க,நா.சு.

September 22, 2016 § Leave a comment


க.நா.சுப்ரமனியனை நான் முதன் முதலில் சந்தித்தது சிதம்பரத்தில். 1950ல். அப்பொழுது நான் அன்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அவர் பல்கலைகழக வளாகத்தை ஒட்டிச் சிதம்பரத்தில் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார்.

என்னை, என்னுடன் பல்கலைக்கழகத்தில்’ படித்துக் கொண்டிருந்த டி.கே.துரைஸ்வாமி ( அப்பொழுது அவர் ’நகுலனா’’க ஆகியிருக்கவில்லை ,நானும் ’இந்திரா பார்த்தசாரதி’யாக ஆகவில்லை) க.நா.சுவைப் பார்க்க அழைத்துக் கொண்டு போனார்..

க,நா.சுவைப் பற்றி நான் அதற்கு முன் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேனே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. ’கல்கி’ ஆரம்பமான புதிதில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு அவர் ராஜாஜியுடன் நடுவராக இருந்தார். அச்சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கும்பகோணத்துக்காரராகிய கி.ரா. கோபாலன் க.நா.சு மிகவும் படித்தவர் என்று என் அண்ணணிடம் சொல்லிக்..கேட்டிருக்கிறென். நான் அப்பொழுது பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபடியால், ‘மிகவும் படித்தவர்’ என்பதன் முழு அர்த்தத்தையும் என்னால் வாங்கிக்கொள்ள முடியவில்லை.

அடர்த்தியான தலை முடி. ’முகத்தில்,ஸினிஸிஸம்’ நிழலிடுவது போல் தோன்றும் புன்னகையின் கீறு. நான் அவரைச் சிதம்பரத்தில் அந்தப் புத்தகக் கடையில் பார்த்தபோது அவர் தோற்றம் எப்படியிருந்ததோ அதே மாதிரிதான்,, பிறகு அவரை நான் போன நூற்றாண்டு அறுபதின் பிற்பகுதிகளில் தில்லியில் சந்தித்த போதுமிருந்தது. சிலரைப் பற்றி நம் மனத்தில் உருவாகியிருக்கும் பிம்பம் எப்பொழுதுமே மாறுவதில்லை. நாம் அவரை அப்படித்தான். காண விரும்புகின்றோம் என்பதும் காரணமாக இருக்கலாம்.

துரைஸ்வாமி அவரிடம், ‘இவரும் என் மாதிரி தமிழ் எம்.ஏ, சேர்ந்திருக்கார்’ என்று கூறிவிட்டுச் சிரித்தார். துரைஸ்வாமியின் சிரிப்புக்குப் பொருள் காண்பது பெரிய சவால்.

‘நீங்க கும்பகோணத்துக்காரர் என்றார் துரைசாமி’ என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார் க.நா.சு. அது வெறும் ‘ஸ்டேட்மென்டா’ அல்லது

விமர்சனமா என்று எனக்குப் புரியவில்லை.

நான் புத்தகக் கடையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினேன்.

பெரும்பாலும் ஆங்கில நாவல்கள் ஹெமிங்வே, ஸ்டெயின்பெக், வர்ஜினியா வுல்ஃப், ஹென்ரி ஜேம்ஸ்… பிறகு,கவிதைப் புத்தகங்கள். எலியட், ப்ரௌஸ்ட், ஸ்டீஃபன் பெண்டர், ஆடன். இதைத்தவிர, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களின் தமிழ்ப் படைப்புக்கள். வங்க மொழி நாவல்களின் தமிழ் ஆக்கங்கள்,

சிதம்பரத்தில். இவற்றின் வாசகர்கள் யாராக இருக்க முடியுமென்று எனக்குப் புரியவில்லை.

அப்பொழுது, கையில் ஒரு டென்னிஸ் ராக்கெட்டுடன் ஒரு பல்கலைக்கழக மாணவன் வந்தான். புத்தகங்களைப் பார்வையிடத் தொடங்கினான். டி.எஸ்.எலியட்டின் ‘ தி லவ் ஸாங் ஆஃப் ஆல்ஃப்ரெட் ப்ருஃபோக்’ கையில் எடுத்தவாறு, ‘இது நல்லா இருக்குமா,சார்?’ என்று க.நா.சுவைக் கேட்டான்.

’அது நீங்க நினக்கிற மாதிரி காதல் பாட்டு இல்லே, உங்களுக்குப் புரியாது இந்தப் புத்தகம்’ என்றார் க.நா.சு.

அந்தப் பையன் அவரைக் கோபத்துடன் பார்ப்பது போல் எனக்குப் பட்டது.

இரண்டாண்டுகளில், அப்புத்தகக்கடையை அவர் நஷ்டத்தினால் மூடும்படியாக ஆகிவிட்டது என்று நான் பிறகு அறிந்தேன்.

நான் ஆச்சர்யப்படவில்லை.

அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் அவர் எழுதியிருந்த நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். தன்னை அறிவித்துக் கொள்ளாத, ஆரவாரமற்று, படைப்பின் உள்ளடக்கத்தை, வாசகனிடம் அவன் கவனத்தை திசைத் திருப்பிவிடாமல்,,  நேரடியாகச் சொல்லும் தமிழ் நடை அவரிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று.

அவரை நான் மறுபடியும் சந்தித்தது 1968ல். தில்லி கரோல்பாக் ராமானுஜம்

மெஸ்ஸில். அவர் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்.

‘ என்னை நினைவிருக்கா?’ என்று அவரைக் கேட்டேன்.

அவர் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தார்.

‘துரைசாமி ஃப்ரெண்ட்’. பெயர் நினைவில்லே’ என்றார்.

’பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதிங்கிற பேரிலே அஞ்சாறு வருஷமா எழுதிண்டிருக்கேன்’.

‘தமிழ்லியா?’.

‘ஆமாம். தீபம், கணையாழி…… ‘

நான் பிரபலப் பத்ரிகைகள் பெயரைச் சொல்லவில்லை.

’நான் வாசிச்சதில்லே.’

‘நீங்க தமிழ்லே இனிமே எழுதப் போறதில்லேன்னு கேள்விப் பட்டேனே, அப்படியா?’

அவர் பதில் சொல்லவில்லை.புன்னகை செய்தார்.

‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்று கேட்டார் சிறிது விநாடிகளுக்குப் பிறகு.

‘’டிஃபன்ஸ் காலனி’

‘நானும் ’‘டிஃபன்ஸ் காலனிக்குத் தான் ‘ஷிஃப்ட்’ பண்ணப் போறேன், அடுத்த வாரம்..’ஏ’ ப்ளாக்’..என்றார் அவர்.

எனக்குச் சந்தோஷமாக இருந்தது..நானும் அந்த ‘ப்ளாக்கி’ல்தான் இருந்தேன். அவரை அடிக்கடிச் சந்திக்க முடியும் என்ற சந்தோஷம்.

அவர் ‘டிபன்ஸ்காலனி’க்குக் குடி வந்தபிறகு, அவரைக் ‘கணையாழி’ ஆசிரியர் கஸ்தூரிரங்கனுடன் பார்க்கப் போனேன்.

கஸ்தூரிரங்கனை அறிமுகப்படுத்தினேன்.

‘எதுக்காகத் தமிழ் பத்திரிகை நடத்தணும்னும் உங்களுக்குத் தோணித்து?’ என்றார் க.நா.சு, கஸ்தூரிரங்கனிடம்.

‘இவர் புதுக் கவிதை எழுதறார்.. செல்லப்பா ‘புதுக் குரல்கள்’லே இவருடைய ரெண்டு கவிதைகள் வந்திருக்கு’ என்றேன் நான்.

‘அப்பொ முத்திரை குத்தின மாதிரிதான்’ என்றார் க.நா.சு சிரித்துக் கொண்டே. .’

’நீஙக ஏன் தமிழ்லே எழுதறதில்லேன்னு வச்சிண்டிருக்கீங்க? அஃப் கோர்ஸ்,,நீங்க தமிழைப் பத்தி இங்கே இங்கலீஷ்லே எழுதறது அவசியம் வேண்டியதுதான்..நன்னாவுமிருக்கு. ;கணையாழிக்கு’ எழுதுங்களேன்’ என்றார் கஸ்தூரிரங்கன்.

’தமிழ்லே எழுதினது போறும்னு தோணித்து. யார் படிக்கறா?’

‘என்ன சொல்றீங்க? எந்த தமிழ் இலக்கியப் பத்ரிகையாக இருந்தாலும் ,உங்க பேரைச் சொல்லாமெ இருக்கமுடியுமா?’ என்றேன் நான்.

‘தமிழ்ப் பண்டிதர்கள்ளாம் என்னைத் தமிழ் துரோகின்னு திட்ட என் பேரைச் சொல்றா ,இல்லேன்னு சொல்லலே..’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் க.நா.சு.

‘நானும் தமிழ்ப் பண்டிதர்தான். நான் திட்டலே..’ என்றேன் நான்.

’நவீன இலக்கியம் எழுதற தமிழ்ப் பண்டிதர் நீங்க. இது திரிசங்கு சொர்க்கமா, நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிகலாம்’ என்றார் க.நா.சு.

அப்பொழுது க.நா.சுவின் இலக்கிய விமர்சனங்கள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகின என்பது உண்மைதான்.

அவருடைய ஆழ்ந்த,அகலமான படிப்புக்கேற்ப அவருக்கென்று பிரத்யேகமாக அவருக்குள் உருவாகியிருக்கும் இலக்கிய ரஸனையை அளவுகோலாக் கொண்டுதான் அவர் நூல்களை மதிப்பிட்டாரே தவிர, மரபு பற்றிய, அல்லது ‘இயத்தை’ அடிப்படையாக க் கொண்ட இலக்கிய விமர்சன கோட்பாடுகள் எவற்றைப் பற்றியும் அவர் கவலைப் பட்ட்தில்லை.

இது சம்பந்தமாக ஒன்று என் நினைவுக்கு வருகிறது.

1988ல், நான் புதுவைப் பல்கலைக்கழகதில் சேர்ந்திருந்த புதிதில், நூல்நிலையத்துக்குப் புத்தகம் வாங்க என்னைப் பணித்திருந்தார் துணை வேந்தர்.. நாடகப் புத்தகங்கள் மட்டுமன்றி நிறைய இலக்கிய விமர்சன நூல்களும் வாங்கியிருந்தேன். அந்நூல்கள் அனைத்தும் என் அலுவலக அறையில் இருந்தன .பக்கத்து அறையில், அப்பொழுது அங்கு விருந்து புலப் பேராசிரியராக க.நா.சு தங்கியிருந்தார். என் அறையிலிருந்த எல்லா இலக்கிய விமர்சன நூல்களையும் ஐந்தே நாட்களில் படித்து முடித்துவிட்டர்!

‘ அத்தனையும் படிச்சு முடிச்சுட்டீங்களா?’ என்று கே,ட்டேன்.

‘என்னை ‘இலக்கிய விமர்சகன்’ன்னு ஒரு சிமிழியிலே போட்டு அடைச்சு, சாஹித்ய அகதெமி பரிசையும் இந்தத் தள்ளாத வயசிலே  கொடுத்துட்டா. இலக்கிய விமர்சன கோட்பாடுகள்னா என்னன்னு இப்பொழுதாவது தெரிஞ்சுக்க வேணாமா, அதுக்காகப் படிச்சேன்’ என்றார் விஷமப் புன்னகையுடன்

அடிப்படையில் ரஸிகமணி டி.கே.சி யின் ரஸனையும் க.நா.சு வகையைச் சார்ந்ததுதான் என்றாலும், க.நா.சுவின் படிப்பின் பரப்பு வேறு வகையானது.மேற்கத்திய ரஸனையின் பாதிப்பு அதிகம்.

க.நா.சுவுக்கு உள்மனத்தில் எப்பொழுதுமே ஓர் ஆதங்கம் உண்டு. கிட்டத்தட்ட பத்து,,பன்னி ரெண்டு நாவல்களும், பல சிறுகதைகளும், கவிதைகளும் அவர் எழுதியிருந்தாலும், தமிழ் இலக்கிய உலகின் பரவலான அபிப்பிராயத்தின்படி, அவர் விமர்சகராக மட்டும் இருந்தது தான். அவருடைய பொய்த் தேவு’, ‘ஒரு நாள்’, ‘அசுர கணம்’ போன்ற படைப்புக்கள், பரிசோதனை முயற்சிகளில் வெற்றி அடைந்த, ஆங்கிலத்தில் சொல்வது போன்ற ‘ஆர்ட் நாவல்கள்’. அவர் எழுதிய காலகட்டத்தில், இவற்றின் முழு கலைப் பரிமாணத்தை வாசகர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தோன்றுகிறது. ‘அசுர கணம்’, சிக்கலான கலை வடிவம் கொண்ட ஒரு ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’.

க.நா.சு தன் படைப்புக்களைப் பற்றி எப்பொழுதுமே பேசியதில்லை. மற்றவர்களுடைய படைப்புக்களைப் பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறார்.சிறந்த தமிழ் பத்து நாவல்கள் என்று பட்டியலிடும்  பழக்கம் அவரிடமிருந்துதான் தொடங்கியது என்று சொல்லலாம். மூன்று நான்கு நாவல்களைத் தவிர, மற்றைய நாவல்களின் பெயர்கள் அவர்

பட்டியலில் அடிக்கடி மாறுவதுண்டு..இதைப் பற்றி நான் ஒரு தடவைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியைத் தரவில்லை.அவர் எமர்சனை மேற்கோள் காட்டினார்:’ Consistency is the hobgoblin of small minds’

க.நா.சுவின் இலக்கியத் தாக்குதல்கள் கண்ணியமாகவும், நளினமான நகைச்சுவையுடன் கூடியிருக்கும்.

நான் தில்லியிலிருந்த போது, 1978ல், சாஹித்ய அகதெமி செயலர் க.நா.சுவைத் தொலைப் பேசியில் அழைத்து என் தொலைப் பேசி எண்ணைக் கேட்டிருக்கிறார், எனக்கு அந்த ஆண்டு அவ்விருது கிடைத்திருக்கிறது என்ற செய்தியைச் சொல்ல.

அந்தச் செயலர் ஒரு ஜோஸ்யரும் கூட. க.நா.சுவுக்குச் செய்தியைச் . சொல்லிவிட்டு, ‘பார்த்தசாரதியின் zodiac sign உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார். ‘zodiac sign’ க்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று க.நா.சு வினவிய போது, ‘Gemini’யாக இருக்க வேண்டும், அதனால்தான் இந்த அதிர்ஷ்டம் என்று கூறினாராம் அந்தச் செயலர்.

அப்பொழுது ‘ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையில் வாரம் ஒரு பத்தி எழுதிக் கொண்டிருந்தார் க.நா.சு. அவர் எழுதிய அவ் வாரத் தலைப்பு ‘சாஹித்ய அகதெமி விருது கிடைப்பது எழுத்தாளருடைய zodiac sign யைப் பொறுத்த விஷயம் என்கிறார் அகதெமி செயலர்’/.

ஆண்டனி ட்ராலப் என்கிற ஆங்கில எழுத்தாளரைப் போல், க.நா.சு தினம் பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுவது என்ற பழக்கம் வைத்திருந்தார். அவருடைய சுயசரிதை பெரும்பான்மையான பகுதியை அவர் புதுக்கவிதையில் எழுதியிருக்கிறார். ‘கணையாழி’யில் சில பகுதிகள் பிரசுரமாகியிருக்கின்றன. பிரசுரமாகாத படைப்புக்கள் அவரிடம் நிறைய இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading க,நா.சு. at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: