அந்த நாளும் வந்திடாதோ?

September 3, 2016 § 1 Comment


நானும் என் மனைவியும், கல்யாணம் ஆன புதிதில், ’டிஃபன்ஸ காலனி’ என்ற இடத்தில் இருந்தோம். பெயரைப் பார்த்ததும், ராணுவத்தில் பணி புரிகின்றவர்களுக்கான இடம் என்று தோன்றும். அப்படிடித்தான் நினைத்துக் கொண்டு, இந்தியா-பாகிஸ்தான் போரின்போது (1965)  ‘ராணுவ அநுபவம் உங்களுக்கு இருப்பதினால், இந்தப் போரை அடிப்படையாக வைத்து ஒரு சிறுகதை எழுதி அனுப்புங்கள்’ என்று ஒரு பிரபலப் பத்திரிகையிடமிருந்து எனக்குக் ஒரு கடிதம் வந்தது. என்னுடைய நாலைந்து கதைகளை அது ஏற்கனவே பிரசுரித்திருந்தது. என்னுடைய முகவரி என்னை ராணுவ வீரனாக அறிவித்திருக்க வேண்டும்.

‘டிஃபன்ஸ் காலனி’ என்று ஏன் பெயர் வந்தது?

பிரிவினையின்போது (1947)பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக க் குடி பெயர்ந்த ராணுவ வீர்ர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம். அவர்களில் சிலர்தாம் அங்கு வீடு கட்டிக்கொண்டார்கள். பெரும்பான்மையோரிடமிருந்து, வசதி உள்ளவர்கள், மனைகளை நல்ல விலைக்கு வாங்கிப் பெரிய வீடாக க்கட்டிக் கொண்டார்கள்..அரசாங்க அதிகாரிகள்தாம் இந்த தில்லு முல்லுக்கு முதற் காரணம். தென் தில்லி ஒரு ‘பாஷ் ஏரியா’வாக வரப் போகிறது என்று அவர்களுக்கு முன் கூட்டியே தெரியும்.

நான் அகதியாக வந்த ஒரு நாணுவ வீர்ர் கட்டியிருந்த சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன்..

என் வீட்டுக்காரருக்குச் சமயச் சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கை. யாரோ ஜோஸ்யன் சொன்னானாம், கல்யாணம் ஆகியிருக்கும் ஒரு புதுத் தம்பதிகளுக்கு வீடு கொடுத்தால், அவர் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகுமென்று. அப்பொழுதே முந்நூறு ரூபாய் வாடகை வந்திருக் க்ககூடிய வீட்டை எனக்குப் பாதி வாடகைக் குக் கொடுத்தார்.

நல்ல வேளை, அவர் பெண்ணுக்கு நான் குடி புகுந்து மூன்று மாதங்களில் கல்யாணம் ஆகிவிட்டது. நான் அந்த வீட்டில் ஏழு ஆண்டுகள் இருந்தேன்.

திருச்சியைத் தவிரத் தாண்டி அறியாத என் மனைவிக்கு தில்லி ஒரு பழகின இடம் போல் இருந்ததில் ஆச்சர்யமில்லை. காரணம், அவள் ஹிந்தி பிரச்சார சபா தேர்வுகளில் விஷாரத் முடித்திருந்தாள். ஆழ்ந்த தமிழ்ப் பற்றோ என்னவோ, எனக்கு ஹிந்தி சுத்தமாக வரவேயில்லை. வீட்டுக்கார்ர் குடும்பத்தோடு அவள் ஹிந்தியில் பேசியது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தில்லிக்கு வந்த மூன்றாம் மாதம் அவள் ஒரு நாள் காலை ‘டிஃபன்ஸ் காலனி’ மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறாள். நான் அப்பொழுது வெளியே போயிருந்தேன். நல்ல குளிர். ஜனவரி மாதம் என்று நினைக்கின்றேன். அவள் ஏதோ தடுக்கி மார்க்கெட்டில் விழுந்து விட்டாள். காலில் நல்ல அடி.இரத்தம் வர ஆரம்பித்துவிட்டது நிற்கவில்லை. அவளை அந்த மார்க்கெட்டிலிருந்த ஒரு ‘க்ளினி;க்குக்கு ஒரு வயதான பஞ்சாபிப் பெண்மணி அழைத்துக் கொண்டு போயிருக்கிறாள்.

வயதான டாக்டர்.  பாகிஸ்தானிலிருந்து வந்தவர்.

காயத்தைக் கழுவி பாண்டேஜ் போட்டு, ஒரு ’ஆண்டி-‘டெட்டனஸ்’ ஊசிப் போட்டிருக்கிறார்.

‘எத்தனைக் கொடுக்க வேண்டும்?’ என்று என் மனைவி கேட்டிருக்கிறாள்.

அப்பொழுது அவருக்கு ‘டெலிஃபோன்’ வந்தது.அவர் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். வேகமாகப் போய்

‘ஃபோனை’ எடுத்திருக்கிறார். இவையெல்லாம் என்மனைவி என்னிடம் பின்னால் சொன்ன தகவல்கள்.அவர் ஃபோனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

திடிரென்ரூ என் மனைவியப் பார்த்து நினைவு வந்தவர் போல் ஐந்து விரல்களைப் பிரித்துக் காட்டியிருக்கிறார்.

என் மனைவி ஐம்பது ரூபாயை மேஜையில் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.

நான் வந்ததும் நடந்ததைச் சொன்னாள்.

எனக்கு ஐம்பது ரூபாய் ‘கொள்ளையாகப் பட்டது.

‘இது பாஷ் ஏரியா. கொள்ளை அடிக்கிறாங்க. அதுவும் பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பான். விட்டதெல்லாம் பிடிக்கப் பாக்கிறான்  என்றேன் நான்.

‘ திருச்சியிலியே இப்பொல்லாம் பதினைஞ்சு ரூபா வாங்க ஆரம்பிச்சுட்டா’.என்றாள் என் மனைவி.

அன்று மாலை, அறை வாசலிலிருந்த சிறிய வெராந்தாவில் உட்கார்ந்திருந்தோம்.

அப்பொழுது வாசலில் ஒரு சைக்கிளிலிருந்து இறங்கி ஒருவர் எங்கள் வீட்டை நோக்கி வந்தார்.

கையிலிருந்த துண்டுக் காகிதத்தில் முகவரியைச் சரி பார்த்தார்.

‘டாக்டர்’ என்றாள் என் மனைவி.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு வருகிறார்?

எலும்பு முறிவைச் சொல்ல மறந்துவிட்டாரோ?

‘ஆயியே, டாக்டர்’ என்றாள் என் மனைவி.

என்னை அவருக்கு அறிமுகப் படுத்தினாள்

அவர் என்னிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்தார்.

‘அவருக்கு ஹிந்தி அவ்வளவாகத் தெரியாது’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் என் மனைவி

தனக்கு ஹிந்தி தெரியும், என் கணவருக்குத் தெரியாது என்று சொல்வதில் எத்தனை சந்தோஷம் இவளுக்கு என்று சற்று எரிச்சல் ஏற்பட்டது. எனக்கு.

‘பைடியே, டாக்டர்’ என்று நான் என் ஹிந்தி அறிவைக் காண்பித்தேன்.

என் உச்சரிப்பு என்னைக் காட்டிக் கொடித்திருக்க வேண்டும்

அவர் ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார்:’ இன்று காலை உங்கள் மனைவி வைத்தியத்துக்கு வந்தார். நான் வருகின்ற ‘பேஷண்டு’களின் பெயரையும் முகவரியையும் குறித்துக் கொள்வேன். அதனால்தான் உங்கள் வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது.’

‘என்ன பிரச்னை? ஃபீஸை’க் குறைத்துக் கொடுத்து விட்டாளா?’ என்றேன் நான்.

அவர் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு சொன்னார்:’ நான் டெலிஃபோனில்’ பேசிகொண்டிருந்தேன்.. ஐந்து விரலைக் காண்பித்தேன். ஐம்பது ரூபாய் வைத்து விட்டு வந்திருக்கிறார்.’

‘மன்னிக்கவும். எத்தனை ஃபீஸ்/’

‘ஐந்து ரூபாய்’ நான் அதற்கு மேல் யாரிடமும் வாங்குவதில்லை’.

நான் கூனிக் குறுகி அவர் முன் நிற்பது போல் எனக்குப் பட்டது.

இந்தாருங்கள். நாற்பத்தைந்து ரூபாய்’. இதைக் கொடுக்கத்தான் வந்தேன்’.என்றார் டாக்டர்.

அது வேறு காலம், வேறு உலகம்.

 

 

 

 

 

 

 

Advertisements

§ One Response to அந்த நாளும் வந்திடாதோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading அந்த நாளும் வந்திடாதோ? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: