’சிலப்பதிகார’ ச்சிக்கல்கள்

July 6, 2014 § 3 Comments


Tamil Heritage Group எனும் அமைப்பினர் ஒருங்கிணைத்த நிகழ்வில் ஆற்றிய உரை.

தொடக்கத்திலேயே சொல்ல விரும்புகிறேன். இது ஆராய்ச்சிக் கட்டுரையன்று. உரத்த சிந்தனை. சிலப்பதிகாரக் காவியம் பற்றி என் மனத்தில் தோன்றிய எண்ணங்கள் ஐயங்கள் ஆகியவற்றை முதலில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இவ்வாறு பகிர்தலிலும், உரக்கச் சிந்திப்பதிலும் எனக்குத் தெளிவு ஏற்பட்டால்,, சிலப்பதிகாரம் பற்றி ஒரு புதிய நூல் நான் எழுதக் கூடும் என்பது என் எச்சரிக்கை..

பள்ளிப் பருவத்திலிருந்தே என்னை மிகவும் ஈர்த்த நூல் ‘சிலப்பதிகாரம்’. பத்தாம் வகுப்பில் எனக்கு ‘ஊர்சூழ்வரி’ பாடமாக இருந்தது. அந்தப் பகுதி என்னை மிகவும் பாதித்தது. என்ன காரணம் என்று அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. ‘என்றனன் வெய்யோனி’ லிருந்து இறுதி வரியாகியச் ‘சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயின் முன்’ என்பது வரை எனக்கு மனப்பாடம். பொருள் முழுவதும் விளங்காவிட்டாலும், தவறிழைக்கைப்பட்ட ஒரு பெண்ணின் சீற்றம் என் மனத்தில் பல சலனங்களை ஏற்படுத்தியது.
Kannaki
எனக்கு முதுகலைவகுப்பில் ‘சிலப்பதிகாரம்’ முழுவதும் பாடமாக இருந்தது, அப்பொழுது என்னைக் கவர்ந்தவை,’கானல் வரி’, ‘வேனிற்காதை’, ‘ கொலைக்களக் காதை’, ஊர்சூழ்வரி’, ‘வழக்குரைக் காதை’ ஆகியவை. ’வஞ்சிக் காண்டம்’ பிற்சேர்க்கையாக இருக்கலாமோ என்று எனக்கு அப்பொழுது தோன்றிற்று. நம் இலக்கியப் பண்பாட்டு மரபில், கதை துன்பவியல் நிகழ்வாக முடியக்கூடாது என்பதற்காக வேறு யாரோ அக்காண்டத்தை இடைச் செருகலாக நுழைத்திருக்கலாம் என்று எனக்குப் பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் ‘சிலப்பதிகாரம்’ முழுவதையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது ‘சீதையின் காட்டுச் செலவும் கண்ணகியின் மதுரைச் செலவும்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்குக்காகக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன்.

அந்நிலையில் எனக்கு வணிகத் தொழிலுக்கு அந்நியப் பட்டுப் போன கோவலன் என்ற கலைஞன் மீது அநுதாபமும், கோவலனைக் கணவன் என்ற ஸ்தாபனமாகக் கருதிய கண்ணகி மீது கோபமும் உண்டாயின.. அப்பொழுதுதான் பல விவாதங்களுக்குக் காரணமாகிய என் கட்டுரை,’ கண்ணகி எனும் கற்பு இயந்திரம்’ என்பது ‘கணையாழி’ யில் வெளி வந்தது.
ஆகவே ‘சிலப்பதிகாரம்’ என்னுடைய ஒவ்வொரு பருவத்திலும் என்னை என் சிந்தனைப் பரிணாமத்துக்கேற்ப வெவ்வேறு வகையில் பாதித்துக் கொண்டே வந்திருக்கிறது. என்பதை என்னால் இப்பொழுது புரிந்து கொள்ள முடிகின்றது.
இதற்கு அடிப்படையான காரணம், ‘சிலப்பதிகாரம்’ மற்றைய தமிழ்ச் செவ்வியல் நூல்களாகிய ‘கம்பராமாயணம்’. ‘திருக்குறள்’ போலல்லாமல், முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான படைப்பிலக்கியம் என்பதுதான்.
முதல் வேறுபாடு, இது சமஸ்கிருதத்திலிருந்து இறக்குமதியான காவியக் கதையன்று. சேர,சோழ, பாண்டிய நாடுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டு நிகழ்வுகளைக் கருவாகக். கொண்ட முதல் படைப்பிலக்கிய நூல்.
படைப்பிலக்கியத்தில் வெவ்வேறு வகைகள் உண்டு. குறிப்பாக, மடை திறந்தாற்போல, தன்னிச்சையாகப் பொங்கும் (eloquent and spontaneous) படைப்பு ஒரு வகை. இலக்கியக் கொள்கைத் தீர்மானங்களுடன் சொல்லவந்த கதையை எந்தெந்தக் களத்தில் அது நிகழ்கிறதோ, அக்களத்தின் பூகோளப் பின்னணியிலும், அக்களத்துகுரியப் பாரம்பரியக் கலை வடிவங்களைப் புலப்படுத்தும் கையேட்டு ஆவணமாகமாக ஆக்கிக் கூறும் படைப்பு இன்னொருவகை. கம்ப ராமாயணம் முதல் வகை. சிலப்பதிகாரம் இரண்டாவது வகை.
சிலப்பதிகாரம், கம்ப ராமாயணத்தைப் போலவோ, திருக்குறளைப் போலவோ சாதாரண மக்களிடையே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பிரபலமாக இருந்திருக்கவில்லை.. ‘ஐம்பெரும் காப்பியங்கள்’’ என்பதே மிகப் பிற்கால வழக்கு. ஆனால்,அறிஞர்களிடையே இந்நூல் வழக்காற்றில் இருந்திருக்கக் கூடுமென்பது பத்தாம் நூற்றாண்டுக் ‘களவியல்’ உரையாலும், 11ம் நூற்றாண்டு ’யாப்பருங்கல விருத்தி உரை’ யாலும் தெரிகிறது. சமஸ்கிருதக் காவிய மரபுக்கு முற்றிலும் வேறுபட்ட பாத்திரப் படைப்புக்களை உடைய நாடக க் காப்பியம் என்பதாலும், ஓரளவுச் சமணச் சார்புடையது என்பதாலும் இந்நூல் மக்களிடையே அவ்வளவாக பரவவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
தொல்காப்பியம், செய்யுளியல் 237ம் சூத்திரத்துக்கான( ‘ தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’ ) உரையில், நச்சினார்க்கினியர்,, ‘தொன்மை’ என்பதற்குச் சான்றாக பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை, சிலப்பதிகாரம் ஆகிய மூன்று நூல்களையும் குறிப்பிடுகிறார். ‘தொன்மை’ என்பது பழைய கதைச்செய்திகளின் அடிப்படையில் ஆக்கப்படும் உரையொடு விரவிய புதுப்படைப்பு. அப்படியானால், அச்செய்திகள், எப்பொழுது வழங்கின, அச்செய்திகள் யாவை என்ற கேள்வி எழுவது இயற்கை..சங்க நூலாகக் கருதப்பட்டு, பல புலவர்கள் இயற்றியதாகக் கூறப்படும்,’ தகடூர் யாத்திரை’ யின் ஆசிரியர் பெயரை நச்சினார்க்கினியர் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ‘பாரத வெண்பா’ ஆசிரியர் பெயரைப் ‘பெருந்தேவனார்’ என்று கூறும் உரையாசிரியர், ‘சிலப்பதிகார’ ஆசிரியர் பெயரை ஏன் குறிப்பிடவில்லை?
‘கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய சங்க காலப் புலவர்கள் , கடையெழுவள்ளலாகிய பேகன் என்ற குறுநிலமன்னன், தன் மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வதைக் குறிப்பிட்டு, அவன் மனைவியின் துயரத்தைப் புலப்படுத்துகிறார்கள். அவள் பெயர் கண்ணகி.
மருதன் இளநாகனார் என்ற புலவர் ஒரு பெண் பரணருகே வேங்கை மரத்தடியில் சோகத்துடன் நிற்பதை ‘நற்றிணை’ செய்யுள் ஒன்றில் கூறுகிறார். ‘ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி’ என்று அவளைச் சித்திரிக்கின்றார். ’ஏதிலாளன்’ செய்த செய்கைக்காக வருந்தி ஒரு முலை குறைத்தவள் என்று குறிப்பிடப்படும் அவள் யாராக இருக்கலாம்? ‘ஏதிலாளன்’ என்றால் ‘அந்நியன்’. தனக்கு ‘அந்நியன்’ போல் ஆகிவிட்ட கணவன் என்ற பொருளில் இது வருகின்றதா, அல்லது ‘ஏதிலாளன்’ என்பது கோவலனைத் தவறாகக் கொலை செய்வித்த ‘பாண்டியனை’’க் குறிப்பிடுகின்றதா என்ற பல கேள்விகள் எழுகின்றன.
சிலப்பதிகாரம்’ இச்செய்திகளியின் அடிப்படையில் உருவாகியிருக்கக் கூடிய காவியம் என்பதால்தான் நச்சினார்க்கினியர் இதைத் ‘தொன்மை’க் குச் சான்றாக க்காட்டுகிறாரா?
இன்னொரு செய்தி. ‘யாப்பருங்கலக் காரிகை விருத்தி உரையில்’ ஒருத்தி, கணவன் கொலையுண்டதைக் கண்டுப் பாடியதாக ஒரு வெண்பா வருகிறது. இது ‘பத்தினிச் செய்யுள்’ என்கிறார் உரையாசிரியர். இதற்கும் ‘சிலப்பதிகார’த்துக்கும் தொடர்பு உண்டா என்பதும் சிந்திக்கப் பட வேண்டியதொன்றாகும்.
‘முலை’ என்பது ஒரு குறியீட்டு உணர்வாகத் தமிழ் இலக்கியங்களில் பயின்று வருகிறது. முலையைப் பறித்து எறிவது என்பது தன் பெண்மையை அழித்துக் கொள்வதற்கான குறியீடாகும். ‘நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கூறுகிறார்:
‘கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
கொங்கை தன்னை கிழங்கோடு
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்து என் அழலைத் தீர்வேனே.’
சிலப்பதிகாரத்தில் கண்ணகி ‘இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து மட்டடார் மறுகின் மணி மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள்’’ என்று வருகிறது. ஆண்டாள் ‘அழல்’ என்று குறிப்பிடுவதை வைத்துக் கொண்டு, கண்ணகி இட முலையை எறிந்து மதுரையை எரித்தாள் என்பதை ஒரு குறியீடாகக் கொள்ள முடியுமா?
ஏன் இடமுலையைத் திருகி எறிகிறாள்? அர்தநாரீஸ்வரர் கோட்பாட்டில் இடப் பக்கம் பெண். இடப்பக்கம் போகம்.வலப்பக்கம் யோகம் என்பது ஐதீகம் அந்தப் பெண்மையை அழித்துக் கொள்வதின் குறியீடாகத்தான் இது வருகிறதா? ‘கடவுள் பத்தினி யாக ’ ஆகி விடுகின்ற கண்ணகி, பின்னால் கொற்றவையின்/ மங்கலா தேவியின் அம்சமாக வழிபாட்டுக்குரியவளாக மாறுகிறாள் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை. இதற்கான முன் அறிவிப்பாக ’வேட்டுவ வரியில்’, தெய்வமேறிய பெண் கண்ணகியைப் பார்த்ததும் கூறுவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
‘இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியா யுலகில் ஓங்கிய
திருமா மணி’
சீற்றமடைந்த பெண்ணைத் தெய்வமாக்கி விடுவது, அவளை அடக்கி வைத்திருப்பதற்கான வழியா என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். சங்காலத்தில் பத்தினி வழிபாடு என்றும் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ’கற்பு’ என்பது திருமண நிலையோடு இணைத்துப் பேசப்படுகிறது. ‘களவியல்’- திருமணத்துக்கு முந்திய நிலை, ‘கற்பியல்’ திருமணத்துக்குப் பிந்திய நிலை என்றுதான் பொருள் கொள்ள முடிகின்றது. ’பத்தினி வழிபாடு’ சிலப்பதிகாரக் கதையுடந்தான் தொடங்கியதா?
சிலப்பதிகாரம் எப்பொழுது எழுதப்பட்டிருக்க வேண்டும்? சிலப்பதிகார ஆசிரியராகக் கூறப்படும் இளங்கோவடிகள், சேரன்செங்குட்டுவன் தம்பியா? அவர் ‘ மணிமேகலை’ ஆசிரியராக்க் கூறப்படும் தண்டமிழ்ச் சாத்தனாருக்கு நெருங்கிய நண்பரா? இரண்டு காவியங்களும் ஒரே காலத்தனவா? இக்கேள்விகளுக்கு இது வரை யாரும் சரியான விடைகள் அளித்திருப்பதாகத் தெரியவில்லை. சாத்தியமும் இல்லை. ஒரு விடை புதுக் கேள்வியை எழுப்புகிறது. இலக்கியத்தின் சுவாரஸ்யமே கேள்விகளும், விடைகளும், புதுக் கேள்விகளுந்தாம்.
சிலப்பதிகாரத்தின் காலம் பொ.ச ((பொது சகாப்தம்)இரண்டாம் நூற்றாண்டு என்று பரவலாக நம்ப ப் பட்டு வருகிறது. காரணம், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பியபோது அவ்விழாவில் இலங்கை அரசன் கயவாகு கலந்து கொண்டான் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் படுகிறது என்பதுதான். இவன் இரண்டாம் கயவாகு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இரண்டாம் கயவாகு காலம் இலங்கை வரலாற்று ஆவணம், மஹாவம்ஸத்தின்படி பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு. ஆகவே சேரன் செங்குட்டுவன் காலம் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அவனுடைய தம்பி என்பதால் சிலப்பதிகாரம் பொ.ச.இரண்டாம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று இதுவரைப் பெரும்பான்மையான தமிழ்ப் பேராசிரியர்கள் கூறி வருகிறார்கள்.
சங்க நூலாகிய ‘பதிற்றுப்பத்தில், ஐந்தாம் பத்து பரணர் நெடுஞ்சேரலாதான் மகன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடிய பாடல்கள். இவன் தான் சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கோயிலெடுத்த சேரன் செங்குட்டுவன். ‘கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி கான் நவில் கானம் கரையில் போகி ஆரிய அண்ணலை வீட்டி’ என்று பரணர் பதிகத்தில் கூறுகிறார். கடவுள் பத்தினி என்பவள் கண்ணகி. அவளுக்குக் கோயில் கட்ட கல்லெடுக்க வேண்டிப் படையெடுத்த போது எதிர்த்த ஆரிய மன்னர்களின் தலைவனை முறியடிக்கிறான் செங்குட்டுவன் என்று கூறுகிறார் பரணர். செங்குட்டுவனைப் பாடிய கவிஞர், கடவுள் பத்தினியைப் பற்றி ஒரு மாபெரும் காவியமே படைத்திருக்கும், அவன் தம்பியைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை. ஏன்? செங்குட்டுவனுக்கு சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் தம்பி அல்லர் என்ற ஒரே காரணந்தான். சேரன் செங்குட்டுவன் காலம் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு என்று வைத்துக்கொண்டாலும், சிலப்பதிகாரம் எழுதிய ஆசிரியர் அவனுக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டவர்தாம் என்று தெரிகிறது.
அவ்வாறென்றால்,, சிலப்பதிகாரப் ‘பதிகத்தில்’ ‘ குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ அடிகள்’ என்றுதானே அவர் குறிப்பிடப்படுகின்றார் என்ற கேள்வி எழுகின்றது. குன்றக்குறவர்கள், அவரிடம், ஒரு முலை இழந்த பெண் கொழுநனுடன் விமானமேறி விண்ணுலகம் சென்றதைத் தாங்கள் பார்த்ததாகக் கூறியதும், அப்பொழுதானே சாத்தனார், இளங்கோ அடிகட்கு, கண்ணகி-கோவலன் கதையைக் கூற, தாம் அதைத் தொடர்நிலைக் காப்பியமாக எழுதுவேன் என்று இளங்கோ கூறுகிறார் என்பதினால் அவர் அக்கதை நிகழ்ந்த காலத்தவர் என்று ஏன் கூற வியலாது என்பது கேள்வி. அண்ணன் செங்குட்டுவன் பட்டமேற வேண்டும் என்ற காரணத்துக்காகத்தானே. அவன் சமண மாதம் சார்ந்து துறவுக் கோலம் பூண்டார் என்று ‘ வரம் தரும் காதை’ யில் வரவில்லையா என்ற கேள்விக்கும் விடை கூறியாக வேண்டும்.
’பதிகம்’ ‘சிலப்பதிகாரம்’ எழுதிய ஆசிரியரால் எழுதப்படவில்லை. பிற்சேர்க்கை. இளங்கோவடிகளைப் பற்றிய புனைக்கதைகள் உருவான பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். ’பதிகத்தில் வரும் அதே செய்தி, அதாவது மலை நாட்டு மக்கள் இளங்கோவுக்குத் தெரிவித்த செய்தி, சிலப்பதிகாரத்தின் உட்பகுதியாகியாகிய ‘வஞ்சிக் காண்ட’க் ‘காட்சிக் காதை’யில் வேறு விதமாக க் கூறப்படுகிறது. அவர்கள் சேரன் செங்குட்டுவனுக்கு இச்செய்தியைக் கூறுகிறார்கள். அப்பொழுது சாத்தனார் அவனுக்குக் கண்ணகி-கோவலன் கதையைக் கூறுகிறார். அந்த இடத்தில் இளங்கோ இருந்ததாகச் சொல்லப்படவேயில்லை.
‘பதிக’த்தில், தண்டமிழ்ச் சாத்தன் கண்ணகி-கோவலன் கதையைக் கூறியதும்,இளங்கோ மூன்று உண்மைகளை வற்புறுத்துவதற்காக, ‘சிலப்பதிகாரம் என்னும் பெயரால்’ நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’ என்று அறிவித்துவிட்டு, அவர் எழுதப் போகும் முப்பது அதிகாரங்களின் பெயர்களையும் சொல்லிவிடுகிறார். அவர் அவ்வாறு சொல்லும்போது செங்குட்டுவன் வடநாட்டுப் போர்ச் செலவை மேற்கொள்ளவேயில்லை. கண்ணகிக்குக் கோயில் கட்டப் போவதாகவும், அதற்கு இமய மலையிலிருந்து கல்லேடுத்து வந்து, தான் தோற்கடிக்கப்போகும் ஆரிய வேந்தர்களின் தலை மேல்அக்கல்லை ஏற்றி வரப் போகவதாகும் வஞ்சினம் கூறுகிறான்.,சாத்தனார் இளங்கோவுக்கு இக்கதையைக் கூறும்போது, இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை. ஆனால் இளங்கோ பின்னால் நிகழ விருக்கும் செய்திகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு காவியம் செய்யப் போவதாக க் கூறீ அதிகாரத் தலைப்பையும் அறிவிப்பதுதான் வேடிக்கை.
மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் வந்து கோவலனின் பூர்வ ஜென்மக் கதை யைச் சொல்லுகிறது. இது ’ அழற்படு’க் காதையில் ‘ அந்தி விழவு நேரத்தில்’ நிகழ்வதாகச் சொல்லப் படுகிறது. ஆனால், ‘பதிக’த்தில் மதுராபதிதெய்வம் கண்ணகியிடம் சொன்னத்தை நள்ளிரவில் தாம் கேட்டதாகச் சாத்தனார் கூறூகிறார்.
ஆகவே ’பதிகம்’ பிற்சேர்க்கை என்பது தெளிவாகிறது. ‘வரந்தரு காதை’யில் அதாவது இறுதிக் காதையில், தெய்வமாகிவிட்ட கண்ணகி,, அவளுடைய தோழியாகவிருந்த, தேவந்தி மீது வந்து, அவள் கோட்டத்துக்குச் சென்ற இளங்கோவுக்கு அவர், தம் அண்ணனுக்காகச் செய்த தியாகத்தைப் பற்றி அவருக்கே கூறுவதாக வருகிறது.. அந்தக் காதையில் தேவந்தி இரு முறை உடனுக்குடன் சிறிது இடைவெளிக்குப் பிறகு தெய்வம் ஏறிப் பேசுவதாக வலிந்து சொல்லப்படுவதைப் பார்க்கும்போது, ‘வரந்தரு காதை’யும் பின்னால் சேர்க்கப் பட்டிருக்கலாம் என்று கருத த் தோன்றுகிறது. இந்த ஒரிடத்தில்தான் இளங்கோ தன்மை ஒருமையில் ‘யானும்’
சென்றேன்’ என்று சொல்வதாக வருகிறது.
‘வாழ்த்துக் காதை’ யுடன் கதை முடிந்து விடுகிறது.
‘மங்கல வாழ்த்தப் பாடலில்’ தொடங்கும் காவியம், ‘வாழ்த்துப் பாடலு’டன் முடிகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.. தொடக்கத்தில், ‘பதிகம்’ ‘உரைபெறுகட்டுரை’ ஆகியவையும், பின்னால், ‘அழற்படுகாதை’யில் சில பகுதிகளும், (குறிப்பாக, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு காவல் பூதம் இருந்தது என்பது போன்றவை.( டாக்டர் உ.வே.சா வே இப்பகுதியில் பெரும்பான்மை வரிகள் எல்லாப் பிரதிகளிலும் இல்லை என்று கூறுகிறார்) இறுதிக் காதையாகிய ‘ வரந்தரு காதை’யும் பிற்சேர்க்கை என்று சொல்லாமா?
‘வாழ்த்துக்காதை’யுடன் கதை முடிய வேண்டுமென்பதற்கு சிறப்பான காரணமாகப் படுவது, இளங்கோ இக்கதையை மனத்தளவில் நாடகமாகக் கண்டிருக்கிறார் என்பதுதான். இறுதிக் காட்சியில்,, பெரும்பாலும், கதையில் வருகின்ற முக்கியப் பாத்திரங்கள் அனைவரும் கூடிவிடுவதுபோல் காட்டுவதுதான் நாடக உத்தி. ‘வாழ்த்துக் காதை’யில், உரைப்பாட்டுமடை’’ யில் நாடகத்துக்குத் தேவையான இயக்கக் குறிப்புக்கள் போல் பல செய்திகள் உரைநடையில் கூறப்படுகின்றன. மாடலன் மறையோன், கோவலன் பெற்றோர், தேவந்தி, காவற்பெண்டுகள், கண்ணகியின் அடித்தோழி,, ஐயை,செங்குட்டுவன், வஞ்சிமகளிர்,ஆயத்தார், என்று நாடக மேடை நிறைந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவருடைய நாட்டுச் சிறப்புக்களும் இசை மழையாகப் பொழிகின்றன. இறுதிக் காதை; யாக வரும் ‘வரந்தருகாதை’ இதனுடன் தொடர்பில்லாமல்,, உச்சக்காட்சியைத் தொய்வடையச் செய்யும் ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. இதைச் ‘சிலப்பதிகாரம்’ போன்ற ஓர் அற்புதமான நாடக க்காப்பியத்தை ஆக்கியவர் எழுதியிருக் கூடுமா? இளங்கோவடிகள் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவரைச் சமணத் துறவியாக்கி, ஓர் அழ்கான தியாக க் கதையும் உருவாக்கிவிட்டார்கள். ‘அடிகள்’என்றால் துறவியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
கோவலன் சமணன். ‘கொலைகளக் காதை’யில் கண்ணகி தன் கண்வன் கோவலனைச் ‘சாவக நோன்பிகள் அடிகள்’ என்று குறிப்பிடுகின்றாள். அதாவது, இல்லறத்தில் இருந்து கொண்டு, சமண மத நியதிகள் தவறாதவன் என்ற பொருள்.அது மட்டுமன்றிக் ‘ கனாத்திறமுரைத்த காதை’ யில், கண்ணகியின் பார்ப்பனத் தோழி தேவந்தி அவளிடம் கூறுகிறாள்’ ‘ காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் பொய்களில் நீராடிக் காமவேள் கோட்ட்த்தைத் தொழுத மகளிரிம்மையிற் கணவரக் கூடி இன்புற்று, மறுமையிலும் போக பூமியிற் போய்ப்பிறந்து கணவரைப் பிரியாதிருப்பர். ஆதலால், நாமும் ஒரு நாள் நீராடுவோமாக’. அதற்குக் கண்ணகி ‘பீடன்று’ என்ரூ பதில் இறுக்கிறாள். அதாவது ‘ எங்களைப் போன்ற சமணருக்கு அது பொருந்தி வராது’ என்பது பொருள்.
இளங்கோ சமண மதத்தைச் சார்ந்திருக்கலாம். ஆனால் துறவி என்று சொல்வதற்கில்லை. அதனால்தான், இக்காப்பியத்தில் பெரும்பாலும், மணிமேகலையைப் போலவோ, ‘சீவக சிந்தாமணி’யைப் போலவோ ஒரு குறிப்பிட் ட மதச் சார்பு தீவீரமாக இல்லை.
இதில் வரும் கதைப் பாத்திரங்கள் கூட மத இணக்கத்துடன் நடந்து கொள்கிறார்கள். இடைக்குலப் பெண் மாதரி சமண மதத்தைச் சார்ந்தவள்.’அறம்புரி நெஞ்சில் அறவோர் பல்கி புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்’ குப் பால் மடை ஏற்றி வழிபாட்டோடு வருகின்றவள் என்று அவளை அறிமுகப்படுத்துகிறார் இளங்கோ. ‘இயக்கி’ என்றாள் யட்சி’. சமண தேவதை. தீர்த்தங்கார்ருக்குப் பணி புரிபவள்.. சமண நெறி தவறாதவள் என்ற காரணத்தினால்தான், கண்ணகியை இவளிடம் ஒப்படைக்கலாமென்று கவுந்தி அடிகள் தீர்மானிப்பதாக இளங்கோ கூறுகிறார். ஆனால் அவள், மற்றைய ஆயர்குலப் பெண்களுடன் ஆடும் ஆய்ச்சியர் குரவையைப் பார்க்கும்போது, அவள் வைணவப் பெண்ணோ என்ற ஐயம் எழுகிறது.
வைதிக நெறியைச் சார்ந்த மாடலன் மறையோன், சமண மதம் சார்ந்த கோவலனுடைய நெருங்கிய நண்பன். எல்லா கதைப் பாத்திரங்களையும் ஒப்பிடும்போது, கவுந்தி அடிகள் மட்டுந்தான் ‘காமுறு தெய்வம் கண்டடி பணிய நீ போ ‘ என்று மாங்காட்டு மறையோனிடம் சொல்வதினின்றும் சற்றுத் தீவீர மதப் பற்று உடையவள் என்று தோன்றுகிறது.
கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடக்கும் திருமணம் வைதிகச் சார்புடையதாக இருக்கிறது. சந்திரன் உரோகினியைச் சேர, அருந்ததி அனையாளை, அக்னி சாட்சியாக, மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடக் கோவலன் திருமணம் செய்து கொள்கின்றான். மாசாத்துவான் சமண மதத்தைச் சார்ந்தவன், மாநாய்கன் ஆசீவகன். கோவலனும் கண்ணகியும் இறந்தது கேட்டு மாசாத்துவான் பௌத்த மடத்தில் சேர்ந்து விடுகிறான் என்றும், மாநாய்கன் ஆசீவக மட்த்தில் சரண் புகுகிறான் என்றும் மாடலன் மறையோன் ‘வஞ்சிக் காண்ட’ த்தில் அவர்களைப் பற்றியத் தகவல்கள் தருகிறான். மாதவி வைதிக மதத்திலிருந்து பௌத்த மதம் தழுவியதும், தன் மகள் மணிமேகலையை பௌத்த்த் துறவியாக்கியதும் புரிகிறது. மாசாத்துவான் ஏன் மதம் மாற வேண்டும்?
இதை விட இன்னும் குழப்பம் தரும் செய்தி மணிமேகலையில் 28ம் காதையில் வருகிறது. பூம்புகார் கடல்கோள்பட்டு, மாசாத்துவான் வஞ்சி நகரில் இருக்கிறான். மணிமேகலை அவனைச் சந்திக்கிறாள். கோவலனும் கண்ணகியும் கபில வஸ்துவில் அவதரித்த புத்த தேவன் உபதேசங்களைக் கேட்டு வீடு பேறு அடைவதாக மாசாத்துவான் மணிமேகலையிடம் கூறுகிறான். அதாவது சமண மதக் கோவலனும் பௌத்த மதத்தைத் தழுவிவிடுகிறான் என்பது பொருள்.
மாசாத்துவான் தான் வஞ்சி மாநகர் வந்ததற்குக் காரணமும் சொல்லுகிறான். அங்குக் சிலப்பதிகாரக் கோவலனுக்கு ஒன்பது தலைமுறைகள் முந்தியிருந்த அவன் முன்னோன் இன்னொரு கோவலன், பூம்புகார் அழியுமென்று முன் கூட்டியே தீர்க்க தரிசனத்தால் உணர்ந்து, வஞ்சியில் ஒரு குன்றின் மீது புத்தருக்குக் கோயில் எழுப்பினான். அந்தக் கோவலன், அப்பொழுதைய சேர மன்னனாகிய குடக்கோசேரலுக்கு உற்ற நண்பன். அந்தக் கோயிலைத் தரிசிக்கத் தான் வந்ததாக மாசாத்துவான் கூறுகிறான்.
ஒன்பது தலைமுறைகள் மாசாத்துவான் குடும்பம் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், கோவலனைக் கண்ணகி ‘’சாவக நோன்பிகள் அடிகள்’ என்று ஏன் குறிப்பிடுகின்றாள்? இளங்கோ அடிகளுக்கு மிகப் பிந்திய காலத்தைச் சேர்ந்த சாத்தனார் ,கோவ லனின் மகள் மணிமேகலை பௌத்த மத த்தைச் சார்ந்தவள் என்பதால், கோவலனின் குடும்பமே ஒன்பது தலைமுறைகளாக அம்மத த்தைச் சார்ந்தது என்று கூறுகிறார் போலிருக்கிறது. இதற்கு அரண் செய்வது போல், சிலப்பதிகாரத்தில் மாடலன் மாசாத்துவன் பௌத்த மடத்தில் சேர்கிறான் என்ற தகவலைத் தருகிறான்.
‘வஞ்சின மாலை’யில் பூம்புகாரைச் சேர்ந்த கற்புடை மகளிர் எழுவர் கூறப்படுகின்றனர். கற்புடைய ஒரு பெண்ணுக்கு ‘வன்னி மரமும் மடைப் பள்ளியும் சாட்சியாக’ அமைகின்றன என்று ஒரு செய்தி வருகின்றது. திருஞானசம்பந்தர் திருப்புறம்புயத்தில் அரவு தீண்டிய அவள் கணவனை உயிப்பித்து, அவன்தான் அவள் கணவன் என்பதற்குச் சாட்சியாக வன்னிமரத்தையும், கிணற்றையும், சிவலிங்கத்தையும் சாட்சியாக்கினார் என்றூ திருவிளையாடல் புராணத்தில் வருகிறது., சம்பந்தர் காலம் பொ.ச. ஏழாம் நூற்றாண்டு. இச்செய்தி காலத்தால் மிகவும் முந்தியது என்று கருதப்படும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றதென்றால், இதற்கு என்ன பொருள்/?திருத்தொண்டர்புராணத்திலும்9 ( பொ.ச.பதினொன்றாம் நூற்றாண்டு) இச்செய்தி வருகிறது. ஆனால் சாட்சிகள் இல்லை. நிகழ்ச்சி திருமருகலில் நடப்பதாகக் கூறப்படுகின்றது.
பூம்புகாரைச் சேர்ந்த கற்புடை மகளிர் எழுவரைப் பற்றிய சிறப்பு ‘வஞ்சின மாலை’ யில் கூறப்படுகிறது. அதில் வரும்ஆதிமந்தியாரப் பற்றி அகநானூற்றில் மூன்று பாடல்கள் வருகின்றன. மற்றவர்களைப் பற்றி முன் செய்தி எதுவுமில்லை. அவர்களைப் பற்றி ‘வஞ்சின மாலை’யில் கூறப்படும் விவரங்களும் மிகச் சாதாரணமானவை. ’பட்டினத்துப் பிள்ளையார் புராணதில், பூம்புகார்ச் சருக்கத்தில் இந்த ஏழு பெண்களைப் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன..பின்னொரு காலத்தில், இடைச் செருகலாக, ‘வஞ்சின மாலை’யில் இவை புகுத்தி விட்டார்களா?
‘மங்கல வாழ்த்துப் பாட’லிருந்து, ‘வழக்குரைக் காதை’ வரை, இலக்கிய, நாடகச் செறிவுடன், கலை ஆவணப் பெட்டகமாக க் கதை முன்னேறி ஓர் உச்ச நிலையை அடைகிறது. இதற்குப் பீறகுதான், கதைப் போக்கே மாறி விடுவது போல் தோன்றுகிறது. வருத்தத்துக்குரியது என்னவென்றால், வழக்குரைக் காதை’யிலிருந்து, அடியார்க்கு நல்லார் உரையும் கிடைக்கவில்லை.
கணவனாலும், பிறகு அரசனாலும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சீற்றக் கதையைமட்டும் சொல்ல இளங்கோ முதலில் நினைத்திருக்கலாம். அவர் வாழ்ந்திருக்கக் கூடிய காலத்தில், முன்பொரு சமயம், சீரும் சிறப்புடன் ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள், வலிமை குன்றிருந்த காரணத்தினால், அவர்களுடைய பழம் பெருமையை முதன்மைப் படுத்தும் வகையில், ‘வஞ்சிக் காண்டம்’ பிறகு அவர் எழுதியிருக்கக்கூடுமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அதனால்தான், ‘புகார்க் காண்ட’த்தில் திருமாவளவன் பெயரையும், ’மதுரைக் காண்டத்தில்’ ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பெயரையும், ;வஞ்சிக் காண்டத்’தில் கனகவிசயரை வென்ற சேரன் செங்குட்டுவன் பெயரையும் பெருமிதத்தோடு அவர் சொல்லுகிறார். பெருமைக்குரிய மூன்று அரசுகளின் பிரதிநிதிகளாகிய. அவர்கள் ஒரே காலத்தவராக இருந்திருக்க முடியாது.
இளங்கோ காலம் பொ.சா ஐந்தாம் நூற்றாண்டு அல்லது பிற்பட்டிருந்தால் அப்பொழுது ,தமிழ் நாட்டு எல்லைக்கப்பால், வெளியிலிருந்து வந்த பல்லவர் கை ஓங்கிவருவதை அவர் உணர்ந்திருக்கக் கூடும் தொன்மைப் புகழைச் சுட்டிக் காட்டும் வகையில்,,முதன் முதலாக, தமிழின தேசியக் குரலை ‘வஞ்சிக் காண்டத்’ தில் நம்மால் கேட்க முடிகிறது.
கண்ணகியைப் பத்தினிக் கடவுளாகச் சித்திரிக்கும் எண்ணமும் பிறகுதான் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பத்தினிக் கடவுளுக்குக் கோயில் கட்டுவது என்பது சமயச் சார்பு உடையது. இதற்குக் காரணம், இதன் அடிப்படையில் அரசியல் கோஷம் எழுப்புவது எளிது. இதைத்தான் சேரன் செங்குட்டுவன் செய்கிறான். ‘தமிழ் நாட்டு மன்னர்களைப் பற்றி ஏளனமாகப் பேசிய வட ஆரிய மன்னர்களின் மீது போர் தொடுத்து, வென்று, (அரசியல்) இமயமலையிலிருந்து (சமயம்) கல் கொண்டு வந்து அதை அவர் தலை மீது ஏற்றிக் (அரசியல்) கங்கையில் நீராட்டி(சமயம்) கண்ணகிக்குக் கோயில் எழுப்புவதாக(சமயம்) வஞ்சினம் கூறுகிறான்.
இவ்வடிப்படையில் பார்க்கும்போதுதான், நமக்கு, முதல் இரண்டு காண்டங்களுக்கும், ‘வஞ்சிக் காண்டத்’ துக்குமிடையே உள்ளீடான இலக்கிய உணர்வு நெறி ( intininsic literary mood ) வெவ்வேறாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது
சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம்,ஆகியவற்றின் இறுதியில் கட்டுரையும், ஒரு வெண்பாவும் காணப்படுகின்றன. வஞ்சிக் காண்டத்து முடிவில் வெண்பா இல்லை, கட்டுரை மட்டும் இருக்கிறது. இதைத் தவிர, நூல் முழுவதற்குமான ஒரு கட்டுரை யுடன் காவியம் முற்றுப் பெறுகின்து.
ஒவ்வொரூ காண்டத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களின் சாரத்தைக் கட்டுரை தருகிறது. வெண்பா பிற்சேர்க்கை என்று தெளிவாகட்த் தெரிகிறது. அடியார்க்குநல்லாரும் புகார்க் காண்டத்து வெண்பாவுக்கு உரை எழுதவில்லை. மதுரைக் காண்டத்தில், ’வழக்குரைக் காதை’யிலிருந்து அவர் உரை கிடைக்கவில்லை.
கட்டுரை மூலம், தாம் அந்தந்தக் காண்டத்தில் நிகழ்வுகளை மட்டுமல்லாமல், ஆவணப்படுத்தியிருக்கும் கலையின் வடிவங்களையும்,, முதன்மைப் படுத்தியிருக்கும் நாடக விருத்திகளையும் எடுத்துச் சொல்லுகிறார். புகார்க் காண்டம் பாரதி விருத்தியையும், மதுரைக் காண்டம் ஆரபடி, சாத்துவதி ஆகிய விருத்திகளையும் புலப்படுத்தும். நான்கு விருத்திகளில் எஞ்சியிருக்கும் கைசிகியைப் பற்றிக் கட்டுரை குறிப்பிடவில்லை. வஞ்.சிக் காண்ட கட்டுரையில், சேரன் செங்குட்டுவனின் வெற்றிச் சிறப்பும், வரிப்பாடல்களும், குரவையும். கூறப்படுகின்றனவேயன்றி நாடக விருத்தியைப் பற்றிக் குறிப்பு ஏதுமில்லை.
இதனால், இளங்கோ நாடகம் என்ற அளவில் சிலம்பின் கதை மதுரைக் காண்டத்தோடு முடிந்து விட்டது என்று கொண்டாரோ என்று தெரியவில்லை.
‘அரங்கேற்றுக் காதையில்’ அடியார்க்குநல்லார் ஏராளமான தமிழ் நாடக, இசை இலக்கண நூல்களைக் குறிப்பிடுகிறார். அவர் காலத்திலேயே சில நூல்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவற்றில் ஒன்று ‘பரதம்’
பரதமுனி ‘சமஸ்கிருத்த்தில் எழுதியிருக்கும் ‘நாட்டிய சாஸ்திரத்துக்கும்’ இத்தமிழ் நூலுக்கும் சம்பந்தம் ஏதாவதுண்டா என்றும் தெரியவில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் காணும் நாடக, நடன இலக்கணச் செய்திகளுக்கும், நாட்டிய சாஸ்திரத்தில் வரும் செய்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
பொதுவாக இசை, நடனம், நாடகம் போன்றவை பூர்வகுடி மக்களுடந்தான் தொடர்புப் படுத்திக் காண இயலுமென்று மானுடவியல் அறிஞர்கள் கூறுவார்கள். வேத கால நாகரிகத்துக்கு மிகப் பின்புதான், பூர்வ குடி மக்களோடு ஏற்பட்ட தொடர்பினால், கலை வடிவங்கள் உருவாகியிருக்க வேண்டும். நாட்டிய சாஸ்திரம் எழுதியவர் பரத முனி என்றும் அவருக்கு நூறு பிள்ளைகள் இருந்தார்கள் என்றும், அவர்கள் எல்லாருமே நடிகர்கள் என்றும் கதை வழங்குகிறது. அவர்கள் பிராமணர்களாக க் கருதப்பட்டாலும், வைதிக பிரமணர்களுக்கான சமூகத் தகுதி அவர்களுக்குக் கிடையாது.
சிலப்பதிகாரம் ‘புறஞ்சேரியிறுத்த காதை’யில் பாணர்களாக இருக்கும் ‘மறைநூல் வழுக்கத்து புரி நூல்மார்பர் உரைபதி’க்குக் கோவலன் செல்வதாக வருகிறது.
’ முனி ‘ என்பது சமஸ்கிருத வேர்ச்சொல்லினின்றும் வரவில்லை, அது பூர்வ குடி வேர்ச் சொல்லினின்றும் வந்திருக்க வேண்டும் என்கிறார், ‘நாட்டிய சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் மனோமோஹன் கோஷ். ஆகவே ‘பரத முனி’ என்றே அழைக்கப்படும் நாட்டிய சாஸ்திரத்து ஆசிரியர் தமிழராகவே இருக்கலாம். சமஸ்கிருதம் இந்தியர் அனவருக்கும் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்துக்கு உருவான
மொழி என்பதால், பரதர் தமிழில் எழுதியது இறந்துபட்டும், சமஸ்கிருத்த்தில் எழுதியது எஞ்சியும் இருக்க க்கூடும்.’சிலப்பதிகாரத்’தை முதன் முதலில் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா, கூறுகிறார்:’ ‘இசை நாடகன் க்களுக்குரிய பரிபாஷைகளிற் பெரும்பான்மையானவை வட மொழியிலும் தென்மொழியிலும் வெவ்வேறு உருவங்களொடு கூடியிருத்தலால், இவற்றிலுள்ள சொற்கள் பல வடநூல்களினால் தெரிந்து கொள்ளக் கூடவில்லை’
இதற்கு என்ன காரணம்?
அவற்றின் மூலம் தமிழாக இருந்து இறந்துபட்டிருக்கலாம். ஆகவே இச் சொல் சமஸ்கிருதம்,இது தமிழ் என்று திட் ட வட்டமாக நமக்கு விளங்காதவற்றை வரையறுத்துக் கூற இயலாது.
ஒன்று மட்டும் நிச்சியமாகச் சொல்லலாம்.. இசை, நடனம், நாடகம், தொன்மை மொழி இலக்கிய இலக்கண மரபுகள், திணை வகைகள், செடிகள், கொடிகள், மலர்கள், கட்டட அமைப்பு நகர அமைப்பு, கோயில் அமைப்பு, தான்ய வகை, கனவு இயல்,களவு நூல், நவரத்தின இயல், அரசியல், சமூக அமைப்பு, சமூகத்தினரின் தொழில் வேறுபாடுகள், நாடு முழுவதும் தழுவிய நிகழ்வுகள், நுண்கலைகள் ஆகிய எல்லாவற்றையும் மூலக் கதையுடன் நயமுடன் பொருத்தி அமைத்திருக்கும் பாங்கைப் பார்க்கும்போது, இந்திய மொழிகளின் முதல் கலை இலக்கியக் களஞ்சியமாகச் சிலப்பதிகாரத்தைத்தான் கூற முடியும்.

Advertisements

§ 3 Responses to ’சிலப்பதிகார’ ச்சிக்கல்கள்

  • Loganathan says:

    மிகவும் அருமையான கட்டுரை..!!

  • கி.இளம்பிறை says:

    கண்ணகி அணிந்திருந்த மங்கல அணி என்பது எது?

    • திருமணத்துக்கு முன்னும் பின்னும் பெண்கள் அணியும் யாவுமே மங்கல் அணிகள்தாம். தாலி பணந்தாழை ஏட்டினால் ஆனது. தாலம் என்றால் பனை, சம்ஸ்கிருதத்தில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading ’சிலப்பதிகார’ ச்சிக்கல்கள் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: