மூன்றாவது திருப்பம்

September 8, 2016 § 2 Comments


நான் தில்லிக்குப் போய் மதராஸிப் பள்ளியில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன.  ‘மதராஸிப்’ பள்ளி ’தமிழ்ப் பள்ளி ‘ யானதே தவிர, கல்லூரி ஆகவில்லை. தேசியக் கல்லூரி முதல்வர் அது கல்லூரியாக ஆகவே ஆகாது என்று சொன்னது உண்மையாகிவிட்ட்து. நான் போனபோது ஒரு மேல்நிலைப் பள்ளி. ஏழுவருடங்களில் நான்கு மேல்நிலைப் பள்ளிகள்.

அப்பொழுதுதான் என் வாழ்க்கையில் இன்னொரு திருப்பம் எதிர்பாராமல் நிகழ்ந்தது.

நான் பதினொன்றாம் வகுப்புக்குப் பாடம் நட்த்திக் கொண்டிருந்தபோது,, எனக்கு அவசர ஃபோன் வந்திருப்பதாக அலுவலகப் பணியாளர் வந்து சொன்னார். யாருக்கு என்ன ஆகிவிட்டதோ என்ற பயத்துடன் அலுவலகம் சென்றேன்.

தில்லிப் பல்கலைகழகத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ஆறுமுகத்தின் குரல் ஃபோனில் என்னை வரவேற்றது.

‘ என்ன வேலையாயிருந்தாலும், அதை விட்டுட்டு உடனே ஒரு டாக்ஸி பிடிச்சுக்கிட்டு யுனிவர்ஸிட்டிக்கு ரிஜிஸ்ட்ரார் ரூமுக்கு வாங்க’\ என்றார் அவர்.

\எதுக்கு?’

‘ உடனே வாங்க. லோதி ரோட்லேந்து எப்படியும் முக்கா மணி ஆகும். பரவாயில்லே, வாங்க,’

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த அவசரம்?

டாக்டர் ஆறுமுகம் ஓராண்டுக்கு முன்புதான் ‘ரீடராக’ தமிழ்த் துறையில் சேர்ந்திருந்தார். தொல்காப்பியம், சங்க நூல்கள் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சிப் பெற்றவர். எனக்கு நெருங்கிய நண்பர்.

நான் பல்கலைக்கழகம் சென்றதும். ‘ரிஜிஸ்ட்ரார்’ அறை வாசலில் டாக்டர் ஆறுமுகம் நின்றுகொண்டிருந்தார்.

‘ நீங்க ‘அப்ளிகேஷன்’ போடலியா?’ என்றார் அவர் சிறிது கோபத்துடன்.

‘எதுக்கு ‘அப்ளிகேஷன்’?

‘ டெல்லி யுனிவர்ஸிட்டி காலேஜ், தயாள் சிங் கல்லூரிக்கு? பேப்பர்லே விளம்பரம் பண்ணியிருக்காங்க, மூணு மாசத்துக்கு முன்னாலே, விரிவுரையாளர் வேணும்னு, நீங்க பாக்கலியா?’

‘இல்லே. எந்த ‘பேப்பர்லே/’

‘சரி அது கிடக்கட்டம்.. உள்ளே ‘இண்டர்வியு’ நடக்கப் போவுது. மெட்ராஸ்லேந்து ஆறு பேர் ‘அப்ளிகேஷன்’ போட்டாங்களாம்.. யாரும் வரல்லெ. அப்பொ நான் சொன்னேன் உங்க பேரை. வி.ஸி .டீன், காலேஜ் நிர்வாகத்தலைவர் எல்லாரும் உங்களை ‘இண்டர்வியு’க்குக் கூப்பிடலாம்னுட்டாங்க. நான் நீங்க அப்ளிகேஷன்

போட்டிருப்பீங்கன்னு நினைச்சேன். எல்லாத்திலியுமா இப்படி அலட்சியமா இருப்பீங்க.? சரி, வந்து உள்ளே வரும்படிக் கூப்பிட்டவுடனே வாங்க, நான் உள்ளே போறேன்’’

சிறிது நேரம் கழித்து கூப்பிட்டார்கள். உள்ளே போனேன்.

டாக்டர் ஆறுமுகத்தைத் தவிர நான்கு பேர் இருந்தார்கள் .ஒருவர் செக்கச்செவேலென்று ஆப்பிள் நிறத்திலிருந்தார். வயதானவர். (வேலையில் செர்ந்த பிறகுதான் அவர் கல்லூரி நிர்வாக க் குழுத் தலைவர் என்று எனக்குத் தெரிய வந்தது)

அவர் பெயர் பண்டிட் திவான்சந்த் ஷர்மா, காஷ்மீரத்தைச் சேர்ந்தவர். சுதந்திரத்துக்கு முன், லாகூரில் பரம்பரைப் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.. உருது,பர்ஸிய மொழிகளைக் கரை கண்டவர். )

என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும்படிப் பரிந்துரைச் செய்திருந்தாலும், முறைப்படித் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்காக் குரலில் சற்று அதிகாரத் த்வொனியை வரவழைத்துக்கொண்டு, டாக்டர் ஆறுமுகம் என்னைக் கேட்டார்: ‘ சங்க இலக்கியங்கள் பற்றி ஏதாவது சொல்லுங்கள்’

திவான்சந்த் ஷர்மா குறுக்கிட்டார்; ‘ இவரைப் பற்றி ஏற்கனவே எங்களிடம் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். அது

போதும். ஏதாவது ஒரு தமிழ்ப் பாடலைச் சொல்லி அதன் பொருளை விளக்க சொல்லுங்கள். என்ன சொல்லுகிறீர்கள், ப்ரொஃபஸர்?’ என்று இன்னொருவரைப் பார்த்துக் கேட்டார் அவர்.

( அவர் பேராசிரியர் ஆர்.கே.தாஸ்குப்தா. தாகூர் பேராசிரியராக தில்லிப் பல்கலைக் கழகத்தில் இத் தேர்வு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சேர்ந்திருந்தார்)

‘ஓகே. ஃபைன்..’ என்றார் அவர்.

‘கம்ப ராமாயணத்திலிருந்து சொல்லுங்க’ என்று தமிழில் சொன்னார் டாக்டர் ஆறுமுகம்.

இராவணன் கொலை செய்யப்பட்ட பிறகு அக்காட்சியைச் சித்திரிக்கும் பாட்லைச் சொன்னேன்.

‘ வெள்ளெருக்கும் சடைமுடியான் வெற்பெடுத்தத் திருமேனி

மேலும் கீழும்

எள்ளிருக்கும் இடனின்றி உயிருக்கும் இடம் நாடி

ஒருவன் இழைத்தவாறே!

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில்

கரந்த காதல்

உள்ளிருக்கும் என நினைத்து உள்புகுந்து தடவியதோ

ஒருவன் வாளி’

இராவணனுக்குப் பல பெண்களிடம் தொடர்பு இருந்திருந்தாலும், அவன் வாழ்க்கையில் ஒரு பெண்ணைத்தான் காதலித்தான்,. அவள்தான் சீதை என்று விளக்கிவிட்டு, அதற்கு ஆதாரமாக, ‘இதயமாம் சிறையில் வைத்தான்’/ என்று கம்பன் முன்னமே கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டி, நான் சொன்ன பாடலை வரி வரியாக விளக்கினேன்.

நான் பேசி முடித்தவுடனே, திவான்சந்த்  உரக்க ‘ லால் ஜவாப்!’ வாட் அ பொயெட்!’ என்று உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார். அவர் பெரிய கவிதை ரசிகர் என்று என்னால் அப்பொழுது உணர முடிந்தது. ( ‘லால் ஜவாப்’ என்றால் உர்துவில் ‘இதற்கு என்ன பதில்? அதாவது, இதற்கு ஈடு இணை உண்டா என்று அர்த்தம். உர்து மொஷையராவில் (கவி அரங்கத்தில்) அடிக்கடிக் கூறுவார்கள்..தயால்சிங் கல்லூரி நிர்வாகியாக திவான்சந்த் இருந்தவரை இந்த மொஷையரா ஆண்டுதோறும் நடந்துகொண்டிருந்தது.பாகிஸ்தானிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்பார்கள். ஆயிரக்கணக்கில் செலவாகும். அதிகப்படியான செலவு பனாரஸி பான் ஜர்தாவுக்குத்தான். இது திவான்சந்தின் சொந்தச் செலவு.)

’ வாட் எ பொயட்’ என்று கம்பனைச் சொன்னாரே தவிர, நான் வேலைக்குத் தகுதியானவனா என்று அவர் ஏதும்

சொல்லவில்லை என்பது என் நினைவுக்கு வந்தது.

‘ நீங்கள் இன்னும் விண்ணப்பமே தரவில்லை. ஆராய்ச்சிப் பட்டம் இருக்கிறதா?’ என்றார் டாக்டர் தாஸ்குப்தா.

‘இல்லை’/

‘ ஸோ வாட்? இங்கே வேலையில் சேர்ந்தவுடன் ஆராய்ச்சிப் பட்டத்துக்குப் பதிவு செய்துவிடு. புரிகிறதா?’ என்றார் திவான்சந்த்.

‘ அவர் இந்த வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் என் வழிகாட்டுதலில் பி.எச்.டிக்குப் பதிவு செய்ய இருக்கிறார்’ என்றார் டாக்டர் ஆறுமுகம்.

‘குட்’ என்றார் திவான்சந்த்.

எனக்கு வேலை கிடைத்தது மாலை நேரக் கல்லூரி.

உடனே வேலையில் சேர வேண்டும்.

பள்ளிக்கூட நிர்வாகம் என்னை விடுவிக்க விரும்பவில்லை. மூன்று மாதச் சம்பளம் கொடுக்கும்படி வற்புறுத்தினார்கள்

திவான்சந்தைப் பார்க்கச் சென்றேன். அவரிடம் பிரச்னையைச் சொன்னேன்.

அவர் சொன்னார்: ‘ இது மாலை நேரக் கல்லூரி. ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறது. நீ உன் பள்ளிக்கூட்த்தில் பகல் நேர வேலையச் செய்து விட்டு மாலையில் கல்லூரிக்கு வந்து

விடு. எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. பல்கலைகழகச் சம்பளம் நிச்சியமாகப் பள்ளிக்கூடச் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கும் இந்தச் சம்பளத்தை வாங்கு. அந்தச சம்பளம் வேண்டாம். இரண்டு இடங்களில் சம்பளம் வாங்க்க் கூடாது. சரியா?’

நான் பள்ளி முதல்வரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் என்னை பள்ளி நிர்வாகியைப் போய்ப் பார்க்கச் சொன்னார்

பள்ளி நிர்வாகி ஓர் அரசாங்க அதிகாரி. அரசாங்கச் சட்ட விதிகளைத் தலை கீழாக ஒப்பிப்பார். அரசாங்க அதிகாரிகளில் இரு வகை உண்டு. ஒரு வகை, ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி, வெற்றிப் பெற்று நேரடியாக அதிகாரியாக வருகிறவர்கள். இன்னொரு வகை, கீழிலிருந்து பதவி உயர்வு பெற்று அதிகாரியாக வருக்கிறவர்கள். இவர்களைச் சமாளிப்பதுதான் கஷ்டம். பள்ளி நிர்வாகி இரண்டாவது வகை.

அவரை நான் பார்க்கப்போனபோது மேலும் கீழுமாக என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

‘ வேலைக்கு முதல்வர் சம்மதத்துடன் முறைப்படி விண்ணப்பம் செய்தீர்களா?’

‘நான் விண்ணப்பிக்கவே இல்லை’

‘வாட்?’

‘நான் நடந்ததைச் சொன்னேன்.

‘ என்ன விசித்திரமான யுனிவர்ஸிட்டி! ‘ என்று ஏளனப் புன்னகையுடன் என்னை பார்த்தார்.

‘ நான் இங்குப் பள்ளிக்கூட்த்தில் வேலையில் சேர்வதற்கும் விண்ணப்பிக்கவில்லை. நீங்கள் அப்பொழுது நிர்வாகியாக இல்லை. முதல்வரைக் கேளுங்கள்’.’

‘எப்படி வந்தீர்கள்?’

நடந்ததைச் சொன்னேன்/

சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

‘சரி. மூன்று மாதம் பள்ளிக்கூடத்தில் வேலை செய்யுங்கள். சம்பளமில்லாமல் வேலை செய்வது விதிப் படித் தப்பு. ஒரு ரூபாய் சம்பளம். அப்பொழுதுதான் எங்களுக்கு உங்கள் மீது அதிகாரம் இருக்கும்.  ரெவின்யூ ஸ்டாம்ப் உங்கள் செலவில் நீங்கள் கையெழுத்திடும்போது ஒட்ட வேண்டும்’

நான் கல்லூரியில் வேலையில் சேர்ந்தேன். அப்பொழுது தில்லிப் பல்கலைக் கழகத்தில் இருவருக்கு மட்டுந்தான் ஒரு ரூபாய் சம்பளம்.

மற்றொருவர், தில்லிப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் ஸி.டி தேஷ்முக்.

 

 

.

Advertisements

§ 2 Responses to மூன்றாவது திருப்பம்

  • Ramji Ramachandran says:

    நான் பள்ளிப் படிப்பை முடிக்கும்​ வரை அங்கே இருந்ததற்கு நன்றி. மறக்க முடியாத நாட்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading மூன்றாவது திருப்பம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: