கலையும் கலகமும்

September 10, 2016 § 1 Comment


சில ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் அருங்காட்சியக அரங்கத்தில் ஒரு ‘நிகழ்வு’ (Happening) நடந்தது. அதற்கு பயங்கர விளம்பரம். நீட்சே, ஃபூக்கோ, டெர்ரிடா போன்ற பெயர்கள், விளம்பரத்தில் அடிபட்டன. நவீன மொழிநடைக்கேற்ப, கருத்துச் சூன்யத்தைத் தெரிவிக்க ஏராளமான சொற்களின் பட்டாளம். ஏதோ புதிதாக அந்த அரங்கத்தில் நடக்க இருக்கின்றது என்பது மட்டும் ஓரளவு புரிந்தது

’உலகத்தில் புனிதமானது என்று எதுவுமில்லை.’ ‘ அருவெறுப்புக் கொள்வது என்பது நம் மனக் குறை’ என்பன போன்ற கொட்டை எழுத்தால் பொறிக்கப் பட்ட வாசகங்களைத் தாங்கிய அட்டைகளுடன், பத்து, பதினைந்து இளம் ஆண்களும் பெண்களும், பிறந்த மேனியராய் மேடையை நோக்கி ஓடி வந்தார்கள். உலக மொழிகள் அனைத்திலும் கூச்சலிடுவது போல் கோஷங்கள் எழுப்பிக் கொண்டு வந்தார்கள். நீட்சேயின் பிரபலக் கூற்றாகிய ‘ கடவுள் இறந்து விட்டார்’ என்பது மட்டும் ஆங்கிலத்தில் தெளிவாகக் கேட்டது.

இதைத் தொடர்ந்து, மேடையில் பாலியல் வன்மங்கள் (Sado-masochistic sexual violence) நடைந்தேறத் தொடங்கின. இதைத் தவிர, டாய்லெட்கள், கழிவுப்பொருள்களின் அலங்கோலக் குவியல்கள், ஆகியவை மேடையை அலங்கரிக்க ஆரம்பித்தன. திடீரென்று அனைவரும் ஆசை

தீரக் கெட்ட வசவுகளைக் கொட்டித் தீர்த்தார்கள்.

அடுத்த நாள் ‘அற்புதமான ‘கலகப் படைப்பு’ என்று பத்திரிகைகளில் இந்நிகழ்வு பற்றிய மதிப்புரை வந்திருந்தது. இதில் வருந்தத் தக்கது என்னவென்றால், நல்ல கலை ரசனை உடைய மூத்த விமர்சகர்கள் கூட, மாறிக் கொண்டு வரும் இக்கலையுலகச் சூழ்நிலையில் தங்களைப் பத்தாம் பசலிகள் என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் இந்நிகழ்வு பற்றி கருத்துத் தெரிவிக்கத் தயங்கினார்கள்.

‘கலகப் படைப்பு’ என்ற சொல்லாட்சி இப்பொழுது புழக்கத்தில் வரத் தொடங்கியதே தவிர, இலக்கியத்தில் ஸ்தாபனத்துக்கு மாறான மாற்றுக் குரல்கள் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. ஆனால் அவை எப்பொழுதும் ரசனைக் குறைவாக இருந்த்தில்லை.

பெரும்பாலும் உயர்க் குடும்பத்து அழகானத் தலைவி, தலைவன் காதலைப் பற்றிப் பேசும் சங்க இலக்கியங்களில், அடிநிலை மக்களாகிய குறளன், கூனியின் காதலைப் பற்றி அங்கதச் சுவையுடன் சித்திரிக்கும் பாடல் இக்காலச் சொல்லாட்சியில் சொல்ல வேண்டுமென்றால், ‘கலகப்’ பாட்டு என்றுதானே சொல்லவேண்டும்?

தலைசிறந்த உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும், நன்மை, தீமை ஆகியவற்றுக்கிடையே நிகழும் போராட்டத்தில், ‘தீமை’ என்று சித்திரிக்கப் படுவதின்

பக்கம் நியாயம் இல்லாமல் போகவில்லை என்ற உணர்வை உண்டாகுவதுதான் உயர்ந்த இலக்கியத்தின் சிறப்பு,

மில்டனின் ‘இழந்த சொர்க்கத்தில்’ வரும் கடவுளின் எதிரி Satan கடவுளைக் காட்டிலும் அதிக முக்கியத்வம் பெறுகிறான். கம்ப ராமாயணத்தில், இராவணன், இறுதியில், ‘என்னையே நோக்கி யான் இந் நெடும் பகைத் தேடிக்கொண்டேன்’ எனும்போது புகழின் உச்சத்தில் நிற்கிறான். கதேயின் ‘பாஸ்ட்’ என்ற புகழ்பெற்றக் காவிய நாடகத்தில், உலகத்தையே தம் ஆளுமைக்குக் கொண்டுவர முயன்று வீழ்ச்சியடையும் டாக்டர் ஃபாஸ்டஸ் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெறுகிறார்.

ஷேக்ஸ்பியரின் ‘ஃபால்ஸ்டாபை’க் காட்டிலும் ‘கலகக் கதாநாயகன் யார் இருக்க முடியும்? ‘ திருடர்கள் தங்களுக்குள் நாணயமாக நடந்து கொள்ளாவிட்டால் உலகம் எப்படி உருப்படும் என்பது அவன் கேள்வி. ‘ புகழ்’ என்பது என்ன? வெறும் ஒலிக் காற்று. அதைப் பெறுவதற்காகவா ஒரு மடையன் நாட்டுக்காகப் போராட வேண்டும்? அவன் அதற்காகப் போராடி இறந்தானானால், அவன் அடையும் ‘புகழுக்கும்’ அவனுக்கும் என்ன சம்பந்தம்? செத்தபின் அவனுக்கு அது தெரியப் போகிறதா?’

உலகத்தில் புனிதமாகக் கருதப்படும் எதையும் கேள்விக்குரியதாக்கலாம். ஆனால் அது ரசனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

 

 

 

 

Advertisements

§ One Response to கலையும் கலகமும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading கலையும் கலகமும் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: