பாவ மன்னிப்பு

June 18, 2011 § 1 Comment


1984ல் கான டா போயிருந்தேன், சில பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்ற. நல்ல குளிர். ஜனவரி மாதம்.

ரெஜைனா என்ற இடத்தில் திருச்சி தேசியக் கல்லூரியில் 1952-4ல் படித்த மாணவர் ஒருவர் அங்குப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத் துறை பேராசிரியராக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது அவர் தி.மு.க. மாணவர் தலைவராக இருந்தார். நான் ரெஜைனா வருவது அறிந்து, என்னை அழைத்திருந்த நிறுவனத்துடன்(Indo-Canadian Institute) தொடர்பு கொண்டு,நான் அவருடைய விருந்தினராக இருக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார். நிறுவனம் என்னுடைய கருத்தைக் கேட்டது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்குப்  பிறகு திருச்சியில் மாணவராக இருந்தவர், உலகத்தின் வல்க்கோடியிலிருக்கும் ஒரு நகரத்தில் இருந்து கொண்டு என்னை அவர் வீட்டுக்கு அழைத்திருக்கின்றாரே என்ற ஆச்சர்யம்.

அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

ரெஜைனாவில் இந்தியர் சங்கம் ஒன்றிருந்தது. அவர்களும் பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண்டு அச்சங்கத்தின் தலைவர் வீட்டுக்கு மாலை விருந்துண்ண அழைத்திருந்தார்கள்.

நான் என் முன்னாள் மாணவரிடம் கேட்டேன்; ‘நீங்களும் வருகிறீர்கள் அல்லவா? ‘ இந்தியர் சங்கம் என்பதால் அவரும் அங்கத்தினராக இருப்பாரென்று நினைத்தேன்.

அவர் சிறிது நேரத்  தயக்கத்துக்குப் பிறகு சொன்னார்: ‘எல்லாரும் வடக்கத்திக் காரங்க. நான் உங்களைக் கொண்டு விட்டுட்டு அப்புறம் அழைச்சிகிட்டு வரேன். ‘

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘வடகத்திக்காரங்க’ என்றால் என்ன அர்த்தம்? கான் டாவே  உலகத்தின் வடக் கோடியில் இருக்கிறது, இதற்கு இன்னும் வடக்கே என்ன இருக்க முடியும்?

பிறகு அவரே விளக்கினார்: ‘எல்லாரும் ‘நார்த்-இன்டியன்ஸ்’. மார்வாரி, பஞ்சாபி இந்த மாதிரி. ‘

அவரை மேலும் நான் வற்புறுத்த விரும்பவில்லை. இந்தியாவை விட்டு வெளியே வந்துவிட்ட அவர் இன்னும் எப்படி இந்தக் கலாசாரப் பொதிகளைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

அவர் மாலை என்னும்  பஜாஜ் என்பவர் வீட்டில் கொண்டு விட்டார். அவர் ஒரு தொழிலதிபர் என்று அறிந்தேன்.

பெரிய வீடு. பனிக்காலம் ஆதலால், ‘லான்ஸ்’ முழுவதும் வெண்மைப் போர்த்தியிருந்தது.  சீதோஷ்ண நிலை -17.

நல்ல வெப்பமான உடையையும் தாண்டி குளிர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

என்னை உள்ளே வரவேற்றவர் பஜாஜாக இருக்க வேண்டும். நல்ல கம்பீரமான தோற்றம். பெரிய சால்வை போர்த்தியிருந்தார். ஐம்பது வயதிருக்கலாம்.

இன்னொரு ஆச்சர்யம், அங்கு வந்திருந்த அனைவரும் இந்திய உடையில் இருந்தார்கள்! பெண்கள், புடைவை அல்லது, சல்வார் ,கமீஸ்.

நான் உள்ளே போய் உட்கார்ந்ததும், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஒவ்வொருவராக என் காலைத் தொட்டு வணங்கிவிட்டுச் சென்றார்கள்.

நான் திடுக்கிட்டேன். என்னைச் சாமியார் ஆக்கிவிட்டர்களோ? ஊதுவத்தி மணம், ‘ஹாலை’ அலங்கரித்த ஸ்வாமிப் படங்கள், அனைவரும் அணிந்திருந்த இந்திய உடை அனைத்தும் இதை உறுதி செய்வது போல இருந்தன.

என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துப் போக வந்திருந்த பேராசிரியர் மார்ஷல் சொன்னது என் நினைவுக்கு வந்தது: ” இந்தியர் சங்கத்தினர் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள், இந்தியாவிலிருந்து பெரியவர்கள் வந்தால் எங்களுக்குச் சொல்வதில்லை என்று. நாளை இரவு உங்களை அவர்கள் விருந்துண்ண அழைத்திருக்கிறார்கள். போகிறீர்களா?’  ‘பெரியவர்கள்’ என்பதற்கு அவர் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தை, ‘ Great men’.  இப்பொழுது புரியத்தொடங்கியது, என்னை இந்தியாவிலிருந்து வந்தவனாக் கொண்டு, அவர்கள் ஆத்ம திருப்திக்காக சாமியாராக்கி வழிபட விரும்புகிறார்கள்!

நான் போலந்திலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லலாமாவென்று நினைத்தேன்.

அதற்குள் ஒரு வயதான பெண்மணி என் அருகில் வந்து, குனிந்து, ‘ என்ன குடிக்கிறீர்கள்? சூடாக பால் தரட்டுமா?’ என்று ஹிந்தியில் கேட்டார்.

பாலைக் காட்டிலும் சூடான எதுவும் நான் சாமியாராகி விட்ட நிலையில் கிடைக்காது என்று தோன்றிற்று!

‘வெந்நீர் போதும்’ என்றேன் நான்.

‘அச்சா ஜி. இதோ எடுத்து வருகிறேன்’.

‘அவர் என்னுடைய தாயார்.’ என்றார் பஜாஜ்.

‘ஹால்’ ஓரத்தில் ஜீன்ஸ், தொள தொள சட்டை அணிந்த பதினெட்டு வயது பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இந்த நாடகத்தில் பங்கு கொள்ளவில்லை என்று எனக்குப் பட்டது. அவள் வாயில் ‘சூயிங்  கம்’.அவள் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தாள்.

அப்பொழுது வயதான பஞ்சாபி லாலா மாதிரியிருந்த ஒருவர் எழுந்திருந்து என்னிடம் சொன்னார்: ‘ இங்கு இந்த நாட்டு இளைஞர்களைப் பார்த்து நம் குழந்தைகளுக்கும் ‘Dates’  பழக்கம் வந்து விட்டது.. கூடாது என்று அறிவுரை புகட்டுங்கள்.’

‘அதிகம் ‘Dates’  சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது’ என்றேன் நான்.

எல்லாரும் சிரித்தார்கள்.

‘அந்த ‘Dates’ இல்லை, ஸ்வாமிஜி, ஆண்கள் பெண்கள் சந்திப்பதை இங்கு Date என்று சொல்வார்கள். அது கூடாது என்று சொல்லுங்கள்’ என்றார் லாலா.

இன்னொருவர் எழுந்திருந்து கேட்டார்: ‘ உங்களுக்கு மறு பிறவியில் நம்பிக்கை இருக்கிறதா?’

ஒரு பெரிய வெள்ளி  கூஜாவில் வெந்நீர் வந்தது. ஒரு வெள்ளித் தட்டில் பழங்கள்.

அப்பொழுது ஜீன்ஸ் அணிந்திருந்த பெண் என் எதிரே வந்து நின்றாள்.’சூயிங் கம்’ மெல்வதை நிறுத்தவில்லை.

‘You are differently dressed’ என்றேன் நான் அவளைப் பார்த்துப் புன்னகையுடன்.

‘ Yes..Because I don’t feel guilty about what I am doing everyday.. I am not an hypocrite ‘என்றாள் அவள்.

Advertisements

§ One Response to பாவ மன்னிப்பு

  • virutcham says:

    //I am not an hypocrite ‘//
    great.

    சுவையான அனுபவம். தானாகக் கிடைத்த சாமியார் வேஷத்தை எவ்வளவு நேரம் maintain பண்ணினீங்கன்னு சொல்லவே இல்லையே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading பாவ மன்னிப்பு at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: