பிராமணர்கள் யார்?

August 6, 2016 § Leave a comment


’ஆர்யா’ என்ற சொல்லினின்றும் தமிழ்நாட்டில் பிராமணர்களைக் குறிக்கும் சொல் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.இதற்குக் காரணம், தமிழ் நாட்டுப் பிராமணர்கள், ஸ்மார்த்தர்களாக இருந்தால்,’ஐயர்’ என்றும், ‘வைணவர்களாக’ இருந்தால், ‘ஐயங்கார்’ என்றும் அறியப்படுகிறார்கள்.

பண்டையத் தமிழ் இலக்கியங்களிளோ, இலக்கண நூல்களிலோ ‘ஐயர்’ என்ற சொலாட்சி, பிராமணர்களைக் குறிப்பதாகத் தெரியவில்லை.’பார்ப்பான்’, ‘அந்தணன்’, ‘மறையோன்’ என்ற சொற்கள்தாம், சமூகச் சமயச் சடங்குகளைச் செய்யும் இனத்தைச் சார்ந்தவர்களைக் குறிப்பிடும் சொற்களாக வருகின்றன.’வேலன்’என்ற சொல்லும் இப்பணியைத்தான் குறிக்கிறது. உலகமெஙும் இந்தப் பூசாரி இனத்துக்கு(priestly class) சமூகத்துக்குத் தனி அந்தஸ்து உண்டு.

’ஐ’ என்றால் தலைவன். ‘என் ஐ முன் நில்லன்மிர்’ என்கிறது குறள். ‘என் தலைவன் முன் நின்று போராட வராதீர்கள்.அப்படி வந்து நடுகல்லாகப்போனவர்கள் பலர்’ என்பது குறளின் பொருள். ஆகவே ‘அர்’ என்ற சிறப்பு விகுதியுடன் பொதுவாகக் குடும்ப்த் தலைவர்களைக் குறிக்கும் சொல்லாகச் சங்க இலக்கியங்களில் இச்சொல் இடம் பெறுகின்றதே தவிர, நாம் இப்பொழுது சாதி வழியில் அறியும் பிராம்மணர்களைக் குறிக்கும் சொல்லாக அன்று. சம்ஸ்கிருத ‘ஆர்யா’ வுக்கும் தமிழ் ‘ஐ’க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

‘மறை’ என்ற சொல், சமஸ்கிருத வேதங்களை மட்டும் குறிக்கும் சொல்லன்று. எல்லா பழங்குடிச் சமூகங்களிலும், இந்த பூசார் இனத்தினர் அவர்களுக்கிடையே மட்டும் புழங்கக்கூடிய இரகஸ்ய மந்திரங்களாக், குழூக்குறியாக பல சொற்களை வைத்திருக்கக் கூடும். இவற்றைத்தான் ‘மறை’ என்று சொல்லியிருக்கவேண்டும். ‘மறையோன்’ என்றால் சமஸ்கிருத வேதங்கள் தெரிந்தவன் என்ற பொருள் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

தொன்மைத் தமிழகத்தில் இந்தத் தமிழ் பூசாரி இனந்தான் ‘பார்ப்பான்’ என்றும், ‘மறையோன்’ என்றும் ‘அந்தணன்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ’வேளா பார்ப்பான்’(’வேள்வி செய்ய இயலாத) என்று சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொல், வேள்விகள் செய்வதைத் தொழிலாகக் கொண்ட ஆரிய இன பிராமணர்களினின்றும் இவர்கள் வேறுபட்டவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டத்தான். ‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்’ என்று குறள் கூறுவது தமிழ் மந்திரங்களைத்தாம்.

‘கபிலர்’, ‘உருத்திரங்கிழார்’, போன்ற புலவர்கள் தமிழ் நாட்டுப் ‘புலனழுக்கற்ற அந்தணார்களே தவிர வட நாட்டினின்றும் வேள்வி செய்ய இறக்குமதியானவர்கள் அல்லர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் கற்பிக்கக் கபிலர் ‘குறிஞ்சிப் பாட்டு’ இயற்றினார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பல்லவர்,பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்குப் பிறகு, வட தேசங்களினின்றும் குடியேற்றப்பட்ட பிராமணர்கள் சமூகத் தலைமையைக் கைப்பற்றியதின் காரணமாக அவர்கள் ‘ஐயர்’ என்று அழைக்கப்பட்டு, இச்சொல்லின் மூலம் ‘ஆர்ய’ என்ற கருத்தும் தோன்றியிருக்கக் கூடும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading பிராமணர்கள் யார்? at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: