கேள்வியும் பதிலும்

July 30, 2016 § 1 Comment


அண்மையில் நான் தில்லி சென்றிருந்த போது ஒரு பழைய நண்பரை இந்தியா இண்டர்னேஷனல் செண்டரில் சந்தித்தேன்.அவர் என்னுடன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தவர்.ஆங்கிலத்துறை. மார்க்ஸிஸ்ட். என் சமகாலத்தவர்களைக் காண்பது வெவ்வேறு காரணங்களால் அரிதாக இருக்கும்போது, அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும் மதிய உணவு ஒன்றாகச் சாப்பிடுவது என்று தீர்மானித்தோம்.

அவர் மதியம் சாப்பிடும்போது என்னைக் கேட்டார்: ‘ நரகத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’

மார்க்ஸிஸ்ட் என்று நான் அறிந்து வைத்திருந்த ஒருவர் இந்தக் கேள்வி கேட்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

‘Literally or metaphorically/’ என்றேன் நான் சிரித்துக்கொண்டே.

‘நான் வாழ்க்கையில் பல தவறுகள் செய்திருக்கிறேன். அவற்றை நான் பட்டியலிட விரும்பவில்லை. உதட்டளவில் மார்க்ஸிஸம் பேசிக்கொண்டு தேவிலால் முதலமைச்சராக இருந்தபோது அவர் செயத பல அக்கிரமங்களுக்குத் துணை போயிருக்கிறேன். இப்பொழுது அடிக்கடி நரகத்தில் இருப்பது போல் கனவு வருகின்றது.’ என்றார் அவர்.

‘நரகத்தைக் கனவு காண வேண்டாமே. இப்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் வசிப்பத்தே போதுமே!’ என்றேன் நான்.

‘ப்ரொஃபசர், ஐ ஆம் ஸீரியஸ்’ என்றார் அவர்.

‘’நரகம்’ என்றால் எனக்குப் புரியவில்லை.’

’தாந்தே ‘இன்ஃபர்ன்ோ”’வில் வரும் நரகம் மாதிரி. கடவுள் நம்பிக்கை அழுத்தமாக இருந்தால் இந்த பயம் நீங்காது என்கிறார் கர்னாலில் இருக்கும் என் குருஜி.’

‘குருஜி? நீங்கள் இப்பொழுது மார்க்ஸிஸ்ட் இல்லையா?

‘ அகம் பிருமாஸ்மி’ என்ற தத்துவந்தான் உலகிலேயே மிகச் சிறந்த தத்துவம்.’

‘அவ்வாறு தெளிவது அவ்வளவு சுலபமில்லை, சௌத்ரி சா(ஹ்)ப்’

‘ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? ‘

எனக்கு நம்மாழ்வார் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

‘நான் நீ ஆவது மெய்யே. நீயே சொர்க்கம், நரகமுமாய் இருக்கிறாய் என்பதும் மெய். அதனால் நான் சொர்க்கம் போனால் என்ன, நரகத்துக்குப் போனால் என்னவென்று கவலைப்படாமல் இருக்க இயலாது. நானும் நீயும் ஒன்றே என்ற உத்தரவாதம் என் மனத்துக்குள் உருவாக வேண்டும். அதுவரை நான் நரகத்தைக் கண்டு அஞ்சிக் கொண்டு தான் இருப்பேன். நான் நானாக இருக்கும் வரை, நான் நீயாக ஆக முடியாது’

அதாவது, இது ஒரு catch-22 situation’ என்கிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாடலை நான் அவருக்கு விளக்கிச் சொன்னேன்.

‘இந்தக் கவிஞர் எந்த நூற்றாண்டு?’ என்றார் அவ
‘எட்டாம் நூற்றாண்டு. அது முக்கியமில்லை. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு புது விடை கிடைக்கிறது. அந்த விடை புதுக் கேள்வியைத் தூண்டும்.’ என்றேன் நான்.

§ One Response to கேள்வியும் பதிலும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

What’s this?

You are currently reading கேள்வியும் பதிலும் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: