அப்துல்:  நீங்க சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?

ரங்கு:    மூணு நாள்.

அப்துல்:  பரவாயில்லே, நான் நாலுன்னு சொல்

லிட்டேன். ஆயிரம் விளக்காண்டே ஒரு

ஒரு கல்யாணச் சாப்பாடு, வரீங்களா?

ரங்கு;    கல்யாணச் சாப்பாடா? இது ஆடி

மாசம்னா? யாரு கல்யாணம்

பண்ணுவா?

அப்துல்:  பண்றாங்க. வறீங்களா? ஆனா ஒரு

கண்டிசன். பூணுலைக் களட்டி எறிஞ்சுட்டு

வரணும்.

ரங்கு:    ஐயய்யோ அது முடியாது.. நான்

எங்கம்மாவுக்குச் சத்திய வாக்குக்

கொடுத்திருக்கேன். கழட்ட மாட்டேன்னு..

அது தப்பு, அப்துல்.

அப்துல்     உங்க பூணூல் உங்களுக்குச்  சாப்பாடு

போடறதா? பாதி நாள் பட்டினி. யாரா

னும் செத்தாத்தான் சாப்பாடுன்னா அது

என்ன வாள்க்கை, ஐயரே? இன்னொரு

கப் டீ தரேன். குடிச்சிட்டு, குளிச்சிட்டு

என்னோட வாங்க, மதியச் சாப்பாட்டுக்

கு. அறுசுவை உண்டி! (சிரிக்கிறார்)

போட்டோ பிடிப்பாங்க, பேப்பர்லே

வரும்/

ரங்கு:      போட்டோவா?

அப்துல்:    தலைவரோட உட்கார்ந்திட்டுச்

சாப்பிடப் போறீங்கல்லே?

ரங்கு ;     யாரு தலைவர்?

அப்துல்:    நூறு கேள்வி கேக்காதீங்க. நீங்க

என் வீட்டிலேயே படுக்கலாம்.

ரங்கு;       நெஜமாவா அப்துல்?

அப்துல்:     இது சத்திய வாக்கு.(புன்னகை)

(ரங்கு சிறிது நேரம் யோஜிக்கிறார். கட்டெறும்பு கடித்த இட்த்தைத்

தொட்டுப் பார்க்கிறார். சிறிது வீங்கியிருக்கிறது. பூணுலினால் சொரிந்து கொள்ளுகிறார்.0

ரங்கு:      பூணூல் இருக்கட்டும், அப்துல்.

அரிச்சா சொரிஞ்சுக்க உபயோகமா

இருக்கு. ஒரு சட்டை இருந்தா

கொடுங்க, அப்துல்.. பூணுல் தெரியாது.

அம்மாவுக்கும் சந்தோஷமாருக்கும்.

(அப்துல் சிரித்துக் கொண்டே ரங்கு முதுகைத்தட்டிக் கொடுக்கிறார்)

திரை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading வயிறும் சாதியும் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: