முற்போக்கு

September 20, 2016 § 1 Comment


நான் கல்லூரியில் படிக்கும்போது, நான் வாழ்ந்த அக்கிராகர வாழ்க்கை எனக்கு அடியோடு பிடிக்கவில்லை. தெருவிலிருந்தவர்களில் முக்கால் வாசி கோயிலை நம்பி வாழ்ந்த குடும்பங்கள். உற்சவக் காலங்களில்தான் வேலை. மற்றைய நேரங்களில் கோயில் அருச்சகர் வீட்டுத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களை அவர்கள் நடத்திய விதத்தை இப்பொழுது விவரித்தால் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

சாதி, ஆசாரம் போன்றவற்றில் எனக்கு எரிச்சல் ஏற்படுவதற்கு இதுவே காரணம்.

ஆகவே என்னை முற்போக்குவாதி என்று காட்டிக் கொள்வதில் மிகத் தீவீரமாக இருந்தேன்.

அப்பொழுது ‘முற்போக்கு’ என்பதைப் பற்றித் தீவீரமான அபிப்பிராயம் எதுவும் கிடையாது.  பிராமணர்கள் எது எது செய்யக்கூடாது என்று விதிக்கப் பட்டிருக்கிறாதோ அவற்றையெல்லாம் செய்வதே ‘ முற்போக்கு’ என்ற கொச்சையான சிந்தனை.

எனக்கு அப்பொழுது ஷண்முகவடிவேலு என்ற நண்பன் இருந்தான். ‘இண்டர்மீடியட்’ என்னோடு படித்தான். நல்ல உயரம், வாட்ட சாட்டமான உடம்பு. தேவர் வகுப்பு. ‘வேங்கை மார்பன்’ என்ற பெயரில் வரலாற்றூ நவீனங்கள் பத்து எழுதியிருந்தான். எதையும் அவன் பிரசுரத்துக்கு அனுப்பவில்லை. வீரமும், சாகசமும் நிறைந்த நாவல்கள்.

அவன் அரசியல் கொள்கை விசித்திரமானது. பழுத்த சைவன். பெரியார் பக்தன். முஸ்லீம்களை அடியோடு வெறுத்தான். மரக்கறி உணவைத் தவிர வேறு எதனையும் தொடமாட்டான்.

எனக்கு முகம்மது ரஃபி என்ற இன்னொரு நண்பன் இருந்தான். அவன் அப்பா பெரிய காங்கிரஸ்கார்ர். பணக்காரர். ஷண்முகவடிவேலுக்கு

அவனைக் கண்டால் கொஞ்சங்கூட பிடிக்காது. ரஃபி என் வீட்டிலிருக்கும்போது வடிவேலு வந்தானானால் ‘சர் நான் அப்புறமா வரேன் என்று உடனே போய்விடுவான்.

‘முற்போக்கு வாதி’ என்று என்னைக் காட்டிக் கொள்ள மாமிசம் சாப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தது. நான் ரஃபியிடம் இதைச் சொன்னேன்.

அவன் சற்று அதிர்ச்சி அடைந்தான். ‘ மாமிசமா/ என்ன மாமிசம்? கோழியா, ஆடா?’ என்று கேட்டான்.

‘எதுவேணாலும்’ என்றேன் நான்.

அவன் புன்னகை செய்துகொண்டே சொன்னான்:’ சரி, நாளைக்கு வண்டியை அனுப்பறேன், பனிரெண்டு மணிக்கு., வா. ‘ என்றான்.

அவன் போனபிறகு என் வீட்டுக்கு வந்த ஷண்முகவடிவேலுவிடம் இதைச் சொன்னேன்.

கோபத்தில் அவன் முகம் சிவந்தது. ‘உங்க அம்மாகிட்டே சொல்லப் போறேன்’ என்றான் அவன்.

‘ப்ளீஸ், நான் சும்மா சொன்னேன்..’ என்றேன் நான். அவன் என் அம்மாவிடம் சொல்ல தயங்கமாட்டான் என்று எனக்குத் தெரியும். என் அம்மாவுக்கும் ‘நல்ல பையன்; என்று அவனிடம் ஒரு தனிப் ப்ரீதி உண்டு.

‘ பாகிஸ்தான் வந்தவுடனே இவங்க எல்லாரையும் அங்கே அடிச்சு விரட்டணும்..’ என்றான் வடிவேலு. ( பாகிஸ்தான் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தது )

சொன்னபடியே ரஃபி ஒரு இரட்டைமாட்டு வண்டியை அனுப்பினான். கம்பீரமான காளைகள். சொகுசு வண்டி.

ரஃபி வீட்டுக்குப் போகிறேன் என்று அம்மாவுக்குத் தெரியும். ஆனால் சாப்பிடப் போகிறேன் என்று தெரியாது. வழக்கப்படி, வீட்டில் காலை பத்து மணிக்குச் சாப்பிட்டு விட்டேன்.

பாலக்கரையில் இருந்தான் ரஃபி. பெரிய மாளிகை போன்ற வீடு. வாசலில் பெரிய தோட்டம். இரண்டு பெரிய நாய்கள் இருந்தன. எனக்குச் சற்றுப்

பயமாக இருந்தது. முதல் முதலாக மாமிச உணவு சாப்பிடப் போகிறேன் என்ற ‘ டென்ஷன் ‘ வேறு.

ரஃபி என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

அவன் அம்மா என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

‘முதல் முதலா சாப்பிட்டுப் பாக்கப் போறான்.. அவன் முற்போக்குவாதி..’ என்றான் ரப்ஃபி அவன் அம்மாவிடம்.

‘ பிராம்மணப் புள்ளே, உனக்கு எதுக்கு இதெல்லாம்?’ என்ற குரல் கேட்டது திரும்பிப் பார்த்தேன். வயதானப் பெண்மணி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.

’என் பாட்டி; என்றான் ரஃபி.

என் ‘டென்ஷன்’ அதிகரித்தது.

சாப்பிட உட்கார்ந்தோம். அந்தக் காலத்திலேயே ரஃபியி வீட்டுக்கு ‘சாப்பாட்டு மேஜை வந்து விட்டது. வட நாட்டிலிருந்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் அவன் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார்கள்.

முதலில் ‘சூப்’  வந்தது

‘ஸ்பூனில்’ ஒரு சொட்டு வாயில் விட்டுக் கொண்டு ருசிப் பார்த்தேன்.

‘எப்படி இருக்குது?’ என்றான் ரஃபி.

அந்த வாசனையைப் என் மூக்குப் பிடிவாதமாக ஏற்றுக் கொள்ள மறுத்தது.

வயிறு எதிர்ப்புத் தெரிவித்தது.

‘ஆட்டுக் கால்’ என்றான் ரஃபி.

காரணம் தெரியாமல், திடீரென்று ஷண்முகவடிவேலு என் மனக் கண் முன் வந்து விட்டுப் போனான்.

என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்த பாட்டி சொன்னாள்:’ அந்தப் புள்ளைக்குப் புடிக்கல போலருக்கடா, ராசா. உன் சின்னம்மா வீட்டிலேந்து எடுத்துக் கிட்டு வா சாப்பாடு.. பட்டினிப் போடாதே, பாவம்..’

சின்னமாவா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ரஃபி சொன்னான்: ‘ என்னோட சின்னம்மா. அப்பாவோட இளைய சம்ஸாரம். அவங்களும் உன் மாதிரி அய்யங்கார்தான். அவங்களுக்குத் தனி கிச்சன். என்னோட அப்பாவும் உன் மாதிரி முற்போக்குதான்.  சின்னம்மா கூட அவங்க அம்மாவும் இருக்காங்க. அவங்களுக்குப் பிடிச்சதைச் சாப்பிடட்டும்னு தனி கிச்சன்.வச்சுட்டாரு. அங்கேருந்து கொண்டாரச் சொல்லவா?’

 

 

 

 

Advertisements

§ One Response to முற்போக்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading முற்போக்கு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: