இதுதான் அரசியல்

நான் அரசியலைப் பற்றி நிறைய எழுதியிருந்தாலும் எந்த அரசியல்வாதியுடனும் தொடர்பு இருந்ததில்லை. ஆனால் 1977ல் ஜனதா ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியதும், அமைச்சராக இருந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தொலைப்பேசி மூலம் தகவல் வந்தது.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவர் என்னை ஏன் சந்திக்க விரும்புகிறார்? அதுவும், வீட்டுக்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் மிகச் சிறந்த பேச்சாளர் என்றும், தொழிற செயல் வீரர் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர, அவருடன் எனக்கு எந்தவிதத் தொடர்புமில்லை.

இந்தத் தகவலைத் தெரிவித்தவர், ‘ஹிந்து’ பத்திரிகை நிருபர் என் நண்பர் பி.எஸ்.பத்மநாபன். ”எதற்காகப் பார்க்க விரும்புகிறார்?’ என்று கேட்டேன்.

‘தெரியவில்லை.போய்ப் பாருங்களேன். நீங்கள் எழுத்தாளர். இந்த அநுபவம் உங்களுக்குப் பயன்படலாம்’ என்றார் அவர்.

நான் வருவதாக அந்த அமைச்சரின் பி.ஏவிடம் சொல்லிவிட்டேன்.

சனிக்கிழமை மாலை 7.30 க்கு  அவர் வீட்டுக்குச் சென்றேன். சோஷலிஸ்ட் பிரமுகர் வீடு பிரும்மாண்டமாக இருந்தது. என்னை வரவேற்றார் அவருடைய அந்தரங்கச் செயலர். அமைச்சர் பத்து நிமிடங்களில் வந்துவிடுவாரென்றும், ‘குடிக்க என்ன வேண்டுமெ’ன்றும் கேட்டார். நான் எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.

பத்து நிமிடங்களில் வந்து விட்டார் அமைச்சர்.  ‘ட்ரேட் மார்க்’ உடை பைஜாமா, குர்த்தா. ஜார்ஜ் ஃப்ர்னாண்டஸ்.

‘ப்ளீஸ் கம் இன்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனார். அவரைத் தொடர்வதா என்னவென்று எனக்குப் புரியவில்லை

செயலர் தொடரும்படியாகச் சைகை செய்தார்.

போனேன்.

படுக்கை அறை. இங்கு எதற்காக என்னைச் சந்திக்க  விரும்புகிறாரென்று எனக்குப் புரியவில்லை.

அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்காரப் பணித்தார். அவரும் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘ நீங்கள் நல்ல தமிழ் எழுத்தாளரென்றும், ‘எமர்ஜென்ஸி’ போது உங்களுக்குப் பிரச்னை என்றும் கேள்விப்பட்டேன். இந்திரா காந்தியை உங்களுக்குப் பிடிக்காது, அப்படித்தானே?’

‘அவருடைய சர்வாதிகாரப் போக்கு பிடிக்காது..’

‘குட்.. நான் மிஸ்டர் கருணாநிதியின் நல்ல நண்பர்,தெரியுமா, உங்களுக்கு?’

இதற்கு என்னிடமிருந்து  என்ன பதில் எதிர்பார்த்தாரென்று எனக்குப் புரியவில்லை.

‘எமர்ஜென்ஸி போது நான் தலைமறைவாக இருந்தேன். கருணாநிதிதான் அடைக்கலம் அளித்தார்.’க்ரேட்  அன் ட் போல்ட் பர்ஸன். ‘

சிறிது நேரம் மௌனம். இது பற்றிச் சொல்லவா என்னைக் கூப்பிட்டிருக்கிறார்? கருணாநிதியை எனக்குத் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்னவென்று எனக்கு விளங்கவில்லை.

‘நான் தமிழ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்..’ என்றார் ஜார்ஜ்.

‘மகிழ்ச்சி. நீங்கள் பன்மொழி வல்லுநர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம்’. என்றேன் நான்.

‘ பொதுக் கூட்டங்களில் கருணாநிதி போல் பேச விரும்புகிறேன்…’

‘டால் ஆர்டர். தொடர்ந்து முயற்சி செய்தால் இரண்டு ஆண்டுகளில் பேசலாம்’

‘பதினைந்து நாட்க ளில் பேச முடிய வேண்டும். கருணாநிதியை ஆதரித்துப் பேச நினைக்கின்றேன்   .நீங்கள்தான் குரு, நான் சிஷ்யன்’.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

‘புரியவில்லை’ என்றேன் நான்.

‘தஞ்சாவூரில் இடைத் தேர்தல். இந்திரா காந்தி நிற்கப் போகிறார்.அவரை எதிர்த்துக் கருணாநிதி.நான் அவருக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறேன் தஞ்சாவூரில்’

என் தலை சுற்றியது.

‘கருணாநிதி இந்திரா காந்தியைத் தேர்தலில் எதிர்த்துத் தம் அரசியல் எதிர்காலத்தைப் பணயம் வைக்க மாட்டார்..’

‘உங்களுடைய அரசியல் ஹேஷ்யங்கள் இருக்கட்டும். கருணாநிதியை உங்களுக்குத் தெரிந்ததைவிட எனக்கு நன்றாகத் தெரியும்.. அவர் நிற்கத்தான் போகிறார். உங்களால் எனக்கு உதவி செய்ய முடியுமா? இன்னொன்று செய்யலாம். தேர்தல்போது என்னுடன் தஞ்சாவூருக்கு வாருங்கள். நீங்கள் ரோமன்லிபியில் தமிழ் பேச்சை எழுதித் தருவதோடு, உச்சரிப்பையும் சொல்லித் தாருங்கள். நான் பேசுகிறேன். உங்களுக்கும் இந்திரா காந்தியைப் பிடிக்காது, இல்லையா? ஐ வில் காம்பென்ஸேட் யுவர் டைம் இன் காஷ் ஆர் கைன் ட்’

அவர் இப்படிக் குரூரமாய் பேசியது எனக்கு எரிச்சலூட்டியது.

‘மன்னிக்கவும். என்னால் இயலாது.’

சிறிது நேரம்  மௌனம்.

‘ஓ.கே. தாங்க் யூ.’ என்று சொல்லிக் கொண்டே அவர் எழுந்து என் கைகளைக் குலுக்கினார்.

விருந்துண்ண அழைத்ததை மறந்து விட்டார்!

பிரதமர் மொரார்ஜி தேசாய் மிரட்டி, எம்.ஜி.ஆர் இந்திராகாந்தியை ஆதரிப்பதனின்றும் பின்வாங்கி விட்டார். இந்திரா காந்தி தஞ்சாவூரில் நிற்கவில்லை,சிக்மகளூரில் நின்றார்.

இரண்டு மாதங்கள் கழித்து தி.மு.கவுக்கும் இந்திரா காங்கிரஸ்ஸுக்கும் உடன்பாடு!

இதுதான் அரசியல்!

Advertisements

§ 3 Responses to இதுதான் அரசியல்

 • Theeransamy says:

  அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய “தமிழ்தொகுப்புகள்” சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

 • Arun says:

  May be this incident was the seed to your novel “mayamaan-vettai” ????

 • n.Mani says:

  Woderful recllection of the past experience about the political twists and turns, which ordinary common folks and intellectuals can ot understand
  The meeting ended in a fiasco , as the most straight forward thinker and intellect Like Indira Parthasarathy and a hard core politician like George Fernandes ,can not share a common view on any platform.If the purpose of the meeting was known in the beginning, the embarassing situation to both ,could have been avoided.
  Once the main issue could not reach the meeting point, , they could have swiched over the discussion to other issues concerning the society, and ended the meet with dinner, more harmoniously and in a diplomatic manner ,instaed of ending it abruptly.
  N.Mani

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: