அக்காரவடிசில்

September 26, 2016 § Leave a comment


மேல் நாட்டினரைப் போல் நம் பெயர்களில் நடுப் பெயர் அநேகமாக இருப்பதில்லை. இப்பொழுது மேல்நாடுகளுக்குப் போகின்றவர்கள் அதிகமாகிவிட்டபடியால், குழந்தைகளுக்கு நடுப் பெயர் சூட்டுகிறார்கள். ஏனென்றால், மேல்நாட்டு பாஸ்போர்ட், விஸா விண்ணப்பங்களில் நடுப்பெயர் என்ன வென்று கேட்கிறார்கள்.

ஆனால், கும்பகோணத்தில் என்னுடன் படித்த பீட்டர் எட்மண்ட் வில்ஸனுக்கு அந்தக் காலத்திலேயே நடுப்பெயர் இருந்ததுதான் ஆச்சர்யம். அவன் அப்பா லிட்டில் ப்ஃளவர் ஹைஸ்கூலில் ஹெட் மாஸ்டராக இருந்தார்.

’இண்டர்மீடையட்’ வகுப்பில் நானும் வில்ஸனும் பக்கத்துப் பக்கத்தூ இடங்களில் உட்கார்ந்ததால், முதல் நாளிலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

வில்ஸன் என்னைவிட இரண்டு வயது பெரியவன். வாட்ட சாட்டமாக உயரமாக இருப்பான். வாலிபால் விளையாடுவதில் புலி. கல்லூரியில் சேர்ந்ததுமே அவன் கல்லூரி ‘டீமி’ல் இடம் பிடித்துவிட்டான். ‘டீம் காப்டன்’ நடராஜன்.

நடராஜனுக்கு இன்னொரு பெயர் ‘ரோமியோ’. பணக்கார வீட்டுப் பையன். அவன் அப்பா அவனுக்கு அந்தக் காலத்திலேயே ‘பைக்’ வாங்கிக் கொடுத்துவிட்டார். பீ.ஏ. இறுதி வகுப்பில் இருந்தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த  அத்தனைப் பெண்களும்- அப்பொழுதெல்லாம் மொத்தமே பத்து பன்னிரெண்டு பெண்கள்தாம்- அவன் மீது காதல் கொண்டிருப்பதாக அவனுக்கொரு பிரமை.

வில்ஸன் பார்ப்பதற்கு சாதுவாகத் தெரிந்தானே தவிர, உள்ளுக்குள் பெரிய விஷமக்காரன். அது எனக்கு மட்டுந்தான் தெரியும். அது அவன் பேசுவதிலிருந்து தெரிந்தது.

ஒருநாள், நான் என் ‘பிஸிக்ஸ்’ வகுப்புப் போகும்போது, நடராஜன் என்னை இடைமறித்தான். ‘நீதானே……. ?’ என்று என் பெயரைச் சொன்னான். ‘ஆமாம்’. ‘ இன்னிக்கு காலேஜ் எதிர்த்தாபலேருக்கே அய்யங்கார் ஹோட்டல் அங்கே என்னோட டிபன் சாப்பிட வரயா?’

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காகத் திடீரென்று கூப்பிடுகிறான்? அவன் கல்லூரியில் மிகவும் பிரபலமானவன். எப்பொழுதுமே நாலைந்து பேருடன் போய்க்கொண்டிருப்பான். அவன் என் நட்பை நாடுவதற்கு என்ன காரணம்?

‘ திடீரென்று கூப்பிடறீங்களே, எனக்கு ஏன்னு புரியலே…’

‘ எல்லாரும் உன்னைக் கெட்டிகாரப் பையன்னாங்க, அதுக்காகத்தான்’ என்று சொல்லிவிட்டுப் புன்னகை செய்தான்.

‘நான் நாளைக்கு வரேன்.. இன்னிக்கு வீட்டுக்குப் போய் சாப்பிடணும்’

‘உன் வீடு எங்கே இருக்கு?’

‘ சாரங்கபானி சன்னதித் தெரு’

‘ மை காட்! அவ்வளவு தூரம் எப்படி போறே/ நடந்தா?’

‘ ஆமாம். அடுத்த மாசம் அப்பா சைக்கிள் வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கார்’

‘சரி, நாளைக்குக் கட்டாயம் வீட்டிலே சொல்லிட்டு வந்துடு.. சாப்பிடலாம்..’

அன்று மதியத்துக்குப் பிறகு வில்ஸனிடம் இதைச் சொன்னேன்.

‘ நான் ‘டீம்’லே இருக்கேன், என்னைக் கூப்பிடாமே உன்னைக் கூப்பிடறானே? ‘ என்று சிரித்துக் கொண்டே சொன்னான் வில்ஸன்.

அடுத்த நாள் அம்மாவிடம் நான் இதைச் சொல்லிவிட்டு,, மதியம் சாப்பிட வரமாட்டேன் என்றதும், அம்மா சொன்னார், ‘ அப்பாக்கு இதெல்லாம் பிடிக்காது..’

‘அப்பாவுக்கு நான் மத்தியானம் வரேன் இல்லேன்னு எப்படித் தெரியப் போறது? நான் காலேஜ்லே வரபோது தூங்கிண்டுதானே ருக்கார்..’ என்றேன் நான்.

‘சரி, ஒரு நாள் போனாப் போறது..’ என்றார் அம்மா.

அடுத்த நாள் அய்யங்கார் ஹோட்டலுக்கு நானும் நடராஜன் மட்டும் போனோம். அவன் நண்பர்கள் யாரும் வரவில்லை.

அருமையான அக்காரவடிசல், வெண்பொங்கல், காப்பி;

‘எப்படி இருக்கு?’ என்றான் நடராஜன்

‘பிரமாதம்’

‘தினமுமே நீ என்னோட இங்கே சாப்பிட வரலாம்.. ‘

‘எங்கம்மா இன்னிக்கு ஒருநாள்தான் ‘பர்மிஷன்’ கொடுத்திருக்கா எங்கப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அவர் ஒரு ‘டிஸிபிலினேரியன்’’

’சரி நான் இன்னி சாயந்திரம் வந்து உங்கப்பாவோட பேசறேன்..’

‘ப்ளீஸ்.. அதெல்லாம் வேணாம்’.

‘ காலேஞ் விட்டவுடனே என்னோட ‘பைக்’லே வா. ஜஸ்ட் ஒரு நாளைக்கு.  உன் வீட்லே கொண்டு விட்டுடறேன்..ப்லீஸ்’.

அவன் ‘பைக்’கில் பின்னால் உட்கார்ந்து போகவேண்டுமென்று ஆசையாக இருந்தது.

வருவதாகத் தலை அசைத்தேன்.

அன்று மாலை வீட்டுக்குப் போனவுடன், அம்மாவுக்கு அவனை அறிமுகப் படுத்தினேன். அப்பா வீட்டில் இல்லை.

‘ கண்ணா அய்யர் பேரனா நீ? ‘ என்று ஆச்சர்ய்த்துடன் கேட்டார் அம்மா.

‘அவரை உனக்குத் தெரியுமா?’ என்று நான் அம்மாவைக் கேட்டேன்

‘ பருத்திச்சேரி பூரா இவனோட தாத்தாவுக்குச் சொந்தம்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அம்மா.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லே..’ என்று சொல்லிக்கொண்டே அவன் வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தான்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவன் கேட்டான், ‘ உன் ‘ஸிஸ்டர்’ இன்னும் காலேஜ்லேந்து வரலியா?’

‘என் ‘ஸிஸ்டரா?’ யாரு என் ‘ஸிஸ்டர்/’ ?

‘சரோஜா.. பீ.ஏ. பஃர்ஸ்ட் இயர் படிக்கிறாளே, அவ உன் ‘ஸிஸ்டர்’ இல்லியா?’

‘ யார் சொன்னது?’

‘வில்ஸன்’.

‘ஐ ஆம் ஸாரி.. எனக்கு ‘ஸிஸ்டரே’ கிடையாது.’

‘சரி நான் வரேன்..’

அடுத்த நாள் விஸ்னைக் கேட்டேன்.. ‘ எதுக்காகப் பொய் சொன்னே?’

‘அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்’ அவன் தான் என்னைக் கேட்டான், . உன் பெயரைச் சொல்லி,அவனும் சரோஜாவும் ஒரே ஜாடையா இருக்காங்களே, உறவான்னு.. நீ தினம் நடந்து போய் வீட்டுக்குச் சாப்பிடப் போய்கிட்டிருக்கறது எனக்குக் கஷ்டமா இருந்தது. கொஞ்ச நாளைக்கு உனக்கு டிபன் வாங்கித் தரட்டுமேன்னு பொய் சொன்னேன்..’

‘உன்னை வந்து அடிக்கப் போறான் ‘

‘என் கிட்டே வாலாட்ட மாட்டான்.. என் உடம்பைப் பாத்தியா? அதோட நீ நடராஜனைப் புரிஞ்சுக்கலே.. ஏமாந்தேன்னு அவன் நிச்சியமா வெளியிலே சொல்லிக்க விரும்பமாட்டான்.. நீ ஏன் அதுக்குள்ளாற எனக்கு ‘ஸிஸ்டர்’ கிடையாதுன்னு சொன்னே? ‘வெளியிலே போயிருக்கா’ன்னு சொல்லியிருக்க க் கூடாதூ. சரி, கவலைப் படாதே, நான் நாளைக்கு உனக்கு அக்காரவடிசல் வாங்கித் தரேன்.. அய்யங்கார் என்னை உள்ளே விடுவாரா?’ என்றான் வில்ஸன் சிரித்துக் கொண்டே.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

What’s this?

You are currently reading அக்காரவடிசில் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: