கம்பன் ஏன் கூறவில்லை?

September 11, 2016 § 1 Comment


கம்பனைப் பற்றித் தேர்ந்த கலை இலக்கிய அக்கறைகளுடன் கூடிய  ஓர் ஆங்கிலப் பிரசுரத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது.பல ஆண்டுகளுக்குப் பிறகு, கம்ப ராமாயணத்தில் எனக்கு அறிமுகமாகியிருந்த சிறந்த இலக்கியப் பகுதிகளைப் மீண்டும் படித்தேன். கட்டுரை எழுதி முடித்த பிறகு, கம்பனை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. பட்டி மன்றங்களிலோ அல்லது வழக்காடு மன்றங்களிலோ சொற் சிலம்பம் ஆட வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை.கம்பன் தரும் இலக்கிய அநுபவம் இந்த வயதில் எனக்குக் கலாசாரப் பிராணவாயுவாக உதவக் கூடுமென்று எனக்குத் தோன்றிற்று.

 

கம்பனைப் படிக்கத் தொடங்கிய பிறகு, வான்மீகத்தையும் உடன்வைத்து ஒப்பிட்டுப் படிக்க வேண்டுமென்ற விருப்பம்  எனக்கு உண்டாயிற்று.. சமீபத்தில், வால்மீகி ராமாயணம் முழுவதும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. Literary translation அல்ல, literal translation இதுதான் எனக்குத் தேவையாக இருந்தது.

 

இலக்கிய மனோதர்மத்திலும், நுட்பமான உளவியல் அறிவுடன் கதா பாத்திரங்கள் படைக்கும் கலை ஆற்றலிலும், அழகியல் ஆளுமையிலும் கம்பன் வால்மீகியை பல படிகள் விஞ்சி நிற்கிறான். ஆனால், பட்டைத் தீட்டப்படாத வைரமாக இருப்பதுதான் வால்மீகி ராமாயணத்தின் மூல பலம்.

 

பழந்தமிழ் இலக்கியங்களையும்( சங்க நூல்கள், திருக்குறள், பக்தி இலக்கியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி) சமஸ்கிருத நூல்களையும்(வேதங்கள், இதிகாசங்கள்)

கற்றுத் தேர்ந்த இலக்கியக் கொடுமுடி கம்பன் என்பதில் சந்தேகமே இல்லை.அவன் காவியத்தில் இதற்குச் சான்றுகள் பரக்கக் காணலாம். இந்த விரிந்த நூற் தேர்ச்சி, வறட்டு மேற்கோள்களாக வெளிப்பட்டாமல்,  அவனுள் கலந்து ஊடுருவி, அவனுடைய தனிப்பட்டப் பார்வையாகப் பரிணாமம் கொண்டு அவனை அடையாளப்படுத்துகிறது. ஷேக்ஸ்பியர், தாந்தே, டால்ஸ்டாய், ஹோமர், திருவள்ளுவர், இளங்கோ,வால்மீகி, வியாஸர் போன்ற பிரபஞ்சப் பார்வையுடைய படைப்பாளிகளின் அடையாளம் இது.

 

கம்பன் வால்மீகியைக்  கதை சொல்லும் வகையில் வேறுபாடு அதிகமில்லாமல் பின்பற்றினாலும், வான்மீகத்தில் காணும் சில நிகழ்வுகளை அவன் சொல்லாமல் தவிர்த்திருக்கிறான். வான்மீகத்தில் காணப்படாத நிகழ்வுகள் சிலவற்றை அவன் சொல்வதும் உண்டு.இது நுண்மையான பாத்திரப் படைப்புக்கு அவனுக்குத் தேவையாக இருந்திருக்கிறது.

 

வால்மீகி கூறும் முக்கிய நிகழ்வொன்றைக் கம்பன் ஏன் கூறவில்லை என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியதொன்று.

 

ஆரண்ய காண்டத்தில் இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் தாண்டக வனத்தில்

பல முனிவர்களைச் சந்திக்கின்றனர். அவர்கள் அவனிடம், இரக்கமிலா அரக்கர்களால் தாம் படும் துரங்களை விவரிக்கிறார்கள்.இராமன் க்ஷத்திரியன் என்ற முறையில் தங்களுக்குப் பாதுகாவலாக இருந்து அரக்கர்களைத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள், குறிப்பாக, சுதீட்சண முனிவரும், அகத்தியரும், அவனுக்குப் படைக் கலங்களைத் தருகிறார்கள். வான்மீகத்தில் வரும் இச்செய்தியைக் கம்பனும் கூறுகிறான். ஆனால் கம்பன் சுதீட்சண முனிவர் படைகள் தந்ததாகக் கூறவில்லை. வான்மீகத்தில் இருப்பது போல் கம்பனுடைய அகத்தியரும் இராமனுக்கு வில்லும், அம்புகளும் தருகிறார்.

 

கம்பன் இது சம்பந்தமாக, வான்மீகத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு முக்கிய நிகழ்வைச் சொல்லவில்லை.இராமன் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டபிறகு, சீதை அவனுடன் வழக்காடுவதைக் கம்பன் கூறவில்லை.

 

வால்மீகி சீதை கூறுகிறாள்:’ பொய் கூறுதல்,பிறர் மனை நயத்தல், வன்முறை ஆகிய மூன்றும் பாவங்களியும் மனிதன் செய்யக்கூடாது என்று நம் சாத்திரங்கள் கூறுகின்றன. நீ சத்தியத்துக்காக உயிரை விடக் கூடியவன்.மகிழ்ச்சி. பிறர் மனை நோக்கா பேராண்மை உனக்கு இருக்கிறது.அதைவிட பெரிய மகிழ்ச்சி. ஆனால் காட்டுக்குத் தவ மேற்கொண்டு

முனிவர் வேடம் தரித்து வந்திருக்கும் இந்நிலையில், உன்னால்  வன்முறையைத் தவிர்க்க

இயலவில்லையே. இதுவா தருமம்? நீயும் உன் தம்பியும் இவ்வனத்துக்கு ஆயுதப் பயிற்சி செய்வதற்காகவா வந்திருக்கிறீர்கள்? கையில் ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருந்தால், அவற்றை உபயோகிப்படுத்தியாக வேண்டுமென்ற அரிப்பு இருக்குமே தவிர, தவம் செய்ய வேண்டுமென்ற நினைவே வராது. ஒரு கதை உண்டு. ஒரு காட்டில் ஒரு முனிவர் கடுமையான தவம் செய்தாராம். இந்திரனுக்கு பயம் வந்துவிட்டதாம். தன் பதவிக்குப் போட்டி வந்து விடுமோ என்ற பயம். அவன் அம்முனிவரைக் காட்டில் சந்தித்து, ஓர் அழகான, கூர்மையான வாளைத் தந்து ‘இது உங்களுடைய பாதுகாப்புக்காக’ என்றானாம். அவ்வளவுதான், முனிவருடைய நினைவு முழுவதும் அந்த வாளைப் பற்றியே இருந்ததாம். அதைப்

பயன்படுத்தியாக வேண்டுமென்ற வெறி அவரை ஆட்கொண்டதாம்.தவம் போயிற்று, வாளும் வன்முறையும் மிஞ்சின. நீ இப்பொழுது க்ஷத்திரியன் இல்லை. முனிவன்.உலக அமைதியைக் காக்க வேண்டுமென்ற பொறுப்பு உன்னிடந்தான் இருக்கிறது என்ற நாட்டாண்மையை நீ

மேற்கொள்ள வேண்டுமென்று என்ன அவசியம்? நம்மிடம் ஆயுதம் இருந்தால்தான் மற்றவர்கள் இவன் நம்மைத் தாக்குவானோ என்ற அச்சத்தில் நம்மைத் தாக்க வருவார்கள். ஆகவே ஆயுதம் தவிர்”.

 

சீதையின் இக்கூற்று தற்காலத்துக்குத் தேவையான ஒரு பிரசாரம்.உலக அமைதியைக் காக்கும் பொறுப்புத் தன்னிடந்தான் இருக்கிறது என்று நாட்டாண்மையை மேற்கொண்டிருக்கும் அமெரிக்கப் பேரதிகாரத்தை எதிர்பதற்குத் தேவையான பிராசாரம்.

கம்பன் இதைக் கூறாமல் விட்டதற்கு என்ன காரணம்?

 

யோசிக்க வேண்டிய விஷயம்.

 

 

 

Advertisements

§ One Response to கம்பன் ஏன் கூறவில்லை?

  • ramjirc says:

    படிக்க ஆரம்பித்ததும் இராமாயணத்தை விட்டு வெளியே வரலாமே- இ பா வுமா ?என்று நினைப்பதற்குள் சீதையின் கூற்றை இன்றைய காலகட்டத்தில் புகுத்தி அசத்துகிறார் ஆசிரியர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கம்பன் ஏன் கூறவில்லை? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: