முதல் திருப்பம்

August 26, 2016 § 3 Comments


என் வாழ்க்கையில் பல எதேச்சையான சம்பவங்கள் நிகழ்ந்து, அவை என் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்துவிட்டன.

நான் தமிழ் முதுகலைத் தேர்வில் முதல் வகுப்புப் பெற்றிருந்தாலும், ஆறு மாதம் வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. காரணத்தை நான் ஆராய விரும்பவில்லை. 1952ல் புதுப்புதுக் கல்லூரிகள் தோன்றின. ஆனால் எனக்குத்  வேலை கொடுக்க யாரும் தயாராக இல்லை.

நான் பம்பாய்க்குப் போய்விட்டேன்.

அங்கு என் அண்ணன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்திலும் எனக்கு ஓரளவு தேர்ச்சி இருந்ததால்,, நானும் இதழியியல் துறையில் சேர்ந்து விடலாமென்று நினைத்தேன்.

பம்பாய் போன உடனேயே என் அண்ணன் சொல்லி விட்டார்:’ அண்ணனும் தம்பியும் ஒரே பத்திரிகையில் வேலை செய்வது உசிதமில்லை. ‘ஃப்ரீ ப்ரெஸ் ஜெர்னலை’த் தவிர வேறு பத்திரிகையில் முயற்சி செய்யலாம். நீ தமிழ் எம்.ஏ. படிக்கப் போனதே தப்பு. யார் சொல்லியும் நீ கேட்கவில்லை’

அவர் அவருடைய பல பத்திரிகைத் துறை நண்பர்களிடம்

என்னை பற்ரிச் சொல்லி வைத்தார்.

ஒரு நாள் என் அண்ணன் என்னிடம் சொன்னார்: ‘ ‘ப்ளிட்ஜ்’ (Blitz) பத்திரிகை ஆசிரியர் கராக்காவைப் போய் பார்/ என் நண்பர் ஒருவர் கராக்காவுக்கு மிகவும் வேண்டியவர். சம்பளம் அதிகம் கிடைக்காது. வேலையைக் கற்றுக் கொள்ள உதவும். இன்று மதியமே போய்ப் பார்ப்பது நல்லது.’

முலண்டிலிருந்து, விக்டோரியா டெர்மினஸ்ஸுக்கு மதிய உணவு சாப்பிட்டவுடன் கிளம்பிவிட்டேன்.

‘ப்ளிட்ஸ்’ அலுவலகம் போனவுடன், எனக்கு லேசாக நடுக்கம் கண்டது. கராக்காவை நான் பார்த்திராவிட்டாலும், மிகப் பிரபலமானவர் என்று தெரியும்.

நான் அலுவலக வாசலை அடைந்ததும், வெலியே வந்த ஒருவர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தர். சிவந்த மேனி. நல்ல உயரம். எனக்கு நாக்குக் குழறியது. ‘ மிஸ்டர் கராக்கா….’

‘ஓ! கராக்காவா? இன்று அவர் ஆபிஸ் வரவில்லை. வரவும் மாட்டார்’ என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு ‘பப்ளிக் பூத்’திலிருந்து அண்ணனுக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னேன். ‘கராக்கா மாலை ஆறு மணிக்கு ராயல்  ஏஷியாடிக்

ஸொஸைட்டி ஹாலில்’ ஒரு கூட்டத்தில் பேச இருக்கிறார். அங்குப் போய் பார்..’ என்றார் அண்ணன்

ஆறுமனிக்குச் சற்று முன்பாக, ராயல் ஏஷியாடிக் ஸொஸைட்டி ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கு ஒருவரிடம்,’ இன்று இங்கு கராக்கா பேச இருக்கிறாரா?’ என்று கேட்டேன்.

‘அதோ போகிறாரே, அவர்தான் கராக்கா’ என்றார் அவர்.

நான் திடுக்கிட்டேன். அவர் சுட்டிக் காட்டியவர், மதியம் என்னிடம் கராக்கா இன்று வர மாட்டார் என்று சொன்னவர்.

இவரா என க்கு வேலை கொடுக்கப் போகிறார் என்று தோன்றிற்று.

அன்றிரவு என் அண்ணனிடம் சொன்னேன். ‘ பத்திரிகைக் காரர்களை நான் இனி நம்பத் தயாராக இல்லை.’

‘பொறுமை வேண்டும். நான் பம்பாய்க்கு வந்து மூன்று மாதம் வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. அப்புறம் முதலில் ‘பம்பாய் கிரானிகல்’ சேர்ந்தேன். நீ வந்து பதினைந்து நாளாகிறது. அதற்குள் வேலை கிடைத்து விடுமா?’

‘நான் ஆறரை மாதமாக வேலை தேடுகிறேன்..’

அண்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்த நாள் நான் அண்ணன் அலுவலக நூல்நிலையத்தில்

ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.

நூல்நிலையத்தில் என்னைத் தவிர வேறு யாருமில்லை.

அப்பொழுது, அதட்டலாக,’ ஹூ ஆர் யூ / ‘ என்ற குரல் கேட்டது

நான் திரும்பிப் பார்த்துவிட்டு எழுந்து நின்றேன். வயதானத் தோற்றம். மிடுக்குக் குறையவில்லை.

‘ நான்…  ‘ என் அண்ணன் பெயரைச் சொல்லிவிட்டு, ‘ அவருடைய தம்பி’ என்றேன்.

‘ நீ படிக்கிறாயா? வேலை பார்க்கிறாயா?’

அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது அவர் சதானந்த். ‘ஃப்ரீ ப்ரெஸ் ஜெர்னல்’ பத்திரிகை ஆசிரியர், ,உரிமையாளர்..

‘படித்து முடித்துவிட்டேன் .எம்.ஏ. வேலை கிடைக்கவில்லை.’

‘என்ன எம்.ஏ?’

‘தமிழ் எம்.ஏ.’

‘தமிழ் எம்.ஏ. படித்துவிட்டு, பம்பாய்க்கு ஏன் வந்தாய்? மெட்ராஸில் அல்லவா வேலை தேட வேண்டும்?’

‘ஆறு மாதமாக மெட்ராஸில் வேலை கிடைக்கவில்லை. எனக்கு ஆங்கிலத்திலும் ஓரளவு தேர்ச்சி உண்டு. ‘

‘உன் அண்ணன் என்னிடம் இதைப் பற்றி ஏன் சொல்லவில்லை?’

‘தெரியாது.’

‘ சரி, உனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதி, இன்றைக்கு மறுநாள், என்னை வந்து என் ஆபீஸில் பார். நான் யார் தெரியுமா?’

‘தெரியும் என்பதற்கு அடையாளமாக நான் தலை அசைத்தேன்.

அவர் போய்விட்டார்.

அன்று மாலை நான் வீட்டுக்குப் போனவுடன் அண்ணி என்னிடம் ஒரு தந்தியை நீட்டினார்.

திருச்சி அண்ணனிடமிருந்து வந்திருந்தது தந்தி.

‘ திருச்சி தேசியக் கல்லூரில் வேலை காலியாக இருக்கிறது. துணை முதல்வர் உனக்குத் தந்தி அடிக்கச் சொன்னார். உடனே புறப்பட்டு வா.’

அண்ணியிடம் தந்தியைக் கொடுத்தேன்.

\நான் படித்துவிட்டேன். என்ன செய்யப் போகிறாய்?’

அப்பொழுது அண்ணன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தார்.

அண்ணி அவரிடம் தந்தியை நீட்டினார்.

அண்ணன் படித்துவிட்டுப் புன்னகை செய்தார்.

‘ உங்கள் ஆசிரியர் நூல் நிலையத்தில்…’ என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அண்ணன் கூறினார்: ‘தெரியும்.

என்னை கூப்பிட்டு அனுப்பி என்னிடமு சொன்னார். நீ என்ன செய்ய இருக்கிறாய்?’

‘ என்ன செய்யலாமென்று நீங்கள் சொல்லுங்கள்’

‘ இது உன் முடிவாகத்தான் இருக்க வேண்டும். பத்திரிகைத் தொழில் என்றால் ‘நைட் டூயூட்டி’க்குத் தயாராக இருக்க வேண்டும். யோசித்து முடிவு செய்துவிட்டு என்னிடம் சொல்.. இதைத்தான் ‘எக்ஸிஸ்டென்ஷியல் டைலம்மா’ என்பார்கள்.’ என்றார் அண்ணா.

.நான் விண்ணப்பம் செய்யாமலேயே, நேர்முகத்தேர்வுக்குப் போகாமலேயே கிடைக்கப் போகின்ற வேலை, வேண்டாம் என்று சொல்லலாமா

நான் திருச்சிப்  போக முடிவு செய்தேன்.

பத்ரிகைக்காரனாக இருப்பதற்குப் பதிலாக, ஆசிரியனாக இருக்க முடிவு செய்தேன்.

இது முதல் திருப்பம்

 

Advertisements

§ 3 Responses to முதல் திருப்பம்

 • YPF says:

  Romba nanna irukku

 • Mohan says:

  Dear Saar:
  Very interesting and absorbing turn of events. Journalism’s loss was literary worlds gain. Many of our school classmates are unaware of the events that lead to your signing up with Madrasi school through Principal Suryanarayanan in Madurai. Please post a blog. Thank you.
  C.P.mohan Ayer

  Sent from my iPad

  >

 • ramjirc says:

  உங்கள் திருப்பம் பல மாணவர்களின் அதிர்ஷ்டம்.

  ராம்ஜி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading முதல் திருப்பம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: