குரு பிரம்மம்

September 5, 2016 § Leave a comment


இன்று ‘ஆசிரியர் தினம்.

எனக்குச் சின்ன வயதில் ஆசானாக இருந்தவரைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

கும்பகோணத்தில் நான் இருந்தபோது, எங்கள் தெருவில் ஒரு மண்டபம் இருந்தது.  எங்கள் தெரு தொடக்கத்தில் பள்ளி கொண்டிருந்த ஆராவமுதன் ஒருகாலத்தில் அதற்குச் சொந்தக்காரராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது நாளா வட்டத்தில், அது பல கைகள் மாறி, நான் அங்கு இருந்த போது. ஒரு பிராமண விதவைக்குச் சொந்தமாக இருந்தது.

அவரைப் பற்றிய வரலாறு என்னவென்றால், அவருக்கு எட்டு வயதில் கல்யாணம். மணமகன் வயது அறுபத்திரெண்டு. விவாகமாகி ஆறாம் மாதமே காலன் அவர் காலருகே வந்துவிட்டான். அவர் பாரதி இல்லை. அவனை எட்டி உதைக்கவும் முயலவில்லை. அவருடைய உடைமையாகிய அந்தப் பெரிய மண்டபம், அவருடைய மனைவிக்குச் சொந்தமாயிற்று. மண்டபத்து ஐம்பது வருஷ உரிமையினாலோ என்னவோ, தெருவிலிருந்த அனைவரும் அவருடைய ஓங்கிய குரலுக்குப் பயந்தார்கள்.

நான் எட்டு வயசில் சைக்கிள் கற்றுக் கொள்ள முயன்று அவர் மீது மோதிவிட்டதினால், அவர் போட்ட கூப்பாடு இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு, நான் சைக்கிள் விடவே கற்றுக் கொள்ளவில்லை!

அந்த மண்டபத்தில் பதினாறு குடித்தனங்கள் இருந்தன. குஞ்சும்,குழுவான்களுமாக க் குறைந்தது எட்டுப் பேர் ஒரு  குடும்பத்தில். இத்தனைக்கும் ஒரே அறைதான். அதிலியே சமையல், பூஜை, வரவேற்பு, படுக்கை. பதினாறு குடித்தனங்களுக்கும் மூன்று கழிப்பறைகள். துர்நாற்றத்தை மறைப்பதற்காக த் தான் ஒவ்வொரு வீட்டிலும் சாம்பிராணி, ஊதுவத்தி சகிதம் பூஜை செய்தாக வேண்டும் என்ற கட்டாய நியதி இருந்ததென்று நினைக்கின்றேன்.

தில்லிக்கு வந்த பிறகு,எனக்குத் தூக்கம் வராத போதெல்லாம்  ஒவ்வொரு குடித்தனத்திலும் இருந்தவர் பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயல்வேன். தூக்கம் வந்து விடும்.

அந்த மண்டபத்தில்தான், என் ‘ட்யூஷன்’ ஆசிரியர் இருந்தார். முப்பத்தைந்து வயதுக்கு மேலாகியும் மனைவி இல்லை. கல்யாணம் ஆகவில்லை என்றும், கல்யாணமாகி மனைவி ஓடிப் போய்விட்டாள் என்றும் இரண்டு கருத்துக்கள் நிலவின. அவர் இரண்டையும் மறுக்கவில்லை. அந்த மண்டபத்தில் அவர் ஒருவர்தாம் ஓர் ஆளாகத் தனிக் குடித்தனம்.

வாசனையாக, அருமையாகச் சமைக்கிறார் என்று மண்டபத்து உப்பிலி மாமா என் அப்பாவிடம் சொன்னார்.

‘அப்படியானால் அவர் மனைவி அவரைவிட்டு ஓடிப்

போயிருக்க மாட்டாள். எந்த மனைவி நன்றாகச் சமைக்கத் தெரிந்த கணவனை விட்டு ஓடிப் போவாள்/ ‘ என்றார் என் அப்பா.

நான் ஒருவன் தான் அவருக்கு மாணவன். நான் ஆரம்ப ப் பள்ளி வகுப்புக்கள் எதுவும் படித்ததில்லை. ஒன்பது வயதாகிவிட்ட படியால், ‘ட்யூஷன்’’ மூலம் ’ஃபர்ஸ்ட் ஃபார்மி’ல் (ஆறாம் வகுப்பு) சேர்த்து விடுவதாக அந்த ஆசிரியர் என்னுடைய அப்பாவுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 1939ல் கடுமையான பள்ளிக்கூட சட்ட

விதிகள் எதுவும் இல்லை.

எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட அவர்தாம் காரணம். ஆங்கிலச் செவ்வியல் நூல்களில் அவர் படிக்காதது எதுவும் இருந்திருக்க முடியாது என்று இப்பொழுது தோன்றுகிறது. ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி, ஆகியோர் படைப்புக்களைப் பற்றி நான் புரிந்து கொண்டேனோ இல்லையோ என்னிடம் அவர் பேசுவது வழக்கம். பிற்காலத்தில்தான் அவர் இவ்வாறு சொன்னதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்கிறேன். ‘Memories recollected in tranqulity’ ! அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

என் வயதைக் கூட்டிக் கொடுத்து என்னை ஆறாம் வகுப்பிலும் சேர்த்து விட்டார். என்னைப் பள்ளிக்கூட்த்தில் சேர்த்த பிறகு, ஒரு வாரம் அவரைக் காணவே இல்லை. எங்குப் போனாரென்று யாருக்கும் தெரியாது. ஆறு மாதச் சம்பளத்தைச் ( நூறு ருபாய் !) சேர்த்து வாங்கிக் கொள்வதாக என் அப்பாவிடம் சொன்னவர் அதையும் வாங்கிக் கொள்ளவில்லை.

ஒரு நாள் ஒரு இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் என் அப்பாவைப் பார்க்க வந்தார்கள்.

‘உங்கள் பிள்ளைக்கு ‘ட்யூஷன்’ சொல்லிக் கொடுத்தானே இராமதுரை, அவனை எத்தனை நாட்களாக உங்களுக்குத் தெரியும்?’ என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் என் அப்பாவிடம்.

‘இராமதுரையா? அவர் பெயர் ஆராமுதன்’ என்றார் என் அப்பா.

‘சரி ஆராவமுதன், சாரங்கன், ஸ்டீபன், காஸிம்’ எல்லாம் அவன்  பெயர்தான். அவனை பெஸவாடாவில் போலீஸ் தேடிக் கொண்டு இருக்கிறது. அங்கு போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வைத்துத் தப்பி ஓடி இங்கு வந்துவிட்டான். காந்தி கட்சி.” என்றார் இன்ஸ்பெக்டர்.

‘காந்தி யாரையும் குண்டு வைக்கச் சொல்லவில்லை. இவரும் குண்டு வைக் க க் கூடியவர் என்று எனக்குத் தோன்றவில்லை. படித்தவர். நல்ல ஆத்மா.’ என்றார் அப்பா.

இன்ஸ்பெக்டர் உடனே ஒரு புகைப் பட்த்தை எடுத்து அப்பாவிடம் காண்பித்தார். ‘இவர்தானே உங்கள் பையனுக்கு வாத்தியார்?’

‘ஆமாம்’

‘அவனேதான். அவனை மறுபடியும் நீங்கள் பார்த் தால் எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை. மண்டபத்தில் உள்ளா ஒவ்வொரு குடித்தனக்காரரும் உங்களுக்குத்தான் அவனை நன்றாகத் தெரியும் என்று சத்தியம் செய்கிறார்கள்’ என்றார் இன்ஸ்பெக்டர்.

‘இவர்களுக்கு எல்லாம் சுதந்திரம் கிடைத்தாலும் என்ன பிரயோஜனம்?’ என்றார் என் அப்பா.

‘அதுவும் உண்மைதான்’ என்றார் இன்ஸ்பெக்டர்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading குரு பிரம்மம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: