மிருகநாயகம்

August 20, 2016 § 1 Comment


பரம்பரை பரம்பரையாக அந்தக் காட்டை ஆண்டு வந்த சிங்கம் இறந்து விட்டது. துரதிருஷ்டவசமாக (அல்லது மற்றைய மிருகங்களின் அதிர்ஷ்டவசமாக) அந்தச் சிங்கத்துக்குக் குடும்பம் ஏதுமில்லை. அப்பொழுதுதான் அந்தக் காட்டிலிருந்த மிருகங்களுக்கு அந்த யோசனை தோன்றிற்று.

நாட்டில் வாழும் மனிதர்களைப் போல், காட்டு அரசனைத் தேர்ந்தெடுத்தால் என்ன? இந்த யோசனை முதலில் தோன்றியது, அறிவுக்குப் பேர் போன ஓர் ஆந்தைக்கு..

அது கூடியிருந்த மற்றைய மிருகங்களிடம் சொன்னது : ‘தலைவனைத் தேர்ந்தெடுப்பதை மனிதன் ஜனநாயகம் என்கிறான். நாம் ‘மிருக நாயகமாக’ நம் அரசனைத் தேர்ந்தெடுப்போம். நாம் அமைதியாக வாழ விரும்புகிறோம் என்பதைக் காட்ட இக்காட்டில் பெரும்பான்மை இனமாக இருக்கும் மான் கூட்டத்தில் ஒன்றை அரசனாகத் தேர்ந்தெடுப்போமே,என்ன சொல்லுகிறீர்கள் ?’

‘நல்ல யோசனைதான். ஆனால், புலிகள், கரடிகள் காண்டாமிருகங்கள் போன்ற வலிமை மிகுந்த நம் குடியினர் இருக்கும் காட்டில் ஒரு மானை அரசனாகத் தேர்ந்தெடுப்பது பொருத்தமாக இருக்குமா? மான்களுக்கு நல்லதா?’ என்று கேட்டது ஒரு நரி.

‘ஏன் பொருத்தமில்லை?மிருகங்களைக் காட்டிலும் கொடூரமான மனிதன் ‘பசு வதை கூடாது’ என்று சட்டம் இயற்றும்போது, நாம் ஏன் இனி ஒரு விதி செய்யக்கூடாது?’ என்று மென்மையான குரலொன்று கேட்டது.

எல்லா மிருகங்களும் குரல் வந்த திக்கை நோக்கின.

வாட்டசாட்டமான, அழகான பொன்னிற ஆண் மான் ஒன்று அங்கே நின்று கொண்டிருந்தது. அது அந்தக் காட்டுக்குப் புதிதாய்த் தோன்றியது.

‘நாங்கள் உன்னை இது வரைப் பார்த்ததே இல்லையே?’ என்றது ஒரு புலி. வாயில் எச்சில் ஊற.

’நான் மேற்கு திசையில் இருக்கும் ஒரு காட்டைச் சேர்ந்தவன்.  நான் பிறந்தது புலி இனத்தில். அகங்காரம் மிக்கவனாக இருந்தேன். புலிகளைத் தவிர வேறு எந்த விலங்கும் காட்டில் இருக்கக் கூடாது என்ற இனவெறியில், அந்தக் காட்டிலிருந்த மற்றைய மிருகங்கள் அனைத்தையும் கொன்ற பாவி நான். மான் உருவில் வந்த வேறொரு ஒரு ரிஷியைப் மான் என்று நினைத்துக்  நான் கொல்ல முயன்றபோது, அவர் திடீரென்று ரிஷியாய் மாறி ஒரு சாபம் கொடுத்தார்: நீ இனி மானாக மாறக் கடவது! நீ கொன்ற மிருகங்களின் ஆவி உன்னைத் துரத்தட்டும்! அதுவே உனக்கு நரகம் என்று. நான் அவரைக் கெஞ்சியதற்கு இரங்கி அவர் சாபத்தின் கடுமையைக் குறைத்து என்னை ஒரு பொன்மானாகவும் மாற்றினார்

‘வடக்கே இந்திரபிரஸ்த காட்டுக்குச் சென்று மிருகச் சமூகத்துக்கு கைங்கர்யம் புரிவதை உன் கடமையாய்க் கொண்டால், உன்பாவம் விலகும்’ என்று கூறிவிட்டு தபஸ் செய்ய போய்விட்டார் மான் உருவில் வந்த அந்த ரிஷி. அவர் போன பிறகு, நான் மேற்கு திசையிலிருந்து புறப்பட்டு உங்களிடம் அடைக்கலம் கோரி இங்கு வந்திருக்கிறேன்.’ என்று குரல் தழு தழுக்க கண்ணீர்ப் பெருகக் கூறியது அந்த பொன் மான்.

‘சரி, ‘இனியொரு விதி செய்வோம்’ என்றாயே, என்ன விதி?’ என்று கேட்டது ஆந்தை.

‘நாம் யாவரும் இனி மற்றைய மிருகங்களைக் கொன்று மாமிசம் சாப்பிடக் கூடாது என்ற விதி. அப்படி ஒரு விதி செய்தால், ஒரு மானைக் கூட நம் அரசனாக ஏற்றுக் கொள்ள முடியும். நரியின் பயத்துக்கு இடமில்லை. என்னை நீங்கள் அரசனாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. நான் அந்நியன். உங்களிடையே இருக்கும் மான் ஒன்றைத் தேர்ந்தெடுங்களேன்.’

மிருகக் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

‘மான் அரசனா?’ உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? மான் அரசு செய்தால், புலிகளுக்கு ராஜ உணவு !’ என்று கூறிவிட்டு ஏளனமாகச் சிரித்தது ஒரு புலி.

‘ஜனநாயகத்தில், எல்லா மனிதர்களுக்கும் பணக்காரனோ, ஏழையோ எந்த வித்தியாசமும் பார்க்காமல் சம உரிமை என்கிறான் மனிதன். நாமும் மிருகநாயகத்தில் அப்படிச் செய்வோமே?’ என்றது பொன்மான்.

‘இது சாத்தியமில்லை. எங்களுக்குப் புலிகளைக் கண்டால் பயம் இருந்துகொண்டுதான் இருக்கும். புலிகளைக் கண்டால் பயந்து ஓடிக் கொண்டுதான் இருப்போம். ஜனநாயகத்திலும் தடி எடுப்பவன்தான் தண்டல்காரன் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தேர்தல்களும் இந்த அடிப்படையில்தான் நடக்கின்றன என்கிறார்கள்’ என்றது இன்னொரு மான்.

‘நான் அரசனாகத் தேர்ந்தெடுக்கப்படும் மானுக்குப் பாதுகாவலாக இருப்பேன். தாவர உணவுகள்தாம் சாப்பிட வேண்டுமென்று ஆகிவிட்டால், மிருகங்கள் ஒன்றைக் கண்டு இன்னொன்று ஏன் பயப்படவேண்டும்? விலங்குகள் பசிக்கிறபோதுதானே உணவுக்காகக் கொல்கின்றன. மனிதனைப் போல் கொல்வதையே ஒரு விளையாட்டாகக் கொள்ளவில்லயே?’ என்றது பொன் மான்.

‘நாங்கள் இனிப் புல்லையும் தழைகளையும் இலைகளையுந்தானா சாப்பிட வேண்டும்?’ என்று கோபமாகக் கேட்டது ஒரு புலி.

‘எல்லாம் பழக்கத்தைப் பொருத்த விஷயம். காட்டில் அமைதி நிலவ வேண்டுமானால், கொல்லாமைதான் நம் அரச தர்மமாக இருக்க வேண்டும். மான்களில் ஒன்றை அரசனாகத் தேர்ந்தெடுப்பதற்கு அனைவரும் ஆதரவாக இருந்தால், அனைத்து மான்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு மானை மாட்சிமை மிக்க மன்னராக்குவோம்.’ என்றது பொன் மான்.

அப்பொழுது ‘ நீயே எங்கள் பிரதிநிதி. நீயே எங்கள் அரசன். ‘ என்று கூக்குரலிட்டன மான்கள்.

‘அதெப்படி? அவனே ஒப்புக்கொண்டபடி அவன் அந்நியன். இந்திரபிரஸ்தத்தைச் சேர்ந்தவன் இல்லை. மேற்கே ஒரு காட்டில் பல கொலைகள் செய்து வந்திருக்கின்றான். இப்பொழுது நல்லவனாக இருக்கலாம்., அதுவும் ஒரு ரிஷியின் அநுக்கிரகத்தால். நம் காட்டு மான் ஒன்றையே நாம் அரசனாகத் தேர்ந்தெடுப்போம்’ என்றது ஆந்தை.

‘உனக்கு எப்பொழுதும் சந்தேகந்தான்.. உன் புத்திசாலித்தனம் உன்னிடமே இருக்கட்டும். பொன்மான் தான் நம் அரசர்.’ என்றது இளமைத் துடிப்புடன் இருந்த ஒரு மான்.

‘மாட்சிமை தங்கிய நம் பொன்மான் அரசர் வாழ்க! வாழ்க நும் கொற்றம்’ என்று எல்லா மான்களும் கோஷங்கள் எழுப்பின.

‘இராமயாணக் கதை தெரிந்தால் இப்படி அவசரப்பட மாட்டீர்கள்’. என்றது ஆந்தை.

‘உன் பத்தாம்பசலி புராணக் கதைகளை உன்னிடமே வைத்துக் கொள்’ என்றன மான்கள்.

‘மிருக வதை கூடாது என்று நமக்கு ஒரு புதிய அரசியல் தர்மத்தையே போதித்திருக்கிறது இந்த பொன்மான். அதற்கு நம் காட்டுக் குடி உரிமை வழங்கி நம் அரசனாக ஏற்றுக் கொள்வோம். புலிகளைத் தழைகள் சாப்பிட பழக்குவது எங்கள் பொறுப்பு’ என்றது கம்பீரமாய் நின்ற ஒரு யானை.

கூட்டம் கூட்டமாய் நின்ற மற்றைய யானைகள் பெருங்குரல் எழுப்பித் துதிக்கை தூக்கி ஆரவாரம் செய்தன.

ஒரு யானை பொன்மானைத் தன் துதிக்கையால் தூக்கித் முதுகில் உட்கார வைத்துக்கொண்டது.

இதுவே அப்பொன்மாந்தான் காட்டின் அரசர் என்ற அதிகாரப் பூர்வமான அறிக்கையாகவும் ஆகிவிட்டது!

கூட்டமாய் நின்ற யானைக் கூட்டத்தை எதிர்த்துச் சிறு பான்மையாக இருந்த புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

‘என் அன்புக்குரிய மாக்களே, நான் இக்காட்டின் அரசனாவேன் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. பரம்பரை பரம்பரையாக இக்காட்டை ஆண்டு வந்த சிங்க இனத்தின் கடைசிப் பிரதிநிதி இறந்த பிறகு நீங்கள் அதன் இடத்தில் மிருகஜாதி ஏணியின் அடுத்தப் படியில் இருந்த ஒரு புலியைத்தான் அரசராகத் தேர்ந்தெடுந்திருக்க வேண்டும். ஆனால், ஏணியின் கடைசிப் படியில் இருக்கும் என்னை, அதுவும் ஓர் அந்நியனைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதுவே மிருகநாயகத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு. இக்காட்டின் வளர்ச்சிதான் நம் முதல் கோஷமாக இருக்க வேண்டும். எல்லாருக்கும் இனித் தாவர உணவுதான் என்றால், காட்டை நாம் பாலைவனமாக்கி விடக் கூடாது. மரங்களை வளர்த்து, செடிகளை நட்டு, நம் காடு மற்றையக் காடுகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். வளர்ச்சி,வளர்ச்சி, வளர்ச்சி ! இனி இதுதான் நம் தாரக மந்திரம்.’

இவ்வாறாக, யானையின் மீதிருந்த பொன்மான் ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியது.

புலிகளைத் தவிர மற்றைய மிருகங்கள், கரடிகள் உள்பட இந்தப் பேச்சை வரவேற்று ‘மாட்சிமை தங்கிய பொன்மன் சக்கரவர்த்தி வாழ்க! ‘ என்று கூக்குரலிட்டன.

‘இன்னொரு விஷயம். ஜனநாயக மக்கள் ஆட்சியில் தலைவருக்கு ஆலோசனை கூற ஓர் அமைச்சரவை இருக்கும். அது போல் நம் மிருகநாயகத்தில் எனக்கு அறிவுரை வழங்க ஓர் அமைச்சர் தேவை. அந்தப் பதவியில் ‘ மான் அரசு செய்தால், புலிகளுக்கு ராஜ உணவு’ என்று கூறிய புலியையே நியமிக்கிறேன்.’ என்றது அந்தப் பொன் மான்.

இந்த அறிவிப்பைக் கேட்டு எல்லா மிருகங்களும் திடுக்கிட்டன.

புலிகளும் இதை எதிர்பார்க்கவில்லை.ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

‘இது என்ன விஷப் பரிட்சை?’ என்றது ஒரு யானை

‘விஷப் பரிட்சை இல்லை,.விவேகம்.. இக்காட்டில் நாம் இனி அனைவரும் நண்பர்கள். பகைவர்களென்று யாருமில்லை’ என்றது பொன்மான்..

‘நான் உன் அமைச்சன் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டது, ‘அமைச்சன்’ என்று அறிவிக்கப்பட்ட புலி.

‘நம் காட்டு வளர்ச்சித்திட்டங்களைப் பற்றி உன்னிடம் சொல்லுவேன். அவற்றைச் செயலாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இன்னொரு விஷயம், என்னை நீங்கள் என் விருப்பத்துக்கு மாறாக அரசனாக்கிவிட்டீர்கள். அந்த அரச பதவிக்கு மரியாதை கொடுக்கும் அளவில் என்னை நீங்கள் ‘ உங்கள் அமைச்சன்’ என்று சொல்லியிருக்க வேண்டும். ‘உன்’ என்று கூறியது ராஜத் துரோகம். பரவாயில்லை, மன்னித்து விட்டேன். இனிமேல் மரியாதையாகப் பேசுங்கள். கௌரவம் எனக்காக அல்ல, பதவிக்காக’ என்றது அந்தப் பொன்மான்.

‘உன் அமைச்சனாக இருக்க நான் விரும்பவில்லை. உன்னை நாங்கள் எதிர்த்துக் கொண்டுதான் இருப்போம்.’ என்றது அந்தப் புலி.

‘என் குடிமக்கள் உங்கள் எதிர்ப்பைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள், அப்படித்தானே, கஜேந்திர நாதர்களே’ என்று யானைகளைப் பார்த்துக் கேட்டது அந்தப் பொன்மான்..

‘ஆமாம்’ என்று பிளிறிக் கொண்டே ஐந்தாறு யானைகள் அந்தப் புலி மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்தன

புலி பயந்து பின்வாங்கியது. மற்றையப் புலிகள் தாங்கள் சிறுபான்மையராய் இருப்பதை உணர்ந்து பேசாமல் நின்றன..

‘நான் அமைதியை விரும்புகிறவன். இக்காடு நம் தாயகம். இக்காட்டின் அரசரை எதிர்த்துப் பேசினால், தாயகத்துக்கும், தலைவனுக்கும் இழைக்கும் ராஜத் துரோகம். இதை உணர்ந்து நாம் அனைவரும் காட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உழைக்க பாடுபடுவோம்’ என்றது அந்தப் பொன்மான்.

‘இறந்து போன அந்தக் கிழட்டுச் சிங்க ராஜா பாறைகளாலான ஒரு குகையில் இருந்து வந்தது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றல், அந்தக் குகையையே உங்கள் அரண்மனையாக க் கொள்ளலாம்’ என்றது மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வானரம்.

குரல் வந்த திசை நோக்கி மேலே நிமிர்ந்து பார்த்துவிட்டு ‘இராம தூதரே,  உங்கள் இனத்திடம் எனக்கு எப்பொழுதுமே மரியாதை உண்டு. நீங்கள் உயர்ந்த இடங்களை இருப்பிடங்களாகக் கொள்வதினால், மற்றைய மிருகங்களைக் காட்டிலும் காட்டில் என்ன நடக்கின்றது என்பது பற்றி உங்களுக்கு அதிகமாகத் தெரியும். அரசருக்கு அவசியம் வேண்டியது ஒற்றர் படை. உங்களை அவ்வொற்றர் படைத் தலைவனாக நியமிக்கின்றேன்’ என்று புன்னகையுடன் கூறியது பொன்மான்.

திடீரென்று மரங்கள்தோறும் உட்கார்ந்திருந்த வானர சைன்யமங்கள் கைத்தட்டி இவ்வறிவிப்பை வரவேற்று ஆர்ப்பரித்தன.

’சரி, என் ஒற்றர்ப்படைத் தலைவர் குறிப்பிட்ட என் அரண்மனைக்கு நான் போகிறேன். அமைச்சர் புலியாரே, என்னுடன் வாருங்கள். உங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்’ என்றது பொன்மான்.

அந்தப் புலி மற்றையப் புலிகளைப் பார்த்தது. அவை யாவும் அந்தப் பொன்மான் மீது பாயத் தயாராய் இருப்பது போல் தோன்றியது.

அதைப் பார்த்துவிட்டுப் பொன் மான் புன்னகையுடன் கூறியது: ‘என் சகோதர மிருகங்களே! நான் இப்பொழுது ஒரு ரகஸ்யத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. நான் உண்மையில் சத்திய லோகத்தைச் சேர்ந்தவன். அங்குள்ள தர்ம பரிபாலன மகாசங்கத்தார் இக்காட்டின் புராதன பெருமையை நிலைநாட்டுவதற்காக என்னை இங்கு அனுப்ப்யிருக்கிறார்கள். புராதன தர்மத்தில் புலியும் புல்வாயும் ஒரே நதிக்கரையில் ஒன்றுக் கொன்று அருகில் நின்று நீரருந்தின. இழந்த சொர்க்கத்தை நீங்கள் மீண்டும் பெற வேண்டுமென்பதற்காக நான் வந்திருக்கிறேன். நான் மேற்குதிசையிலிருந்து வந்தவன் என்பது உண்மை. ஆனால் ரிஷியின் சாபம் என்பதெல்லாம் உங்கள் பச்சாதாபத்தைப் பெறுவதற்காகச் சொன்ன கதைகள். மேற்கு திசைக் காட்டை சொர்க்க லோகமாக ஆக்கிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். இன்னொரு விஷயம். எனக்கு மந்திர தந்திரங்கள் எல்லாம் தெரியும். இதை ஓர் எச்சரிக்கைக்காகச் சொல்லுகிறேன். என்னை எதிர்ப்பது அவ்வளவு சுலபமில்லை என்று தெரிவிக்கத்தான் இச்செய்தி. புலிகளாரே, என்னைக் கொல்ல என் மீது பாய வேண்டுமானால் பாயுங்கள். பாய்ந்துவிட்டு அப்புறம் வருந்தாதீர்கள்.’

இவ்வாறு சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தது அந்த மான். அங்கிருந்த விலங்குகள் அனைத்தும், புலிகள் உள்பட, அப்படியே வெடவெடத்து நடுங்கி நின்றன. காரணம், சிரித்த குரல் மானுடையதல்ல. ஆக்ரோஷம் மிகுந்த ஆவேசமான, ஒரு பயங்கரப் புலியின் குரல்.

இதற்குப் பிறகு உடனேயே, பொன்மான் எல்லா மிருகங்களையும் புன்னகையோடு பார்த்த பார்வை ‘இப்பொழுது தெரிகின்றதா நான் யாரென்று?’ என்று கேட்பது போலிருந்தது.

‘ஏதோ மந்திரம்,தந்திரம் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றீர்களே, என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டது ஆந்தை.

‘உங்கள் அனைவரையும் நான் சொன்னபடிக் கேட்கும் விலங்குகளாக மாற்றிவிட முடியும். செய்து காட்டட்டுமா?’என்றது பொன்மான் எல்லா விலங்குகளையும் பார்த்து.

அவை ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அவற்றின் முகத்தில் பயமும் கலவரமும் வெளிப்படையாகத் தெரிந்தன.

ஆந்தை சொல்லிற்று: ‘முன்னுக்குப் பின் முரணாக ஏதேதோ சொல்லி நம்மை இவன் ஏமாற்றுகிறான். இவன் ராமாயணத்தில் வரும் மாரீசன். நான் சொல்லுகிறேன் உன் வித்தையைக் காட்டுப் பார்க்கலாம்” என்றது ஆந்தை.

மிருகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டு  என்ன செய்வதென்று அறியாமல் தயங்கின.

‘நீங்கள் அனைவரும் ஆடுகள். என் பின்னால் வாருங்கள். என் அமைச்சர் ஆடு உள்பட. என் உணவுக்கு இனிப் பஞ்சமில்லை’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக நடந்து சென்றார் மாட்சிமை தங்கிய பொன்மான் அரசர்.

ஆடுகள் அரசரைத் தொடர்ந்து பின்னால் சென்றன.

ஆந்தையின் துக்கம் அதன் முகத்தில் தெரிந்தது.

(கல்கி பவள விழா மலரில் வெளியான சிறுகதை)

Advertisements

§ One Response to மிருகநாயகம்

  • Ananth says:

    Started brilliantly and proceeded beautifully. Not sure I quite understood what the ending tries to convey?! If this was meant to be an Animal Farm clone, things just don’t add up…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading மிருகநாயகம் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: