இரண்டாவது திருப்பம்

முன்னொரு பதிவில் ‘ப்ளிட்ஜ்’ ஆசிரியர் ‘கரஞ்சியா’ என்றிருக்க வேண்டும். ’கராக்கா’ என்று எழுதிவிட்டேன். கராக்கா ‘கரண்ட்’ என்ற பத்திரிகை ஆசிரியர். கரஞ்சியா, கராக்கா இருவருமே பார்ஸிகள். நண்பர்கள், கொள்கை வகையில் எதிரிகள். கரஞ்சியா இடது சாரி, கராக்கா வலது சாரி. அந்தக் காலத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவது வாசகர்களுக்கு விருந்து. இரண்டு பத்திரிகைகளுக்கும் நிதி உதவி ஓரிடத்திலிருந்துதான் வந்தது என்றும் சொல்லுவார்கள்.)

நான் திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட  மூன்று ஆண்டுக:ள் முடிவதற்குச் சற்று முன்பு,, அப்பொழுது இந்தியாவின் துணை ராஷ்டிரபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அக்கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினாராக வருகை தந்தார். அவருடன் அப்பொழுது எம்.பி ஆக இருந்த (பிறகு 1987-92 வரை ராஷ்டிரபதி) ஆர். வெங்கட்ராமன் வந்தார். வெங்கட்ராமன், அப்பொழுது, தில்லியிலிருந்த மெட்ராஸிப் பள்ளிக்கூடத்தின் (இப்பொழுது தமிழ்ப் பள்ளிகள்) நிர்வாகக் குழுத் தலைவராக இருந்தார்.

தேசியக் கல்லூரியின் இளம் ஆசிரியன் என்ற முறையில், வி.ஐ.பி விருந்தினர்களாகிய அவர்களைக் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஓடியாடி வேலை செய்த கரரணத்தினாலோ என்னவோ வெங்கட்ராமனுக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது அவர் என்னைக் கேட்டார்; ‘தில்லிக்கு வருகிறாயா?’

எனக்குப் புரியவில்லை

‘தில்லியில் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஒன்று இருக்கிறது. அங்குத் தமிழாசிரியர் வேண்டும், வருகிறாயா?’

‘நான் இப்பொழுது கல்லூரியி வேலை செய்கிறேன்.. பள்ளிக்கூடம்..?’ என்று நான் கொஞ்சம் தயங்கினேன்.

‘ஹையர் செகண்டரி’ என்றால் ‘இண்டர்மீடியட் காலேஜ் என்று அர்த்தம். இப்பொழுது பள்ளிக்கூடமாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் ஃபர்ஸ்ட் க்ரேட் காலேஜ் ஆகிவிடும்.. வருகிறாயா? இப்பொழுது நீ வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு.’ என்றார் அவர்

எனக்குச் சம்பளம் முக்கியமாகப் படவில்லை. ஒரு குறுகிய இடத்திலிருந்து வான வெளியில் பறந்து செல்ல வேண்டுமென்ற ஆசை. பள்ளிக்கூடம் விரைவில் கல்லூரி ஆகிவிடும் என்று வெங்கட்ராமன் சொன்னதும் திருச்சிவிட்டுப் போகலாமா என்று  என்னை யோஜிக்க வைத்தது.

‘ யோஜித்து எனக்கு பத்து நாட்களுக்குள் கடிதம் எழுது. என் அட்ரெஸ் உங்கள் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும்’ என்றார் அவர்.

அவர்கள் போனபிறகு, கல்லூரி முதல்வர் தோதாத்ரி அய்யங்காரிடம் இதைப் பற்றிப் பேசினேன்.

அவர் சிறிது நேரம் மௌனமா இருந்தார்.

‘எனக்குத் தெரியும், இந்தக் கல்லூரி வைதிகக் கூடாரம். இதை விட்டுப் போக வேண்டுமென்று நீ நினைக்கிறாய். அப்படித்தானே? ‘

அவர் அப்படிக் கேட்டதற்கும் காரணமிருந்தது.

கல்லூரித் தொடங்கியதும், முதல் ‘பீரியட்’ ஆரம்பத்தில், சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்ல வேண்டுமென்று, கல்லூரி நிர்வாகம் ஓர் ஆணை பிறப்பித்தது. என் வகுப்புத் தமிழ் மாணவர்களில் பலர் அதை எதிர்த்தார்கள்.

நான் அதை ‘ஆசிரியர் கூட்டத்தி’ல் எடுத்துச் சொல்லி,, அந்த ஆணையைச் செயல்படுத்தக் கூடாது என்று சொன்னேன்.

தமிழ் வகுப்பில், தமிழில் இறை வணக்கம் சொல்லலாமென்று அந்த ஆணையை மாற்றினார்கள்.

இதை மனத்தில் வைத்துக் கொண்டு அவர் அப்படிக் கேட்டாரென்று எனக்குப் புரிந்தது.

கல்லூரி முதல்வருக்கும் இந்த நிர்வாக ஆணை பிடிக்கவில்லை என்று அப்பொழுதே உணர்ந்து கொள்ள முடிந்தது.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. தில்லியில் தமிழ் கற்றுக் கொடுப்பது ஒரு சவாலாக இருக்குமென்று நினைக்கிறேன்’ என்றேன்.

‘ சவாலுமில்லை.. ஒரு பிண்ணாகுமில்லை. அது பள்ளிக்கூடம். நீ இப்பொழுது பி.ஏ வகுப்புக்களுக்கும் பாடம் எடுக்கிறாய். இதுதான் சவால்” என்றார் முதல்வர்.

‘ கூடிய சீக்கிரத்தில் அந்தப் பள்ளிக்கூடம் முதல் க்ரேட் கல்லூரி யாகி விடும் என்றாரே வெங்கட்ராமன்.?’

‘ அப்படிதான் சொல்லுவார். அவர் அந்த நிர்வாகுழுத் தலைவர். அது எப்பொழுதும் பள்ளிக்கூடமாகதான் இருக்கப் போகிறது.. அவர் அப்படி சொன்னாரென்றால், நீ அப்பொழுதான் ஒப்புக் கொள்வாய் என்பதற்காகச் சொல்லியிருக்கிறார். அவர் அரசியல்வாதி. நினைவு வைத்துக் கொள். ‘ என்றார் முதல்வர்.‘

‘அப்படியானால் போக வேண்டாம் என்கிறீர்களா?’

‘அவர் பதில் கூறவில்லை.

‘உன்னை எனக்கு ஏன் பிடித்த்து தெரியுமா?’

‘சொல்லுங்கள்’

‘ நீ வகுப்பில் non-detailed பாடம் நட்த்தாமல், ஸ்டீன்பெக்கின் ‘East of

Eden’ கதை சொல்லுகிறாய் என்று உன் துறைத் தலைவர் என்னிடம் சொன்னார். எனக்கும் ஸ்டீன்பக் என்றால் பிடிக்கும். Non-detailed புத்தகத்தில் நடத்துவதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்கிறாய். புரிகிறது.  தமிழும் ஆங்கிலமும் நன்றாகத்  தெரிந்தவர்கள்தாம் தமிழ் நடத்த வேண்டுமென்று நான் நினைக்கிறேன்..’ என்றார் முதல்வர்.

நான் மௌனமாக நின்றேன். என் தலையில் ‘ஐஸ்’ வைத்து எப்படியாவது என்னை அங்கு இருத்திக் கொள்ள வேண்டுமென்று அவர் நினைக்கிறாரென்று எனக்குத் தோன்றிற்று.

‘ஷேக்ஸ்பியர் மாதிரி உன் துறைதலைவரும் சிலேடைக்காக ஒரு சாம்ராஜ்யத்தையே இழக்கத் தயாராக இருப்பார், தெரியுமா, உனக்கு?அவர் சிலேடையைப் பற்றி உனக்குத் தெரியுமா?

‘தெரியாது.\

‘ கிளியோபாட்ரா டைட்(died), ஜூலியட் டைட்,(died), டைடோ டைட்’(Dido died) இது அவர் சிலேடைக்கு உதாரணம். புரிகிறதா?

‘Aeneas and Dido கிரேக்கப் புராணக் காதலர்கள்’ என்றேன் நான்/

அவர் என்னைக் கட்டிக் கொண்டார்.… ‘ அரசியல்வாதியை நம்பி எதுவும் செய்யாதே.’ என்றார் அவர்.

என் துறைத்தலைவர் என் மனக் கண் முன் வந்து நின்றார். ஒட்டுப் போட்ட அல்பாக்கா கோட்டு. அழுக்கேறிஒய தலைப் பாகை. மஞ்சள் பூத்த பஞ்ச க்கச்சத்தில் வேட்டி. அங்கவஸ்திரம்.

வெங்கட்ராமனின் முகவரியை அலுவலகத்தில் வாங்கி,, தில்லி வருவதாக அன்றிரவே அவருக்குக் கடிதம் போட்டேன்.

இது நடந்தது 1954ல்.. மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். இதற்குப் பதிலே வரவில்லை. என் முதல்வர் ’அவர் அரசியல்வாதி’ என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது.

திடீரென்று நவம்பர் மாதம் அந்தப் பள்ளிகூடத்திலிருந்து கடிதம் வந்தது. சீனியர் தமிழ் ஆசிரியராய் நியமனம் செய்தைருந்த கடிதம்..முதல்வரிடம் கடித்ததைக் காண்பித்தேன். ‘உன் இஷ்டம்’’ என்று சொல்லிவிட்டார்.

9 மாதம் கழித்து தாமதமாய்க் கடிதம் வந்ததற்குக் காரணம் தில்லி போனபிறகுதான் தெரிந்தது.

பள்ளிக்கூட நிர்வாக க் குழு செயலர், மத்திய அரசாங்கத்தில் ஓர் உயர்தர அதிகாரி. அவர் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட்தாக க் குற்றச்சாட்டு. இந்த அமளியில் தமிழாசிரியர் நியமனம் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமாகப் படவில்லை.

பிரச்னை ஒரு வழியாகச் சமரசமாக முடிந்தபிறகு எனக்கு அந்த நியமனக் கடித த்தை அனுப்பியிருக்கிறார்கள்.

என் அப்பாவுக்கும் நான் தில்லி போவது பிடிக்கவில்லை. ‘எல்லாரும் பள்ளிக்கூட்த்திலிருந்து காலேஜுக்கு வேலைக்குப் போக வேண்டுமென்று விரும்புவார்கள். உன்னைப் போல் ஒரு பைத்தியக்காரனும் இருக்கமாட்டான்’. உன் விதிதான் உன்னை அங்கே அழைத்துச் செல்கிறது’ என்றார்.

’இழைக்கும் விதி முன் செல,’’ என்ற கம்ப ராமாயண வரி என் நினைவுக்கு வந்தது.

இது என் இரண்டாவது திருப்பம்,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements
%d bloggers like this: